ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

“போன கிழமை ரொக்கட் விடுற பெடியனைப் பத்திப் பேசினனாங்கள் அதற்கு முதலில வாயால சித்திரம் வரைஞ்ச பிள்ளையப் பத்தி பேசினனாங்கள்”

“ அண்ண போன கிழமை பயணம் போனனாங்கள். உதால எதயும் பேச முடியாமப் போட்டுது.”

“ அடடே உந்த விசயத்தை மறந்து போட்டனான்”

“நான் மறக்கேல்ல. நினைவு வச்சிக்கொண்டுதான் இருந்தனான்”

“ இந்த முறை எங்கட ஒரு ஆளைப் பத்தி பேசவேணும் என்டு யோசிச்சனான்”

“நல்ல விசயமென்ன. எங்கட ஆளென்டா?”

“எங்கட ஆளென்டா. ஒரு தமிழ்ப் பெட்டை?’

“எங்கட பெட்டையோ. யாரண்ண அது?”

“இலங்கை நெட்போல் டீமில இருக்கிற உசரமான பிள்ளைய தெரியுமோ?”

“உவள் தர்ஜினியப் பத்தித்தான சொல்லுறியள்”

“உனக்குத் தெரியுமே?”

“ஒரு காலத்தில எங்கட வீட்டுப்பக்கம் இருந்தவை”

“தர்ஜினிதான் உலகத்தில இருக்கிற உசரமான நெட்போல் வீராங்கனை தெரியுமோ?”

“இருக்குமண்ண. அவவின்ட உசரம் ஏழடி இருக்குமே?”

“ஏழடிக்கு கொஞ்சம் குறைவு. 6 அடி 10 அங்குலம்.”

“நல்ல உசரமென்ன. அந்த அளவு உசரமான ஆம்பிளயள் இங்க இருக்கினமோ?”

“இருப்பினம் ஆனால் குறைவு. தர்ஜினிக்கு இப்ப 36 வயதாகுது. 2009 ல் இருந்து இலங்கை தேசிய அணியில நெட்போல விளையாடுறா. உலகத்தில உள்ள உசரமான நெட்போல் வீராங்கனைகளில உவுவும் ஒருத்தி”

“அண்ண நெட்போல் என்டா?”

“நெட்போல் என்டா வலைப்பந்து”

“வலைப்பந்தென்ன. நான் கூடைப் பந்தென்டு நினைச்சனான்”

“நிறையப் பேருக்கு உந்த ரெண்டில தடுமாற்றம் வருகுது. இரண்டு விளையாட்டும் ஒன்டு போலத்தான் கிடக்கும். ஆனால ரெண்டிலயும் வேறுபாடுகள் இருக்கு. உதில பிரதான விசயம் வலைப்பந்து அல்லது நெட்போல் பொம்பிளைப் பிள்ளையள் மட்டும் விளையாடுற விளையாட்டு. கூடைப்பந்து இல்லயென்டா பாஸ்கட்போல் என்ட விளையாட்டை ஆம்பிளயள் பொம்பிளயள் என்டு ரெண்டு தரப்பும் விளையாடலாம்”

“தர்ஜினியைப் பத்தி வேறென்ன புதினம்?”

“தர்ஜினி யாழ். புன்னாலைகட்டுவன் பெட்டை. அவவின்ட குடும்பத்தில ஆறு பிள்ளையள். ஆவள் அஞ்சாவது. சின்ன வயசில அவவின்ட உயரத்தால அவவுக்கு நிறைய பிரச்சினையள் வந்துது.”

“வேறென்ன ஒட்டகசிவிங்கி, நெட்டை கொக்கு என்டு பெயர் வச்சி கேலி பேசியிருப்பினம் எங்கட ஆக்கள்”

“அவவிட்ட தங்களிடம் இல்லாத திறமை இருக்குதென்டு நினைச்சிருக்க மாட்டினம்”

“முன்ன கேலி பேசினவைக்கு இப்ப அவவின்ட திறமை என்னவென்டு தெரியுமென்ன?”

“ஆனா உந்த அளவுக்கு அவவுக்கு பெயர் வருமென்டு அவையள நினைச்சுப் பாத்திருக்க மாட்டினம்”

“அது உண்மைதான்”

“விளையாட்டில மட்டுமில்ல படிப்பிலயும் தர்ஜினி கெட்டிக்காரிதான்”

“மெய்யே?”

“அவள் கிழக்குப் பல்கலைக் கழகத்தில ஒரு பொருளாதார பட்டதாரி”

“கேலிபண்ணினவைக்கு ஒரு அடி என்ன”

“2004 பாடசாலையில இவவின்ட விளையாட்டு திறமைய இலங்கை நெட்போல் அணியின்ட பயிற்சியாளராக இருந்த திலகா ஜினதாச கண்டு கொண்டவ. அவதான் தர்ஜினிய இலங்கை அணியில விளையாடுறதுக்கு கூட்டிப் போனவை. 2009 ல ஆசிய நெட்போல் சாம்பினா இலங்கை அணி வெற்றி பெறுவதுக்கு தர்ஜினியும் ஒரு காரணம் தெரியுமே.?”

“கெட்டிக்காரியென்ன”

“2012 யில இரண்டாவது இடம். 2014 ல மீண்டும் இலங்கைதான் சாம்பியன். 2011ல உலக நெட்போல் சாம்பியன் போட்டிக்கு போனனாங்கள் அங்க முதல் சுற்றிலயே வெளியேற வேண்டிய நிலை இலங்கை அணிக்கு ஏற்பட்டு போட்டுது. ஆனால சிறந்த சூட்டர் தர்ஜினிதான்”

“சூட்டர் என்டா சுடுறதென்ன”

“இந்த சூட்டரென்டா பந்தை கணக்கா வலைக்குள்ள போடுறவைக்கு கொடுக்கப் பட்டுள்ள பெயர்”

“ சரியா குறி வச்ச போடுறவர் என்ன”

“சரியாச் சொன்னனீ. ஆனா ஒரு விசயம். 2014 ல கொஞ்சம் சிக்கல் வந்துட்டுது. அரசியல் காரணங்களாள தர்ஜினிய இலங்கை அணியில இருந்து நிப்பாட்டிப்போட்டினம்”

“பிறகு?”

“பிறகென்ன. உவவின்ட பயிற்சியாளர் திலகா ஜினதாச அணிக்கு மீண்டும் திரும்பின பிறகுதான் தர்ஜினிக்கு திரும்பவும் அணிக்குத் திரும்ப வாய்ப்புக் கிடைச்சுது”

“நல்ல ஆக்கள் இருந்தவையென்ட நல்லது நடக்கும் என்ன”

“நீ சொன்னது போலத்தான் நடந்துது. 2017 ல தர்ஜினிக்கு ஒரு புலமைப் பரிசில் கிடைச்சுது. அவுஸ்திரேலியாவில உள்ள சிட்டி வெஸ்ட் பெல்கன்ஸ் என்ட கழகத்துக்கு விளையாட வருமாறு கேட்டவை. உவவும் சரி சொல்லி போனவை.வெளிநாட்டு கிளப் ஒன்றுக்கு விளையாடப் போன முதல் இலங்கை நெட்போல் வீராங்கனை தர்ஜினிதான்”

“எங்கட நாட்டுக்கு பெருமை தருகிற விசயமென்ன?”

“அது மட்டுமில்ல தர்ஜினியன்ட விளையாட்டுத் திறமையப் பாத்து அங்க உள்ளவை வாயடைச்சுப் போனவை”

“பின்ன திறமைய மறைச்சி வச்சிக்கொண்டிருக்க முடியுமே?”

“அவுஸ்திரேலியாவில தர்ஜினிக்கு பயங்கர சப்போர்ட் கிடைச்சுது. அவவாள அந்த கிளப் அணிக்கு நல்ல செல்வாக்கு.”

“அவவின்ட முழுத் திறமையும் இப்பத்தான் தெரிய வருகுதென்ன?”

“ பிறகென்ன உது மாதிரி திறமைசாலிய வச்சிக்கொண்டு சும்மா இருக்கேலுமே. இந்த வருசம். ஆசிய நெட்போல் சாம்பியன் சுற்றுப்போட்டீக்கு போன இலங்கை அணிக்கு வெற்றி மேல வெற்றி”

“எல்லாம் தர்ஜினியால வந்த வெற்றி என்ன”

‘பின்ன. ஆசிய நெட்போல் சுற்றுப் போட்டியில சிறந்த வீராங்கனை என்டு இவவைத்தான தேர்தெடுத்தவை”

“இனி உலகப் போட்டித்தானென்ன”

“ வந்தா மலை. போனா... மோதிப் பாப்பமென்ன?”

Comments