மைத்திரிபாலவின் கனவு | தினகரன் வாரமஞ்சரி

மைத்திரிபாலவின் கனவு

கனவு காண்பதும் அந்த கனவை நனவாக்க முயல்வதுமே மானிட வாழ்க்கையாக அமைகின்றது. ஆயினும் இவ்வுலகில் பலரது கனவுகளும் “தான்” எனும் குறுகிய வட்டத்திற்குள்ளேயே அமைந்து விடுகின்றன. இருப்பினும் அதற்கு விதிவிலக்காக மிகச் சிலரே தான் என்ற அந்த குறுகிய வட்டத்தை தாண்டி “நாம்” எனும் பரந்துபட்ட கனவை காண்பவர்களாக இருக்கின்றார்கள்.

தனி மனித சுகபோகங்களுக்காக அன்றி தான் சார்ந்த மானிட சமூகத்தின் மாற்றத்திற்காக கனவு காணும் அந்த ஒரு சிலரே இவ்வுலகின் இயங்குசக்தியாக இருந்து இவ்வுலகை மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

உலகத்திற்கே பொதுவான இந்த நியதியின் படி இன்றைக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தனி மனிதன் தான் சார்ந்த சமூகத்தின் நலனுக்காக கண்ட கனவே இன்று மொரகஹகந்த குலசிங்க நீர்த்தேக்கமாக உருவாகியிருக்கின்றது.

வரண்ட பிரதேசமாகிய வட மத்திய மாகாணத்தின் பொலன்னறுவை எனும் விவசாயப் பிரதேசத்தில் கமக்கார குடும்பத்தில் பிறந்த மைத்திரிபால சிறிசேனவின் வாழ்க்கை விவசாய சூழ்நிலையிலேயே வளர்ந்து எழுந்தது. இதனால் கமத்திற்கும் நீருக்கும் இடையே இருக்கும் இணைபிரியா உறவை குழந்தைப் பருவம் முதல் கண்டுவந்த இந்த மைத்ரியின் மனம், நீர்ப்பற்றாக்குறையால் வாடி வதங்கும் தமது பெற்றோரின் விவசாயத்திற்கு நேரும் கதியை கண்டு இதற்கொரு உறுதியான பரிகாரத்தைக் காண வேண்டும் என்ற மனவுறுதியை ஏற்படுத்தியது.

அதற்கமைய மேற்கொண்ட பயணமே மைத்ரிபால சிறிசேன எனும் இந்த மனிதனை தமது சமூகத்தின் சார்பில் பாராளுமன்றத்திற்கு இட்டுச் சென்றது. அங்கே அவர் மகாவலி பிரதி அமைச்சர் பதவியைப் பெற்றமையே அதுவரை அவர் கண்டுவந்த அந்த கனவை நனவாக்கத்தக்க அஸ்திவாரமாக அமைந்தது.

1994 ஆம் ஆண்டு கட்டிட நிர்மாணத் துறையின் விற்பன்னர் கலாநிதி ஏ.என்.எஸ். குலசிங்கவுடன் பிரதி அமைச்சர் மைத்ரிபால சிறிசேன மொரகஹகந்த பிரதேசத்திற்கு மேற்கொண்ட பயணத்தையடுத்தே மைத்ரிபால சிறிசேனவின் மனதிலிருந்த இந் நீர்த்தேக்கம் பற்றிய எண்ணக்கருவிற்கு செயல்வடிவம் கொடுக்கும் திட்டம் குலசிங்கவினால் தீட்டப்பட்டது.

இயற்கையின் அமைவிற்கமைய நமது நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் நீருக்கு பஞ்சம் ஏற்படாத போதிலும் பாரியளவிலான விவசாயத்துறைக்கு தேவையான நீர்ப்பற்றாக்குறை என்பது திட்டமிட்டு தீர்த்து வைக்கப்பட வேண்டிய ஒரு நீண்டகால பிரச்சினையாகவே இருந்து வந்திருக்கின்றது. அதற்கு பரிகாரம் காணும் வகையிலேயே மகாவலி அபிவிருத்தி திட்டம் உருவாக்கப்பட்டு அதன் கீழ் நமது நாட்டின் விவசாயத்தின் முன்னேற்றத்திற்கான சாதகமான பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

நாட்டின் அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பினை செய்துவந்த இந்த மகாவலி அபிவிருத்தி திட்டத்தினை 2002 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமராகிய ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்த ‘நீர் பற்றிய மறுசீரமைப்பு’ என்ற அமைச்சரவை பத்திரம் மூலம் முடிவிற்கு கொண்டு வர முயற்சித்தார். அதன்பின்னர் மகாவலி அமைச்சர் பதவியை ஏற்ற மைத்ரிபால சிறிசேனவால் அவ் அமைச்சரவை பத்திரம் இரத்துச் செய்யப்பட்டதன் மூலமே மகாவலி அபிவிருத்தி திட்டம் எனும் சொத்தை இந்நாட்டு மக்களுக்காக பாதுகாத்துக் கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெற்றது.

பராக்கிரமபாகு மன்னனால் உருவாக்கப்பட்ட பராக்கிரம சமுத்திரத்தை விட நான்கு மடங்கு விசாலமான மொரகஹகந்த பல்நோக்கு அபிவிருத்தி திட்டம், இன்று இந்த மண்ணில் யதார்த்தமாவதற்கு அன்று மைத்ரிபால சிறிசேன எனும் தனி மனிதன் எடுத்துக் கொண்ட அபரிமித முயற்சியே காரணமாகும்.

இந் நீர்த்தேக்கத்தின் மூலம் வட மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பாரிய மற்றும் சிறிய அளவிலான சுமார் 2000 குளங்களுக்கு நீர் பெற்றுக்கொடுக்கப்படுவதுடன் இருபோகங்களிலும் 82,000 ஹெக்டெயார் நிலத்தை வளம் பெறச் செய்யவும் மூன்று இலட்சம் குடும்பங்களுக்கான குடிநீர் வசதிகளை வழங்கவும் 15 இலட்சம் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை பெற்றுக்கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும். மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் நீர்மின் உற்பத்தி செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன் அங்கே பொருத்தப்பட்டுள்ள மின் பிறப்பாக்கிகள் மூலம் தேசிய மின் கட்டமைப்பிற்கு வருடாந்தம் 25 மெகாவோட் மின்சாரம் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றது. நன்னீர் மீன்பிடித்துறை உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரத் திட்டங்களைப் போஷிக்கும் வகையிலேயே மொரகஹகந்த அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஆரம்பம் முதல் பல்வேறு பாரிய தடைகளைத் தாண்டி மகாவலி கங்கைக்கு குறுக்கே எழுந்து நிற்கும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மங்கள நீரோட்ட விழா இவ்வருடம் ஜனவரி மாதம் 08 ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்று முதல் கடந்து சென்ற ஒரு வருடத்திற்கும் குறைவான இக்காலப்பகுதிக்குள் இந்நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வான் கதவுகளை விஞ்சும் அளவிற்கு நிரம்பி வழிதலானது அச் செயற்பாட்டிற்கு இயற்கை அன்னையின் ஆதரவும் ஆசிர்வாதமும் கிடைத்திருப்பதையே பறைசாற்றி நிற்கின்றது.

 

ரவி ரத்னவேல்

Comments