தேர்தலே ஒரே வழி! | தினகரன் வாரமஞ்சரி

தேர்தலே ஒரே வழி!

"வட்டுக்ேகாட்டைக்கு வழிகேட்டால், துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு"

ஒக்ேடாபர் 26இற்குப் பின்னரான பாராளுமன்ற அமர்வு, இரண்டாவது தடவையாகவும் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. இப்போதெல்லாம், பாராளுமன்றம் பிரச்சினையின்றி நடப்பது தான் செய்தியாகக்ெகாள்ளப்படுகிறது. செங்கோலைத் தூக்குவது; சண்டை பிடித்துக்ெகாள்வது எல்லாம் இப்போது செய்தியே அல்ல என்றளவிற்குப் பாராளுமன்றச் சம்பிரதாயம் மாறிப்போய் இருக்கிறது.

இருந்தபோதிலும், கடந்த ஒரு மாதகாலத்தில் இரண்டு தடவை சபை அமர்வு அமளியின்றி நிறைவடைந்திருக்கின்றது என்றால், ஜனநாயக நடைமுறை இன்னமும் பேணப்படுகிறது என்பதற்கான சான்றாகவே கொள்ள வேண்டும்.

கடந்த 19ஆம் திகதி திங்கட்கிழமை பிரதி சபாநாயகரின் தலைமையில் சபை கூடியபோது வெறும் ஐந்து நிமிடங்களில், கடந்த வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பதற்கான அறிவித்தலை விடுத்த பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, தெரிவுக்குழுவில் இடம்பெறுவோரின் பெயர் விபரங்களைப் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்குமாறு கேட்டுக்ெகாண்டுவிட்டுச் சபையை ஒத்திவைத்தார்.

இதில் முக்கியமான ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. அதாவது, அன்று (திங்கட்கிழமை 19) பாராளுமன்றம் நடப்பதற்கு முன்னர் (ஞாயிற்றுக்கிழமை) சர்வகட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த ஜனாதிபதி, குழப்பம் இன்றிச் சபையை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், வாக்ெகடுப்பு நடத்துவதாக இருந்தால், பெயர் கூறியோ அல்லது இலத்திரனியல் மூலமாகவோ நடத்தும்படியும் கேட்டுக்ெகாண்டிருந்தார். அன்றைய கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய பங்குபற்றவில்லை. மக்கள் விடுதலை முன்னணியும் பங்கேற்கவில்லை. ஆயினும், கூட்டத்தின் நிறைவில் திங்கட்கிழமை அமர்வைச் சுமுகமாக நடத்துவதற்குத் தலைவர்கள் இணக்கம் தெரிவித்திருந்தனர். ஆனால், அன்றைய சந்திப்பு எந்தவித இணக்கமும் இன்றி நிறைவடைந்ததாகவே மறுநாள் ஊடகங்களில் செய்திகள் வௌியிடப்பட்டிருந்தன. இலங்கையின் முக்கியமான சிங்கள ஆங்கில பத்திரிகைகள்கூட, எதிர்மறையான செய்திகளையே வெளியிட்டிருந்தன.

எனினும், பாராளுமன்ற அமர்வு மிகவும் அமைதியாக நடந்து, பத்திரிகைச் செய்திகளைப் பொய்யாக்கியது. ஜனநாயக நடைமுறையின் கீழ் ஊடகச் சுதந்திரம் பேணப்பட வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், சரியான செய்திகளை வெளியிடுவதும் இன்றியமையாதது. ஊடகச் சுதந்திரம் என்பது உண்மையைச் சொல்வதற்கான உரிமையேயன்றி, விரும்பியதைச் சொல்வதற்கானதன்று. நாட்டின் இந்த நெருக்கடியான காலகட்டத்தில், நாட்டில் நடப்பதைச் சரியாக மக்களுக்குக்ெகாண்டு செல்ல வேண்டியதில் ஊடகங்களுக்குப் பாரிய பொறுப்பிருக்கிறது.

அதேபோன்று, மக்கள் விடுதலை முன்னணி(ஜேவிபி), தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாட்டையும் ஒரு தெளிவான விளக்கத்துடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. பத்திரிகைக்குப் பத்திரிகை வித்தியாசமாகவே இருக்கிறது.

விசேடமாக, பாராளுமன்றத்தில் வாக் ெகடுப்பு நடத்தப்படும்போது ஜனநாயக நடைமுறையைப் பேணுவதற்காகவும், தற்போதைய அரசாங்கத் தரப்பை எதிர்ப்பதற்காகவும் வாக்களிப்பில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும், ஐக்கிய தேசிய கட்சிக்குத் தாம் ஆதரவளிக்கவில்லை என்று கூறியுள்ளன. அதாவது, அரசாங்கத்தை எதிர்ப்பதென்பது ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிப்பதாக அமையாது என்று அவை தெரிவித்துள்ளன. இஃது உண்மையில் குழப்பமான ஒரு நிலைதான்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சபை அமர்வின்போதும், தெரிவுக்குழுவை நியமிப்பதற்காக 121 உறுப்பினர்கள் வாக்களித்ததாக அறிவிக்கப்பட்டது. தெரிவுக்குழுவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஐவரும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஐவரும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் தலா ஓர் உறுப்பினருமாகப் 12பேர் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக சபாநாயகர் கரு அறிவித்தார். எனினும், ஆளுந்தரப்பான தமக்குப் பெரும்பான்மை அங்கத்தினர்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை தற்போதைய சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்தார். இதனையடுத்து, அப்படியென்றால் வாக்ெகடுப்பு நடத்துங்கள் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கேட்டுக்ெகாண்டார். அதனைத் தொடர்ந்து வாக்ெகடுப்பு நடத்தப்பட்டபோது, ஆளுந்தரப்பினர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள். ஆளுந்தரப்பு பங்குபற்றாத நிலையில், சபாநாயகர் தமது வழமையான வாக்கெடுப்பு முறையை மாற்றி, இலத்திரனியல் முறையில் நடத்தியிருந்தார். இறுதியில் 121பேர் தெரிவுக்குழுவிற்காக வாக்களித்திருப்பதாக அறிவித்தார்.

அதனையும் ஏற்க முடியாது. நாங்கள் இல்லாமல், ஒரு தரப்பு மாத்திரம் வாக்ெகடுப்பை நடத்தியது செல்லாது. சபாநாயகர் அரசியலமைப்பின்படி நடந்துகொள்ளும்வரை, பாராளுமன்ற பகிஷ்கரிப்பை மேற்கொள்வோம் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருக்கிறார். உண்மையில் இது கவுண்டமணி செந்தில் வாழைப்பழ நகைச்சுவையை நினைவுபடுத்துகிறது என்று நீங்கள் நினைக்கக்கூடும். வெள்ளிக்கிழமை வரை நான்கு தடவை வாக்ெகடுப்பை நடத்தியிருக்கிறார் சபாநாயகர். எந்த வாக்ெகடுப்பும் ஏற்றுக்ெகாள்ளக்கூடியதாக இல்லை என்கிறது ஆளுந்தரப்பு.

"நாம் உங்களுக்கு என்ன சொன்னோம்?"

"அமைதியாக பெயர் குறிப்பிட்டு, வாக்ெகடுப்பு நடத்துமாறு அல்லவா கூறினோம்?"

"இப்போது என்ன நடந்திருக்கிறது, ஒரு தரப்பு இல்லாமல் வாக்ெகடுப்பு நடந்திருக்கிறது, இதை ஏற்க முடியுமோ?" என்கிறார்கள் ஆளுந்தரப்பினர். உண்மையில் ஒரு பக்கம் வாழைப்பழக் கதையாக இருந்தாலும், இதில் செந்தில் யார் கவுண்டமணி யார் என்பதில்தான் குழப்பம்.

சபாநாயகர் சிறிகொத்தாவில் கூட்டம் நடத்துவதைப்போன்று பாராளுமன்றத்தில் அமர்வை நடத்துகிறார் என்று குற்றச்சாட்டு வேறு. அவருக்கு எதிராக நம்பிக்ைகயில்லாப் பிரேரணையொன்றை முன்வைக்கப்போவதாகவும் ஆளுந்தரப்பினர் தெரிவித்திருக்கிறார்கள்.

அதேநேரம், பொதுத்தேர்தலொன்றுக்குச் செல்வதற்கான யோசனையொன்றை முன்வைக்கப்போவதாகச் சொல்கிறார் அநுரகுமார திசாநாயக்க. அரசியலில்தான் குழப்பம் என்றால், அரசியல் கட்சிகள் ஏற்படுத்துவதோ அதனைவிடக் குழப்பம்.

ஒருபுறம் எதிர்த்து வாக்களிக்கிறார்கள், மறுபுறம் ஆதரவு இல்லை என்கிறார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை, வட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு என்கிறார்கள் என்றும் விமர்சிக்கப்படுகிறது. அதாவது, நாங்கள் எந்தத் தரப்பிற்கும் ஆதரவில்லை. ஐக்கிய முன்னணியுடன் கூட்டணி அமைப்பதா, இல்லையா? என்பதைப் பற்றித் தீர்மானிக்கவில்லை என்றும், 26ஆம் திகதிக்கு முன்பிருந்த அரசியல் நிலை மீள உருவாக்கப்பட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அந்த நிலைமை மீண்டும் வருமென்பதற்கான உத்தரவாதம் எவ்விடத்திலும் தென்படவில்லை. ஆக, பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பித்தாலும் டிசம்பர் ஏழாந்திகதி உச்ச நிதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கும் வரை, பாராளுமன்றம் ஒரே ரகளையாகவே இருக்கும் என்ற பொதுவான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுவிட்டது.

பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததையும் பின்னர் கலைத்ததையும் ஏற்க முடியாது என்று கூறும் அரசியல் கட்சிகள், மறுபுறம் தேர்தல் நடத்துவதை ஏற்றுக்ெகாண்டிருப்பதாகவே அவர்களின் கருத்துகள் அமைகின்றன.

தேர்தலைக் கண்டு நாம் அஞ்சவில்லை என்றும் எந்தச் சவாலை எதிர்கொள்ளத் தயார் என்றும் ஐக்கிய தேசிய கட்சி அறிவித்திருக்கிறது. ஏனைய கட்சிகளும் தேர்தலுக்குத் தயார் என்ற கருத்துப்படவே நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளன. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்குத் தேர்தல் ஒன்றே ஒரே வழி என்பதை இப்போது எல்லாத் தரப்பும் ஏற்றுக்ெகாண்டிருக்கிறார்கள் என்பதையே இவர்களின் கருத்துகள் புலப்படுத்துகின்றன. ஏனெனில், ஒரு நாளைக்குப் பாராளுமன்ற அமர்வை நடத்துவதற்குப் பொதுமக்களின் பணத்திலிருந்து 20 மில்லியன் ரூபாய் செலவாகிறது. அதுவும் எந்தப் பயனும் அற்ற அமர்வுகளுக்கு இந்தளவு பணத்தை வீண் விரயம் செய்வது நியாந்தானா? என்ற கேள்வியை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் மனச்சாட்சியும் எழுப்பாமல் இருக்காது. அதேநேரம், பாராளுமன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தலொன்றுக்குச் சென்றால், புதிதாகப் பாரளுமன்றம் வந்தவர்களுக்குத் தமக்கு ஓய்வூதியம் இல்லாமற்போகுமே! என்ற ஓர் ஆதங்கம் இல்லாமலும் இருக்காது.

எவ்வாறெனினும், தற்போதைய நெருக்கடியைத் தீர்த்து மீண்டும் மக்கள் ஆணையைப் பெற்று ஒரு ஸ்திரமான ஆட்சியை அமைப்பதன் மூலம்தான் இலங்கையின் கீர்த்தியை மீளத் தூக்கி நிறுத்த முடியும். இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களும் ஆதரவு வழங்குவார்கள்.

சாதுரியன்   
 

Comments