மனந்திறந்த பேச்சே இணக்கத்தை ஏற்படுத்தும் | தினகரன் வாரமஞ்சரி

மனந்திறந்த பேச்சே இணக்கத்தை ஏற்படுத்தும்

உச்ச நீதிமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி வழங்கவிருக்கும் தீர்ப்பை உலகமே பெரும் பரபரப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இது தொடர்பான தீர்ப்புதான் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (7ஆம் திகதி) எதிர்பார்க்கப்படுகிறது.

ஒக்டோபர் 26ஆம் திகதி தொடங்கிய அரசியல் சர்ச்சையும் நெருக்கடியும் இன்னும் முற்றுப் பெற்றதாக இல்லை. என்றாலும், நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியதும் நிலைமை சீராகிவிடும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

உண்மையில் மக்களின் எதிர்பார்ப்பு வீண் போகாதென்பது சாதகமான சமிக்​ைஞகள் மூலம் தெளிவாகின்றது.

தவறுவிட்ட ஒருவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அரசியல் சர்ச்சையாக மாற்றப்பட்டுள்ளது மட்டுமல்ல, திசையும் திருப்பப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் கபடத்தனமான செயற்பாடுகள், ஊழல், மோசடிகள் ஊர்ஜிதமானதால் அவர் மீது ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கையானது கட்சி அரசியலாகவும், பாராளுமன்ற அரசியலாகவும் மாற்றப்பட்டிருக்கிறதென்ற உண்மையை நாடு இன்று நன்றாகவே விளங்கியுள்ளது.

என்றாலும், ஜனாதிபதியும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் எடுத்துள்ள சுமுகநிலையை ஏற்படுத்தும் நல்முயற்சி ஆரோக்கியமானதொரு செயற்பாடாகும்.

பாராளுமன்றம் கதிகலங்கிப் போய் இருக்கும் நிலையில், அமர்வுகளை சுமுகமாக நடத்த எடுத்துள்ள இரு தலைவர்களின் நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியவை. கடந்த வாரங்களில் நடந்த சபை அமர்வுகளை ஆளும் தரப்பினர் முழுமையாக பகிஷ்கரித்து வருகின்றனரென்பது வேறுகதை ஆனாலும், அடிதடி, அமளிதுமளிகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளைக் கண்டித்தே தாங்கள் அமர்வை பகிஷ்கரித்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத் தரப்பு தொடர்ந்தும் தெளிவுபடுத்தி வருகிறது. மழைக்கால இருட்டு என்றாலும், மந்தி கொப்பிளக்கப் பாயாது என்று அடம்பிடித்த நிலையில் சபாநாயகரும் செயற்படுகிறார். நாம் முன்னர் கூறியதுபோல் திரு. ரணில் விக்கிரமசிங்க செய்த தவறுகளுக்கு அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையானது இப்போது நிறைவேற்று அதிகாரத்துக்கும் சட்டவாக்க சபைக்குமிடையிலான மோதலாக திசை திருப்பப்பட்டிருக்கிறதென்பது சமூக ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

தலையோடு வந்தது, தலைப்பாகையோடு போகவேண்டுமென்பதே திரு. ரணில் விக்கிரமசிங்கவின் இலக்கு. அதனை மிகக் கச்சிதமாக செய்திருக்கிறார். தவறு செய்தவர் தண்டனை பெறவேண்டும். அல்லது தானாகவே ஒதுங்கிக் கொள்ளவேண்டும். இரண்டையும் அவர் செய்து கொள்ளவில்லை. மாறாக பாராளுமன்றத்தை ஒரு பிரளயக் களமாக மாற்றி தன்னைப் பாதுகாத்துக் கொண்டாரென்பதே யதார்த்தமான உண்மை.

எது எப்படி என்றாலும், முற்றிய பிரச்சினைக்கு நாம் சுமுக தீர்வு கண்டேயாக வேண்டும். நாட்டையும் மக்களையும் பிரச்சினையாக வைத்திருக்க முடியாது.

இணக்க அரசியலை ஏற்படுத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். பிச்சைக்காரன் புண்போல இதனைப் புரையோட விடுவதும் ஆரோக்கியமானதல்ல.

இன்றைய பெரும் சர்ச்சைக்குரியவராக இருப்பவர் சபாநாயகர் கருஜயசூரிய. ஆளும் தரப்பினர் இவர் மீதே குற்றம் சுமத்துகின்றனர். அவர் தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டுமென்பதே அவர்களின் கோரிக்கை. இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகரை அழைத்துப் பேசியிருக்கிறார்.

அதேபோல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்துப் பேசி இருப்பது ஓர் ஆரோக்கியமான அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியின் இத்தகைய முன்னெடுப்புக்கள், உச்சக்கட்ட அரசியல் கொதிநிலையை ஓரளவு தணித்திருக்கிறது.

என்றாலும், ரணில் விக்கிரமசிங்க மீதான தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதை ஜனாதிபதி அழுத்தம் திருத்தமாகவே, அனைத்துப் பிரதிநிதிகளிடமும் சொல்லியிருக்கிறார்.

இதனை வைத்துப் பார்க்கும்போது, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியது 100க்கு 100 வீதம் சரியானதென்ற நிலையிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எள்ளளவும் விலகவில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

குற்றம் இழைத்தவர் எவராக இருந்தாலும் அவர்மீது சட்டம் பாயவேண்டும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் குற்றங்களில் ஈடுபட்டால், அதன் விளைவுகளைச் சட்ட ரீதியாகவும் வேறுவகையிலும் எதிர்கொள்ள வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடு.

பாராளுமன்றத்தில் இலஞ்ச ஊழல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இழுத்தடிக்கப்பட்டது என்பது ஜனாதிபதியின் முக்கிய குற்றச்சாட்டுக்களில் ஒன்றாக இருக்கிறது. பிணைமுறி தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி சம்பந்தப்பட்டோரை சட்டத்தின் முன் நிறுத்துவதுதான் நோக்கமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. என்றாலும், ரணில் விக்கிரசிங்க பிரதமர் பதவியில் இருந்த கடைசி வாரத்திலேயே விவாதத்துக்கு எடுக்கப்பட்டது.

இந்த விவாதத்தில் இரண்டு எம்.பிக்கள் உரையாற்றிய நிலையில் கால எல்லையின்றி விவாதம் ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்ற வரலாற்றில் இதுவும் ஒரு விசித்திரமாகவே பார்க்கப்படுகிறது.

இலஞ்ச ஊழல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் செய்யப்பட்ட பின்னணியில் ரணில் விக்கிரமசிங்கவே இருந்தாரென்பது ஜனாதிபதியின் நேரடிக் குற்றச்சாட்டாக இருக்கிறது.

சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் முன்னைய அரசாங்கத்திலிருந்த பல முக்கிய புள்ளிகள் மீது சட்டம் பாய்ந்திருக்குமென்பதனாலேயே விவாதம் மறு அறிவிப்பு வரை ஒத்திவைக்கப்பட்டதென்பதும் ஜனாதிபதியின் கருத்து.

ஆகவே, ஊழல், மோசடிக்காரர்களைப் பாதுகாக்கும் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்கவே இருக்கிறாரென்ற தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என ஜனாதிபதி தன்னைச் சந்தித்த கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கூறியிருக்கிறார்.

நிலைமையைப் பார்க்கும்போது பிரச்சினை, பிரச்சினையாகத்தான் இருக்கிறது. பேச்சுவார்த்தை மூலந்தான் இதற்குத் தீர்வு காண முடியுமென்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பிரச்சினையின் முழுவடிவில் இருப்பவர் ரணில் விக்கிரமசிங்க. அவருக்குப்பதிலாக அதேகட்சியைச் சேர்ந்த இன்னொரு தலைவரை தெரிவு செய்தால் பிரச்சினை தானாகவே முடிந்துவிடும் என்பது தெட்டத் தெளிவாகிறது.

எதுவென்றாலும், பேச்சுவார்த்தை எதனையும் சுமுகமாக்கும். தொடர்ந்தும் பேசுங்கள், விட்டுக்கொடுப்போடு செயற்பட்டால், இணக்க அரசியல் என்பது நம்மிடந்தான் இருக்கிறது.

Comments