ஆணைக்குழுவின் பணிப்புரையை நிறைவேற்றுவதே எனது பொறுப்பு | தினகரன் வாரமஞ்சரி

ஆணைக்குழுவின் பணிப்புரையை நிறைவேற்றுவதே எனது பொறுப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்புரைகளையும், அறிவுறுத்தல்களையும் சீராக முன்னெடுப்பதே தேர்தல்கள் பணிப்பாளர் நாயகத்தின் பணியாகும்.

அந்தப் பணிகளை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கான பாரிய பொறுப்பையே நான் ஏற்றிருக்கின்றேன் எனப் புதிய தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.முஹம்மத் தெரிவித்தார். அடுத்து வரக்கூடிய 2020ஆம் ஆண்டுக்குள் மூன்று தேர்தல்களை நடத்தவேண்டியுள்ளது.

இந்தப் பாரிய பணியை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளை தேர்தல்கள் செயலகம் கையாளத்தொடங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல்கள் திணைக்களத்தில் நீண்டகால அனுபவம் கொண்ட புதிய பணிப்பாளர் நாயகம் முஹம்மது தினகரன் வாரமஞ்சரி தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் என்பது புதிய பதவியல்ல. வழமையானதே. தேவைப்படும் காலத்தில் அப்பதவிக்கு ஒருவர் நியமிக்கப்படுவார். அதற்கமைய தற்போது நான் பொறுப்பேற்றிருக்கின்றேன்.

தேர்தல்கள் ஆணைக்குழுவே எமது உயர்பீடமாகும். அதில் ஓய்வுபெற்ற துறைசார் அதிகாரிகள், கல்விமான்கள் இடம்பெறுகின்றனர். தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவராக மஹிந்த தேசப்பிரிய பதவி வகிக்கின்றார். அக்குழுவில் ரட்னஜீவன் ஹூல், ஜனாதிபதி சட்டத்தரணி நளீன் அபேசேகர உள்ளிட்டோர் அடங்குகின்றனர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்புரைகள், அறிவுறுத்தல்களை நிறைவேற்றும் பொறுப்பை நாம் கொண்டிருக்கின்றோம்.

2018இறுதி முதல் 2020வரையிலான இடைப்பட்ட காலத்தில் மூன்று தேர்தல்களை நடத்த வேண்டியுள்ளது. 2019 ஆரம்பத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலைநடத்த வேண்டும். 2020 ஆகஸ்ட் மாதமளவில் பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும். இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தலையும் நடத்த வேண்டும். இந்தத் தேர்தல்களுக்கான உரிய திகதிகளை ஆணைக்குழு எமக்கு அறிவுறுத்திப் பணிப்புரை வழங்கியதும் அந்தத் தேர்தல்களுக்குரிய நடவடிக்கைகளை பணிப்பாளர் நாயகம் என்ற அடிப்படையில் மேற்கொள்வேன். எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்குரிய கட்டளை பிறப்பிக்கப்பட்டவுடன் அதனை நடத்தி முடிப்பதற்கு நானும் எனது அதிகாரிகளும் தயாராகவே இருக்கின்றோம். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் பணியை முறையாகவும், சீராகவும் நடத்துவதற்குரிய கடப்பாட்டை நான் கொண்டிருக்கின்றேன் எனவும் பணிப்பாளர் நாயகம் முஹம்மத் தெரிவித்தார்.

Comments