ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

 “கொழும்பு நகரின்ட மத்தியில உது கிடக்குது. நகருக்குள்ள வாறவைக்கு உது நல்லாத் தெரியும்.”

“கொழும்பின்ட நடுவில என்ன?”

“ஓம் கொழும்பு நகரத்ரின்ட நடுவில.”

“எனக்குத் தெரியும்.”

“தெரிஞ்சா சொல்லன் பாப்பம்.”

“சொல்லட்டே?”

“புறக்கோட்டை அரச மரத்தடிச் சந்தி, சரியே.”

“நீ சொன்னதும் பிழையில்;ல. சரிதான் ஆனா நான் சொன்னது உது இல்லயப்பா.”

“வேற எதைச் சொல்லுறியள்?”

“தாமரைக் கோபுரம் என்டு கேள்விப்பட்டிருக்கியோ?”

“ஓமண்ண உயர்ந்த கோபுரம் என்டு ஒரு தடவ பேப்பரில பாத்த ஞாபகம்.”

“உந்த கோபுரத்தின்ட வேலை இன்னும் முழுசா முடியேல்ல. இன்னும் 5,6 மாசத்தில முடிச்சுப் போடுவினம்.”

“கொழும்புக்குப் போய் உதைப் பாக்க ஆசையாக் கிடக்கு.”

“உதுக்கென்ன கோபுரத்தை திறக்கட்டும் உன்னக் கூட்டிப் போறனான்.”

“உதின்ட உயரம் என்னண்ணே.”

“உதின்ட உயரம் சரியாச் சொன்னமென்டா 356.3 மீட்டர். சரியே வேலைகள் முடிஞ்சுதென்டா தெற்காசியாவில இருக்கிற உயரமான கோபுரம் உதுதான்.”

“எங்களுக்கு பெருமையென்ன?”

“பின்ன. பிரான்ஸில உள்ள ஈபிள் கோபுரத்தின்ட உசரமே 324 மீட்டர்தான் என்டா பாத்துக்கொள்ளன். ஆனா கொழும்பு இப்ப மாறிக் கொண்டு வருகுது. கொழும்பில ரிட்ஸ்-கார்ல்டன் என்டு ஒரு ஙோட்டலை கட்டிக்கொண்டு வருகினம். உதில 92 தளங்கள் கிடக்குது. உசரம் 376 மீட்டர். உதுதான் தெற்காசியாவின்ட உசரமான கட்டிடமா இருக்கப்போகுது.”

“அண்ண தெரியாமத்தான் கேக்குறனான். இந்தியாவில உசரமான கட்டிடம் இல்லையே?”

“இந்தியாவில உள்ள உயரமான கட்டடம் கொல்கத்தாவில உள்ள த42 என்ட குடியேற்ற தொகுதிதான். உதின்ட உசரம் 268 மீட்டர். உதில 64மாடிகள் கிடக்குது. ரெண்டாவத உசரமான கட்டடம் மும்பாயில இருக்கிற இருக்கிற இம்பீரியல் என்ட இரட்டை கட்டட குடியேற்ற தொகுதி.உதின்ட உசரம் 256 மீட்டர்.”

“எங்கட கோபுரத்தைப்பத்தி சொல்லுங்கோவன்.”

“தாமரை கோபுரத்தின்ட வடிவம் ஒரு தாமரை மொட்டைப் போல.”

“ஆனா உசரமாக்கிடக்கும்.”

“ஓம். தூர இருந்து பாத்தா ஒரு தாமரைப்பூ அதின்ட தண்டோட மலரப் போற மொட்டோட இருக்குறமாதிரி கிடக்கு.”

“நான் படத்தில பாத்திருக்கிறனான்.”

“இந்த தாமரை கோபுரம் கட்டப்படுகிற நிலப்பரப்பு மொத்தம் பத்து ஏக்கர். அடியில ஒரு பூங்காவும் அமைக்கினம்.”

“பூங்கா இருந்தாதான அழகா இருக்கும்.”

“நான் சொல்லுறதை முதலில கேளன்.”

“சரி சரி சொல்லுங்கோ.”

“நிலத்துக்கு கீழ நான்கு மாடிகளோட கோபுரம் ஆரம்பமாகுது. சரியே தாமரைப்பூ வடிவில வரும் பகுதியில ஒன்பது மாடிகள் வருகுது. இந்த ஒன்பது மாடிகளும் பார்வையாளர் கூடங்கள். உசரத்தில வானாலி நிலையங்கள், தொலைக்காட்சி நிலையங்கள், தொலை தொடர்பு சேவை விலையங்கள் என்டு 50 க்கு மேற்பட்ட நிலையங்களை அமைக்கப போகினம். அடியில இருந்து உச்சிக்குப் போக அதிவேக லிப்ட் இருக்குது. 2 நிமிசத்தில டக் கென்டு போடும். தெளிவான கால நிலையில கோபுரத்தின்ட உச்சியில இருந்து பார்த்தா இலங்கை முழுவதும் தெரியுமென்டு சொல்கினம். ஏன்ன நான் பேசிக் கொண்டே போறனான் நீ பேசாம இருக்கிறனீ.”

“நீங்கள்தான சொல்லுறதை முதலில கேள் என்டு சொன்னியள்.”

“இடையில குறுக்கப் பேசாத என்டதைத்தான சொன்னனான். சரி எதுவும் கேட்கோனுமோ?”

“அப்பிடியே. உதில கலியாணம் நடத்தேலுமே?”

“400 பேர் உட்காரக்கூடிய வசதியோட மாநாட்டு மண்டபம், கலியாண மண்டபம் ஆடம்பர ஹோட்டல் எல்லாம் இருக்குது. உதின்ட கீழ் மாடியில கடைத்தொகுதியும் கிடக்குது. 1500 வாகனங்களை நிறுத்துற வசதியோட வாகன தரிப்பிடமும் கிடக்குது. சுருங்கச் சொன்னமென்டா எல்லா வசதியும் கிடக்குதப்பா.”

“உந்த கோபுரத்தை சுத்திப்பாத்து, மேல போய் இலங்கை முழுவதையும் சுத்திப் பாத்துப்போட்டு இறங்கி வர ஒரு நாள் போடுமென்ன.”

“ ஒவ்வொரு இடமா கேம்ப் அடிச்சிக் கொண்டிருந்தமென்டா ஒரு நாள் போகுந்தான். சட்டுப்புட்பென்று பாத்து முடிச்சமென்டா அரை நாள் போதும்.”

“உதுக்கு எவ்வளவு செலவு.”

“கட்டி முடிக்க எவ்வளவு செலவு போட்டுது என்டு கேக்கிறியோ?”

“ஓமண்ண?”

“தொலைத் தொடர்பு ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழுவுக்கு தேவை என்டுதான் உதை கட்டியிருக்கினம். உதுக்கு 104 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதக்கியிருக்கினம். மொத்தக் கணக்கு எவ்வளவு என்டு முழு வேலையையும் முடிச்ச பிறகுதான் தெரியும்.”

 

 

Comments