விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை | தினகரன் வாரமஞ்சரி

விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை

வேலை நிறுத்தம், கடையடைப்புக்கும் அழைப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக நாளை திங்கட்கிழமை (26) திறைசேரியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. முதலாளிமார் சம்மேளனத்தையும் தொழிற் சங்கங்களையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிதியமைச்சு அழைத்துள்ளது. நாளை பெருந்தோட்டமெங்கும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழர் பகுதிகளில் கடைகளை அடைத்து எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு வர்த்தக சமூகத்தினைரைக் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொழிற்சங்கப் பேதங்களின்றி இந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைக்குமாறு அனைத்துத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சர் தொண்டமான் தெரிவித்தார்.

நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு வழங்குவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்ததாக அமைச்சர் கூறினார்.

1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லையென்று தெரிவித்த அமைச்சர் தொண்டமான், இதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லையென்று உறுதியாகத் தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வொன்று எட்டப்படுமென்று நம்பிக்கை தெரிவித்த அமைச்சர், சிலவேளை முடிவு திருப்திகரமாக இல்லாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கைபற்றி அன்று மாலையே அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுவரை, தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அனைவருக்கும் அமைச்சர் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

பி.வீரசிங்கம்

 

Comments