முடிவுப்பொருள் உற்பத்தியை விட இடைநிலை வர்த்தகமே இலங்கைக்கு பொருத்தமானது | தினகரன் வாரமஞ்சரி

முடிவுப்பொருள் உற்பத்தியை விட இடைநிலை வர்த்தகமே இலங்கைக்கு பொருத்தமானது

'நாம் சாதாரணமாய் பயன்படுத்தும் பல்வேறு கைத்தொழில் பொருட்கள் ஒரே நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவையல்ல. அவற்றின் பாகங்கள் வெவ்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு ஏதோ ஒரு நாட்டில் ஒருங்கிணைக்கப்பட்டு சந்தைக்கு வருகின்றன. கிழக்காசிய வட்டகை நாடுகள் இத்தகைய இடைநிலைப் பொருள் வர்த்தகத்தில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றன'

இன்றைய உலகமயமாக்கல் இடம்பெறும் புறச்சூழலில் எந்தவொரு உலக நாடும் தனித்து இயங்கமுடியாத நிலை காணப்படுகிறது. சர்வதேச வர்த்தக உறவுகள் உள்ளடங்களாக இராஜதந்திர ரீதியாகவும் – கலை, கலாசார பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் ஊடாகவும் மக்களின் நகர்வுகள் காரணமாகவும் உலக நாடுகள் பிணைக்கப்பட்டுள்ளன.

‘ரொபின்சன் குரூசோ’ என்னும் சிறுகதையில் வருவதைப் போல ஒரு தீவுக்குள் முடங்கிக் கிடக்கும் காலமல்ல இது. 'டிஜிட்டல் யுகம்' என அழைக்கப்படும் எண்மப் புரட்சியினால் பௌதீக ரீதியிலான தொலைதூர நாடுகளும் நொடியில் இணைக்கப்படக்கூடிய காலம் இது. போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் காரணமாக உலகின் மிகநீண்ட தொலைதூரத்தில் உள்ள இரு இடங்களை இருபத்துநான்கு மணித்தியாலங்களுக்குள் சென்றடைந்துவிட இப்போதைய தொழில்நுட்பத்தால் இயலும்.

இக்கால இடைவெளியை இன்னும் குறைப்பதற்குரிய முயற்சிகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் உலகின் தொலைதூர விமானப்பயணம் வெறும் 12 மணித்தியாலங்களுக்குள் மட்டுப்படக் கூடும்.

அதுபோல கன்டெய்னர் கொள்கலன் போக்குவரத்து காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தின் பருமன் பலமடங்கு அதிகரித்துள்ள அதேவேளை ஏற்றி இறக்கும் காலப்பகுதி கணிசமாகக் குறைந்துள்ளது. அத்தோடு கப்பல்களின் பருமன் அதிகரித்துள்ள காரணத்தால் பாரிய கப்பல்களில் பெரும் எண்ணிக்கையிலான கொள்கலன்களை கொண்டு செல்ல முடிவதால் போக்குவரத்துச் செலவு கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. பெற்றோலிய விலை அதிகரிப்புக்கு மத்தியிலும் கப்பற் போக்குவரத்துக்கு கட்டணங்களின் வீழ்ச்சி தொழில் நுட்பப் புரட்சி காரணமாகவே ஏற்பட்டுள்ளது.

அதேபோல புதிய உலக பொருளாதார ஒழுங்கு பாட்டில் கணிசமான மாற்றங்களையும் அவதானிக்க முடிகிறது. முதலாம் உலகம், இரண்டாம் உலகம் மற்றும் மூன்றாம் உலகம் என அடையாளப்படுத்தப்பட்ட உலக நாடுகளின் வகைப்பாடு அபிவிருத்தி அடைந்த நாடுகள் எனவும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எனவும் மாறியுள்ளது. தற்போதைய சூழலில் இவ்வகைப்பாடு பொருத்தமற்றதெனவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. மறுபுறம் மேலைத்தேய நாடுகள் மற்றும் கீழைத்தேய நாடுகள் எனவும் வடக்கு நாடு, தெற்கு நாடு எனவும் பிரிக்கப்படும் போக்கும் ஆய்வாளர்கள் மத்தியில் இருந்தது.

இவ்வகையான வகைப்படுத்தல்களுக்கு அடிப்படையாக அமைந்தது, பொருளாதார ரீதியிலான ஏற்றத் தாழ்வுகளும் அதனடிப்படையில் எழும் வாழ்க்கை தர வேறுபாடுகளுமே யாகும். ஆயினும் மரபு ரீதியாக அபிவிருத்தியடைந்த அல்லது மேற்குலக அல்லது முதலாம் உலக நாடுகள் என அழைக்கப்படும் செல்வந்த நாடுகளின் பொருளாதார செயலாற்றும் தன்மை படிப்படியாக மந்த கதியில் இடம்பெற்று வருவதையும் அதேவேளை அபிவிருத்தியடைந்து வரும் மூன்றாம் உலக வறிய நாடுகளின் பொருளாதார செயலாற்றல்கள் ஆச்சரியமூட்டும் வகையில் அதிகரித்துச் செல்வதையும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

குறிப்பாக இந்து சமுத்திரத்தை அண்மித்த நாடுகளின் பொருளாதார சாத்தியங்கள் மற்றும் அந்நாடுகளின் கேந்திர முக்கியத்துவம் என்பவற்றின் அடிப்படையில் எதிர்கால உலகப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய கேந்திரத்தானமாக இந்து சமுத்திர வட்டகை நாடுகள் அமையக் கூடும் எனவும் அதிலும் குறிப்பாக தெற்காசிய வட்டகை நாடுகளுக்கு அதிக வாய்ப்புகள் காணப்படுவதாகவும் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அத்துடன் 2050 ஆம் ஆண்டாகும்போது உலகின் முதன்மைப் பொருளாதாரமாக சீனா மாறிவிடும் என்ற எதிர்வு கூறலும் ஏலவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நோக்குமிடத்து உலகின் தொழிற்சாலை எனப்படும் சீனாவுக்கும் உலகின் நுகர்வாளர்கள் என அழைக்கப்படும் மேற்குலக்கும் இடையிலான கப்பற் போக்குவரத்து பாதையில் முக்கிய மையத்திலே இந்து சமுத்திர வட்டகை நாடுகள் உள்ளன. அதிலும் குறிப்பாக தெற்காசிய நாடுகள் உள்ளன. அதிலும் குறிப்பாக தெற்காசிய நாடுகள் இப்பாதையின் மத்தியில் காணப்படுகின்றன.

இன்னும் நுணுக்கமாகச் சொல்வதாயின் இலங்கை இப்பாதையின் மிக நெருக்கமான இடத்தில் உள்ளது எனலாம். எனவே மாறிவரும் இப்புதிய பொருளாதார ஒழுங்கு பாட்டிலே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலே உள்ள இலங்கைப் பொருளாதாரம் ஒரு தீவுக்குள் முடங்கி விடும் பொருளாதாரமாக இருக்க வேண்டுமா? அல்லது வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி முன்னேற்றம் காணவேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

ஒரு நாடு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தில் இருப்பதனால் மட்டும் முன்னேறி விடாது. அது வெறுமனே ஒரு வாய்ப்பு மட்டுமே. அவ்வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துவது அந்நாடு எந்தளவுக்கு புத்திசாலித் தனமானது என்பதைப் பொறுத்துள்ளது. கடந்த காலங்களில் பொருளாதார வாய்ப்புகளைத் தவறவிட்ட நாடாக இலங்கை சர்வதேச அரங்கில் அடையாளப்படுத்தப்பட்டது. வாய்ப்புகள் இருந்தும் அதைச் சரியாகப் பயன்படுத்த தவறுவது ஒரு முறை தவறுதலாக இடம்பெறலாம் ஆனால் அத்தவறு மீண்டும் மீண்டும் இடம்பெறக்கூடாது. அவ்வாறு நடப்பின் அது அந்நாட்டின் பலவீனமாகவே பார்க்கப்படும். சுதந்திரத்தின் பின்னரான சூழலில் இற்றைவரை தேயிலையே முதன்மை ஏற்றுமதியாகக் காணப்படுகிறது.

தைக்கப்பட்ட ஆடைகள் சில ஆண்டுகளில் முதன்மை நிலை வகித்தாலும் உள்ளூரிலே அதிகளவு கூட்டப்பட்ட பெறுமதியைக் கொண்டுள்ளது. ஏற்றுமதி தேயிலையே ஆகும். எனவே இலங்கையின் ஏற்றுமதிகளில் போதியளவு பன்முகப்படுத்தல் ஏற்படாத அதேவேளை போதியளவு விரிவாக்கமும் இடம்பெறவில்லை.

அண்மைக் காலங்களில் கைத்தொழில் ஏற்றுமதிகளின் பங்களிப்பு அதிகரித்து வருகின்ற போதிலும் அதன் உள்ளடக்கம் வெகுசில இலகு கைத்தொழில் பொருள்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் முழுமையான பொருள் ஏற்றுமதி குறித்தே இலங்கை அதிக கவனம் செலுத்திவருகிறது.

ஆனால் இன்றைய உலக கைத்தொழிலாக்கச் செயன்முறையில் முடிவுப் பொருள் வர்த்தகத்தை விட இடை நிலைப் பொருள் வர்த்தகமே அதிகளவில் விரிவாகி வருகிறது நாம் சாதாரணமாய் பயன்படுத்தும் பல்வேறு கைத்தொழில் பொருள்கள் ஒரே நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவையல்ல. அவற்றின் பாகங்கள் வெவ்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு ஏதோ ஒரு நாட்டில் ஒருங்கிணைக்கப்பட்டு சந்தைக்கு வருகின்றன. கிழக்காசிய வட்டகை நாடுகள் இத்தகைய இடைநிலைப் பொருள் வர்த்தகத்தில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய இடைநிலை பொருள் வர்த்தகத்தை “உற்பத்தி வலையமைப்புகள்” (Production Networks) மற்றும் ‘பெறுமதிச் சங்கிலி’ (Value Chains) எனக் குறிப்பிடுவர். இவ்வுற்பத்தி வலையமைப்பில் அல்லது பெறுமதிச் சங்கிலியில் ஏதாவது ஒரு கூறை உற்பத்தி செய்து அதில் இணைந்து கொள்ள முடியுமாயின் இலங்கை போன்றதொரு நாட்டிற்கு அது ஓர் வரப்பிரசாதமாக அமையும். இன்றைய உலக ஒழுங்குபாட்டில் நாடுகள் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைகளைத் தக்க வைத்துக் கொள்ளவே முயலுகின்றன. புதிய சந்தை வாய்ப்புகளைக் கைப்பற்றுவது இலகுவான ஒரு காரியமல்ல.

எனவே முழுமையானதொரு கைத்தொழிற் பொருளை உருவாக்கி அதனை நுகர்வோருக்கு ஏற்றுமதி செய்யும் வரையில் காத்திருக்க எந்த ஒரு நாட்டிற்கும் வாய்ப்பில்லை. அத்தோடு அதற்கான தேவையுமில்லை.

எதிர்காலத்தில் இலங்கை மேற்கொள்ளும் எந்த ஒரு வர்த்தக உடன்படிக்கைகளும் முடிவுப் பொருள் மற்றும் சேவைகளை அடிப்படையாகக் கொண்டமையாமல் உற்பத்தி வலையமைப்புகளையும் பெறுமதிச் சங்கிலிகளில் இணைந்து கொள்ளும் விதமாகவும் நெறிப்படுத்தப் படுமாயின் நன்று. அதுவே காலத்தின் தேவையாகவும் அமையும்.

Comments