மாணவனின் எதிர்காலம் ஆசிரியரின் கைகளிலேயே தங்கியுள்ளது! | தினகரன் வாரமஞ்சரி

மாணவனின் எதிர்காலம் ஆசிரியரின் கைகளிலேயே தங்கியுள்ளது!

முட்டாள் மூளை, புத்திசாலி மூளை என்றெல்லாம் கிடையாது

ன்று சனிக்கிழமை. விடு முறை தினம் என்பதால் நுவரெலியா கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் இரா. சிவலிங்கம் அவர்களை சந்திக்கக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அங்கு சென்றோம். அன்றும் அவர் பிஸியாக இருப்பதாக தெரியவந்தது. பாடசாலை அபிவிருத்திச் சங்க கூட்டத்தில் அதிபர் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அதன் பின்னர் சந்திக்கலாம் என்றார்கள்.

ஒரு 15 நிமிடத்தின் பின்னர் பாடசாலை மண்டபத்திலிருந்து வெளியேவந்த அவர் எம்முடன் பேசியவாறே முதலாம் வகுப்பு கட்டடம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் பெற்றோர், வகுப்பு ஆசிரியர்களுடன் அவர் இயல்பாக பழகும் விதம் என அவரது நடவடிக்கைகளை அவதானித்த கொழும்பிலிருந்து வந்த ஆசிரியரொருவர், இவ்வாறு மிகவும் சகஜமாக பழகும் அதிபர் ஒருவரை இப்போதுதான் பார்க்கிறேன். ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாக கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் விளங்குவதற்கு இதுவும் ஒரு காரணம் என்றார் வியப்புடன்!

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் கல்வி ரீதியில் தேசிய பாடசாலைகளுடன் போட்டிபோடும் அளவிற்கு அனைத்து விதத்திலும் வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு ஆசிரியர்கள், பெற்றோர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலையின் பழைய மாணவர்களின் பங்களிப்பே காரணம் என்கிறார் அதிபர் இரா. சிவலிங்கம்.

கேள்வி : நாடெங்கும் உள்ள பெருந்தோட்டம் சார்ந்த தமிழ்ப் பாடசாலைகளில் கல்விகற்க வரும் மாணவர்களில் மிகப்பெரும்பாலானோர் தோட்டக் குடியிருப்புகளில் வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. பாமரர்களான பெற்றோர், மோசமான கற்றலுக்கு உதவாத சூழல் ஆகிய பின்புலன்கள் காரணமாகத்தான் இம்மாணவர்கள் பின்னடைவுகளை சந்திக்கிறார்கள் என்பது பெரும்பாலான அதிபர்கள் கூறும் காரணமாக இருக்கிறது. ஆனால் இதே பின்புலத்தைக் கொண்ட மாணவர்கள்தான் உங்கள் பாடசாலையில் கற்று சித்திகளுக்கு மேல் சித்திகளாக பெறுகிறார்கள். எனவே “தோட்டத்து மாணவனின் பின்தங்கிய மூளை” என்ற அதிபர்களின் கருத்தியல் இங்கே தோற்றுப்போகிறதே!

பின்தங்கிய மூளை என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. எமது பாடசாலையில் 90 வீதத்துக்கு அதிகமானோர் பெருந்தோட்டங்களில் இருந்து வரும் மாணவர்களே. மாணவர்கள் எங்கிருந்து எந்த சூழ்நிலைகளிலிருந்து வருகின்றனர் என்பது முக்கியமல்ல. பாடசாலைக்கு வரும் அவர்களை கற்றலுக்கு உட்புகுத்துவது ஒரு பாடசாலையின் மிக முக்கிய பங்காகும். அதற்காக மாணவர்களை கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்த அவர்களுக்கு பலவிதமான ஊக்குவிப்புக்களை மேற்கொள்வது அதிபர், ஆசிரியர்களின் தலையாய கடமையாகும். அத்தோடு ஒரு மாணவன் பாடசாலையில் கல்வியை கற்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுப்பது அதிபரின் பொறுப்பாகும்.

அதற்காக ஒரு பாடசாலைக்கு தேவையான மனித வளங்களையும் பெளதீக வளங்களையும் பெற்றுக் கொள்வதற்காக சமூகத்திலுள்ள பல்வேறுபட்ட தரப்பினர்களின் உதவிகளை பெற்றுக் கொள்வது மிக முக்கியமானதாகும்.

மாணவர்கள் கற்பதற்கு வசதியான வகுப்பறைகள் மாத்திரமன்று செயற்பாட்டறைகள், விஞ்ஞான ஆய்வு கூடங்கள், வாசிகசாலை போன்ற பல்வேறு வசதிகள் பாடசாலை வளாகத்தினுள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். இதற்காக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உறவுகளை கட்டியெழுப்புவதில் ஒவ்வொறு பாடசாலையும் சமூக உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பது மிக முக்கிய கருமங்களுல் ஒன்றாகும். அதேபோல் பாடசாலைகள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு முதலில் பாடசாலையின் பெறுபேறுகளை அதிகரிக்கச்செய்வது அதிபர் மற்றும் ஆசிரியர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

குறிப்பாக, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த (சா/த), க.பொ.த (உ/த) ஆகிய பரீட்சைகளில் தோற்றும் மாணவர்களில் அதிகமானோரை சித்தியடைய வைப்பதும் பல்கலைக்கழகத்திற்கு சகல பிரிவுகளில் இருந்தும் தெரிவாகக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் தேவையான செயற்பாடுகளை பாடசாலைகள் மேற்கொள்ளுமாயின் பாடசாலை மீதான நம்பிக்கையினை சமூகம் இலகுவில் பெற்றுக்கொள்ளும். மேலும் கல்வியில் மாத்திரமன்றி விளையாட்டு, கலை, கலாசாரம் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் அக்கறை காட்டுவதன் மூலம் மாணவர்களின் திறமைகளை இனங்கண்டு அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி தேசிய மட்டம் வரை கொண்டு செல்வதற்கும் ஒரு பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் தம்மை அர்ப்பணித்து செயற்பட வேண்டும். பாடசாலைக்கு வரும் ஒவ்வொரு மாணவரும் ஏதாவதொரு வகையில் திறமைசாலியாகவே இருப்பார்.

எனவே, அவர்களின் திறமைகளை சரியாக இனங்கண்டு அவர்களுக்கேற்ப செயற்பாடுகளை முன்னெடுத்து சமூகத்தில் அவர்களை ஒரு சிறந்த நிலைக்கு கொண்டு வருவது ஒரு நல்லாசிரியரின் கடமையும் பொறுப்புமாகும். அத்துடன் பாடசாலையில் கற்றல் கலாசாரத்தினையும் ஏற்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் சகலரும் தம்மை அர்ப்பணித்து கடுமையாக உழைத்து பாடசாலைக்கு ஒரு சிறந்த பெறுபேற்றினை பெற்றுக் கொடுத்து சாதனை ஒன்றினை படைப்பார்களாயின் அதனை தொடர்ந்து வருபவர்கள் அச்சாதனையினை முறியடிக்கும் நோக்கத்துடனேயே தத்தமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவர். இதன் மூலம் பாடசாலையினுள் கற்றல் கலாசாரமானது படிப்படியாக விருத்தியடையும். இதற்காக ஆசிரியர்கள் தம்மை அர்ப்பணித்து சமூக உணர்வுடன் தமது சேவைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

பாடசாலை நேரங்களில் மாத்திரமன்றி மாணவர்களின் நலன் கருதி மேலதிக விசேட வகுப்புக்கள் மற்றும் செயலமர்வுகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து மாணவர்களை கற்றலுக்கு தூண்ட வேண்டும். பாரம்பரிய கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளாது புதிய கல்வி முறைக்கமையவும் நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தியும் ஆசிரியர்கள் வகுப்பறைகளில் செயற்படுவாரகளாயின் மாணவர்களும் ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபடுவது திண்ணம். அத்தோடு மாணவர்களுக்கு கற்றலில் மாத்திரமன்று ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்களை மாணவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டும். உதாரணமாக இல்ல விளையாட்டுப் போட்டிகள், மாணவர் மன்றங்கள் சாரணர் படை போன்றவை பாடசாலைகளில் நடைபெற வேண்டிய சில அம்சங்களாகும். தற்போது பல பாடசாலைகளில் மாணவர் மன்றங்கள் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை.

 

இதற்கு பல காரணங்களை பாடசாலை சமூகம் முன்வைக்கலாம். இருப்பினும் மாணவரிடையே காணப்படும் திறமைகளை வெளிக் கொணர்வதற்கு மாணவர் மன்றங்களின் செயற்பாடுகள் இன்றியமையாததொன்றாகும். அதேபோல் பல பாடசாலைகள் 2 வருடங்களுக்கு ஒரு முறையே விளையாட்டுப் போட்டிகளை நடாத்தி வருகின்றன.

சில பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. மாணவரின் விளையாட்டு திறன்களை விருத்தி செய்யும் சமூக உணர்வுடன் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் செயற்படுவது விரும்பத்தக்கது. விளையாட்டுப்போட்டிகளை நடாத்துவதற்கு விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை பெற்று கொள்வதற்காக பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் சமூக நிறுவனங்களுடன் நல்லுறவுகளை கட்டியெழுப்புவதன் மூலம் இது சாத்தியமாகும்.

கேள்வி : எதிர்கால டிஜிட்டல் வகுப்புகளுக்கான மாதிரி வகுப்புகளை நீங்கள் ஏற்படுத்தி இருப்பதாக அறிகிறோம். ஹட்டனின் பெரிய பாடசாலைகளுக்கு கிடைக்காத இந்த வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது? டிஜிட்டல் வகுப்பு என்றால் என்ன? கற்கையை இது எவ்வளவு தூரம் இலகுவாக்கும்?

ஆம்! பாடசாலைக்கு வரும் மாணவர்கள் விருப்பத்துடன் கற்றலில் ஈடுபடுவதற்கு வாய்ப்பான ஒரு வகுப்பறை சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது எமது கடமையாகும். அந்த வகையில் எமது பாடசாலையில் சிநேகபூர்வமான 20 வகுப்பறைகளை உருவாக்கியுள்ளேன். குறிப்பாக ஆரம்ப பிரிவு வகுப்புகளிலேயே இது அதிகமாக காணப்படுகிறது. இதற்கு எமது பாடசாலையின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், நலன் விரும்பிகள் என பலரும் தமது முழுமையான ஒத்துழைப்பினை எமது பாடசாலைக்கு வழங்கி வருகின்றனர். அத்தோடு டிஜிட்டல் வகுப்புகளை உருவாக்குவதற்கு World vision நிறுவனமும் தமது முழுமையான பங்களிப்பினை செய்து வருகிறது. வகுப்பறை ஒன்றில் கற்றல் கற்பித்தலுக்காக வானொலி, தொலைகாட்சி போன்ற இலத்திரனியல் உபகரணங்களையும் Multimedia (பல்லூடக) போன்ற நவீன சாதனங்களையும் ஒவ்வொரு வகுப்பறைக்கும் நிரந்தரமாக கையளிக்கும் பட்சத்தில் மாணவர்களின் கற்றல் தூண்டப்படும் அதேவேளை பாடசாலைக்கான வரவும் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனால் பரீட்சை பெறுபேறுகளில் பாரியளவு வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். எனது பாடசாலையை பொறுத்தமட்டில் சிநேகபூர்வமான வகுப்புக்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. மாணவர்களுக்கான கற்பித்தலில் ஈடுபடும்போது நவீன தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி பல்வேறுபட்ட தகவல்களை ஆசிரியர்கள் சிறப்பாக வழங்கி வருகின்றனர்.

உங்கள் பாடசாலையின் வளர்ச்சிக்கு இ.தொ.கா.வின் நேரடி கண்காணிப்பும் ஆறுமுகன் தொண்டமானின் செல்வாக்கு பிரயோகமும்தான் காரணம் என்று சொல்கிறார்கள். எங்களுக்கும் இப்படி வாய்ப்பு கிடைத்தால் 'நாங்களும் சாதித்து காட்டுவோம்ல' என்றும் சொல்லப்படுவதாக அறிகிறோம். இது உண்மையா? தராதரம் பார்த்து உதவிகள் வழங்கப்படுவது கொள்கை ரீதியாக சரியானதா?

ஒரு பாடசாலை நிர்வாகி என்பவர் அப்பாடசாலையினை சிறப்பாக கொண்டு செல்வதற்கு சமூகத்திலுள்ள 100 நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது மிக முக்கியமானதோன்றாகும் என கல்வியியலாளர்கள் தெரிவித்துள்ளகர். அவ்வாறான 100 நிறுவனங்களில் ஒன்று தான் அரசியல் கடசிகள். எனது பாடசாலையின் துரிதமான வளர்ச்சிக்கு அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் முதல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வரையானவர்களின் மேலான ஒத்துழைப்பு எமது பாடசாலைகளுக்கு கிடைத்து வருகின்றது. இதனால் பாடசாலையின் பெளதிக வளங்கள் மாத்திரமன்றி ஆளணியினரையும் பெற்றுக் கொடுப்பதில் அவர்கள் அன்று தொட்டு இன்று வரை எமது பாடசாலைக்கு முன்னுரிமை வழங்கி வருகின்றனர். இது ஒன்றும் தவறல்ல.

ஒரு பாடசாலையின் அதிபரின் அணுகு முறையிலேயே இது சாத்தியமாகும். ஒவ்வொரு பாடசாலையும் அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சரியாக அணுகும் பட்சத்தில் அவற்றை அபிவிருத்தி செய்து கொள்வது கடினமானதொன்றல்ல. ஒரு பாடசாலையை பொறுத்தமட்டில் அங்கு பணியாற்றும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பெற்றோர், பழைய மாணவர்கள் ஆகியோர் நிச்சயமாக ஒரு கட்சியுடன் தொடர்புடையவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் அனைவரும் பல்வேறுபட்ட கட்சிகளை சார்ந்தவர்களாகவே இருப்பர். எனவே அதற்கமைய அவரவர் அணுகுமுறைக்கேற்ப மக்கள் பிரதிநிதிகளின் நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதில் முனைப்புடன் செயற்பட வேண்டும்.

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் இ.தொ.கா. வின் பாடசாலை என பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுவொரு அரசாங்க பாடசாலை என்பது யாவரும் அறிந்த விடயமே. எமது பாடசாலைக்கு தேவையான வளங்களை பெற்றுக் கொடுக்க யார் வந்தாலும் அவர்களை தடுத்து நிறுத்தும் எண்ணம் எமக்கு இல்லை. எமது பாடசாலையின் வேகமான வளர்ச்சிக்கு இ.தொ.கா தனது முழுமையான பங்களிப்பினை வழங்கிவருவது உண்மைதான் இதனை ஏனைய பாடசாலைகளும் முறையாக பயன்படுத்தும் பட்சத்தில் அவையும் விரைவாக அபிவிருத்தி அடையும்.

ஒரு பாடசாலையின் வளர்ச்சியை பார்த்து விமர்சனம் செய்வதை விடுத்து அவரவர் பாடசாலைகளின் வளர்ச்சிக்காக எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்பதில் சரியான திட்டங்களை ஒவ்வொறு பாடசாலை சமூகமும் வகுக்குமாயின் அவை துரிதமாக அபிவிருத்தி அடையும் என்பதில் ஐயமில்லை.

ஒரு பாடசாலை அதிபர் என்ற வகையில் சாதித்து காட்டியிருக்கிறீர்கள். பெருமையாகத்தான் இருக்கிறது. Hats off... இந்நிலைக்கு இப்பாடசாலையைக் கொண்டுவருவதற்கு பெரிதும் கஷ்டப்பட்டிருப்பீர்களே?

இன்னும் சாதிப்பதற்கு எவ்வளவோ இருக்கினறன. தற்போது எனது பாடசாலை படைத்து வரும் சாதனைகளுக்கு கடந்த கால அனுபவங்களே காரணம். ஒரு மனிதன் தனது வாழ்வில் சாதனைகளை படைக்க முன்வரும் போது பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும். அதே போன்றே எனக்கும் கடந்த காலங்களில் நான் சேவையாற்றிய பாடடசாலைகளில் சில வேலைத்திட்டங்களை செய்ய முற்பட்டபோது பலவித தடைகள் ஏற்படுத்தப்பட்டன. அங்கு பெற்றுக் கொண்ட அனுபவங்களை கொண்டே தற்போது இங்கு பல சாதனைகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றேன். எனது பாடசாலை சாதனைகள் படைப்பதற்கு எனது நிர்வாகத்திலுள்ள பிரதி அதிபர்கள், ஆசிரியர்களின் அளப்பரிய சேவையும் செயற்பாடுகளும் செயற்பாடுகளுமே மிக முக்கிய காரணங்களாகும். ஒவ்வொருவரும் தனது வகிபாகத்தை உணர்ந்து செயற்படுவாராயின் எந்தவொரு பாடசாலையும் பல சாதனைகளை படைக்கும் என்பதில் ஐயமில்லை.

 

Comments