கிராமங்களைப்போல சமூக பிரக்​ைஞ கொண்டதாக பெருந்தோட்ட சமூகம் மாறவேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

கிராமங்களைப்போல சமூக பிரக்​ைஞ கொண்டதாக பெருந்தோட்ட சமூகம் மாறவேண்டும்!

பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டு கோப்பி, தேயிலை, இறப்பர் என்று விரிவடைந்த நிலையில் பெருந்தொகையான இந்திய வம்சாவளித் தமிழர்கள் இங்கு வரவழைக்கப்பட்டிருந்தார்கள். 1820 என்பது ஒரு கணிப்பாக மட்டுமே இருக்கின்றதே தவிர இது எவ்வாறான காலகட்டத்தில் நிகழ்ந்தது என்பது குறித்து முரண்பாடான கருத்தியல்களே களம் காண்கின்றன. அதுமட்டுமின்றி அவ்வாறு (1920 _ 1940) அழைத்து வரப்பட்டவர் தொகை பற்றிய சரியான மதிப்பீடோ மீண்டும் திரும்பியவர்களின் தொகை பற்றிய பதிவுகளோ உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. 1831இலேயே இந்தியத் தொழிலாளர்களின் முறைப்படியான ஆட்சேர்ப்பு நடைபெற்றதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதே நேரம் இவர்களுக்கான வாழ்வியல் கட்டமைப்பானது இறுக்கமானதாகவும் பொதுவெளி தாக்கங்கள் உள்ளீர்க்காத கட்டுக்கோப்புக் கொண்டதாகவும் எச்சரிக்கையுடனே திட்டமிடப்பட்டிருந்தது என்னவோ உண்மைதான். கிணற்றுத் தவளைகள் போல வாழவேண்டிய நிர்ப்பந்த நிலைமை. அதேநேரம் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கான அனைத்துத் தேவைகளும் அவர்களின் கைகளுக்கே கிடைக்கக்கூடிய ஏற்பாடு. கூலித்தொழிலுக்கு என்றே கூட்டிவரப்பட்டதால் அதனடிப்படையிலான அடக்குமுறைகள் அவிழ்த்து விடப்பட்டிருந்தன. கங்காணிமாரின் கைவந்த பேச்சுக் கலையால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாக இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகளையும் கடுமையான நடவடிக்கைகளையும் கங்காணிமாரின் கண்கானிப்பு லாவண்யங்கள் லாவகமாக மூடி மறைத்து வைத்தன. அடக்கு முறைகளைக்கூட அன்பின் அடையாளமாக காட்டுவதில் கங்காணிமாரின் சாணக்கியம் நன்றாகவே வேலை செய்தது. எனினும் அவ்வாறான அடிமை முறை கலந்த வாழ்வியலின் யதார்த்தங்களை ஆளுக்காள் பேசிப்பகிர்ந்து கொள்ளவோ உள்ளக் குமுறல்களை உணர்வுபூர்வமாக வெளியிடவோ அவர்களால் முடியவில்லை. சமூக கட்டமைப்பு என்பது சாதிய பின்னணியில் கவனமாக வலைப்பின்னல் இடம் பெற்றிருந்ததால் பொதுமையான உள்வாங்கல்களுக்கு இடமில்லாமல் போய்விட்டிருந்தது. தொழில் ரீதியிலான அமைப்பொன்று இவர்கள் மத்தியில் ஏற்பட நீண்ட காலம் எடுக்க வேண்டியிருந்தது. தொழில் பிணக்குகள் முன்னிலைப் படுத்தப்பட்டதாலும் அவ்வாறு தொழில் ரீதியான விழிப்புணர்வை எற்படுத்தி சங்க ரீதியிலான அமைப்புகளை உருவாக்கிய சக்திகள் பின்னர் பேரினவாதச் சிந்தனைக்குள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

ஆங்கிலேயர் இந்திய வம்சாவளித் தமிழர்களை இலங்கைக் குடிகளாகவே மதித்து நடத்தினர். ஆனால் இடதுசாரி கொள்கையாளர்கள் என்று தம்மை கூறிக்கொண்டவர்கள் இதயபூர்வமாக இதனை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை என்பதையே அவர்களின் பிற்கால செயற்பாடுகள் உணர்த்துகின்றன. இதன் பின்னர் இத்தொழிலாளர்களுக்குத் தலைமை ஏற்றவர்கள் கூட வசதி படைத்தவர்களாகவும் வர்த்தகத் துறையை சார்ந்தவர்களாகவும் இருந்ததால் சமூக கட்டமைப்புக் குறித்ததான அவதானம் எட்டப்படாலே போனது. ஏனெனில் அவர்களின் கவனம் முழுவதும் தொழில் ரீதியான அணுகுமுறைகளிலேயே அமைந்திருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்களிடம் வர்க்க உணர்வு வளர ஆரம்பித்தது.

ஆனால் அது பெருந்தோட்டக் கட்டமைப்புக்குள்ளேயே தனியானதொரு சமூகரீதியான எழுப்புதலாக மாறமுடியாமலிருந்தது. இந்திய வம்சாவளித் தமிழர்களிடம் இயல்பாகவே காணப்பட்ட விசுவாசம், நன்றி மறவா குணம் தோட்ட நிர்வாகங்களையும் அவைகளுக்குத் தொடர்பாளர்களாக செயற்பட்ட கங்காணிமாரையும் கைவிடத்தூண்டவில்லை. ஏனெனில் அக்காலத்தில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்தியத் தமிழர்கள் இடைநடுவிலான விபரீதங்களையும் கம்பனி நிர்வாகத்தின் கடும் போக்கினையும் அறிந்திருந்த நிலையிலேயே இங்கு வரத்தலைப்பட்டனர் என்று கூறுகின்றார் ஆய்வாளர் மு. நித்தியானந்தன்.

குறிப்பாக இலங்கை கோப்பித் தோட்டத்தில் அவர்கள் பெறவிருக்கும் சம்பளத்தை நம்பி அவர்களின் வயோதிபப் பெற்றோரை தமது கிராமங்களிலேயே விட்டு வெளியேறுவர். தெருவோரத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்படும்போது அல்லது தொழிலாளர்கள் திரும்பி வரும்போது (இலங்கையிலிருந்து) நண்பர்களும் உறவினர்களும் அவர்களை எதிர்கொண்டு அழைப்பார்கள். அத்தருணங்களில் அவர்கள் எழுப்பும் கேள்வி எனது மகன் எங்கே என்பதுதான். வழியில் என்று பதில் வரும்போது காணாத கூலியின் உறவினர்களின் ஒப்பாரியும் கதறலும் மனதை உருக்குவதாகவே இருக்கும் என்கிறார் மு.நித்தியானந்தன்.

இவ்வாறான பின்புலத்திலேயே இந்திய வம்சாவளித் தமிழர்கள் இந்நாட்டை தஞ்சமாக கருதினர். கடனை மீள செலுத்தலின் அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டு அக்கடனை செலுத்திய பின்பும் கூட கங்காணிமார் மீது வைத்திருந்த நன்றி உணர்வு காரணமாக தாயகம் திரும்ப மறுத்துவிட்டதாக வரலாற்றுப் பதிவுகள் காணப்படுகின்றன. இவர்கள் தொழில் மீது பற்றுக் கொண்டிருந்தவர்கள். அதுவே பின்னர் மலையகத்தை குறிப்பாக பெருந்தோட்டப் பகுதியை விட்டு இவர்களைப் பிரிக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்தக் காரணமானது. 1965களில் ஸ்ரீமாசாஸ்திரி ஒப்பந்தம் மூலம் தாய்நாடு திரும்ப வழிவகுத்து தரப்பட்டபோது பலர் விருப்பமின்றியே பயணப்பட்டனர். இது ஒரு கண்ணீர் வரலாறு. கல்நெஞ்சக்காரர்களின் கபட ஏற்பாட்டினால் பெருந்தோட்டக் கட்டமைப்பே ஆட்டம் கண்டது. அதன் தாக்கம் இன்றும் நீடிக்கவே செய்கிறது. தாய்நாடு என்று தம்பட்டம் அடித்துக்கொண்ட இந்தியா இவர்கள் சிந்திய கண்ணீர் துடைக்க எதுவுமே செய்ய முன்வரவில்லை.

காலனித்துவவாதிகளால் ஒப்பந்த அடிப்படையில் இவர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டது உண்மைதான். ஆனால் காலவோட்டத்தின் நிர்ப்பந்தத்தினால் இவர்கள் திரும்பவும் முற்றிலுமாக இந்தியா திரும்ப விரும்பவில்லை என்பதே பதிவு. இன்று 200 வருடகால வரலாறு இவர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இவர்களது குடியகல்வு எப்படி வரலாற்றுறு நிகழ்வானதோ அதே போல் குடியமர்வும் கூட இலங்கை சரித்திரத்தோடு இணைக்கப்பட்ட பிரிக்கப்பட முடியாத விதியாகி விட்டிருக்கின்றது. புலம் பெயர்வின் புதிய அமர்வு கலாசார மாற்றங்களைப் பகிர்வுக்குள்ளாக்கியிருக்கிறது. இப்பகிர்வும் பதிவும் பரிணாமத்தையொட்டியதான சுவடுகளாகி தனித் தேசிய இனத்துக்கான தகுதியைத் தேடித் தந்திருக்கின்றது.

1960 முதல் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கான அடையாளங்களை இனங்காணும் முயற்சிகள் ஆரம்பமானதாக பெ. முத்துலிங்கம் பதிவிடுகின்றார். இது அரச அங்கீகாரத்தைப் பெறுவதற்கான கோரல்கள் 1983களிலிருந்தே எழுப்பப்பட்டு வருகின்றன என்கின்றார் அவர். இனமொன்றின் அடையாளம் அதன் தனித்துவமான மரபுரிமையையும் வரலாற்றையும் முன்நிறுத்தியே எழுப்பப்படுகின்றது என்பர் வரலாற்றாய்வாளர்கள். சமூக கட்டமைப்பின் சாதகமான அம்சங்களை உள்வாங்கியதாகவே வரலாற்று வார்ப்புப் பெறுகின்றது. அச்சமூககட்டமைப்புக்குள்ளான சங்கதிகள் சட்ட ரீதியானதாகவும் பிற சமூகமொன்றினது ஒப்பீட்டளவிலான மேம்பாடுகளை வரையறுத்துச் செல்வதாகவும் இருக்கும் பட்சத்திலேயே இனம் ஒன்றுக்கான தேசிய அங்கீகாரம் கிடைக்க முடியும்.

(மிகுதி அடுத்த வாரம்)

 

பன். பாலா   

Comments