நாமும் நமக்கோர் நல்மரமும் நற்கனியும் | தினகரன் வாரமஞ்சரி

நாமும் நமக்கோர் நல்மரமும் நற்கனியும்

கருணாகரன்

 

“நல்ல மாம்பழத்தை எங்கே வாங்கலாம்?” என்று கேட்டார் கேசவன் மாமா.

இதற்கு என்ன பதிலைச் சொல்ல முடியும்?

நல்ல மாம்பழத்தை எங்கே வாங்கலாம்? என்று உண்மையிலேயே எனக்கும் தெரியவில்லை.

சந்தையில் கிடைக்கும் மாம்பழங்கள் அத்தனையும் முற்றுவதற்கு முதல் பிடுங்கி மருந்தடித்த பழங்களே. அதாவது வலிந்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள். இதைப் பழ வியாபாரிகளே எந்தத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாகச் சொல்கிறார்கள்.

“இப்ப யார்தான் மருந்தடிக்காத பழங்களை விற்கிறார்கள். அப்படி எங்காவது இருந்தால் எங்களுக்கும் வாங்கித்தாருங்கள்?” என்று.

தங்களுக்கான நல்ல மாம்பழத்தை எங்களைக் கொண்டே வாங்குவதற்கு முயற்சிக்கிறார்கள். கூடவே வியாபாரத் தந்திரத்தில் நம்மையே மடக்கி விடுகிறார்கள்.

நமக்கும் வேறு வழி இல்லை. பழங்கள் வேண்டும் என்றால், நல்லதோ கெட்டதோ பேசாமல் வாங்கிக் கொண்டு திரும்ப வேண்டியதுதான். அல்லது வாங்காமலே திரும்ப வேண்டும். எதைச்செய்யப்போகிறோம் என்பது எங்களைப் பொறுத்தது.

ஆனால், மாம்பழத்துக்கான ஆசை வந்துவிட்டதென்றால் இரசாயன மருந்தைப்பற்றிக் கவலைப்பட்டு ஆகப்போவதொன்றுமில்லை. எல்லோரும் மருந்தடித்த பழங்களைத்தானே வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இதில் நாம் மட்டும் விலகி இருந்து என்னவாகப்போகிறது? என்று சமாதானம் சொல்லிக் கொண்டு பேசாமல் இந்தப் பொதுச் சமுத்திரத்தில் சங்கமமாகி விட வேண்டியதுதான்.

இப்பொழுது பொதுவாகவே எல்லாச் சந்தைகளிலும் கடைகளிலும் மாம்பழங்களை விட அப்பிள், ஒரேஞ், திராட்சை என இறக்குமதி செய்யப்பட்ட பழங்களையே குவித்து வைத்திருக்கிறார்கள்.

மாம்பழங்களை ஆசையாக அபூர்வமாகத்தான் பார்க்க முடியும். இந்த நிலைமையில் கேசவன் மாமாவுக்கு நல்ல மாம்பழத்தை எங்கே தேடி எடுப்பது?

நான் திரும்பி அம்மாவைப் பார்த்தேன்.

இந்தக் கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வதென்று தெரியாமல் அம்மா திணறுவதை கண்கள் காண்பித்தன.

அம்மாவினால் மட்டுமல்ல, யாராலுமே நல்ல மாம்பழங்களை வாங்கும் இடங்களை எளிதில் காட்டி விட முடியாது. அபூர்வமாக எங்காவது ஒன்றிரண்டு இடங்களில் அப்படி நல்ல மாம்பழங்களை யாராவது வைத்திருக்கலாம். விற்கலாம். அப்படியான இடங்களை எப்படித் தேடிக் கண்டுபிடிக்கிறது?

எப்படியோ நல்ல மாம்பழங்களை வாங்க முடியாத ஒரு வாழ்க்கையின் முன்னே நிறுத்தப்பட்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை.

கேசவன் மாமா லேசான ஆளில்லை. நினைத்த காரியத்தை முடிக்கால் விடவே மாட்டார். அம்மாவைக் குடைந்து குடைந்து ஒரு வழியாக பவளசோதி அக்கா வீட்டில் நல்ல முற்றிய கறுத்தக் கொழும்பான் மாம்பழங்கள் இருக்கிறதாம் என்ற தகவலை அறிந்து கொண்டார். எனக்கும் தெரியும், பவளசோதி அக்கா வீட்டில் கறுத்தக் கொழும்பான் பழங்கள் இருக்கும் என்று. ஆனால் இப்பவும் இருக்கிறதா என்றுதான் தெரியாமலிருந்தது. கேசவன் மாமா சுளியன் என்பதால் எப்படியோ இந்தச் சங்கதியை அறிந்து விட்டார்.

இருபத்தைஞ்சு முப்பது வருசத்துக்கு முந்தி பவளசோதி அக்கா வீட்டில் கறுத்தக் கொழும்பான் பழங்களின் வாசனையும் விலாட்டுப்பழத்தின் வாசனையும் கலந்து வீசிய காலமொன்றிருந்தது.

நாங்கள் பள்ளிக் கூடத்தால் வீட்டுக்கு வரும் வழியில் பவளசோதி அக்கா வீட்டுக்கு போகாமல் திரும்புவதேயில்லை. கறுத்தக் கொழும்பான் கொந்தல்கள் எங்களுக்காகவே காத்திருக்கும். காய்களையோ முற்றிய செங்காய்களையோ பிடுங்குவதற்கு பவளசோதி அக்காவின் அம்மா பரிமளம் ஆச்சியிடமிருந்து அனுமதி இல்லை. ஆனால், விலாட் காய்கள் கிடைக்கும். முற்றிய காய்கள் அந்த மாதிரி ருசியாக இருக்கும்.

எங்களுடைய வீட்டிலும் கறுத்தக் கொழும்பான், அம்பலவி, செம்பாட்டான், விலாட் எல்லாம் நின்றன. ஊரிலேயே அநேகமாக எல்லோருடைய வீடுகளிலும் ஏதோ இரண்டு மூன்று மாமரங்களாவது நிற்கும். சீசன் தவறாமல் காய்த்தும் பழுத்தும் கொட்டின. கிளிகள், வெளவ்வால்கள், அணில்கள், குயில்கள் என்றெல்லாம் கூடிக் குதூகலித்துத் தின்று கூத்தாடிக் களித்த காலம் அது.

யுத்தம் வந்த கையோடு எல்லாமே தலைகீழாகி விட்டது. யுத்தம் மனிதர்களையும் அவர்களுடைய வாழ்க்கையையும் மட்டும் பலியெடுக்கவில்லை. மரம், செடி, கொடி, கோயில், குளம் என எல்லாவற்றையும் தின்று முடித்தது. எங்கள் ஊரிலிருந்த மாமரங்களில் முக்கால் வாசிக்கு மேல் அழிந்து விட்டன. மிஞ்சியவையும் பட்டது பாதி, கெட்டது பாதி என்று பாதி உயிரோடும் பாதி உயிரிழந்தும் நின்றன. ஏராளம் மரங்களின் உடல்களில் ஷெல் (எறிகணைச்) சிதறல்கள் பட்டு ஏனோதானோ என்று நின்றன. இந்தச் சீரில் எப்படி அவற்றால் பூக்கவும் காய்க்கவும் கனியவும் முடியும்.

போதாக்குறைக்கு நாடே மாம்பழம், தோடம்பழம், பலாப்பழம், அன்னமுன்னாப் பழம், கொய்யாப்பழம் என்ற ஊர்ப்பழங்களையெல்லாம் மறந்து கைவிட்டுவிட்டு, அப்பிள், ஒரேஞ், கிரேப்ஸ் என்று உலகப்பழங்களை நோக்கி நகர்ந்து விட்டது.

சர்வதேச சமூகத்தை அரசியலில் மட்டுமல்ல, பழங்களுக்காகவும் ஏணி வைத்து இறக்குமதி செய்து விட்டு, நல்ல மாம்பழத்தைத் தேடினால் எப்படிக் கிடைக்கும்?

இப்பொழுது எல்லாமே சர்வதேச மயம், சர்வமயம் என்றாகி விட்டது.

நல்ல மாம்பழத்தை இழந்ததைப்போலவே நல்ல அரசியலையும் நல்ல அரசியல்வாதிகளையும் இழந்து விட்டோம் என்று நீங்கள் சொல்லக் கூடும்.

நாடும் மண்ணும் நல்லது. நாம்தான் நல்லவர்களாக இல்லை என்பார்கள். அது ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மையே. மக்கள் தங்களுக்கான தலைவர்களை, பிரதிநிதிகளை, கட்சிகளைத் தெரிவு செய்யும்போது முறையாக மதிப்பீடு செய்து, ஆய்வுக்குட்படுத்தித் தெரிவுகளைச் செய்ய வேணும். அப்படிச் செய்தால் பிறகு தலையிடியோ குழப்பங்களோ ஏற்படாது.

தெரிவுகள் தவறென்றால் விளைவுகளும் தவறே.

ஒரு காலம் எங்கள் வீடுகளில் நல்ல மாம்பழங்கள் இருந்தன என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.

நல்ல பழங்களின் அந்த ருசியையும் நாங்கள் அறிவோம். இன்னும் அந்தத்தீஞ்சுவை எங்கள் மனசிலும் நாவிலும் ஊறிக்கிடக்கிறது.

முற்றத்தில் காயோடும் பழத்தோடும் நின்ற மரங்கள் எங்கள் உறவாக, உயிர்ப்பாக இருந்ததையும் அறிவோம்.

ஆனால், அதையெல்லாம் இன்று இழந்து விட்டோம்.

எப்படி? நாங்கள் நடத்திய யுத்தத்தினால், நாங்கள் பங்கேற்ற போரினால் இழந்து விட்டோம்.

இப்பொழுது ஒரு நல்ல மாம்பழத்துக்கு வழியற்றிருக்கிறோம்.

சந்தையில் வந்து குவிந்திருப்பதெல்லாம் சர்வதேசச் சரக்குகள்.

சர்வதேச நாடுகளில், அவர்களுடைய வீடுகளிலும் தோட்டங்களிலும் அப்பிளும் ஒரேஞ்சும் காய்த்துக் குலுங்குகின்ற.ன.

அவர்கள் பழங்களோடும் பழ மரங்களோடும் வாழ்கிறார்கள்.

தங்களுடைய பழங்களை எங்களுக்கு ஏற்றி விற்கிறார்கள். அப்படி விற்றுச் சம்பாதித்துத் தங்களையும் தங்கள் நாட்டையும் வளப்படுத்துகிறார்கள்.

ஆனால், நாங்கள் எங்களுடைய பழங்களை அப்படி வெளியுலகத்துக்கு ஏற்றி விற்கத்தான் வேண்டாம். நாங்களாவது சாப்பிடலாம் என்றால், அதற்கும் வழியில்லை.

எத்தனையோ பொருளாதாரக் கொள்கைகள், எத்தனையோ பண்பாட்டுப் பேணுகைகள், எத்தனையோ அடையாள இருப்புகள், எத்தனையோ தேசியக் கதையாடல்கள் பற்றியெல்லாம் பலரும் பேசுகிறார்கள்.

ஆனால், நல்ல மாம்பழத்தை ஊருக்குள்ளும் சரி, சந்தைகளிலும் சரி வாங்க முடியாதிருப்பதே உண்மை. இது தனியே மாம்பழத்துக்குத்தான் என்றில்லை.

இந்த நாட்டிலுள்ள எல்லாவற்றுக்கும்தான்.

 

Comments