வேலையில்லாத் திண்டாட்டம் எதுவும் கிடையாது வேலைக்கு ஆள் இல்லையென்பதே உண்மை | தினகரன் வாரமஞ்சரி

வேலையில்லாத் திண்டாட்டம் எதுவும் கிடையாது வேலைக்கு ஆள் இல்லையென்பதே உண்மை

வாழ்வாதாரமா  சேதாரமா 57

எத்தனை காலம் தூங்கிக் கிடப்பாய் வீட்டிலே தம்பி

தலைகுனிஞ்சு ஏன் நடக்கிறாய் ரோட்டிலே இன்றைய இளைஞர்களைப் பாரத்து வேறொரு நோக்கத்துக்காக பாடப்பட்ட பாடலின் பல்லவி அது. ஆனால் எப்படியோ இன்றைய இளைஞர்களுக்கும் அது அச்சொட்டாகப் பொருந்திவிட்டது பாருங்கள்.

வாகன திருத்தகம் ஒன்றில் எனது வாகனத்தை திருத்துவதற்காக கொண்டு சென்றேன். அங்கே திருத்தத்திற்காகவும், சுத்திகரிப்புக்காகவும் வந்திருந்த வாகனங்களின் பளபளப்பும் அழகும் பிரம்மாண்டமும், எனது வாகனத்தை நான் வீதியிலேயே நிறுத்த வைத்தது. என்ன அழகான வடிவங்களில் நிறங்களில் உந்துருளிகள் (மோட்டார் சைக்கிள்கள்) கண்ணைக் கவர்ந்தன.

ஒருகாலத்தில் மோட்டார் சைக்கிள்களை வாங்கக்கூடியவர்கள் பெரும் தனவந்தர்களாகவே இருந்தனர். போராட்டம் ஆரம்பித்த காலத்தில் எண்பதுகளின் ஆரம்பத்தில் ஊருக்குள் யாராவது மோட்டார் சைக்கிள் வாங்கினால் அது வெகு விரைவிலேயே போராளிகளால் எடுத்துச் செல்லப்பட்டுவிடும். இப்படி வாகனத்தை பறி கொடுத்தவர்கள் மிக அதிகம். காலம் போகப்போக மோட்டார் சைக்கிள்களை பிரித்து அதன் எஞ்சின்களை பயன்படுத்தி ஏதோ வெடிப்பொருளை ஏவுவதற்கான முயற்சிகளை போராளிகள் கொண்டிருந்ததாகவும் அறியக்கிடைத்தது.

பின் அவர்கள் அதை கொண்டோடுவதற்குரிய வீதிகளோ, எரிபொருளோ, எதுவும் கிடைக்காது என்பது தெளிவான விடயம் போராளிகளின் பகுதிகளில் இருந்த பெற்றோல் பங்க் கிணறுகள் அனைத்தும் தோண்டப்பட்ட காலம் பின்னரானது. முதலில் மின்மாற்றிகளின் கீழிருந்த எரிபொருள்கள் தோண்டப்பட்டன. இராணுவமோ போலிஸோ வர முடியாத அளவுக்கு கண்ணிகள் விதைக்கப்பட்ட பிரதேசங்களில் இவ்வாறான திருட்டுக்கள் முடிந்தன.

ஒரு மாவட்டத்துக்கு ஓரு மோட்டார் சைக்கிள். ஒரு பஜீரோ வாகனம். இவ்வளவுதான் தொண்ணூறுகளின் இயக்க வளம். போர் உத்திகளை அதிகரித்து தமது வளங்களை பெருக்கும்வரை இப்படித்தான் இருந்தது.

இன்று மோட்டார் சைக்கிள்கள் வீட்டுக்கு வீடு விளக்குமாறு கிடந்தது போல கிடக்கிறது. ஒன்றல்ல பல வீடுகளில் அம்மாவுக்கு ஒன்று அப்பாவுக்கு ஒன்று மகள் மகன் ஓட ஒன்று என பல வகைகளில் உண்டு. மிதிவண்டிகள் அருகிப்போனதால் மிதிவண்டித் திருத்த கங்களும் அற்றுப்போக மிதிவண்டி வைத்திருக்கும் ஒன்றிரண்டு பேரும் அதற்கு காற்றுப்போய்விட்டால்கூட கவலைப்பட வேண்டியதாகிவிட்டது.

சரி இந்த பென்னம்பெரிய மோட்டார் சைக்கிள்களில் அதிகமானவை லீசிங் எனப்படும் கடன் திட்டத்தில் வாங்கப்படுவதாக பலரும் ஆதங்கப்படுகின்றனர். மிக அலங்காரமாக இளைஞர்கள் இதில் சவாரி செய்கிறார்கள. என்னவோ, வீதியில் வேகமாக ஓடுவோரைப்பார்த்து என் பேரன் சொன்னான்

அம்மம்மா இவர் இப்ப ரோட்டில விமானமோட்டப்பழகிறார்.

என்றாலும், அவை வருமானம் பெறும் உழைக்கும் சாதனங்கள் அல்ல. எனவே லீசிங் கட்ட முடியாமல் இவற்றை பினான்ஸ் கம்பனிகள் பறித்துவிடுகின்றன. இப்போது அவர்கள் கட்டிய பணமும் போய்விடுகிறது. முழுதாக பணம் செலுத்தி இவற்றை வாங்குவோர் மிக மிக குறைவு.

அண்ணனோ தம்பியோ மாமனோ மச்சானோ வெளிநாடுகளிலிருந்து அனுப்பிய பணத்தை முதலாக போட்டு வாங்கிவிட்டு பின்னர் வரும் மாதாந்த கட்டணத்தை கட்டமுடியாமல் வாகனத்தை பறி கொடுக்கிறார்கள். வாகனம் வரும்வரை ஏதோ உழைப்பவர்களும் வண்டி வாங்கியபின் வேலைக்குப்போவதைவிட ஊர் சுற்றுவதையே விரும்புகிறார்கள். உண்மையிலேயே வேலையில்லாத் திண்டாட்டம் எதுவும் இல்லை வேலைக்கு ஆட்கள் இல்லை என்பதே ​ நிைலமை.

தமது மோட்டார் சைக்கிளின் அதி உச்ச வேகத்தை காட்சிப்படுத்த விரும்புவோர் பிரதான வீதிகளில் சனத்தொகை அதிகம் உள்ள நேரத்திலும் காது செவிடு படும்படி சைகை ஒலிக்க கிறீச் கிறீச்சென்று பிரேக் அடித்து அருகில் பயணிப்பவரை கலங்கடிக்கும் செயலில் இன்பம் காண்கிறார்கள். தேவையில்லாத வகையில் அதி வேகமாக சென்று அவர்களது உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தை விளைவிப்பதுடன், அவர்களது பாச உறவுகளை கலங்க வைக்கின்றனர்.

அண்மையில் மல்லாவிப்பிரதேசத்தில், திருமணமான சில தினங்களில் மாப்பிளையும் அவரது மச்சானும் கல்விளானுக்கு புதிய மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தாகி இருவருமே இறந்து போயினர். இது ஒன்று உதாரணத்துக்குத்தான் நாட்டில் மலிந்துள்ள விபத்து மரணங்கள் இதன் உண்மைத்தன்மையை உரைக்கும்.

சரி எனது வண்டி திருத்த சென்ற இடத்தில் தனது நாலரை லட்ச ரூபாய் உந்துருளியை தன் புது மனைவியை அணைப்பது போல அணைத்து நின்ற இளைஞரிடம். கேட்டேன்.

இது என்னவிலை?

நாலரை லட்சம்

எவ்வளவு முதல் கட்ட வேணும்?

இல்ல நான் ரெடி காசு

கட்டித்தான் எடுத்தன்.

ஓ என்ன வேலை செய்யிறீங்க

வேலையா நான்

சும்மாதான் இருக்கிறன்,

அப்ப செலவுக்கு

ரெண்டு அண்ணனுகள். வெளியில நானும் போயிருவன் அதுதான் வேலை தேடேல்ல.

தமிழ்க் கவி
பேசுகின்றார்

Comments