தீவிர அரசியலுக்கு வாங்கண்ணா என அழைத்திருக்கும் எடப்பாடியார்! | தினகரன் வாரமஞ்சரி

தீவிர அரசியலுக்கு வாங்கண்ணா என அழைத்திருக்கும் எடப்பாடியார்!

கொழும்பு லிபர்ட்டி தியட்டரில் 1973ஆம் ஆண்டளவில் ‘ஜீசஸ் கிரைஸ்ட் சுப்பர் ஸ்டார்’ என்ற ஹொலிவூட் இசைத் திரைப்படம் திரையிடப்பட்டது. இதே பெயரில் அமெரிக்க நாடக அரங்குகளில் சக்கைபோடு போட்ட நாடகமே பின்னர் திரைப்படமாகியது. இயேசுவின் இறுதிகாலத்தை நவீன முறையில் பாடல்கள் வழியாக சொல்லும் படமே ஜீசஸ் கிறைஸ்ட் சுப்பர் ஸ்டார். அதில் அனைத்து பாடல்களும் ரொக் இசையில் அமைக்கப்பட்டவை. நடன அசைவுகளும் அப்படித்தான். படத்தில் ஜெட் விமானம், யுத்த தாங்கி எல்லாம் வரும். மேரி மெக்தலேனுக்கும் இயேசுவுக்கு இடையே ஒரு ஈர்ப்பு இருப்பதாக சித்தரிக்கப்படும். ‘ஐ டோன்ட் நோ ஹவ்டு லவ்ஹிம்’ என்றொரு இயேசு – மக்தலேன் சம்பந்தப்பட்ட பாடலும் படத்தில் இருந்தது. மொத்தத்தில், அந்த ஹிம்பி கலாசார காலத்தில் அது ஒரு அப்புதமான இசைச் சிந்திரமாக அமைந்திருந்தது.

எனினும் கத்தோலிக்க சமயமும் ஏனைய கிறிஸ்தவ சமயங்களும் இப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. அது போராட்ட வடிவமாக இல்லாமல் அமைதி வழி எதிர்ப்பாக இருந்தது. லிபர்டி தியட்டருக்கு படம் பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரிடமும் அருட் சகோதரர்களும் கன்னியாஸ்திரிமாரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். ரசிகர்கள் அதை வாங்கிப் படித்தபடியே படம் பார்க்கச் சென்றார்கள். இப் பிரசுரங்களை வாங்கி சட்டைப் பையில் வைத்தபடி நான்கு முறை இப் படத்தை நான் பார்த்து ரசித்திருக்கிறேன்.

இதே காலப் பகுதியில் நியூயோர்க் நகர வீதிகளில் கிறிஸ்துவும் அவரது சீடர்களும் ரொக் இசைக்கு நடனமாடுவதாக இன்னொரு இசைப் படமும் மெஜஸ்டிக் தியட்டரில் வெளியாகி ஓடியது.

இங்கே சுட்டி காட்ட விரும்புவது, இயேசு கிறிஸ்துவை அவரது தெய்விக தோற்றத்துக்கு அப்பால் வெறும் மனிதனாகச் சித்தரிக்க முயன்ற பல முயற்சிகளின் பின்னரும் கூட கத்தோலிக்க மதமோ ஏனைய கிறிஸ்தவ மதங்களோ எந்தவொரு வீழ்ச்சியையும் சந்திக்கவில்லை என்பதைத்தான். ஜீசஸ் கிரைஸ்ட் சுப்பர் ஸ்டார் படத்தை பார்த்த கிறிஸ்தவர்கள் அச் சமயத்தைவிட்டு வெளியேறிச் சென்றுவிடவில்லை. பலர் முன்னைவிட அதிக பக்தியும் ‘சைத்தானி’யத்தில் இருந்து மதத்தைக் காக்க வேண்டும் என்ற உணர்வும் கொண்டவர்களாக மாறிப் போனார்கள். அதாவது கலை என்பதைக் கலைவடிவமாகவும் அக் கலை வடிவத்தின் நேர்த்தியை ரசிப்பதாகவும் இருந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் கிடையாது. எவருக்கும் எதை வேண்டுமானாலும் விமர்சிக்கும் உரிமை உள்ளது என்பதை முதலில் நாம் ஏற்று கொள்ளவேண்டும். ஒருவரின் விமர்சனம் சரியாக இருக்குமானால் அதை ஏற்று திருத்திக் கொள்ளவும் பொருளற்றதாக இருக்குமானால் பொருட்படுத்தாமல் விடுவதற்கும் நாம் பக்குவம் பெற்றவர்களாக இருப்பதே முக்கியம். அன்றைய கிறிஸ்தவர்களிடம் அப் பண்பு இருந்தது.

தற்போது தமிழகத்திலும் உலகெங்கும் திரையிடப்பட்ட இடங்களிலும் வெற்றிகரமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் சர்கார் திரைப்படம் வசூலில் அதிரடி சாதனை ஒன்றை நிகழ்த்துவதற்கு அ.தி.மு.கவே வழி வகுத்துக் கொடுத்திருக்கிறது. அ.தி.மு.க அரசு, இப் படத்தில் வரக்கூடிய ஆட்சேபகரமான காட்சிகளை சன்பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேசி அக்காட்சியை நீக்குவதற்கு முயற்சி செய்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் தயாரிப்பு நிறுவனமும் அதற்கு இணங்கி இருக்கும் அல்லது நீதிமன்றம் சென்றிருக்கும். பதிலாக, திரையரங்குகளை முற்றுகையிட்டது. தடியடி நடத்தியது, பேனர்களை கிழித்து எறிந்தது. விஜய் ரசிகர்களுடன் ரகளையில் ஈடுபட்டது. இது போன்ற வன்செயல்களில் ஈடுபட்டதன் மூலம் சர்கார்படத்தை பார்க்க விரும்பியிராதவர்களையும் படத்தைப் பார்க்கச் செய்திருக்கிறது. பல கோடி ரூபா செலவில் செய்யப்பட்டிருக்க வேண்டிய விளம்பரங்களை அரசாங்கமே இலவசமாக செய்து கொடுத்து, அசுர வெற்றியை தன் அரசியல் எதிரிகளான சன் நிறுவனத்துக்கும் (தி.மு.க), விஜய்க்கும் வழங்கியிருக்கிறது எடப்பாடி அரசு. அரசியலுக்கு இப்போதே வரலாமா, பின்னர் வரலாமா என்ற குழப்பத்தில் இருந்த விஜய், தனக்குக் கிடைத்திருக்கும் விளம்பரம், மக்கள் செல்வாக்கு என்பனவற்றைப் பார்த்து, அரசியல் பிரவேசம் நிகழ்த்த இதுதான் சரியான தருணம் என முடிவுகட்டுவதற்கு இச் சம்பவங்கள் கால்ககோள் நாட்டியுள்ளன என்றால் மிகையாகாது.

“என்னிடம் பணம் நிரம்பி வழிகிறது. கடந்த முப்பது வருடங்களில் தமிழ் ரசிகர்கள் என்னை எங்கேயோ கொண்டுபோய் ஏற்றி வைத்திருக்கிறார்கள். எனவே, என் இந்த வயதில் நான் இந்த மக்களுக்கு ஏதேனும் கைமாறு செய்தாக வேண்டும். தூய ஆட்சியை அவர்களுக்கு வழங்க வேண்டும்.” என்று விஜய் தன்னிடம் கூறியதாக அரசியல்வாதியான பழ.கருப்பையா கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

சர்கார் ஒரு அரசியல் படம். இன்றைய தமிழக அரசியலை விமர்ச்சிக்கும், நையாண்டி செய்யும் படமாகவே இதை முருகதாஸ் இயக்கி இருக்கிறார். இந்த விமர்சனப் பார்வை அ.தி.மு.கவை குறிவைப்பதாக இருந்தாலும் தி.மு.க ஆட்சியையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் தமிழக அரசியல் சீர்கெட்டுப் போனதற்கு இரண்டு கழகங்களின் ஆட்சிகளுமே காரணமாக இருந்திருக்கின்றன.

சர்கார் படத்தை தயாரித்த சன் பிக்சர்சின், அதிபர் கலாநிதிமாறன். கலைஞர் கருணாநிதியின் பேரன். படத்தயாரிப்பாளர் தேனப்பன். இவர் தி.மு.க காரர். கதாநாயகனான விஜய்க்கும் தி.மு.கவுக்கும் இடையே குறிப்பிடத்தக்க நெருக்கம் இல்லையானாலும் கடந்த காலங்களில் அ.தி.மு.கவினாலும் ஜெயலலிதாவினாலும் நேரிடையாகப் பாதிக்கப்பட்டவர். வெற்றிப் படமாக வந்திருக்க வேண்டிய இன்னொரு அரசியல் படமான ‘தலைவா’ வசூல் ரீதியான தோல்வியடைய ஜெயலலிதாவே நேரடிக் காரணம். ஒரு சமயத்தில் விஜய்யும் அவரது தந்தை சந்திரசேகரனும் ஜெயலலிதாவின் ஊட்டி கொடநாடு பெருந்தோட்ட பங்களாவுக்குச் சென்று பல மணித்தியாலம் அவரைப் பார்ப்பதற்காகக் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி வர நேர்ந்ததை விஜய் மறந்திருக்க மாட்டார்.

சர்கார் படத்தில் இரண்டு இடங்களைத்தான் அ.தி.மு.கவினர் ஆட்சேபனைக்குரிய காட்சிகளாகக் குறிப்பிட்டனர், முதலாவது அதில் வரும் கோமளவல்லி கதாபாத்திரம். அக் கதாபாத்திரத்துக்கு ஜெயலலிதாவைப் போலவே உடையணிவிக்கப்பட்டிருந்தது. கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் உண்மையான பெயர். எனவே எங்கள் இதய தெய்வமான அம்மாவை நிந்திப்பதற்காகவே இப்படிப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்றும் இப் பெயர் நீக்கப்பட வேண்டும் என்பதும் அ.தி.மு.கவின் கோரிக்கை இரண்டாவது, மக்களுக்கு இலவசங்கள் தரப்படுவது. அரசு தரும் இலவசப் பொருட்களாக மிக்ஸி, கிரைண்டர் என்பன காட்டப்படுகின்றன. கதாநாயகன் அவற்றைத் தூக்கி நெருப்பில் போடுவதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க அரசு முழுப் படத்தையும் எதிர்க்கவில்லை. இவ்விரண்டும் நீக்கப்பட வேண்டும் என்றுதான் வன்முறை ரீதியாக கோரிக்கை விடுத்திருந்தது. இப் படத்தில் பல்வேறு நபர்களை நினைவுப்படுத்துகின்ற மாதிரி காட்சிகள் வருகின்றன. ஆனால் இலவசங்களை அறிமுகப்படுத்திய கலைஞர் கருணாநிதியை குறிப்பிடும் வகையில் எந்தவொரு காட்சியோ அல்லது வசனங்களோ இல்லை என்பது அ.தி.மு.கவினரின் வருத்தமாக இருக்கிறது. கோமளவல்லி என்று ஒரு கதாபாத்திரத்தை உலவ விட்டதுபோல தட்சணாமூர்த்தி என்ற என்றொரு பாத்திரத்தையும் உருவாக்கி இருந்தால் சரியாகிப் போயிருக்கும் என்கிறார்கள். தட்சணாமூர்த்தி என்பது கலைஞர் கருணாநிதியின் இயற்பெயர்.

தற்போது சர்கார் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது. தமிழக திரைப்பட உரிமையாளர் சங்கம் இவ்விவகாரத்தில் தலையிட்டு, கோமளவல்லி என உச்சரிக்கப்படும் இடங்களை ஒலியில்லாமல் செய்யவும், இலவசங்களை நெருப்பில் போடப்படும் காட்சியைக் கத்தரிக்கவும், வேறு ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கவும் ஒப்புக்கொண்டு அதன்படியே கடந்த வெள்ளிக்கிழமை தணிக்கை செய்யப்பட்ட பட்டத்தை தமிழகத்தில் வெளியிட்டது. தற்போது எதிர்ப்பின்றி படம் ஓடுகிறது. ஆனால் தமிழகத்துக்கு வெளியே ஏனைய மாநிலங்களிலும், இலங்கை உட்பட வெளிநாடுகளிலும் ‘மீள் தணிக்கை’ செய்யப்படாத சர்காரே திரையிடப்பட்டுள்ளது.

சர்கார் பிரச்சினை ஓய்ந்தாலும் இது பல கேள்விகளையும், சர்ச்சைகளையும், விவாதங்களையும் உருவாக்கி விட்டிருக்கிறது. பொலிஸ் திணைக்களத்தைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி, தன் கட்சி ஆதரவாளர்கள் தியட்டர்களை முற்றுகையிட்டு, அராஜகங்களில் ஈடுபடுவதை கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். கைது செய்யப்பட்டவர்கள் விஜய் ரசிகர்களே தவிர, அராஜகத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க வன்முறையாளர்கள் அல்ல.

இரண்டாவது, தணிக்கை செய்யப்பட்ட ஒரு திரைப்படம் திரையப்படுவதற்கான சட்ட ரீதியான அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதாகக் கருதப்படும் போது, சட்டத்துக்கு புறம்பான, வன்முறை மூலமான மிரட்டலுக்கு தியட்டர் உரிமையாளர்களை பணிய வைத்து காட்சிகளையும் வசனங்களையும் நீக்கியது. ஒரு படம் தணிக்கைக்கு சென்று வந்த பின்னர் அது மீண்டும் தணிக்கை செய்யப்பட வேண்டியதில்லை என்பதோடு எவருக்குமே அந்த அதிகாரம் கிடையாது. நீதிமன்ற உத்தரவின்படி மட்டுமே ஒரு திரைப்படத்தை தணிக்கை சபை மறு ஆய்வுக்கு உட்படுத்தலாம்.

படத்தின் இயக்குநர் ஏ. முருகதாசுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதோடு அவர் கைது செய்யப்பட வேண்டுமென அமைச்சர்கள் பேசவும் செய்தனர். இவற்றை ஊக்குவிப்பது மாதிரி எடப்பாடியார் மூச்சுவிடாமலிருந்தார். தமிழக முதல்வரின் இந் நடத்தை கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. சட்ட ரீதியாகப் பார்த்தால், தணிக்கை செய்யப்பட்டு வெளிவந்த ஒரு படத்துக்கு எவராவது அச்சுறுத்தல் விடுத்தால், பொலிஸ் பாதுகாப்போடு படத்தைத் திரையிடச் செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கானது. அதைச் செய்யாமல் மாநில அரசே போராட்டங்களைத் தூண்டி விட்டு கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்திருப்பது தவறான முன்மாதிரி.

பத்மாவத் திரைப்படம் வெளியாவதற்கு தயாரானபோதும், சர்காரை விட பல்மடங்கு உக்கிரமான போராட்டங்கள் வட மாநிலங்களில் ஏற்பட்டன. பத்மாவதியாக நடித்த தீபகா படுகோனுக்கு தலையை வாங்குவோம் என இந்து வெறியர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்தனர். விவகாரம் நீதிமன்றம் சென்றபோது, படம் மறுதணிக்கை செய்யப்பட வேண்டும் என நீதிபதிகள் சொல்லவில்லை. இராணுவத்தையாவது பாதுகாப்புக்கு நிறுத்தி படத்தை திரையிடுங்கள் என்றுதான் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.

முருகதாஸ் முன்ஜாமின் எனப்படும் முன்பிணை கேட்டு நீதிமன்றம் சென்றபோது உடனடியாகவே அவரைக் கைது செய்வதற்குத் தடை வித்த சென்னை நீதிமன்றம், தமிழக அரசிடம் தான் கேள்விகளை எழுப்பி இருந்தது. விஜய் ரசிகர்களைக் கைது செய்த தமிழக பொலிஸ், பேனர்களை கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை ஏன் கைது செய்யவில்லை? என்று தமிழக அரசு சட்டத்தரணிகளிடம் கேட்டது நீதிமன்றம்!

சர்கார் தமது தலைவியை கேவலப்படுத்தியிருப்பதாக கூறிய ஒரு முக்கிய அ.தி.மு.க அமைச்சர், ‘அம்மா இல்லாம இவங்களுக்கு குளிர் விட்டுப் போயிருக்கு’ என்று சொன்னார். இதைக் கண்டித்துள்ள இயக்குநர் அமீர், அம்மா இல்லாமல் இந்த அ.தி.மு.க அமைச்சர்களுக்குத்தான் குளிர்விட்டுப் போயிருக்கிறது என்று பதிலளித்ததோடு, அம்மா இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காது என்று கூறுவதன் மூலம், ஜெயலலிதா ஒரு சர்வாதிகாரி என்பதைத்தானே விளம்பரப்படுத்துகிறார்கள் என்றும் கேட்டிருக்கிறார்.

சென்னை சில வருடங்களுக்கு முன்னர் வெள்ளக்காடானபோது அ.தி.மு.க அமைச்சர்கள் ஊடகங்களோடு பேசவும் முன்வரவில்லை. ஜெயலலிதா எந்த அறிக்கையை விடவும் இல்லை. ஆனால் சர்கார் திரைப்படம் வெளியான தினத்தன்று அது பற்றி விவாதிக்க அமைச்சரவைக் கூட்டமே நடந்திருக்கிறது.

இப்படத்தில் முதலமைச்சராக நடித்திருப்பவர் முன்னர் அ.தி.மு.க பிரமுகரான பழ. கருப்பையா, தற்போது இவர் தி.மு.க பிரமுகர். படத்தில் முதல்வரே வில்லன். இவரிடம், கோமளவல்லி என ஒரு பாத்திரம் சிருஷ்டிக்கப்பட்டிருப்பது பற்றி கேட்டபோது, தான் அதில் எந்தத் தவறையும் காணவில்லை என்றார்.

ஒரு பாத்திரத்துக்கு கோமளவல்லி என்று பெயர் சூட்டினால் அது இவரைத்தான் குறிப்பிடுகிறது என்று கருத முடியாது. அது படைப்பாளியின் சுதந்திரம், சரி, ஜெயலலிதா என்றே பெயர் சூட்டினால்தான் என்ன? உச்ச நீதிமன்றத்தாலும் குற்றவாளியாகக் காணப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர்தானே ஜெயலலிதா? காந்தியை கொலை செய்தவன் நதுராம் கோட்சே என்றும் குற்றவாளி என்றும் கூறுவது எப்படி தவறில்லையோ அவ்வாறே ஜெயலலிதா ஒரு தீர்க்கப்பட்ட குற்றவாளி என்பதில் எந்தக் குற்றமும் கிடையாது என்பது பழ. கருப்பையாவின் வாதம்.

சர்கார் படத்தை இவ்வளவு பாரதுரமான விவகாரமாக அ.தி.மு.க எடுக்காமல் தயாரிப்பாளர்களுடன் காதும் காதும் வைத்த மாதிரி பிரச்சினையை பேசித்தீர்த்திருந்தால் இப் படத்துக்கு இவ்வளவு பிரமாண்டமான இலவச விளம்பரம் கிடைத்திருக்காது. இறுதியாக, அ.தி.மு.க ஆட்சியை விமர்சிப்பது மாதிரி படம் எடுத்தால் படம் பிய்த்துக் கொண்டு ஓடும் என்ற எண்ணத்தை இந்த எதிர்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. உடனடியாகவே அரசியலுக்கு வரலாம் என்ற எண்ணத்தை விஜய்யிடமும் உருவாக்கி இருக்கிறது.

இப்படித்தான் 1996ம் வருடம் ரஜினியுடன் ஜெயலலிதா மோதினார். அதன் விளைவாக படையப்பா படம் உருவானது. அதில் ரம்யா கிருஷ்ணன் ஏற்றிருந்த பாத்திரம் ஜெயலலிதாவை நினைவுபடுத்துவதாக உருவகிக்கப்பட்டிருந்தது. படம் சுப்பர் வெற்றி. ஆனால் அடுத்த முறை ஜெயலலிதா முதல்வரானதம், ரஜினியை பழிவாங்க நினைக்கவில்லை. ஒரு நட்பைத்தான் பேண விரும்பினார்.

1973இல் தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆர். விலகிய சமயத்தில் உலகம் சுற்றும் வாலிபன் திரைக்கும் தயாராக இருந்தது. படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என தி.மு.க நின்றது. அப்போது மதுரை மேயராக விளங்கியவர் பெயர் முத்து. சண்டியராக அறியப்பட்ட அவரை மதுரை முத்து என்றுதான் அழைப்பார்கள். அவர் ஒரு படிமேலே போய்,

மதுரையில் உலகம் சுற்றும் வாலிபன் படம் திரையிடப்படுமானால் நான் சேலை அணிந்து வீதியில் நடந்து செல்வேன் என்றார். ஆனால் தமிழகததில், எதிர்ப்புகளை மீறி உலகம் சுற்றும் வாலிபன் திரையிடப்பட்டதோடு மதுரை மீனாட்சி அரங்கிலும் திரையிடப்பட்டது.

அப்படத்தை முதல் நாளே பார்த்து மகிழ்ந்து மதுரை எம்.ஜி.ஆர். ரசிகர்கள், சேலைகளை வாங்கிக் கொண்டு மதுரை முத்துவின் வீட்டுக்கு போய், இதோ சேலைகள் வாங்கி வந்திருக்கிறோம், அணிந்து கொண்டு வீதிக்கு வாருங்கள் என்று கோஷம் போட்டார்களாம்! பின்னர் வீட்டு வாசலில் சேலைகளை வீசி எறிந்து விட்டு கலைந்து சென்றார்கள் என்பார்கள்..

சினமா துறை ஒரு பொழுது போக்கு சாதனம். அதில் எந்தவிதமான தீவிர கருத்துக்களையும் ஆழமாக எடுத்துச் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் படம் ஓடாது. ஏனெனில் ஒரு தயாரிப்பாளர் இலாபம் பார்த்து படம் தயாரிப்பதால் விஷயங்களை மேலோட்டமாகவும் மசாலா கலந்தும் ரசிக்கும்படியாகவும் தான் படம் எடுப்பார்.

சர்காரும் அப்படி எடுக்கப்பட்ட ஒரு படம்தான். சகிப்புத்தன்மை எப்படி ஜெயலலிதாவிடம் இருக்கவில்லையோ அப்படியே அவரது சீடர்களிடமும் இல்லை என்பதைத்தான் சர்கார் விவகாரம் வெளிப்படுத்தி இருக்கிறது. அவர்கள் துள்ளிப் பாய்ந்திருக்காவிட்டால், மற்றொரு விஜய் படமாக சர்கார் கடந்து சென்றிருக்கும்!

 

Comments