சிந்தனை மாற்றம் பெண்களிடம் வரவேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

சிந்தனை மாற்றம் பெண்களிடம் வரவேண்டும்

மறைந்த கலைஞர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டதே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம். சுப்பிரமணியம் சுவாமி போன்ற வைத்தீக மற்றும் இந்துத்துவ பிராமணர்கள் கடுமையாக எதிர்த்த இந்த சட்டமும் டில்லி உச்ச நீதிமன்றத்தின் அங்கீகாரத்துடன் தற்போது சட்டமாகி இருக்கிறது. இது சனாதனவாதிகளுக்கு எதிராக சாதாரண இந்து பக்தர்கள் பெற்ற பெரிய வெற்றியாகும். எனவே, இறைவனை வழிபடுவதில் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் தடை இருக்கவே செய்தது. நீண்ட போராட்டங்களின் பின்னரே அது தகர்க்கப்பட்டது. பல்வேறு சமூக மற்றும் சமய சீர்திருத்தங்கள் அனைத்துமே போராட்டங்களின் பின்னர் கிடைத்த வெற்றிகள் தான்.

சபரிமலை யாத்திரைக்கு சிறுமியரும் காலாவதியான பெண்களும் மட்டுமே யாத்திரை செய்யலாம் என்றிருந்த 800 வருட கால வழக்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு உச்சநீதிமன்றத்தின் வாயிலாகவே வடிவு கிடைத்திருக்கிறது. வடிவு கிடைத்தாலும் அதை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு காலம் எடுக்கவே செய்யும். ஏனெனில் பழைய பழக்கங்களை சுலபத்தில் மாற்றிவிட முடியாது. மத நம்பிக்ைககள் வன்முறை சார்பானவையாக இருப்பதே உலகெங்கும் உள்ள வழக்கம். இலகுவாக விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது சட்டமாகியிருந்தாலும் அர்ச்சகராவதற்கான பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேறு சாதியினர் முன்வருவதில் தயக்கம் காட்டவே செய்வார்கள். ஏன் நமக்கு வம்பு? என்று நினைப்பார்கள். தற்போது ஒரு வேற்று சாதியைச் சேர்ந்தவர் அர்ச்சகராவதற்கான பயிற்சி பெற்று, பூணூல் அணிந்து திருச்சி கோவில் ஒன்றில் பணியாற்றி வருகிறாராம். இவர் தான் வேற்று சாதியைச் சேர்ந்த முதல் அர்ச்சகர். பிராமண சமூகம் இவரை அர்ச்சகராக ஏற்காது. அவர் பல அவமானங்களை சந்திக்க நேரிடும். ஆனால் மாற்றம் வரும். படிப்படியாக.

மாதவிடாய் சக்கரத்துக்குள் வரும் உயிர்ப்பான பெண்கள் சபரிமலை யாத்திரை மேற்கொள்வதில் சட்ட ரீதியிலான அனுமதி கிடைத்திருந்தாலும் பழைமை மாறக் கூடாது என்ற விடாக் ெகாண்டர்கள் மனம் மாறி பெண்களின் யாத்திரையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள காலம் எடுக்கும். கடந்த மாதம் சபரிமலை நடை திறக்கப்பட்ட போது உயிர்ப்பான பெண்கள் யாத்திரை செல்ல எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் எதிர்பார்க்கப்பட்டவையே.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம், இதைப் பெண்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது தான். சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டதுமே கேரளாவில் பெண்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சபரி ஐயப்பன் ஒரு நைஷ்டிக பிரமச்சாரி என்பதால் உயிர்ப்பான பெண்கள் அங்கே செல்வது பிரமச்சாரிய பங்கம் ஏற்படுத்துவதாக அமையும் என்றார்கள்.

பெண்களுக்கு மாத விலக்கு ஏற்படுவது இயற்யைானது மட்டுமல்ல; உலகை உயிர்ப்பாக வைத்துக் கொள்வதற்காகவும் தான் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டால் தான் மாதவிடாய் என்பது தீட்டு அல்ல, புனிதம் என்பது விளங்கும். உலகில் இனப் பெருக்கம் தொடர்ந்தால் தான் உலகமே உயிர்ப்புடன் இருக்கும். இயற்கையை உயிர்ப்பாக வைத்திருக்கக் கூடிய ஒன்று புனிதமாகத்தானே கருதப்பட வேண்டும். எனவே மாதவிடாய் எவ்வகையிலும் தீட்டாகாது. மேலும் தீட்டு என்ற சொல் பொருளற்றது. அந்த சொல்லுக்கு விஞ்ஞானபூர்வமாக விளக்கம் அளிக்க முடியாது என்பதால் தீட்டு என்ற சொல் அகராதியில் இருந்தே நீக்கப்பட வேண்டும். எனவே உயிர்ப்பான ஒன்றை பார்த்து தெய்வங்கள் பயப்படும் என்பதே தவறான நம்பிக்ைக என்பதோடு கடவுளை இழிவுப்படுத்துவதாகி விடுகிறது.

இன்று பெண் உரிமைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களும், பெண்ணடிமைத்துவ கருத்துகளுக்கு ஆதரவாகவும் அல்லது மௌனமாகவும் இருப்பவர்கள் பெண்களாகவே இருப்பது வேதனையானது. சபரிமலை விவகாரம் எழுந்த போது பல படித்த பெண்களும் ஒன்றில் பெண்கள் சொல்வதை எதிர்த்தார்கள் அல்லது மௌனமாக இருந்தார்கள். ஆதரவுக் குரல் கொஞ்சமாவது கேட்டது. அதுவும் இலங்கை இந்துப் பெண்கள் 'கப்சிப்'பென இருந்து விட்டார்கள்.

இந் நிலைக்கு ஆண்கள் உடனடிக் காரணம் அல்ல. எனினும் காலகாலமாக ஆணாதிக்க மனப்பான்மையின் கீழ் வாழ்ந்து பழக்கப்பட்டு வந்த இந்தப் பெண்கள், ஆண்களின் நிழலில் சுகமாகவும் பாதுகாப்பாகவும் இருந்து விட்டுப் போய்விடுவோம் என்று கருதுவதாகவே படுகிறது. படித்திருந்தாலும் பெண்களின் சிந்தனையில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கருதுவதற்கில்லை. பெண்கள், 'சிலபஸ்' படிப்புக்கும் அது பெற்றுத்தரும் வேலைவாய்ப்பு, வசதியான கணவன் என்ற வட்டத்துக்கு அப்பால் மூக்ைக நுழைப்பது வெட்டி வேலை எனக் கருதுகிறார்கள். 'எல்லோரும் போறாங்கன்னு நானும் போனேன் சாமிமலை' என்றொரு சொற்றொடர் உள்ளது. நம் தமிழ்ப் பெண்களின் பார்வையும் வட்டமும் அப்படித் தான் இருக்கிறது.

இந்த சிந்தனை மாற்றம் படித்த பெண்களிடம் வர வேண்டும். விதவைத் தாயார் அல்லது விதவையான அக்காள் தனது திருமணத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் என எத்தனை பெண்கள் விடாப்பிடியாக விரும்புகின்றனர்? விதவையான தாயார் தொட்டு எடுத்துத் தந்தால் தான் தாலி கட்டுவேன் என்று உறுதியாக நிற்கும் தைரியம் எத்தனை பெண்களுக்கு இருக்கிறது?

நம் பெண்கள் சிந்திப்பதற்கும் துணிச்சலான முடிவெடுப்பதற்கும் முன்வராதவரை தமக்கு எதிரான நிகழ்வுகளையும் சிறுமைப்படுத்தல்களையும் ஒரு வழிபோக்கனாக நின்று வேடிக்ைக பார்ப்பவராக இருக்கும் வரை, ஆண்கள் ஆதிக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுவதற்கான எந்தத் தகுதியும் நமக்குக் கிடையாது.

ஏ. ஷோபனா

Comments