அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி புஷ் (சீனியர்) காலமானார் | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி புஷ் (சீனியர்) காலமானார்

அமெரிக்காவின் 41ஆவது ஜனாதிபதியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் சீனியர் தனது 94ஆவது வயதில் காலமானார். 43ஆவது ஜனாதிபதியான அவரது மகன் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இதனை அறிவித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஜோர்ஜ் புஷ் சீனியர் என்று அறியப்படும் அவர், வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க நேரப்படி 22:10 மணிக்கு காலமாகியுள்ளார் என அக்குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் Jim McGrath தெரிவித்துள்ளார்.

எட்டு மாதங்களுக்கு முன்புதான் ​ேஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷின் மனைவி பார்பாரா காலமானார்.

"அன்பிற்குரிய எங்கள் தந்தை 94 ஆண்டுகள் வாழ்ந்து, தற்போது இறந்துவிட்டார் என்ற செய்தியை ஜெப், நீல், மார்வின், டொரோ மற்றும் நான் வருத்தத்துடன் அறிவிக்கிறோம்." என 43 ஆவது ஜனாதிபதியான ஜோர்ஜ் புஷ் ஜூனியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"அவர் மிக உயர்ந்த குணமுடைய மனிதர் மட்டுமல்லாது, எங்களுக்கு சிறந்த தந்தையாகவும் இருந்தார்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1924ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் மசட்ச்சூசஸில் பிறந்தார். முதலீட்டு தொழில் செய்த இவரது தந்தை, பின்னர் அமெரிக்க செனட் சபை உறுப்பினரானார். பேர்ள் ஹார்பர் தாக்குதலைத் தொடர்ந்து தானே முன்வந்து அமெரிக்கக் கடற்படையில் புஷ் சேர்ந்தார். பசுபிக் பெருங்கடலில் பணிக்காக நியமிக்கப்படும் முன், விமான ஓட்டியாக பயிற்சி பெற்றார்.

இரண்டாம் உலகப்போரில் இவர் அமெரிக்க கடற்படை விமானியாகவும் பணியாற்றியுள்ளார். செப்டம்பர் 1944இல் இவர் விமானத்தில் குண்டு வீச சென்றபோது ஜப்பானியர்களால் சுடப்பட்டபோது ஜோர்ஜ் புஷ் உயிர் தப்பினார்.

41ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக 1989 முதல் 1993 வரை அவர் இருந்தார். அதற்கு முன் ரொனால்ட் ரீகன் ஜனாதிபதியாக இருந்த போது, ஜோர்ர்ஜ் புஷ் இரண்டு முறை துணை ஜனாதிபதியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments