முழு நிறைவேற்று அதிகாரத்தை கொண்டவர் ஜனாதிபதி | தினகரன் வாரமஞ்சரி

முழு நிறைவேற்று அதிகாரத்தை கொண்டவர் ஜனாதிபதி

"முன்னாள் சபாநாயகரும் பழுத்த அரசியல்வாதியுமான டபிள்யூ. ஜே. எம். லெக்குபண்டார சபாநாயகரின் கடமைகள், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி கொண்டிருக்கும் அதிகாரங்கள் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். அவரது பேச்சு இங்கு வாசகர்களுக்காகத் தொகுத்து தரப்பட்டுள்ளது."

பாராளுமன்றத்தில் கதைப்பவர்களுக்கு (உரையாற்றுவோருக்கு) தலைமை தாங்குவதாலோ என்னவோ, சபாநாயகரை சிங்களத்தில் 'கத்தாநாயக்க' என்பார்கள். கதைக்காத நபர்தான் இந்த 'கதாநாயக்க' சபைக்குத் தலைமைதாங்கும் சபாநாயகர் சபையை வழிநடத்துவாரேயொழிய அவர் உரை நிகழ்த்தமாட்டார் என்று கூறும் முன்னாள் சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டார,

"நான் பாராளுமன்ற சபாநாயகராக முழுமையான காலங்கள் நிறைவடையும் வரை கடமையாற்றினேன். இப்பதவி மிகவும் கௌரவத்திற்குரியது. அன்றைய சூழ்நிலையில் நான் எதிர்க்கட்சியிலிருந்தே தெரிவானேன். சுமார் ஏழு எட்டு மணித்தியாலங்கள் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட இழுபறிக்கு பின்பே, சபாநாயகராக நான் தெரிவானேன்" என்றார்.

நான் பதவி வகித்த காலம் மிகவும் மோசமான நெருக்கடி மிகுந்த யுத்தகாலமாகும். அவசரகாலச் சட்டம் ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றத்திலேயே நீட்டிக்கப்படும். அது பாராளுமன்றத்தில் நீட்டிப்பு செய்யப்படாவிட்டால், யுத்த சூழ்நிலையில் இராணுவ வீரர்கள், நாட்டின் குடிமக்கள் அல்லது பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும், அவர்களது மரணங்கள் கொலைச் சம்பவமாகவே கணிக்கப்படும். இந்த யுத்தம் சட்டப்பூர்வமானதாக இருக்க வேண்டுமானால் அவசரக்காலச் சட்டம் நீடித்திருக்க வேண்டும்.

சபாநாயகராக தெரிவாகப்பட்ட எனக்கும் ஒரு கடமையிருந்தது, அரசியலமைப்பு சாசனத்திற்கு அமைய பக்கம் சாராமல், கத்திமுனையில் நடப்பது போன்றே செயற்பட வேண்டிய நிலையிலிருந்தேன். மிகவும் கடினமான பாதையில், மத்தியஸ்தராகவே செயற்பட்டேன். அன்றைய நிலையில் என் வழிகாட்டியாக அரசியலமைப்பு யாப்பையே பின்பற்றினேன்.

இலங்கை சோசலிஸ குடியரசு அரசியலமைப்புச் சட்டம் 70ஆவது சரத்து ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை குறித்து தெளிவாக குறிப்பிடுகிறது. இதில் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வைப்பது அல்லது கூட்டத்தொடரினை ஒத்திவைப்பது என்பன ஜனாதிபதிக்குரிய அதிகாரமேயாகும். இதேவேளை பாராளுமன்றத்தை கலைக்கக் கூடிய அதிகாரத்தையும் ஜனாதிபதியே பெற்றுள்ளார். இதில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல் நாட்டு மக்கள் அனைவரும் அரசியலமைப்பு சட்டத்தை அறிந்து வைத்திருக்க வேண்டும். இந்த அரசியலமைப்பு சாசனத்தில் 70ஆவது சரத்தில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை எள்ளளவும் குறைக்கப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதிகளான ஜே. ஆர். ஜயவர்தன, பிரேமதாச, விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கிருந்த அதிகாரமே தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இருக்கின்றது.

19ஆவது திருத்தச் சட்டத்தினூடாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை ஜனாதிபதியே முன்வந்து, தனது அதிகாரத்தை குறைத்துக் கொண்டார். பாராளுமன்றத்தில் சிலர் நித்திரை விழித்து 19ஆவது திருத்த சட்டத்தை கொண்டு வந்தனர். 19 ஆவது திருத்தச்சட்டம் வந்தாலும், இதில் 70 ஆவது சரத்தை குறித்து எந்தவிதமான திருத்தங்களும் உள்வாங்கப்படவில்லை. அச் ஷரத்தில் கை வைக்கப்படவே இல்லை என்பதே உண்மை நிலையாகும்.

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச பாராளுமன்ற கூட்டத்தை ஒத்திவைப்பதைக் கூட சரியாகவே செய்தார். அவருக்கு எதிராக வந்த குற்றப்பிரேரணையை சரியாகக் கையாண்டார். 70வது ஷரத்தின்படி சபை அமர்வை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கலாம். அதாவது சில நாட்களுக்கு என்றிருல்லாமல் இரண்டு மாதங்களுக்கு பின்போடக்கூடிய அதிகாரம் இருந்தது. 70வது ஷரத்தில் இல் 3 பிரிவில் பாராளுமன்றத் தொடரை ஒத்திவைத்து, அதனை மீண்டும் ஆரம்பித்து வைப்பதற்கான திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட திகதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு பாராளுமன்ற அமர்வை இடைநிறுத்தி வைக்கலாம். ஜனநாயக அடிப்படையில் இந்த ஷரத்ததை இரண்டு வாரத்திற்குள் என்று எல்லையைப் போட்டிருக்கலாமே!

ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்ற தொடர் அமர்வை ஆரம்பித்து வைத்து, அத்தினத்திலிருந்து மீண்டும் பாராளுமன்ற அமர்வை நிறுத்தி வைக்கலாம். இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் பிரதமருக்ேக அதிகாரம் உண்டு என்று கோருபவர்கள், இப்போது ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை தெரிந்திருக்க வேண்டும். இந்த ஷரத்தை அவரவர்களுக்குகேற்றவாறு அர்த்தம் கற்பிக்க முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த அரசியலமைப்பின் பிரகாரமே பாராளுன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுத்துள்ளனர். அரசியலமைப்பு சட்ட திட்டங்களை மீறி யாராவது பாராளுமன்ற அமர்வினை நடத்தினால் சிறைக்கிக்கூட செல்ல வேண்டிய நிலை ஏற்படும். பாராளுமன்றத்திற்கான அதிகாரங்கள், ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள், சபாநாயகருக்குரிய அதிகாரங்கள் என்பன மிகவும் தெளிவாகவே அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசமைப்பு சட்டம் 33 ஷரத்தில் ஜனாதிபதிக்காக அதிகாரங்கள், செயற்பாடுகள் குறித்தும், பாராளுமன்ற அமர்வினை கூட்டுவதற்கும், பாராளுமன்ற மங்கள அமர்வினை ஆரம்பித்து அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தைச் செய்வதற்கும் ஜனாதிபதிக்ேக அதிகாரமுண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி இப்படியான வேளையில் பாராளுமன்றம் பிரவேசிக்கும் போது, முதன்மை ஆசனம் ஜனாதிபதியை தவிர வேறு யாருக்கும் அளிக்கப்படவில்லை. ஜனாதிபதியே கூட்டத் தொடரை நிறுத்தியப்படியால் அவரே கூட்டத் தொடரை ஆரம்பித்தும் வைக்க வேண்டும் என்பது மரபு.

அக்காலத்தில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்த போதெல்லாம் நான் பாராளுமன்ற சபாநாயகர் ஆசனத்திலிருந்து எழுந்து, அதனை ஜனாதிபதி அமர்வதற்கு கொடுத்துள்ளேன். அது சாதாரணமாக நடக்கும் பாராளுமன்ற கூட்டத்தின் போது அல்ல. நிறுத்தப்பட்ட சபை அமர்வினை கூட்டுவதற்கு வருகை தரும் போது, இந்த ஒழுக்கை கைக்ெகாள்ள வேண்டும்.

நான் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்த பின்னர் எடுத்த தீர்மானம்தான் இனி கட்சி அரசியல் ரீதியாக பாராளுமன்றத்திற்கு வருவதில்லை என்பதாகும். ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் இவ்வாறுதான் நடந்து கொண்டார்.

சபாநாயகர் சுயதினமாக செயற்பட வேண்டும். நான் சபாநாயகராகிய பின்பு சிறிகொத்தவுக்குச் சென்றதில்லை. செங்கோலுடனேயே செயற்பட்டேன். நான் சபாநாயகராக செயற்பட்ட போது செங்கோலை எடுத்துக் கொண்டு சென்றனர். பறித்தனர்.

என்னைப் போல் பாராளுமன்றத்தில் இம்சையை அனுபவித்தவர்கள் யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.

ஆனாலும் நான் புன்முறுவலுடன், உறுப்பினர்களை எனது பிள்ளைகளைப் போலவும் நடத்தினேன். யாரையும் தண்டித்தது கிடையாது. யாரையும் வெளியேற்றியதில்லை. அவர்களை நேசித்து, மகிழ்ந்து செயற்பட்டேன். மிகவும் கௌரவத்துடன் ஆறுவருடங்கள் இருந்தேன். பட்ஜெட் விவாதத்தில் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அல்லது பிரதமருக்கு எதிராக நம்பிக் ைகயில்லா பிரேரணை கொண்டு வந்து அரசு தோற்கடிக்கப்பட்டால் கூட பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்ேக உரித்தானது.

நான் சபாநாயகராக இருந்த காலத்தில் எனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவில்லை. அதேபோல் எனக்கு கொடுக்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தை அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தவில்லை.

அரசியல் நடவடிக்ைககளில் ஈடுபடவில்லை. எனக்கு தற்போது நடைபெற்றுவரும் விடயங்கள் வேதனை தருகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்தது அரசியலமைப்புக்கு முரணானதல்ல.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமனம் செய்த பின்னர், ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையில் தங்கியிருப்பது சட்டவிரோதமானது.

19ஆவது திருத்த சட்டம் அமுலுக்கு வந்தாலும் இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் அரசியலமைப்பில் 70ஆவது சரத்து திருத்தப்படாமையினால் ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் முழுமையாகவுள்ளது.

இவ்வாறு முன்னாள் சபாநாயகர் தெரிவித்தார்.

Comments