நீதிக்கே தலை சாய்ப்பேன்! | தினகரன் வாரமஞ்சரி

நீதிக்கே தலை சாய்ப்பேன்!

விருத்தனாய் அகவை போயும்

விருத்தங்கள் எழுதும் ஆசை

இருப்பதால் நாளி தழ்க்கு,

இடைக்கிடை எழுதிக் கொள்வேன்!

நாட்டுநன் நடப்பு காணும்

நலிவுகள் கதிரைச் சண்டை

பாட்டுக்கு கருவாய் ஆகும்

பாராட்டும், ஏச்சும் சேரும்

இல்லாத ஒன்றை யென்றும்

இருப்பதாய் சொல்ல மாட்டேன்

உள்ளதை உள்ள தென்று

உரைப்பதால் தானே சிக்கல்!

கொக்கினைக் காகம் என்றே

கூறிட மனம் மறுக்கும்;

சத்தியம் காப்ப தாலே

சனமெலாம் எனை வெறுக்கும்

பத்தினித் தெய்வ மென்று

பரத்தையைச் சொல்ல லாமா?

உத்தமர், தலைவ ரென்று

உலுத்தரை உரைக்க லாமா?

கொஞ்சநாள் மனித வாழ்க்கை

குருடனாய் வாழ மாட்டேன்

நெஞ்சத்தில் நிறுத்துப் பார்ப்பேன்

“நீதிக்கே தலையைச் சாய்ப்பேன்!”

Comments