லஷ்மி காந்தன் கொலை வழக்கு | தினகரன் வாரமஞ்சரி

லஷ்மி காந்தன் கொலை வழக்கு

பாகவதர் எழுதிய கடிதம்

பாகவதரின் வாழ்க்கையை சீரழித்த

1917 ஆம் ஆண்டு ஆரம்பமான தமிழ் திரையுலகில் இன்றுவரை சாரீரமும் சரீரமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற ஒரு நடிகர் இருந்தார் என்றால் அவர் பாகவதர் ஒருவரே.

பாகவதருக்கு லட்சோப லட்ச ரசிகர்கள் இருந்தனர். இதில் பெண் ரசிகைகளே ஏராளம். பாகவதரின் அலங்காரத்தில் மையல் கொண்டோர் ஏராளம்.

தமிழ் திரையுலகில் மாபெரும் வரலாறு படைத்த ‘ஹரிதாஸ்’ திரைப்படத்தில் தான் சவாரி செய்த வெள்ளைக் குதிரையை விலைக்கு வாங்கினார். மாலை நேரத்தில் குதிரை சவாரி செய்வதை தனது பொழுது போக்காக்கிக் கொண்டிருந்தார்.

இந்தக்கால சூப்பர் ஸ்டார்கள் கோடி கோடியாகச் சம்பாதிப்பதாகச் சொல்கிறார்கள். பாடசாலை ஒன்றில் தீப் பிடித்து நானூறு குழந்தைகள் இறந்தால் என்ன? வெள்ளம், சூறாவளி, பூகம்பம் வந்து கடவுளின் தேசம் அழிந்தாலென்ன? ஒத்த பைசா ஈயாத இந்த சுப்பர் ஸ்டார்கள் தங்களுக்கு நடிகர் மன்றம் கட்ட மலேஷியா, சிங்கப்பூர் என நிதி திரட்டச் சென்று துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அண்மையில் சென்னை வந்தடைந்த கதை உங்களுக்கும் தெரியும் இவர்களைப் போன்றவரல்ல பாகவதர், தனக்கு என்று எதையும் சேகரிக்காதவர். அவர் வாங்கும் சம்பளம் அவரைச் சுற்றியுள்ள ஏழைகளுக்கே போய்ச் சேர்ந்தது. இதைத் தான் இவருக்கு பின்னால் வந்த எம். ஜி. இராமச்சந்திரனும் பின்பற்றி, இன்று அழியாப் புகழ் பெற்றுள்ளார். தான் ஆட்சி பீடம் ஏறிய போது, “என்னுடைய திரையுலக பயணத்தில் திருப்பம் ஏற்பட வழி வகுத்தவரே பாகவதர்” என எம். ஜி. ஆர், பாகவதரைப் புகழ்ந்து பேசியதோடு திருச்சியில் உள்ள தமிழக அரசின் திரையரங்குக்கு “தியாகராஜ பாகவதர் மன்றம்” என்று பெயரும் சூட்டியுள்ளார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இரண்டாம் உலகப் போரில் காயமுற்ற வீரர்களுக்கு சிகிச்சையளிக்க கச்சேரி ஒன்று நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். இதை பலரும் எதிர்த்த போதிலும் “இராணுவத்தில் வெள்ளையர்கள் மட்டுமல்ல, இந்தியர்களும் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை.” என்றார் பாகவதர்.

இதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் பாகவதருக்கு திருக்காடுபள்ளி அருகே மூன்று கிராமங்களை அன்பளிப்பாகக் கொடுத்தது. இதனை அங்கு வாழ்ந்த கிராம மக்களுக்கே பங்கு போட்டுக் கொடுத்து விட்டார் பாகவதர்.

இவருடைய இந்த பெருந்தன்மையைக் கண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், வழங்கிய ‘திவான் பகதூர்’ பட்டத்தையும் ஏற்க மறுத்து விட்டார். காங்கிரஸ் தலைவர் எஸ். சத்தியமூர்த்தியின் வேணடுகோளுக்கு இணங்கி பட்டாடையைத் துறந்து கதர் ஆடையை அணிய ஆரம்பித்தார். பாகவதரைப் பற்றி முன்னாள் முதலமைச்சர் சீ. என். அண்ணாத்துரை, “தோழர் தியாகராஜ பாகவதரின் பாடல்கள் தமிழருக்கு தெவிட்டாத விருந்து அவர் பாடுவது புரிகிறது. கேட்பவர்கள் உள்ளத்தில் அந்த இசை போய்த் தங்குகிறது” என புகழ்ந்துரைத்தார்.

சிவாஜி கணேசன் “பாகவதர் பேசினால் இயல் சொட்டும். பாடும் கானத்திலே தேன் சொட்டும். அவருடைய நடையிலே நாடகத் தமிழ் சொட்டும். ஆம்! அவர் முத்தமிழின் உருவம். ஏழிசை மன்னர் அவர் ஒருவர் தான்” எனப் புகழ்ந்துள்ளார்.

“சப்த ஸ்வரங்களையும் தன்னிடமே வசியம் செய்த இசை வேந்தன். ஏழிசை மன்னர் என்ற சொல் எம். கே. தியாகராஜ பாகவதர் ஒருவரைத் தான் குறிக்கிறது” என்கிறார், ஜெமினி கணேசன்.

“இன்று எனக்குப் பாராட்டு கிடைக்கிறது என்றால், அந்தப் பாராட்டின் பின்னணியில் பாகவதர் தான் இருக்கிறார். இது எனக்கு பாகவதர் போட்ட பிச்சை.” என்கிறார், டி. எம். சௌந்திரராஜன்.

“பாகவதரின் படங்களைப் பார்த்துத் தான் நான் நடிகனானேன்” என்கிறார் நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன்.

“பாகவதரின் இனிமை தளும்பும் குரலைக் கேட்ட பிறகு, வேறு யாருடைய பாட்டையும் கேட்க பிடிக்கவில்லை” என்கிறார், மாபெரும் எழுத்தாளர், கல்கி.

டி. ஏ. மதுரம், “எத்தனையோ பேரை அவர்கள் இருக்கும் போதே மறந்து விடுகிறோம். ஆனால், இறந்த பின்னும் என்றென்றும் நினைத்துக் கொண்டிருக்கக் கூடிய மனிதர் தான் பாகவதர்” என்கிறார்.

பாகவதர் திருச்சியிலிருந்து சென்னைக்கு வரும்போது திருச்சி புகையிரத நிலையம் ரசிகர்களால் நிரம்பி வழியுமாம். அதே போல் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் போதும் புகையிரத நிலையம் ஆயிரக்கணக்கான ரசிகர்களால் நிரம்பி வழியும். எனினும் பாகவதர் ஒரு ரசிகரையாவது புறக்கணித்து மனம் நோகச் செய்ததாக சரித்திரமே இல்லை.

பாகவதருக்கு தினமும் ரசிகைகளிடமிருந்து எண்ணிக்கையற்ற காதல் கடிதங்கள் வர ஆரம்பித்தன. அவை யார் கண்ணிலும் படக் கூடாது என்பதற்காக உடனுக்குடன் அவர் எரித்து விடுவாராம். உயர் குல மற்றும் பெரிய இடத்து பெண்களின் ரகசிய நட்புகளும் ஏற்பட்டதாக சொல்லப்பட்டாலும் அவை இறுதிவரை நிரூபிக்கப் படவில்லை.

இந்தக் காலக் கட்டத்தில் லக்ஷ்மி காந்தன் என்பவர் ‘இந்து நேசன்’ என்ற பெயரில் ஒரு சினிமா கிசுகிசு பத்திரிகையை நடத்தி வந்தார். அதில் சகல நடிக, நடிகையரையும் அவர்களது அந்தரங்கம் பற்றியும் மிகக் கேவலமாக எழுதி வந்தார். இதில் பாகவதரைப் பற்றியே கூடுதலான அவதூறுகள் எழுதப்பட்டன ஏனெனில் செல்வாக்கு மிக்க பாகவதர் பற்றி எழுதினால் பத்திரிகை எக்கச்சக்கமாக விற்கும் அல்லவா?

ஒரு நாள் லக்ஷ்மி காந்தன் ரிக் ஷாவில் போகும் போது இனந் தெரியாதவர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைச் சம்பவத்துடன் சம்பந்தம் கொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 27. 12. 1944 அன்று பாகவதரும் மறுநாள் பாகவதரின் நெருங்கிய நண்பரான என். எஸ். கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையின் முடிவில் 1945மே மாதம் மூன்றாம் திகதி இல் இருவருக்கும் ஆயுள் தண்டணை விதிக்கப்கட்டது. இந்தத் தீர்ப்பை அறிய சுமார் இருபத்தையாயிரம் பேருக்கும் மேலாக சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு முன்னால் கூடி இருந்ததாக சொல்லப்படுகிறது. இலங்கையிலும் அவரது ரசிகர்கள் இவ் வழக்கில் தீவிர அக்கறை காட்டியதாக சார்ளிஸ் சில்வாவும என்னிடம் சொல்லி இருக்கிறார்.

‘ஹரிதாஸ்’ வெற்றியைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் பாகவதர்; ‘ராஜயோகி’, ‘வால்மீகி’, ‘பில்ஹணன்’, ‘ ஸ்ரீமுருகன்’, உட்பட பத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி முற்பணமும் வாங்கியிருந்தார். இந்த தீர்ப்பின் பின்னர் மேற்படி திரைப்படங்களுக்கு அட்வான்ஸ் கொடுத்தவர்கள் பாகவதர் சிறையில் இருக்கும் போது அதனைத் திருப்பிக் கேட்டு பாகவதரின் குடும்பத்தாரை நெருக்கினர். “நம் சொத்துக்களை விற்றாவது அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து விடுங்கள்” என்ற பாகவதரின் வேண்டுகோளுக்கு இணங்க குடும்பத்தினரால் அடவான்ஸ் திருப்பி கொடுக்கப் பட்டது. ஆனால், பாகவதர் மேல் பாசம் கொண்ட லேனா செட்டியார் மட்டும முற்பணத்தை திருப்பி வாங்க மறுத்துவிட்டார்.

(அடுத்த இதழில் முடியும்)

Comments