கிடைத்ததை வைத்து வாழ்க்கையை தொடருவோம்... | தினகரன் வாரமஞ்சரி

கிடைத்ததை வைத்து வாழ்க்கையை தொடருவோம்...

மழை வானத்தைப் பொத்துக்கொண்டு ஊற்றுகிறது. இதுவரை காய்ந்து போயிருந்த நிலங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது வயல்களில் நெற்பயிர் விதைத்தும் விதைக்காமல் நஞ்சை கலக்கியும் ஏ 9 பாதையின் இருமருங்கும் அழகூட்டி நிறைந்திருக்கிறது.

இந்த வீதிகளைத் தவிர்த்து இறங்கி எங்காவது கிராமத்து வீதிகளில் பயணிப்பதற்கு கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டும். இன்னமும் கல்லைக்காணாத செம்மண்வீதிகளோ கருமண் வீதிகளோ உழவுக்குச் செல்லும் இயந்திரங்களால் மேலும் சேதமாக்கப்பட்டு நொந்து போய்க்கிடக்கிறது. பெருவீதிகளில் பயணிப்பவர்களுக்கு அபிவிருத்தி அந்தமாதிரி என்று கூறி வியக்கமுடியும். ஆனால் அந்த வீதியைக் கடந்து உள்ளே போகவிருப்பவர்களில் அநேகர் இன்னமும் சேறு கலக்கித்தான் நடக்கிறார்கள்.

உதெல்லாம் எங்களுக்கு உறைக்கப்போவதில்லை. இருபது ஆண்டுகளுக்கு மேலாக திருத்தப்படாத ஏ9 வீதியில் பாரிய குண்டும் குழியுமாக உடைந்து போன தார் வீதியில் நள்ளிரவிலும் சைக்கிளோடிய மக்கள்தானே. பெரு வெள்ளக்காலங்களில் திருத்தப்படாத வான் கட்டுகளில்லாத பெருங்குளங்களை கடந்து சாதனை செய்திருக்கிறோம் மோட்டார் சைக்கிள்களுடன் வருபவர்களுக்கு இடுப்பளவில் பாய்ந்து கொண்டிருக்கும் வெள்ளத்தில் நடந்து கடக்க வேண்டியதுதான். தற்காலிகமாக ஒரு வேலை வாய்ப்பு உருவாகிவிட்டதால் இளைஞர்கள் கம்பும் கையுமாக வெள்ளத்தின் எல்லையில் நிற்பர். மோட்டச்சயிக்கிளை அவர்களிடம் கொடுத்துவிட்டு நாம் அதனருகே நீரில் இறங்கி நடக்கவேண்டியதுதான். காவுதடியில் மோட்டச்சயிக்கிளை நனைக்காமல் அந்தப்பக்கம் கொண்டு வந்து தருவார்கள். கூலி ஒரு வண்டிக்கு ஐம்பது ரூபா. சிற்றூர்திகள் பேருந்துகள் எல்லாம் மிதிபலகை வழியே வெள்ளம் உள்நுழையும். பயணிகளை நடந்து வரும்படி வெள்ளத்தில் இறக்கிவிட்டு வாகனங்கள் பயணிக்கும். அதையும் கையில்பிடித்து மெதுவாக அழைத்துவந்து மறுகரை சேர்த்தபின் நனைந்த பயணிகள் அப்படியே ஏறி பயணத்தை தொடர்வர் முணுக்கென்றால் காற்றுப்போய்விடும் அல்லது டீசல் புளொக்காகும், கொஞ்சம் அசந்தால் வயலுக்குள் வழுக்கிச்சென்று படுத்துவிடும்.ஒவ்வொரு பயணங்களிலும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டே போவோம். ( இப்பவும் அப்படித்தான் உயிரைப்பிடித்துக்கொண்டே பஸ்ஸில் ஏறுகிறோம் இது வேறு விடயம்)

போர் முடிந்தபின் வீதி துடைத்து சுத்தமாக்கி புதிதாக போடப்பட்டது. அழகிய விளக்குகள் பூட்டப்பட்டன. ஒலைக்கொட்டில்களாகவும் மரத்தடிகளாகவும் இருந்த பாடசாலைகள் மாடிக்கட்டடங்களாகின.

ஆட்லறி செல்லின்வெற்றுக் கோதுகளைக் கவிழ்த்து அதன்மீது அமர்ந்து பாடம்படித்த எமது சிறுவர்களுக்கு புதிய ஆசனங்கள் வந்தன. நள்ளிரவில் காத்திருந்து தூக்கமற்றுப்பயணித்தாலும் எறிகணைகள் வருமே எனப்பயந்து பயந்து போன பூநகரிப் ஜெட்டிப்பாதை முற்றாக பாலமாகிவிட்டது.

இன்னமும் சொந்த வீடின்றி மக்கள் அலைந்தாலும் கண்ணைக்கவரும் விதத்தில் அலுவலகங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அங்கே குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிகாரிகள் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னமும் கூட மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் கொடுத்து முடிக்கவில்லை. இன்னும் கூட மக்கள் அனைவருக்கு சமூர்த்தி எனப்படும் வாழ்வின் எழுச்சித் திட்டங்கள் இல்லை. இன்னும்கூட மக்களுக்குதாம் இழந்த சொத்துகளுக்கான எந்த நட்ட ஈடும் வழங்கப்படவில்லை. இறந்து போன உயிர்களுக்கும் காணாமற்போன உறவுகளுக்கும் எந்த முடிவும் கொடுக்க சம்பந்தப்பட்டவர்களால் முடியவில்லை.

ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன என்று விட முடியவில்லை. மேற்குறித்த அபிவிருத்திகளெல்லாம் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் இன்னமும் நாங்கள் சுயமாக சிந்திக்கிறோமா உண்மையில் எமது தேவைகள் எவையென உணர்ந்துள்ளோமா என்றால் விடை பூச்சியமாகத்தானே உள்ளது. திருவிழாவில் தாயைத் தொலைத்த குழந்தைகளாகத்தான் நாம் இருக்கிறோம். ஒரு குழந்தைக்கு அநேக ஆசைகள் இருந்தாலும் அதற்கு அம்மாதான் முதல் தேவை. இதுதான் நியதி.

யாருக்கும் வாழ்க்கை மிகப்பிரதானம். ஒருகாலம், இந்த வாழ்க்கையை நாம் தொலைத்துவிட்டு வீதிகளில் அலைந்தோம். சொல்ல முடியாத அளவுக்கு வேதனைகளை சுமந்தோம். யாரோ ஒருவர் அதிகாரியாக இருப்பதற்காக நம்முடைய சுதந்திரத்தை இழந்தோம். சிலர் சுக போகங்களை அனுபவிக்க நாம் உயிர்களை விலையாக கொடுத்தோம். வெற்றியென்ற சொல்லிருந்தால் மாலைகளை மற்றவர்களுக்கு அணிவித்தோம் தோல்வி என்ற சொல் வந்தபோது அந்த வேதனைகளை நாமே அனுபவித்தோம். பெரு வெள்ளமாக திரண்டு எம்பிள்ளைகள் போர்க்களமேகினர். உயிர்கள் விதையாகின என்றனர். மறுபடி மறுபடி மாரிகாலம் வரும் மறுபடி மறுபடி வெள்ளம் பெருகிப்பாயும் ஆனால் நாம் இழந்த எமது சொத்துகளுக்கும்சொந்தங்களும் மறுபடி வரா. இனி ஒரு போதும் இந்த நிலை வேண்டாம். கிடைத்ததை வைத்து வாழ்க்கையை தொடரலாமே.

 

Comments