நீதிமன்றத்தை நாடுவதற்கு எந்தத் தடையும் கிடையாது | தினகரன் வாரமஞ்சரி

நீதிமன்றத்தை நாடுவதற்கு எந்தத் தடையும் கிடையாது

உரிய காலத்துக்கு முன்னதாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கு எந்த விதத் தடையும் கிடையாது என அரசியல் வல்லுநரும் அரசியலமைப்பு உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்தார்.

அரசியலமைப்பில் எந்தவோர் இடத்திலும் நீதிமன்றத்தை நாடமுடியாதெனக் குறிப்பிடப்படவில்லை எனக் கூறிய அவர், அரசியல்வாதிகளோ, சாதாரண குடிமகனோ தமக்கு நியாயம் கேட்டு நீதிமன்றத்தை நாட முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று முன்தினம் (10) இரவு கலைக்கப்பட்டதையடுத்து எழுந்துள்ள நிலைமைகள் தொடர்பாக, ஜயம்பதி விக்கிரம ரட்னவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஓர் எம்.பியோ, வாக்குரிமை பெற்ற ஒருபொது மகனோ அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றைத் தொடர்ந்து தமக்கு நீதிமன்றில் நியாயம் கேட்கமுடியும்.

மக்கள் தம்மை ஐந்து வருடங்களுக்குச் சேவைபுரிய பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்துள்ளதாகவும், பொதுமகன் தனது வாக்கை ஐந்துவருடங்களுக்கு சேவை புரியவே தேர்ந்தெடுத்தாகவும் கூறிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டிருப்பதாகத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை நாட முடியும்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறானதாகவும் அமைய முடியும் அதுவல்ல எமது நோக்கம் நீதி கோரி நீதிமன்றம் செல்வதை எவராலும் தடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிமுறைகளைக் கவனத்தில் கொள்ளாமல் தனக்குரிய நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தியே பாராளுமன்றத்தைக் கலைத்திருக்கின்றார்.

இது ஜனநாயக உரிமைக்கு முற்றிலும் விரோதமானதாகும். கடந்த மாதம் 26ஆம் திகதிக்குப் பின்னர் உருவான அரசியல் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காகவே இறுதியாக ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

Comments