"தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லப்படுவது முற்றிலும் வடிகட்டிய பொய்!" | தினகரன் வாரமஞ்சரி

"தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லப்படுவது முற்றிலும் வடிகட்டிய பொய்!"

கேள்வி : தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளம் ரூபா ஆயிரம் என்ற கோரிக்கையின் இன்றைய நிலையை விளக்க முடியுமா?

மலையக தோட்டத் தொழிலாளர்களின் தேயிலை மற்றும் இறப்பர் தொழிலுக்கான வேதனம் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிலாளர்களின் தரப்புக்கும் இடையே கூட்டுப்பேரம் பேசி முடிவெடுக்கப்படுகிறது. இப்பேரத்தின் போது நாட்டில் இருக்கும் வாழ்க்கைச் செலவு, பொருளாதார நிலைமை மற்றும் தேயிலையின் விலை போன்றவை கவனத்தில் கொள்ளப்படுகின்றன. அந்த வகையிலேயே கடந்த அக்டோபர் மாதத்தில் காலாவதியான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உடன்படிக்கையை புதுப்பிப்பதற்காக பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.

தற்போதைய அடிப்படைச் சம்பளமாக ரூபா 500 வழங்கப்படுகிறது. அத்துடன் மேலதிக கொடுப்பனவுகள் சேர்க்கப்பட்டு மொத்தமாக ரூபா 730 அதி உச்சமாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொழிற்சங்கங்களின் சார்பாக இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமானால் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை முதலாளிமார் சம்மேளனம் தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல் அடிப்படைச் சம்பளம் 600 ரூபாவையும் மேலதிக கொடுப்பனவுகளைச் சேர்த்து 940 ரூபாய் வழங்க முன்வந்தது. இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஏனெனில் அடிப்படைச் சம்பளத்திற்குதான் ஊழியர் சேமலாப நிதியும், ஊழியர் நம்பிக்கை நிதியும் கணக்கிடப்படுகிறது. அத்துடன் கொடுப்பனவுகளுடன் சேர்ந்த மொத்த வேதனத்தை பெரும்பாலான தொழிலாளர்கள் பெறமுடியாத தொழிற் சூழ்நிலை பெருந்தோட்டங்களில் காணப்படுகிறது.

தோட்டங்கள் சரியாக பராமரிக்கப்படாமல் காடுகளாக்கப்பட்டுள்ளது. சரிவர பசளையிடப்படாத நிலையில் கொழுந்து உற்பத்தியும் குறைவாக காணப்படுகிறது. நிர்வாகம் கேட்கும் தேயிலை நிறையை அடைவதற்கு தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். இப்படியான காரணங்களினால் தான் தொழிலுக்கு சமூகமளிக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நாளாந்தம் 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுத் தருமாறு கோருகின்றோம். எட்டு மணித்தியாலம் வேலை செய்யும் தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைத் தான் நாங்கள் கோருகின்றோம்.

முதலாளிமார் சம்மேளனம் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க மறுப்பதனால் பல வகையிலான போராட்டங்களை, அழுத்தங்களை தொழிலாளர்கள் சமூகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மலையக சமூகமும் அரசியல் தொழிற்சங்க பேதம் பாராது போராட்டங்களில் ஈடுபடுவதை பார்க்கக்கூடியதாக இருக்கிறது. எமது கோரிக்கை நியமானது என்று வடக்கிலும், கிழக்கிலும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அத்தோடு சென்ற மாதம் 24ஆம் திகதி காலி முகத்திடலில் மலையக இளைஞர்கள் எழுச்சிப் போராட்டம் செய்து எமது கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்துள்ளனர்.

இப் பின்புலத்தில் தற்போதைய அரசாங்கம் மலையக தொழிலாளர்களின் வேதன பிரச்சினையில் தலையிட்டு 1000 ரூபா அடிப்படை சம்பளம் பெற்றுத்தர வேண்டும் என்று இ. தொ. கா தலைவர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பிரதமர் மகிந்த ராஜபக்ச எமது கோரிக்கை நியாயமானது என்பதை தனது பாராளுமன்ற உரையிலும் அங்கீகரித்தார். அவரது உத்தரவின் பிரகாரம் நிதி அமைச்சின் செயலாளர் தற்போது முதலாளிமார் சங்க பிரதிநிதிகளுடனும் பெருந்தோட்ட கம்பனி உரிமையாளர்களிடமும் பேசி ஒரு நியாயமான தீர்வை பெற்றுத் தருவதாக உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் நல்ல தீர்வு கிட்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி : தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறியே சம்பளத்தை அதிகரிக்க மறுக்கின்றனர். உண்மையில் தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றனவா?

முதலாளிமாரின் இக்கூற்றை நான் முற்றாக நிராகரிக்கிறேன். தோட்டம் நட்டத்தில் இயங்கினால் எந்தவொரு கம்பனியும் இத்தனை வருடங்களாக தோட்டங்களை நிர்வாகம் செய்யமாட்டார்கள். ஒன்று கம்பனிகளை கைமாற்றி இருப்பார்கள் அல்லது வேறு தொழிற்துறைக்கு சென்றிருப்பார்கள். உண்மை என்னவென்றால் தேயிலை தொழிற் துறையிலேயே பெறப்படும் இலாப நட்டக் கணக்குகளை சரிவர இக் கம்பனிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு காட்டுவதில்லை. கடந்த பல வருடங்களாக ஈட்டும் இலாபத்தை மீண்டும் தோட்டங்களிலேயே முதலீடு செய்யாமல் வேறு பல துறைகளில் முதலீடு செய்வதை நாங்கள் அவதானித்து வந்துள்ளோம். எமது நாட்டில் ஈட்டும் இலாபத்தைக் கொண்டு மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஒரு சில கம்பனிகள் முதலீடு செய்திருக்கின்றன. மற்றும் தற்போது பெருந்தோட்டங்களில் தோட்ட குடியிருப்புகள், தோட்டப் பாதைகள், குடிநீர், மின்சாரம் போன்ற அனைத்து வசதிகளும் அரசு நிதி மூலமாக பெற்றுக் கொடுக்கப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் பெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகிறன என்பது வடிகட்டிய பொய்.

இலங்கை தேயிலையை சர்வதேச மட்டத்தில் சந்தைப்படுத்தலும் ஏனைய தேயிலை உற்பத்தி நாடுகளுடன் போட்டியிட்டு எமது தேயிலைக்கு நல்ல விலையையும் பெறுமதியையும் பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு முதலாளிமாருக்குதான் இருக்கின்றதேயன்றி அது தொழிலாளர்களது பொறுப்பல்ல.

கேள்வி : பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தாம் வேலை செய்யும் தோட்டங்களை தம்மிடம் ஒப்படைத்தால் இலாபத்தில் இயக்கிக் காட்டுவதாக கூறுகின்றனர். தற்போதைய தோட்டங்களில் வாழும் இளைஞர்களும் இக்கோரிக்கையையே முன்வைக்கின்றனர். இது பற்றிய உங்கள் கருத்து?

தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகின்றன என்றால் இத்தோட்டங்களை 200 வருடங்களாக இதே தோட்டங்களில் வாழ்ந்து இத் தொழிற்துறைகளிலேயே அனுபவம் பெற்ற தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்து அவர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பது நியாயமான ஒரு கோரிக்கையாகும். தோட்டங்கள் கைவிடப்பட்டால் இம்முறைமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் எண்ணுகின்றோம். இப்படி சிறு தோட்ட உரிமைகளாக அங்கீகரிக்கப்படும் திட்டம் நடைமுறைக்கு வந்தால் காலாகாலமாக மலையக தொழிலாளர் சமூகம் செய்துவந்த தொழில் முறையில் ஒரு மாற்றம் ஏற்படுவதோடு சமூகத்தில் பொருளாதார நிலையிலும் ஒரு முன்னேற்றகரமான மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு அதிகமாக காணப்படுகிறது.

கேள்வி : முதலாளிமார் சம்மேளனம் மிகுந்த சக்தி வாய்ந்ததாக காணப்படுகின்றது. அரசு இன்று இருக்கும் நிலையில் அரசாங்கத்தின் கோரிக்கைகளை முதலாளிமார் சம்மேளனம் ஏற்றுக் கொள்ளுமா?

பெருந்தோட்டங்களை 22 தனியார் கம்பனிகளும் மற்றும் மூன்று அரசு நிறுவனங்களும் இந்த நிர்வகித்து வருகின்றன. எமது 1000 ரூபா கோரிக்கையை வழங்குவதற்கு மூன்று அரசு நிறுவனங்களான மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திசபை, அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மற்றும் எல்கடுவ பிளான்டேஷன் ஆகிய நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு வேதனம் தருவதற்கு தயாராக உள்ளன. ஒரு சில தனியார் கம்பனிகளும் தரலாம் என நிலைப்பாட்டில் உள்ளன. ஆனால் ஒருசில கம்பனிகள் மாத்திரமே அவர்களின் சங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வேதனத்தை எவ்வளவு குறைக்க முடியுமே அவ்வளவு குறைக்கும்படியாக கோருகிறார்கள்.

நிலையான அரசாங்கம் இந்நாட்டில் நிலைநிறுத்தப்படுமானால் வேதன கோரிக்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கிறேன். ஒரு சில வாரங்களில் இதற்கான விடை கிடைக்கும் என நினைக்கிறேன்.

கேள்வி : முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்க சம்மேளனமும் இணைந்து ”நியாயமான சம்பளம்” என தொழிற்சங்கம் கேட்பதற்கும் முதலாளிமார் சம்மேளனம் தருவதற்கும் இணங்கியுள்ள சம்பளத்திற்கும் இடையிலான ஒரு சம்பளத் தொகையை ஏற்றுக்கொள்ளலாமா?

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த உழைப்பிற்கேற்ற ஊதியமாக நாங்கள் கேட்கும் 1000 ரூபா கூட போதாது. வெளியில் வேலை செய்பவர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1500 முதல் 2000 ரூபா வரை வழங்கப்படுகிறது. காடுகளாக இருக்கும் தோட்டங்களில் அட்டைக்கடி, பாம்புகள், குளவிகள், ஏனைய விலங்கினங்களுக்கு மத்தியில் மோசமான காலநிலையிலேயே மலையேற்றங்களிலும் பள்ளத்தாக்கிலும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இதைவிட அதிகமாகத்தான் சம்பளமாக வழங்க வேண்டும். ஆனாலும் பொறுப்பு வாய்ந்த தொழிற்சங்கங்கள் என்ற ரீதியிலேயே தேயிலை தொழிற் துறையையும் தக்க வைத்து, தொழிலாளர்களுக்கு நிரந்தர வாழ்வாதாரத்தையும் பெற்றுத்தரும் முகமாகவே 1000 ரூபாவை அடிப்படைச் சம்பளமாக பெற்றுத்தருமாறு நாம் கூறுகின்றோம். இது மிகவும் நியாயமான ஒரு கோரிக்கையாகும்.

கேள்வி : இன்றைய அரசில் நிலை பற்றிய உங்கள் கருத்து?

நாட்டில் ஜனநாயகம் நிலைக்க வேண்டும். இதற்கு ஏழாம் திகதி உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எமது நாட்டின் போக்கை நிர்ணயிக்கும் என்று நினைக்கின்றேன். பொதுவாக நாட்டு மக்கள் இன்றைய அரசியல் போக்கை ஒரு வெறுப்புணர்வுடன் பார்ப்பதோடு அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். நாட்டு நலனையும் மக்கள் நலனையும் முதன்மைப்படுத்தும் சட்டம் நீதிக்கு அடிபணியும் மற்றும் அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய ஒரு கட்டமைப்பு இக் குழப்பகரமான அரசியல் சூழ்நிலையிலிருந்து பிறக்கும் என கருதுகின்றேன்.

கேள்வி : தமிழ் மக்கள் ஐ.தே.க வையே ஆதரிக்கிறார்கள் போல தெரிகிறது. அப்படியானால் இ. தொ.கா நிலைப்பாடு எவ்வாறிருக்கும்?

இ. தொ. காவை பொருத்தவரைக்கும் எமது அரசியல் பிரதிநிதிகளை பெற்றுக்கொள்வதற்கு ஒரு பெரிய கட்சியிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

 

 

"தோட்டங்கள் நஷ்டத்தில்... (05 ஆம் பக்கத் தொடர்)

எமக்கென்று தனி வாக்கு பலம் உள்ளது என்பதை கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் சென்ற மாகாண சபை தேர்தல்களிலும் நுவரெலியா, கண்டி, மாத்தளை மாவட்டங்களிலும் சபரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களில் நாங்கள் நிரூபித்துள்ளோம். எந்த அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் அவர்களுக்கு ஆதரவளித்து எமது சமூக மேம்பாட்டிற்காக இணைந்து செயல்பட நாம் தயாராகவே இருக்கின்றோம். ஐ.தே.க. பொருத்தவரைக்கும் இ.தொ. காங்கிரசுடன் இணைந்து எமது ஆதரவையும் பெற்று மாபெரும் வெற்றிகளை ஈட்டியுள்ளது என்பதை எல்லோரும் அறிவார்கள். இ.தொ.க ஆதரவு இல்லாத ஐ.தே.க. வலுவிழந்து காணப்படுகிறது என்பது பல்வேறு அரசில் அவதானிகளின் கருத்தாகவும் இருக்கிறது. மலையக சமூகத்தின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கும் அபிவிருத்திகளுக்கும் எதிர்கால இளைஞர் சந்ததியினருக்கு வேலை வாய்ப்புகளும் பெற்றுத் தரக்கூடிய ஆக்கபூர்வமான திட்டங்களை முன்வைக்கும் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் நாங்கள் பேசுவதற்கு தயாராகவுள்ளோம்.

கேள்வி : கல்வித்துறையில் என்ன செய்யப்போகிறீர்கள்? கடந்த அரசாங்கத்தில் கல்வி இராஜாங்க அமைச்சு தமிழரிடம் இருந்தது. தற்போதைய உங்கள் நிலைப்பாடு என்ன?

மலையக பாடசாலை கல்வியிலேயே ஒரு பாரிய முன்னேற்றம் சமீப காலத்திலேயே ஏற்பட்டு வருகிறது. இதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், சமூக நலன்விரும்பிகள் மற்றும் பெற்றோர் காரணமாக அமைகிறார்கள். மலையக பாடசாலைகள் முன்னரை விட அதிகமான பௌதீக வளங்களை பெற்றுள்ளது. தேவைக்கேற்ப உபகரணங்கள் மற்றும் தளபாட வசதிகளையும் பெற்றுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை மாத்திரம் இன்னும் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக விசேட பாடங்களான கணிதம், விஞ்ஞான, ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ள கடினமாகவுள்ளது.

கடந்த மூன்றரை வருடங்களாக ஆட்சியிலிருந்த நல்லாட்சி அரசு மலையக ஆசிரிய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு ஆக்கபூர்வமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். தமிழர் ஒருவர் கல்வி இராஜாங்க அமைச்சாக இருந்தும் கூட ஆசிரியர்களை பெற்றுக் கொள்ள முடியாது போய்விட்டது. அதே நேரத்தில் மலையக தமிழர்கள் செறிந்து வாழும் மத்திய மாகாணத்திலும், ஊவா மாகாணத்திலும் போதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யும் அளவுக்கு தகுதியானவர்கள் உள்ளனர். இந்த இரண்டு மாகாணங்களிலிருந்தும் தமிழ்க்கல்வி அமைச்சர்களாக இ. தொ.கா உறுப்பினர்கள் இருந்தார்கள் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

க.பொ.த உயர்தரத்தில் சித்திபெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர் தொகையை அதிகரித்துக் கொள்வதற்கு திட்டமிட்டு நாங்கள் செயலாற்ற வேண்டும். அதேபோல மலையகத்துக்கென்று பல்கலைக்கழக வளாகங்களை அமைத்துக்கொள்ளும் பணியையும் விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

 

பேட்டி கண்டவர்

கண்டி தினகரன்

சுழற்சி நிருபர்

Comments