இது தொண்டமானுக்கான வாய்ப்பு! | தினகரன் வாரமஞ்சரி

இது தொண்டமானுக்கான வாய்ப்பு!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் 1992ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிலாளர் தரப்புக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டு வருகிறது.

இறுதியாக 2016.10.15ஆம் திகதி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இ.தொ.கா சார்பில் ஆறுமுகன் தொண்டமான். இ.தே.தோ.தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வடிவேல் சுரேஷ், தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி சார்பில் எஸ். இராமநாதன் ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர்.

இந்த ஒப்பந்தம் கடந்த பதினைந்தாம் திகதியுடன் (2018-10-19) காலாவதியானது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை அடிப்படை வேதனமாக வழங்க வேண்டும் என கோரியதாகவும் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டதன் பின்பு அது சம்பந்தமான பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வு காண்பதாக அவர் வாக்குறுதியளித்துள்ளதாகவும் எவ்வாறாயினும் அடிப்படை சம்பளமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா பெற்றுக் கொடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருப்பதாகவும் அறிய முடிகிறது.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்து புதிய அரசாங்கத்தில் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ததால் அவருக்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கைச்சாத்திட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

எனவே, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமைப்பீடம் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் வீணான காலதாமதம் ஏற்பட இடமளிக்கக் கூடாது.

2016.10.15 ஆம் திகதிக்கு முன்பு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலக்கட்டத்தில் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு ஏனைய கொடுப்பனவுகளுடன் எண்ணூற்றம்பது ரூபா வழங்குவது சாத்தியமாக இருந்தபோது தற்போதைய சூழ்நிலையில் ஏனைய கொடுப்பனவுகளுடன் சேர்த்து ஏன் 1230/= வழங்க முடியாது?

ஆகவே, புதிய அமைச்சரவையில் மலையக புதிய கிராமங்களை, உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சை பொறுப்பேற்றுள்ள இலங்கை. தொழிலாளர் காங்கிரசின் தலைவரான ஆறுமுகன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த காலங்களில் இழைத்த தவறுகளை இனம் கண்டு அவற்றை படிப்பினைகளாகக் கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கறாராக செயல்பட்டு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக் கொடுப்பதோடு பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சரான வடிவேல் சுரேஷ் மூலம் நாடளாவிய ரீதியில் பெருந்தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புக்கான காணிகளை ஒதுக்குவிக்கச் செய்து தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை அரசியல் வேறுபாட்டிற்கு அப்பால் முன்னெடுக்க வேண்டும்.

உண்மையை உள்ளது உள்ளபடி குறிப்பிடின்,

இந்திய அரசாங்கத்தின் மூலம் ஆரம்பத்தில் நான்காயிரம் வீடுகளும் அதன் பின்பு பத்தாயிரம் வீடுகளும் இறுதியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமீபத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது தோட்டத் தொழிலாளர்களுக்காக மேலும் பத்தாயிரம் வீடுகள் அமைக்க நிதி வழங்குவதாகவும் உறுதியளித்தனால் மொத்தமாக தோட்டத் தொழிலாளர்களுக்காக இருபத்து நான்காயிரம் வீடுகள் கிடைக்கக் கூடியதாக உள்ளது. எனவே, அவற்றையும் நடப்பு ஆண்டாம் 2018ல் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகளை நிர்மாணிக்க அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கை எடுத்து தான் ஒரு செயல் வீரர் என்பதை நிரூபிக்க வேண்டும்.

எத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்தோம் என்பது முக்கியம் அல்ல. அந்த காலத்தில் மக்களுக்காக என்னவற்றையெல்லாம் செய்தோம் என்பதே முக்கியம்.

Comments