வங்கக்கடலில் சூறாவளி | தினகரன் வாரமஞ்சரி

வங்கக்கடலில் சூறாவளி

அந்தமான் தீவுகளுக்கருகே வங்கக் கடலில் உருவான தாழமுக்கம் இன்று 11ஆம் திகதி வலுவடைந்து புயலாக உருவாகியுள்ளது.

இன்றும் (11) நாளையும் (12) புயலாக உருவெடுத்துள்ள நிலையில் நாளை இரவு முதல் 13ஆம் திகதி வரை தீவிர சூறாவளியாக உருவெடுக்கும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.

நாளை 12 ஆம் திகதி வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் கடல்

கொந்தளிப்பாகக் காணப்படும். மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும். இதேபோன்று 13,14ஆம் திகதிகள் மிகவும் தீவிரமாக கடல் கொந்தளிப்பு காணப்படும்.

எனவே, இன்று 11 ஆம் திகதி முதல் இக்கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்குச் செல்லவேண்டாம் என வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, வங்கக் கடலில் உருவாகி உள்ள புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

வங்கக் கடலில் உருவாகவுள்ள புயலுக்கு தாய்லாந்து சார்பில் வழங்கப்பட்ட கஜா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வர்தா புயல் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய புயல் என கஜா புயல் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் சென்னை வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வடக்கு அந்தமான் கடற்கரை பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறும்.

மேலும், குமரி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவுகிறது. எனவே, அந்தமான் மற்றும் மத்திய தென் கிழக்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், நவம்பர் 13ஆம் தேதி வரை இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் 15 ஆம் திகதி கஜா சூறாவளி சென்னையை நெருங்கும் என்றும் சென்னை வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

எனினும், இந்தச் சூறாவளியின் நகர்வு தொடர்பாக இலங்கை வானிலை அவதான நிலையம் எதிர்வுகூற மறுத்துவிட்டது. சில வேளைகளில் சூறாவளியாக உருவெடுத்தபோதும் அதன் திசை மாறக்கூடும் என்றும் தெரிவித்தது.

Comments