பாரதூரத்தை தவிர்க்கவே பாராளுமன்றம் கலைப்பு | தினகரன் வாரமஞ்சரி

பாரதூரத்தை தவிர்க்கவே பாராளுமன்றம் கலைப்பு

  • ஜனாதிபதியின் தீர்மானத்தை எவரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது
  • 19ஆவது திருத்தத்தின் தெளிவான அதிகாரமே பிரயோகிப்பு
  • சபாநாயகர் அரசியலமைப்பை மீறியதாலேயே பெரும் குழப்பம்

நிறைவேற்று அதிகாரத்துக்கும் சட்ட வாக்கத்துக்குமிடையே (பாராளுமன்றத்துக்கும்) எழுந்த நெருக்கடி நிலைமையின் பாரதூரத்தை கருத்தில் கொண்டே பாராளுமன்றத்தைக் கலைக்கும் நிலை ஏற்பட்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் நேற்று தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துக்குச் சவால் விடும் வகையில் பாராளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சபாநாயகர் முயன்றதாலும் அதனால் ஏற்படும் பாரிய விளைவுகளைத் தவிர்க்கும் நோக்குடனேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தத் திடீர் நடவடிக்கையை எடுத்ததாகவும் சிரேஷ்ட அமைச்சர்கள் நேற்று தெரிவித்தனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடொன்று நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததையடுத்து இது தொடர்பாக விளக்கமளிக்கும் நோக்குடனேயே இந்தச் செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.

அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இச் செய்தியாளர் மாநாட்டில், சிரேஷ்ட அமைச்சர்களான விஜேதாஸ ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி. சில்வா, கலாநிதி சரத் அமுனுகம ஆகியோர் கலந்து கொண்டனர்.

19ஆம் திருத்தச் சட்டம் கொண்டுவருவதற்குப் பின்னணியில் செயற்பட்ட கல்வி, உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ கூறுகையில்,

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பில் பேசியதுடன், பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது என்றும் இதனை எவரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.

குறிப்பாக 19ஆவது திருத்தத்தில் 33(2) சீ பிரிவின்படி ஜனாதிபதிக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். இதனைத் தெளிவாக புரிந்துகொள்ளாமல் சிலர் கேள்விக்குட்படுத்த முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் பாராளுமன்றத்தைக் கலைத்து ஒரு நிலையான அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு ஜனநாயக ரீதியில் மக்கள் ஆணையைப் பெறுவதே சரியானது. இதனை ஜனநாயகத்தைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்த எடுத்த முயற்சி என்றே கூற வேண்டும்.

அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பொதுத்தேர்தல் ஒன்றின் ஊடாக ஜனநாயகத்தை நிலைநாட்ட எடுத்திருக்கும் தீர்மானத்துக்கு வெளிநாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கமுடியாது என்றும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச குறிப்பிட்டார்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா பேசும் போது,

ஜனாதிபதி தமக்குரிய அதிகாரத்தைச் சட்டரீதியாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஜனாதிபதி முடிவெடுப்பதற்கு முன்னால் சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே செயற்பட்டுள்ளார். எழுந்தமானமாக அவர் இதனைச் செய்யவில்லை.

ஜனாதிபதி இவ்வாறு செயற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தன. மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதிக்கு முக்கிய பொறுப்புக்கள் உள்ளன. குறிப்பாக நாடு ஓர் அராஜக நிலைக்குச் செல்லும் போது ஒரு தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய ஒருவராக இருக்கின்றார்.

சபாநாயகர் தனக்குள்ள அதிகாரத்தையும் மீறி செயற்பட முனைவதால் நிறைவேற்று அதிகாரத்துக்கும் சட்டவாக்கத்துக்குமிடையே நெருக்கடி நிலை உருவாகி, நாடு அராஜக நிலைக்குச் செல்கிறது என்பதை அறியும் சந்தர்ப்பத்தில், மக்கள் மத்தியில் இதனைக் கொண்டு சென்று அவர்களது விருப்பத்தை அறிந்து கொள்வதே சரியானது.

அரசியல் நோக்கங்களின்றி நியாயமான முறையில் இதனை நோக்குவார்களாயின் ஜனாதிபதி எடுத்த இந்தத் தீர்மானம் நியாயமானது என்பதை எவரும் உணர்வார்கள்.ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக யாரும் உச்ச நீதிமன்றத்தை நாட முடியாது என்பதுடன் அவரின் தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார். வேண்டுமானால், வாக்காளரான ஒரு குடிமகன், சட்ட மாஅதிபரைப் பிரதிவாதியாகக் குறிப்பிட்டு அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்யலாம்.

இவ்வாறான ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டுமாயின் இதுவே சரியான முடிவு என்றும் அமைச்சர் நிமால் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம பேசுகையில்,

உண்மையில் இந்தப் பிரச்சினை தோன்றுவதற்கு மூல காரணம், சட்டவாக்கத்துக்கும், நிறைவேற்று அதிகாரத்துக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டது என்பதே. இதனை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பிரச்சினை உருவானது.

சட்டவாக்கத்தில் சபாநாயகருக்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரமே இருக்கிறது. அவர் உண்மையிலேயே பாராளுமன்றத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்துக்குள் இருக்கவேண்டும். அரசியலமைப்பின்படி அதற்கு மேலதிகமான அதிகாரங்கள் அவருக்கு வழங்கப்படவில்லை.

அவர் மத்தியஸ்தம் வகிக்க வேண்டிய ஒரு நபர். ஆனால் அவரிடம் அது இருக்கவில்லை. தனக்குக் கொஞ்சமும் தொடர்பற்ற விடயங்கள் தொடர்பில் அறிக்கைகள் வெளியிட்டார்.

பாராளுமன்றம் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை.

அதேபோன்று பாராளுமன்றத்துக்கும் அதிகாரம் கிடையாது.

ஜனாதிபதி தனது கொள்கை விளக்கவுரையை அல்லது சிம்மாசன உரையை நிகழ்த்திய பின்னரே சபாநாயகருக்கான அதிகாரம் மேலோங்குகிறது. அதுவரை அவை அடக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாராளுமன்றம் ஆரம்பித்து பின்னரே அந்த அதிகாரம் மேலோங்கும்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்திவைத்த பின்னர், ஜனாதிபதி குறிப்பிடும் ஒரு தினத்தில் மீண்டும் பாராளுமன்றம் ஆரம்பமாகும் போது ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையே இருக்கும். அதன் படியே நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டும்.

இருப்பினும் பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும்போது, தான் வாக்கெடுப்பு நடத்தப்போவதாக சபாநாயகர் கூறினார். இது இவருக்கு சற்றும் தொடர்பில்லாத விடயம்.

அதுமட்டுமல்ல அவர் வெளிநாட்டுத் தூதுவர்களை அழைத்து பேச்சு நடத்துகிறார். அது அவரால் செய்ய முடியாது.

வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் அவர்கள் என்னுடனேயே பேசவேண்டும். சபாநாயகர் நிறைவேற்று அதிகாரத்தை கையிலெடுக்க முயல்கிறார். இதனூடாக மோதலை உருவாக்க முனைகிறார்.

பாராளுமன்றம் ஆரம்பித்தால் வரலாற்றில் மிகவும் மோசமான மோதல் ஒன்று உருவாகியிருக்கும்.

எனவே, பாராளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையேயான மோதல் ஏற்படுமாயின் மக்களின் ஆணைக்கு கொண்டு செல்வதே சரியானது. எனவே ஜனாதிபதி இதன்படி செயற்பட்டுள்ளார் எனவே ஜனாதிபதி எடுத்த முடிவு சரியானது.

சபாநாயகர் தூதுவர்களை அழைத்து பேசுவதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர் எல்லை மீறி ஒழுக்கத்துக்கு மாறாக செயற்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம மேலும் தெரிவித்தார்.

 

Comments