மனித நேயம் தொலைத்த உயிர்கள் | தினகரன் வாரமஞ்சரி

மனித நேயம் தொலைத்த உயிர்கள்

(இலங்கை நிர்வாக சேவை அலுவலராகிய கட்டுரையாளர் ஆசிய தொழில்நுட்ப நிறுவகத்தில் (தாய்லாந்து) இயற்கை வள முகாமைத்துவ முதுமானிக்கற்கையை மேற்கொண்டு வருகிறார். அவரை [email protected] என்ற மின்னஞ்சலூடாக தொடர்பு கொள்ள முடியும்)

வனவிலங்குகளின் பால் மனிதன் கொண்ட நேயம் ஏறத்தாழ நான்கு தசாப்த காலங்களுக்குள் அவற்றின் குடித்தொகையில் 60 சதவீத வீழ்ச்சியைக் காண வைத்திருக்கிறது. வன விலங்குகளின் குடித்தொகை இத்துணை சடுதியாகக் குறைவடைதலென்பது மனிதனின் இருப்பையே கேள்விக்குறியாக்குவதாகச் சொல்கிறது உலக வன விலங்குகள் நிதியத்தின் ‘வாழும் கோள் 2018’ அறிக்கை. எம் ஒவ்வொருவரது பொறுப்பற்ற செயற்பாடுகளை நிறுத்துவதற்கானதும் மாற்றுவதற்கானதுமான சமிக்ஞையை தமது அழியும் குடித்தொகையை வைத்து வன விலங்குகள் காட்டி நிற்கின்றன. இனிமேலும் அச்சமிக்ஞைகளை அலட்சியம் செய்வதானது பாரிய அழிவொன்றை இப்பூவுலகில் உருவாக்கும் என்பதை ‘வாழும் கோள் 2018’ தெளிவாக சுட்டி நிற்கிறது.

“இயற்கையைப் பாதுகாத்தல் என்பது வெறுமனே அழிவடைந்து செல்லும் உயிரினங்களான புலிகளையும் திமிங்கிலங்களையும் பாதுகாப்பதன்று. ஏற்றத்தாழ்வுகளுடனான கால நிலையையும் வற்றிப் போய்க்கொண்டிருக்கும் நதிகளையும், வளமிழந்து போய்க்கொண்டிருக்கும் நிலத்தையும் , அழிவடைந்து போன காடுகளையும் தொலைந்து போன உயிர்ப்பல்வகைமையையும் கொண்டு எப்படி மனிதன் மகிழ்ச்சியான, சுபீட்சமான, ஆரோக்கியமான வாழ்வை எதிர்கொள்ள இயலும்?” என வினவுகிறார் உலக வன விலங்குகள் நிதியத்தின் பணிப்பாளர் மக்ரோ லம்பேர்ட்டினி.

அவரது சந்தேகம் நியாயமானதே! உலகின் பொருளாதார நடவடிக்கைகள் யாவுமே இயற்கை வழங்கும் சேவைகளை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றின் வருடாந்த பெறுமதி ஏறத்தாழ 125,000 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்படுகிறது. இயற்கையின் சேவைகளை நாம் மிகையாக நுகர்ந்து வருகின்றமையால் அது தன் தரத்தை இழக்கிறது. சுற்றுச் சூழல் அபாயங்கள் உருவாகின்றமை தவிர்க்க முடியாததாகிறது. உலக பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் நாடுகளும் அவை தழுவிய நிதிச் சந்தைகளும் உலகளாவிய ரீதியிலே உருவாகியுள்ள சுற்றுச் சூழல் அச்சுறுத்தல்கள் பற்றியும் , அவை தம்மை எங்ஙனம் பாதிப்புக்குள்ளாக்கும் என்பது பற்றியும் தற்போது ஆராயத்தலைப்பட்டிருக்கின்றன.

அதேவேளை கொள்கை வகுப்பாளர்களோ அழிவடைந்து வரும் இயற்கை, உயிர்ப்பல்வகைமைக்கு மத்தியில் எங்ஙனம் கால நிலை மாற்றம் சார், நிலைத்து நிற்கும் அபிவிருத்தி சார் இலக்குகளை அடைய இயலும் என சிந்திக்கத்தொடங்கி விட்டார்கள்.

பூமி என்ற அற்புதமான கோள் தன் சுயத்தை இழந்து இத்தகைய பெரு மாற்றத்துக்குள்ளாவதற்கான மிகப் பிரதான காரணம் அங்கு வாழும் ஆறறிவு படைத்த ஜீவன்களாகத் தம்மைக் கூறிக்கொள்ளும் மனிதர்களின் பொறுப்பற்ற நுகர்வேயாகும். சக்தி, நிலம், நீர் ஆகியவற்றுக்கான மனிதனின் தேவை அதிகரிக்க அதிகரிக்க பூமி தன் சுயத்தை இழந்த வண்ணமேயுள்ளது. நாம் நுகரும் பொருட்களும் அவற்றின் பின்னணியில் இருக்கும் விநியோகச்சங்கிலிகளும், அப்பொருட்களின் உற்பத்திக்குத்தேவையான மூலப்பொருட்களும் அவற்றின் அகழ்வும் உற்பத்தியும் இப்பூமியை நாம் சிதைக்கும் வண்ணத்தை எடுத்தியம்பும்.

உயிர்ப்பல்வகைமை அழிவடைந்து செல்வதற்கு கால நிலை மாற்றம் பிரதானமான காரணியாகக் கருதப்பட்டாலும் உயிரினங்கள் மீதான மிகை துஷ்பிரயோகமும் விவசாய நடவடிக்கைகளும், நிலப்பாவனைகளை மாற்றுதலும் அதனை வேகப்படுத்துகின்றன. உலகளாவிய ரீதியிலே மனித நடவடிக்கைகளுக்காக மீதமாக இருக்கும் நிலப்பகுதியானது மொத்த நிலப்பகுதியின் 25% என அண்மைய ஆய்வொன்று கணிப்பிட்டிருக்கிறது. 2050 ஆம் ஆண்டளவில் இது 10% மாகக் குறைவடையும் எனவும் அவ்வாய்வு மதிப்பிட்டுள்ளது. இதே பொறுப்பற்ற செயற்பாடுகளை மனிதன் தொடர்ந்தும் மேற்கொள்வானேயானால் 2050 இல் நிலைமை தலைகீழாக மாறிவிடும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

தரமிழந்து செல்லும் நிலங்களுக்குள் அழிந்து வரும் காடுகளும் அடங்குகின்றன. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மீள் காடாக்கல் செயற்றிட்டங்களாலும் பெருந்தோட்டப்பயிர்ச் செய்கைகளாலும் உலகளாவிய ரீதியிலே காடுகளின் பரம்பல் வீழ்ச்சியடையும் வீதம் குறைவடைந்து வருகிறது. ஆயினும் உயிர்ப்பல்வகைமைச் செறிவு நிறைந்த அயன மண்டலக் காடுகள் மிக வேகமாக அழிவடைந்து வருகின்றன.

இப்பூமியின் நிலைத்திருப்புக்கு இயற்கையான அயன மண்டலக் காடுகள் ஆற்றும் சேவையை வேறு எந்த சூழற்றொகுதியாலும் ஈடுசெய்ய முடியாது. அச்சேவைகள் பற்றி பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம். நிலம் தன் தரத்தை இழந்து செல்வதானது உயிரினங்கள் மீது மட்டுமன்றி, அவற்றின் வாழிடங்கள் மீதும் தொழிற்படும் சூழல் தொகுதியின் மீதும் பெரும் தாக்கத்தைச் செலுத்துகிறது.

மகரந்தச் சேர்க்கையை மேற்கொள்ளும் உயிரினங்கள், அவற்றிலும் குறிப்பாக தேனிக்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைவடைந்து செல்கின்றமையையும் மண்ணிலே காணப்படும் உயிர்ப்பல்வகைமைக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் அண்மையில் இரு ஆய்வுகள் வெளியிடப்பட்டன.

இந் நிலைமையானது உணவு உற்பத்தியும் சூழல் தொகுதியின் சேவைகளும் நிலைத்து நீடிப்பதைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

மகரந்தச் சேர்க்கையானது இயற்கையால் பூமியின் இருப்புக்கு வழங்கப்படும் சேவைகளுள் ஒன்றாகும். அதில் ஈடுபடும் உயிரினங்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைவடைதலென்பது ஆரோக்கியமான சமிக்ஞை அல்ல. மகரந்தச்சேர்க்கையின்றி உணவு உற்பத்தி நடைபெறாது. ஆனால் அதிகரித்துவரும் சனத்தொகையின் உணவுத்தேவையை ஈடுசெய்ய உணவு உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். உணவுத்தேவை அதிகரித்துச்செல்லும் அதேவேளை உணவு உற்பத்தி குறைவடைந்து சென்றால் சமாளிப்பது எப்படி என்று நாம் ஒருபோதும் சிந்தித்ததில்லை. மகரந்தச் சேர்க்கையை மேற்கொள்ளக்கூடிய ரோபோக்களைக் கண்டு பிடிப்பதிலும் ஒரு சாரார் முனைந்த படியுள்ளனர். இன்னொருசாராரோ மிகை பூச்சி கொல்லிகளின் பாவனையால் தாம் அழித்த தேனீக்களுக்குப் பதிலாக கூலிக்குத் தொழிலாளர்களை அமர்த்தி தோட்டங்களில் மகரந்தச் சேர்க்கையை மேற்கொள்கிறார்கள்.

இவை இப்படியிருக்க கடல் சார், நன்னீர் சூழல் தொகுதிகளும் மனித நடவடிக்கைகளால் பெரும் அழுத்தங்களைச் சந்திக்கின்றன. 1950 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஏறத்தாழ 6 பில்லியன் தொன் மீன்களும் முள்ளந்தண்டிலிகளும் உலக சமுத்திரங்களிலிருந்து அகற்றப்பட்டு விட்டன. கடற்கரையிலிருந்து ஆழ்கடல் வரை உலகின் சகல கடற்றொகுதிகளிலும் பிளாஸ்டிக் மாசுகள் இனங்காணப்பட்டுள்ளன. உலகிலேயே மிக ஆழமான ஆழியாகக் கருதப்படும் மரியானா ஆழியும் இதற்கு விதிவிலக்காகிவிடவில்லை.

நன்னீர் வாழிடங்களான வாவிகள், குளங்கள், ஆறுகள், ஈர நிலங்கள் ஆகியன மனித நடவடிக்கைகளால் அதிகளவு அச்சுறுத்தலுக்காளாகியிருக்கின்றன. தன் வாழ்வின் உயிர் நாடியே அவைதான் என்பதை உணராத மனிதன் அவற்றை மாற்றியமைப்பதிலும் மாசுபடுத்துவதிலும் முனைப்பாக ஈடுபடுகிறான். வாழிட மறுசீரமைப்பு, வாழிடங்கள் துண்டாதல், அழிக்கப்படல், அக்கிரமிக்கும் இயல்புடைய உயிரினங்களின் பரம்பல், மிகை மீன் பிடி, மாசுகள், நோய்கள், கால நிலை மாற்றம் போன்ற பல காரணங்களால் இவ்வுயிர்கள் அழிந்துவிடுகின்றன.

கால நிலை மாற்றத்தால் உயிர்க்கோளத்தில் ஏற்படும் தாக்கங்கள் பல் பரிமாணங்களைக் கொண்டவை. அவற்றைக் கண்டறிதல் சிக்கலானது . ஆயினும் வெளி சார் ஆய்வுகளின் வளர்ச்சியால் அவற்றை கண்முன் கொண்டு வருதல் இலகுவாகியுள்ளது.

வான் புகைப்படங்களையும் அகலாங்கு, நெட்டாங்கு ஆள்கூறுகளையும் அடிப்படையாகக் கொண்ட வெளி சார் ஆய்வுகளுடன் களத்தரவுகளையும் இணைத்த ஆய்வு முடிவுகள் உலகளாவிய ரீதியில் கால நிலை மாற்றத்தின் தாக்கத்தை தெளிவாக வெளிப்படுத்துகின்றன. வெளிசார் ஆய்வுகளுக்கான தரவுகள் எவராலும் தமக்கேற்ற விதத்தில் பயன்படுத்தக்கூடிய வண்ணம் இணையத்திலே பதிவேற்றப்பட்டு யாவருக்கும் கிடைக்கச்செய்யப்பட்டுள்ளன.

ஆய்வுத்துறையில் உருவாகிய இவ்வெளிப்படைத்தன்மையானது உயிர்ப்பல்வகைமை இழப்பினை வெளிப்படுத்தும் சிக்கலான தன்மையை இலகுபடுத்தியிருக்கிறது. அதன் மூலம் உயிர்ப்பல்வகைமை இழப்பைத்தடுக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வழி இலகுவாக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியிலான இத்தகைய ஆய்வுகள், எந்த பிராந்தியத்துக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பது தொட்டு எந்த உயிரினத்தின் / சூழல் தொகுதியின் காப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பது வரை பல சமிக்ஞைகளை வெளிப்படுத்துகின்றன. உலக வன விலங்குகள் நிதியத்தால் கணிக்கப்படும் ‘வாழும் கோள் சுட்டி’ யானது உலகளாவிய ரீதியிலே காணப்படும் முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் குடித்தொகையையும் கண்காணிக்கிறது.

அண்மையில் வெளியாகிய வாழும் கோள் சுட்டி யின் அடிப்படையில் 1970 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையான நான்கரை தசாப்த காலத்துக்குள் முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் குடித்தொகையில் ஏறத்தாழ 60% வீழ்ச்சியடைந்திருக்கிறது. அயனவலயக் காடுகள் காணப்படும் தென் , மத்திய அமெரிக்கப்பகுதிகளிலே இந்த வீழ்ச்சி வெகுவாக அவதானிக்கப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டுக்குரிய தரவுகளுடன் ஒப்பிடுகையில் இப்பகுதியில் முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் குடித்தொகை 89 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் நன்னீர் வாழ் உயிரிங்களின் குடித்தொகை ஏறத்தாழ 83 சதவீத்தால் வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஆயினும் உயிர்ப்பல்வகைமையை அளவீடு ஒன்றும் இலகுவான காரியமல்ல. ஏனெனில் உயிர்ப்பல்வகைமை எனும் பதம் குறிப்பது இப்பூமியில் உள்ல சகல வகையான உயிரினங்களையும் அவற்றிற்கிடையேயான சிக்கல் மிகு இடைத்தொடர்புகளையுமாகும். ஆதலினால் சில காட்டிகளின் அடிப்படையிலேயே இம்முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அக்காட்டிகள் இனங்களின் பரம்பலில் ஏற்பட்ட வித்தியாசம், அவற்றின் அருகி வரும் அபாயம், அவற்றின் சமூக வகிபாகத்தில் ஏற்பட்ட மாற்றம் என்பனவாகும்.

இக்காட்டிகளை அடிப்படையாக க்கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் ஏறத்தாழ ஒத்த முடிவுகளையே வெளிப்படுத்தின. அம்முடிவுகள் ஒன்றில் கடும் வீழ்ச்சியாகவோ அல்லது ஏதோனுமொரு மாற்றமாகவோ இருந்தன. மனிதர்களால் பாரிய முன்னெடுப்பொன்றை மேற்கொள்ளாவிடில் இவ்வீழ்ச்சியின் போக்கு தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை நோக்கிய நீண்ட பாதையிலே பயணிப்பதற்காக நாம் அடியெடுத்து வைத்துவிட்டோம். இந்த வீழ்ச்சிப்போக்கை மாற்றியமைக்கும் பாரிய பொறுப்பு எம்முன்னே வைக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு நாட்டுக்கோ அல்லது ஒரு பிராந்தியத்துக்கோ உரிய பிரச்சினை அன்று. இது கால நிலை மாற்றத்தையொத்ததோர் உலகளாவிய பிரச்சினையாகும். கால நிலை மாற்றத்தைக் கையாள்வதில் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் இப்பிரச்சினையைக் கையாள்வதிலும் எமக்கு ஒத்தாசை புரியும். உலகலாவிய பிரச்சினையொன்றை தனித்தனியாகத் தீர்த்தல் ஒருபோதும் வெற்றி யளிக்காது.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் அரசுகள், வர்த்தகர்கள், நிதியியலாளர்கள், ஆய்வாளர்கள், சிவில் சமூகம், தனி நபர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி வகிபாகங்கள் உண்டு. ஒவ்வொரு மட்டத்திலும் காணப்படும் தீர்மானங்களை மேற்கொள்பவர்கள் சரியான அரசியல், நிதியியல் நுகர்வு சார் தேர்வுகளை மேற்கொண்டால் மாத்திரமே இந்த பூமியில் மனித நேயமும் இயற்கையும் இணைந்து வாழ இயலும். சிறந்த தலைமைத்துவம் அமையாவிட்டால் அது கனவாகவே போய்விடும்!

Comments