ஆட்சியதிகார நெருக்கடிக்கான முற்றுப்புள்ளி | தினகரன் வாரமஞ்சரி

ஆட்சியதிகார நெருக்கடிக்கான முற்றுப்புள்ளி

எதிர்பார்க்கப்பட்டவாறே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. அடுத்த தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இவை அரசியலமைப்பின்படி சட்டபூர்வமானவையா? அரசியல் நாகரீகமானவையா? என்ற வாதங்கள் தொடர்கின்றன.

ஆனாலும் நீண்டு கொண்டிருந்த ஆட்சியதிகாரம் தொடர்பான அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக ஜனாதிபதி முடிவெடுத்திருக்கிறார்.

ஜனாதிபதி முடிவெடுத்தாலும் அதுகுறித்து இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்கிறார் தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி ஜனாதிபதிக்கே தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான சங்கதி ஒன்றுண்டு. கடந்த வாரங்களில் ஏற்பட்டிருந்த அரசியல் சூழலில் ஜனநாயகத்தை பேணும் வகையில் பாராளுமன்றத்தை உடனே கூட்டவேண்டும். பாராளுமன்றத்தில்தான் பிரதமரைக் குறித்த தீர்மானத்தை எடுக்க முடியும் என்ற தொனிப்பட ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குலகம் அறிவுறுத்தியிருந்தது.

மேற்குலகத்தின் இந்த அறிவுறுத்தலுக்கு எதிர்நிலையிலேயே ஜனாதிபதியின் தீர்மானம் அமைந்துள்ளது. அதாவது அவர்கள் பாராளுமன்றத்தைக் கூட்டச் சொன்னார்கள். ஜனாதிபதி பாராளுமன்றத்தையே கலைத்து விட்டார்.

இவ்வாறானதொரு முடிவுதான் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் வெளிச்சக்திகள் யாரும் எங்கள் விவகாரங்களில் தலையிடத் தேவையில்லை. அவர்களுடைய விவகாரங்களில் நாம் தலையிடுவதை அவர்கள் விரும்புவார்களா? அனுமதிப்பார்களா என்று ஜனாதிபதியால் புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சரவையைச் சேர்ந்தோர் கேட்டிருந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாசுதேவ நாணயக்கார இதை உரத்த தொனியில் கேட்டிருந்தது அண்மைய உதாரணம்.

ஆகவே மேற்குலகத்தின் அறிவுரைகளையும் கட்டளைகளையும் மறுக்கின்ற ஒரு நிலை ஜனாதிபதியிடமும் புதிய அரசாங்கத்திடமும் காணப்பட்டது. கூடவே இலங்கை ஒரு இறைமை மிக்க நாடு என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற தொனிப்படவும் பேசப்பட்டது.

எனவே இந்த நிலையானது நிச்சயமாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் முடிவுக்கே கொண்டு சென்று சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து தாம் உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஐ.தே.க அறிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் முடிவுகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை நடந்த, நடந்து கொண்டிருக்கும் அரசியல் செயற்பாடுகளைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இராசவரோதயம் சம்மந்தன் இதுவரையில் (இந்தப் பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் வரையில்) எந்த விதமான கருத்துகளையும் சொல்லவில்லை.

இவ்வளவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்திலும் பொறுப்பிலும் இருந்தவர் சம்பந்தன்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த தரப்பினர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை பொதுவாக ஆட்சேபித்திருக்கிறார்கள். ஆனாலும் எப்படியோ நாடு இன்னொரு பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலைக்குள்ளாகியுள்ளது. மக்கள் பொதுத்தேர்தலையே விரும்புகின்றனர் என்பதை அவர்களுடைய பேச்சுகளிலும் உரையாடல்களிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது காபந்து அரசாங்கமே நீடிக்கவுள்ளது. இதனால் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படாது. அது அடுத்து அமையவுள்ள புதிய ஆட்சியில்தான் நடக்கும். ஆகவே புதிய வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதமளவில், புதிய அரசாங்கத்தினால்தான் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்க முடியும்.

இந்த நிலைமை நிச்சயமாக நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை மேலும் உண்டாக்கும்.

அதற்குள் என்னவெல்லாம் நடக்கும் என்றுதான் மக்கள் இப்பொழுது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இலங்கையின் அரசியல் என்பது எந்தக் கணிப்புகளுக்கும் எந்த வகையான கணிதங்களுக்கும் உட்படாத ஒன்றாக மாறியுள்ளது. ஆகவே எதிர்வு கூறல்களையோ கணிப்பீடுகளையோ இலகுவில் எவராலும் செய்ய முடியாது.

நடப்பவற்றை அவதானிப்பதைத் தவிர இப்போதைக்கு எதையும் சொல்வதற்கில்லை. ஆனால், எதிர்வரும் தேர்தல் புதிய அனுபவங்களின் வழியாக புதிய தெரிவுகளுக்கான வாய்ப்பொன்றை மக்களுக்கு வழங்கியுள்ளது என்பதே குறைந்த பட்ச ஆறுதல்.

தேசிய அரசாங்கம், நல்லாட்சி அரசாங்கம், மாற்றத்துக்கான அரசாங்கம் என்ற எதிர்பார்ப்போடு எதிரும் புதிருமாக இருந்த ஐ.தே.கவும் சு.கவும் சிறுபான்மையினத்தினரின் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய அரசாங்கத்தின் அனுபவமும் மக்களுக்குண்டு.

அதை விட ஏற்கனவே ஐ.தே.கவும் சு.கவும் ஆட்சி செய்த அனுபவங்களும் உண்டு. ஆகவே கடந்தகால அரசியல் என்பது மக்களுக்கான பெரும் பட்டறிவை வழங்கியுள்ளது.

எனவே மீண்டும் எத்தகைய ஆட்சியொன்றை அதிகாரத்தில் அமர்த்த வேண்டும் என்ற தெளிவோடு தெரிவைச் செய்யவேண்டிய பொறுப்பு மக்களுக்கு வந்துள்ளது. கடந்த காலத் தவறுகளை மீளவும் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அது மக்களுக்கும் நாட்டுக்கும் ஏற்படும் பின்னடைவாகவே இருக்கும். இதேவேளை நாடு முழுவதிலும் தேர்தல் கூட்டுகளும் புதிதாக உருவாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தமிழ்த்தரப்பிலும் பல கூட்டுகளுக்கு வாய்ப்புண்டு. வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் போன்றவர்கள் உருவாக்கியிருக்கும் புதிய கட்சிகளும் களத்தில் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.

சிலவேளை தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளின் கூட்டுகளுக்குக் கூட வாய்ப்புண்டு. அரசியலில் எதுவும் நடக்கும். எப்படியும் நடக்கும். இதெல்லாம் மக்களைக் குழப்பவும் கூடும். தெளிவுகளை ஏற்படுத்தவும் கூடும்.

ஆனால், ஒன்று மட்டும் உண்மை. அடுத்த தேர்தலில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம், சீனா போன்ற நாடுகள் அதிக செல்வாக்கைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக்குறித்து மெய்யான ஜனநாயக சக்திகளும் முற்போக்காளர்களும் அறிஞர்களும் பிரக்ஞை எடுக்க வேண்டும்.

அந்தளவுக்கு வெளிச்சக்திகள் உள்நாட்டு அரசியல், பொருளாதார, சமூக வலைப்பின்னல்களில் பலமடைந்து விட்டன. எதிர்த்தரப்புகளின் அழுத்தங்களையும் நிகழ்ச்சி நிரலையும் உடைத்து வேலை செய்ய வேண்டியதொரு நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றிருக்கிறார். அவரைப்போலவே நாட்டு மக்கள் அனைவரும் உள்ளனர்.

ஏறக்குறைய ஜனாதிபதியின் தற்போதைய நடவடிக்கைகள் அவருடைய இந்த எதிர்ப்புப் பணிகளின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. அப்படிச் செய்ய முற்படுவது என்பது ஏறக்குறைய ஒரு அதிகாரமிக்க நடவடிக்கையாகவே இருக்கும். ஒரு வகையான ஒப்பரேஷனைப்போல.

இலங்கையின் அரசியல்சாசனமும் பாராளுமன்றமும் எப்போதும் மக்கள் விரோதத் தன்மை உடையதாக இருந்தே வந்துள்ளது. இதையே கடந்த காலங்களில் ஜே.வி.பியும் தமிழ் இயக்கங்களும் இடதுசாரி அமைப்புகளில் சிலவும் வலியுறுத்தி வந்தன.

இதனால்தான் இவை நீண்டகாலமாக பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையற்றிருந்தன. பதிலாக மாற்று அரசியலை (ஆயுதப்போராட்ட வடிவில்) மேற்கொண்டிருந்தன.

ஆனால் அந்த போராட்ட அரசியலானது அரச அதிகாரத்தின் மூலமாக ஒடுக்கப்பட்ட பிறகு தவிர்க்க முடியாத நிலையில் அவையும் பாராளுமன்ற அரசியலுக்கு வந்தன. ஆயினும் அந்தப் பாராளுமன்ற அரசியலானது பண்பு நிலை மாற்றத்துக்குட்படுத்தப்படவில்லை.

அது இனத்துவப் பெரும்பான்மை வாதத்தின் அடிப்படையிலும் கட்சிப் பெரும்பான்மைவாதத்தின் அடிப்படையிலுமே கட்டமைக்கப்பட்டிருந்தது. அதன் விளைவுகளே இன்றைய நிலை. இன்றைய வடிவம். இதில் யாரை யார் நோவது?

இதைக்குறித்த இன்றைய அவதானங்கள் வேறாக இருக்கும். எதிர்கால அனுபவம் வேறாக இருக்கும்.

 

Comments