எத்தனை தண்ணீர் போத்தல்களை தண்ணீருடன் வீணாக்குகின்றோம்? | தினகரன் வாரமஞ்சரி

எத்தனை தண்ணீர் போத்தல்களை தண்ணீருடன் வீணாக்குகின்றோம்?

சாரதா மனோகரன்

 

(இலங்கை நிர்வாக சேவை அலுவலராகிய கட்டுரையாளர் ஆசிய தொழில்நுட்ப நிறுவகத்தில் (தாய்லாந்து) இயற்கை வள முகாமைத்துவ முதுமாணிக்கற்கையை மேற்கொண்டு வருகிறார். அவரை [email protected] என்ற மின்னஞ்சலூடாக தொடர்பு கொள்ள முடியும்)

பாவனை முடிந்த பின் தூக்கியெறியும், சூழலுக்கு பாதகமான பொருட்களைத் தடைசெய்வதற்கான சட்டம் தொடர்பில் கடந்த ஐப்பசி மாதம் ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாட்டை எட்டியிருக்கிறது. அதேவேளை சுற்று சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான அத்தகைய பாவித்தவுடன் எறியக்கூடிய பாவனைப்பொருட்களை இலங்கை போன்ற பல கீழைத்தேய நாடுகளிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் இறக்குமதி செய்கிறது. கமுகு மட்டையைப் பயன்படுத்தித் தயார் செய்யப்படும் தட்டுகள், கரண்டிகள் தொட்டு பல்வேறு வகையான இயற்கை மூலப்பொருட்களிலிருந்து தயார் செய்யப்படுவன அவற்றுள் அடங்கும். ஆனால் மாறாக நாமோ, சூழலுக்கு பாதகம் விளைவிக்க க் கூடிய அத்தகைய பொருட்களை இறக்குமதி செய்து பயன்படுத்துகிறோம். நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் இந்த தற்காலிகமான, சூழலுக்கு பாதகமான பொருட்களின் பிரயோகம் அபரிமிதமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

இயற்கையாக பிரிகையடைய முடியாத பிளாஸ்டிக் கழிவுகளை சமுத்திரத்தில் கலக்கச் செய்யும் நாடுகளுள் உலகளாவிய ரீதியிலே இலங்கை ஐந்தாம் இடத்தைப்பிடித்திருக்கிறது. இந் நிலைக்கு மிகப் பிரதானமான காரணம், எமது நுகர்வுப் பாங்காகும். அத்துடன் சூழல் மாசை ஏற்படுத்தும் கழிவுகளை அகற்ற வல்ல முறைமைகளில் முதலீடு செய்யாமையால் கழிவுகளைச் சுத்திகரிக்காமலேயே கடலினுள் கலக்க விடுதலும் இந் நிலைமைக்கு காரணமாகியது. கழிவே உருவாகா விட்டால் கழிவை சுத்திகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாதல்லவா?

அரச திணைக்களங்கள், தனியார் நிறுவங்களின் கூட்டங்களாக இருக்கட்டும். ஏன் தனிப்பட்ட குடும்ப நிகழ்வுகளாக இருக்கட்டும். பாவித்தபின்னர் தூக்கியெறியும் குடி நீர்ப்போத்தல்களின் பாவனை அதிகரித்துச்செல்கின்றமையைப் பற்றி எவரேனும் சிந்தித்திருக்கிறோமா? நிகழ்வுகளில் பங்குபற்றும் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு சிறு பிளாஸ்டிக் குடி நீர்ப்போத்தல்களை வழங்குவதுதான் நாகரிகமென்றாகி விட்டது. தந்துவிட்டார்களே என்பதற்காக மூடியைத் திறந்து ஒருதடவை குடித்து விட்டு நிகழ்வு முடிந்ததும் அப்படியே வைத்து விட்டுச் செல்லும் பண்பாடும் இப்போது எம்மத்தியில் நாகரிகமாகிவிட்டது. எவரோ குடித்த தண்ணீர். மீளப்பாவிக்கமுடியாதே என, தண்ணீருடன் போத்தல்களை குப்பைத்தொட்டியில் போடுவதும் அன்றாட வழக்கமாகிவிட்டது. இப்படி ஒரு நுகர்வோனாக நாம் ஒவ்வொருவரும் எத்தனை குடி நீர்ப்போத்தல்களை குப்பைத்தொட்டிக்கு அனுப்பியிருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். எத்தனை லீற்றர் குடி நீரை வீணாக்கியிருக்கிறோம் என எண்ணிப்பாருங்கள்? இது நவ நாகரிகம் எனும் பெயரால் நாம் உருவாக்கியிருக்கும் புதிய நுகர்வுக் கலாசாரத்துக்கான சிறு உதாரணமாகும்.

உணவு உற்பத்தியாகட்டும், சக்தி உற்பத்தியாகட்டும். மனித நட வடிக்கைகளால் நிலத்தின் மீதான சூழல் தொகுதிகள் அடைந்திருக்கும் பாதிப்புகள் சொல்லிலடங்கா. மனிதனால் உருவாக்கப்பட்ட வேறுபட்ட நிலப் பாவனைகள் காட்டு, வீட்டு இனங்களுக்கிடையிலான சம நிலையை மட்டுமன்றி தாவர விலங்குகளின் வாழிடத்தின் தரத்தையும் பரப்பையும் வெகுவாகக் குறைத்திருக்கின்றன. அத்துடன் சுற்றுச்சூழலின் உயிரற்ற, இரசாயன, பெளதிகப் பகுதிகள் பாதிக்கப்பட்டதால் வாழும் உயிரினங்கள் மட்டுமன்றி நுண்ணுயிரிகளும் பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றன.

இந்தப் பாதிப்புகள் உலகளாவிய ரீதியிலோ இல்லை தேசிய ரீதியிலோ அல்லது உள்ளூர் ரீதியிலோ எப்படி இருந்தாலும் உயிர்ப் பல்வகைமையின் அழிவிலும் அவற்றின் வாழிடம் வழங்கும் சேவைகளின் இடை நிறுத்தலிலும் நேரடியாகத் தாக்கம் செலுத்துவனவாக இருக்கின்றன. அதேவேளை ஒட்டுமொத்த வாழிடங்கள், அவற்றின் சேவைகள், அங்கிகளின் செறிவு போன்றவற்றிலும் மறைமுகமான தாக்கத்தை செலுத்துகின்றன.

இன்று புதிய விவசாய நிலங்கள் உருவாகின்றனவென்றால், அவை யானைகளுக்கோ கரடிகளுக்கோ அல்லது புலிகளுக்கோ சொந்தமான நிலங்களின் பாவனையை நாம் மாற்றியமைத்தமையால் உருவாகியவையேயாகும். இவ்வாறு வனப்பகுதிகளின் பரப்பளவு மட்டுமன்றி அவற்றின் தரமும் குறைவடைந்து வருதலானது அவ்வனப்பகுதிகளை வாழ்விடமாகக் கொண்ட தாவர, விலங்குகளை வெகுவாகப் பாதிக்கும் காடழிப்பினால் ஏறத்தாழ 19,000 பறவைகள், ஈரூடகவாழிகள், முலையூட்டிகள் இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியத்தின் அழிந்துபோகும் ஆபத்தை எதிர் நோக்கும் உயினரிங்களின் பட்டியலிலே உள்ளடக்கப்பட்டிருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிலே கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய தாவர இனங்களின் பட்டியல் இவ்வெண்ணிக்கையில் உள்ளடக்கப்படவில்லை. இதுவரைகாலமும் மனிதத் தொடர்பு இல்லாத வனப்பகுதிகள் அழிக்கப்படும் போது இவ்வெண்ணிக்கை அபரிமிதமாக அதிகரிக்கின்றமையும் அவ்வாய்விலே அவதானிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய வனப்பகுதிகளிலே சிறிய பரப்பளவு அழிக்கப்பட்டாலும் அது பாரிய எதிர் விளைவைத் தோற்றுகின்றமையும் அவதானிக்கப்பட்டிருக்கிறது.

உலகின் ஒரு பகுதியில் காடுகள் தொடர்ந்தும் அழிக்கப்பட்ட வண்ணமே இருக்க, இன்னொரு பகுதியிலோ மாறாக கைவிடப்பட்ட விவசாய நிலங்களிலே பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை மூலம் மீள் காடக்கல் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. நாம் யாவரும் அறிந்த காபனீரொட்சைட்டை உள்ளெடுக்கும் பணியை இந்தப் பெருந்தோட்டங்கள் மேற்கொண்டாலும், இயற்கையான காடுகளை அவற்றால் பிரதியீடு செய்ய முடியாது. இயற்கையாகவே மிக நீண்டகாலமாகப் பரிணமித்து இன்று அடர்காடுகளாக இருக்கும் பகுதிகளிலிருந்து பெருந்தோட்டங்கள் வேறுபட்டவை. பெருந்தோட்டங்களின் உயிர்ப்பல்வகைமை சிக்கலற்றது. இலகுவானது. உயிர்ப்பல்வகைமை சிக்கலானதாகக் காணப்படும் வனப்பகுதிகள் மனித வாழ்வின் நிலைப்பிற்காக எண்ணற்ற சேவைகளை வழங்குகின்றன. பெரும்பாலான அச்சேவைகள் பெருந்தோட்டங்களால் வழங்கப்பட முடியாதவை.

காடழித்தலினால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பு உயிரினங்களின் வாழ்விடம் துண்டாடப்படலாகும். உலகின் 70 சதவீதமான வனப்பகுதிகளிலே ஏதேனுமோர் எல்லை சராசரியாக 1 கிலோ மீற்றர் தூரத்தினுள் காணப்படுகின்ற துர்பாக்கிய நிலையை அண்மையில் ஆய்வொன்று வெளிப்படுத்தியிருக்கிறது. அதாவது பெரும் வனப்பகுதியானது பல்வேறு காரணங்களால் சிறு துண்டுகளாக துண்டாடப்படும் போது பாத்திரமே எங்கிருந்தாலும் அதன் ஏதாவதொரு எல்லை மிக அருகிலே காணப்படும். வனப்பகுதிகளைத் துண்டாடுவதில் பெருந்தெருக்களும், சுரங்க அகழ்வுகளும் பெரும்பங்கு வகிக்கின்றன. வனப்பகுதிகள் துண்டாடப்படும் போது விலங்குகள் திரியும் பாதையில் பெரும் தடங்கல் ஏற்படுகிறது. வனப்பகுதிகளினால் உருவாக்கப்படும் நுண் கால நிலையிலும் நீரியலிலும் பெரு மாற்றங்கள் நிகழ்கின்றன.

வனப்பகுதிகள் துண்டாடப்படும் போது மனிதர்கள் இலகுவாக அடர்வனங்களுக்குச் செல்லல் அதிகரிக்கும். அரிமரங்களுக்காகவும், உணவு, மருத்துவத்தேவைகளுக்காகவும் வேட்டைக்காகவும் பலர் வனப்பகுதியை நாடத்தலைப்படுவர். இவை வனப்பகுதிகள் மீது அதிக அழுத்தங்களைப் பிரயோகிப்பன. காடுகளின் அருகே உள்ள நிலப்பகுதியே , காடுகளினால் அதிகம் பயன்பெறும் நிலப்பகுதியாகும். மகரந்தச்சேர்க்கை தொட்டு நீரை வழங்கும் சேவை வரை அந் நிலத்துக்கு காடுகளால் கிடைக்கப்பெறும் சேவைகள் எண்ணிலடங்கா.

வனமாக இருந்த நிலத்தின் நிலப்பாவனை மாற்றம் பெற்று அது விவசாய நிலமாக மாற்றம் பெறுகிறது என்றால் அந் நிலத்தின் மீதான மிகை இரசாயனங்களின் பாவனையும் இன்றைய காலத்தில் தவிர்க்கமுடியாதாகிவிட்டது. குறுகிய காலத்தில், மிகவும் குறைந்த செலவில் அதிக இலாபத்தை ஈட்டவேண்டும் என்ற மனிதனின் பேராசையும், அதிகரிக்கும் சனத்தொகையின் தேவைகள் அதிகரித்தமையால் அவற்றை ஈடு செய்ய வேண்டி மனிதன் மேல் திணிக்கப்பட்ட நிர்ப்பந்தங்களுமே அதற்கான காரணங்களாவன.

இரசாயன பூச்சிக் கொல்லிகளின் பாவனையானது நுண்ணுயிர்களுக்கு மட்டுமன்றி, மகரந்தச்சேர்க்கையை மேற்கொள்ளும் தேனீக்களுக்கும் பறவைகளும் நீர் வாழ் உயிர்ப்பல்வகைமையும் கூட பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றன. அதை நீங்கள் அறிவீர்கள். இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் ஆபத்துகளையும் கால நிலை மாற்றத்தின் விளைவுகளையும் குறைப்பதில் காடுகளுக்கு பெரும் பங்கு உண்டு. இத்தகைய இயற்கைக் கட்டமைப்புகள் அழிக்கப்படும் போது வெள்ளம், புயல், நிலச்சரிவு போன்ற கொடிய இயற்கை அனர்த்தங்களுக்கு காப்பின்றி முகம் கொடுக்கும் நிலைக்கு மனித இனம் தள்ளப்படும். மக்கள் வேறு நிலங்களை நோக்கி இடம் பெயரத்தலைப்படுவர். ஏற்கெனவே விவசாயம், நகர்ப்புறக் கட்டடங்கள் போன்ற வேறு நிலப்பாவனைகளையுடைய அந் நிலங்கள் மீதான அழுத்தம் குறைவடையும். இது இயற்கை மீதும் உயிர்ப்பல்வகைமை மீதும் அதிக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட ஏதுவாகும்.

அதிகளவிலான பூச்சி கொல்லிகளால் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் உயிரினங்கள் அழிவடைதலானது விவசாயத்துறையின் உற்பத்தித்திறனை வெகுவாகப்பாதிக்கும். உயிர்ப்பல்வகைமையின் மற்றொரு அங்கம் மண்ணிலே வாழும் உயிர்களாகும். மண்ணின் உயிர்ப்பல்வகைமை பற்றிய உலகின் முதலாவது மதிப்பீட்டறிக்கை அண்மையில் வெளியாகி இருந்தது. இவ்வறிக்கையிலே மண்ணின் உயிர்ப்பல்வகைமை எதிர் நோக்கும் அபாயங்களை வெளிப்படுத்தும் முதலாவது உலக வரைபடமும் அதில் இணைக்கப்பட்டிருந்தது. மண்ணின் உயிர்ப்பல்வகைமைச் செறிவுக்கும் அழிவுக்கும் மனித நடவடிக்கைகளே காரணமாக அமைகின்றன. செறிவான விவசாயப் பயிர்ச்செய்கையும் நிலப்பயன்பாட்டின் மாற்றமுமே அதற்கான பிரதானமான காரணங்களாகும். மண்ணின் உயிர்ப்பல்வகைமையானது உணவு உற்பத்தியை நிலைத்து நிற்க செய்வதோடு மட்டுமன்றி சூழல் தொகுதியின் சேவைகள் பலவற்றையும் வழங்குகிறது. அவற்றுள் நஞ்சூட்டப்பட்ட, மாசுபட்ட மண்ணில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றல், மண்ணினால் பரவும் நோய்களை அடக்குதல், உற்பத்தி செய்யப்படும் உணவின் போசாக்கு மட்டத்தை உயர்த்துதல் என்பனவும் அவற்றுள் அடங்கும்.

பொதுவாக மண்வளம் பாதிக்கப்படும் போது நிலம் தன் தரத்தை இழக்கும். அவ்வாறு நிலத்தின் தரம் இழக்கப்பட்டால் அங்கிகளின் வாழ்வு அச்சுறுத்தலுக்குள்ளாகும். மனிதனும் அதற்கு விதிவிலக்கல்ல. உலகளாவிய ரீதியில் ஏறத்தாழ 25 சதவீதமான நிலங்கள் மாத்திரமே இன்னும் மனிதனுடைய தலையீடு இல்லாமல் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மனிதனால் அதிகளவு பாதிக்கப்பட்ட நிலங்களாக ஈர நிலங்களே காணப்படுகின்றன. நவீன உலகிலே ஏறத்தாழ 87 சதவீதமான ஈர நிலங்கள் ஏறத்தாழ அழிந்தே போய்விட்டன எனலாம். நிலம் ஒழுங்காக முகாமை செய்யப்படாமையே நிலம் தரமிழப்பதற்கான பிரதான காரணமாகும். நிலம் சூழல் தொகுதிகளின் திறன் குறைவடைந்து செல்வதற்கப்பால் சூழல் தொகுதி சார் பொருட்களுக்கு ஏற்பட்ட கேள்வியே நிலம் ஒழுங்காக முகாமை செய்யப்படாமைக்கான காரணமாகும்.

நிலம் தரமிழப்பதால் ஏற்படும் விளைவுகள் உள்ளூர் ரீதியில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியிலும் தாக்கம் செலுத்துவன. உதாரணமாக நிலத்தின் தரம் இழக்கப்படுவதற்கும் வறுமை, முரண்பாடுகள், மக்களது இடப்பெயர்வு ஆகியவற்றுக்கும் இடையே சிக்கலான இடைத்தொடர்புகள் காணப்படுகின்றனையைக் குறிப்பிடலாம். நிலம் தரமிழந்தால், மண்ணின் கனிப்பொருட்கள் யாவும் நீரோடு அரிப்படைந்து நீர் நிலைகள், ஆறுகளில் படியத்தொடங்கும். காற்றினால் அள்ளப்படும் தூசி தூரத்துக்குப் பரவும். நிலம் தரமிழத்தலானது காலநிலை மாற்றத்துக்கு பங்களிப்புச் செய்யும் பிரதான காரணிகளுள் ஒன்றாகும். நிலம் தரமிழந்த பின்னர் ஏற்படும் விளைவுகளை எதிர் நோக்குவதை விட நிலத்தை தரமிழக்க விடாமல் பாதுகாப்பதே பொருத்தமானதாகும். அதற்கு நிலப்பாவனையைக் கண்காணித்தலும் கட்டுப்படுத்தலும் மிகப்பிரதானமனவையாவன.

ஆதலினால் தான் இலங்கையில் பிரதேச செயலகப்பிரிவுகள் மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் காணிப்பயன்பாட்டு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பாரம்பரியமாகவே பிரதேச மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் காணிப்பயன்பாட்டுக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. காலத்துடன் அவற்றின் நோக்கம் மறக்கப்பட்டு விட, புதிய காணியை வழங்குவதற்கு அனுமதி பெறும் கூட்டங்களாக அவை பல இடங்களில் மாற்றம் பெற்று விட்டன. அவற்றின் உண்மை நோக்கத்தை உணருவர் எவருமிலர். இந் நிலையில் பொதுமக்களாகிய நாம் ஒன்றிணைந்து, எமது வாழ்க்கை முறைமையை மாற்ற முன்வந்தாலொழிய, வேறெப்படியேனும் நிலம் தரமிழத்தலையோ சமுத்திரம் மாசுபடுதலையோ தவிர்க்க முடியாது!

Comments