"டிரஸ்டின் தலைவராக நானே இப்போதும் பதவியில் நீடிக்கிறேன்!" | தினகரன் வாரமஞ்சரி

"டிரஸ்டின் தலைவராக நானே இப்போதும் பதவியில் நீடிக்கிறேன்!"

நேர்கண்டவர் :

நுவரெலியா எஸ். தியாகு

 

மத்திய மாகாண முன்னாள் தமிழ்க்கல்வி அமைச்சரும், முன்னாள் நீதித்துறை பிரதியமைச்சரும், தமிழ் முற்போக்கு முன்னணியின் முக்கியஸ்தரும், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவராகவும் வீற்றிருந்த வீ. புத்திரசிகாமணி தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்.

நீங்கள் உங்கள் அரசியல் வாழ்வில் பல பதவிகளை வகித்திருப்பீர்கள். அவற்றில் டிரஸ்ட் தலைவர் பதவி விசேடமானது என்று கருதுகிறீர்களா?

முதலாவதாக நான் ஒரு விடயத்தை தெளிவாகக் கூற வேண்டும். இன்னும் நான் TRUST அமைப்பின் தலைவராகத் தான் இருக்கின்றேன். புதிய நியமனம் என்பதை சட்டரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதை தெளிவாகக்கூற விரும்புகின்றேன். நான் பல பதவிகளை வகித்து இருந்தாலும் கூட இந்த அமைப்பை பொறுத்தளவில் இதில் நேரடியாக எமது மக்களுக்கு பல வேலைகளை செய்யக்கூடிய சந்தர்ப்பமாக அமைந்தது. எனவே நான் வகித்த பதவிகளில் இப்பதவி உயர்வானது. நேரடியாக எங்களுடைய மக்களுக்கு பல்வேறு வேலைகளை செய்து தரக்கூடிய பதவி என்ற வகையில் இதனை ஒரு சிறந்த பதவியாகவே கருதுகின்றேன்.

டிரஸ்ட் தலைவர் என்ற வகையில் மூன்றரை ஆண்டுகளாக ஆற்றிய பணிபற்றி கூறமுடியுமா?

இதுவரை காலமும் இந்த டிரஸ்ட் அமைப்பினூடாக செய்து வந்த சேவையை விடவும் அதிகமான சேவையை என்னுடைய காலத்தில் செய்து முடிக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்று நான் கருதுகின்றேன்.

சரி, டிரஸ்ட் என்றால் என்ன? அதற்கான நிதி எங்கிருந்து வருகிறது? வருடத்துக்கு எவ்வளவு தேவை?

இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது ஏன் என்பது எல்லோருக்குமே தெரியும். 1992ஆம் ஆண்டு தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டபோது தனியார் கம்பெனிகளுடன் அரச தரப்பும் இணைந்து சேவைகளை முன்னெடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு இதுவாகும். இதன் மூலமாக மூன்று தரப்பினரும் அதாவது பெருந்தோட்டக் கம்பனிகள் அரசாங்கம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து பெருந்தோட்ட மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதற்காக இந்தத் தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இது தனி அமைப்பாக இருந்தாலும் கூட இதில் இலாப நோக்கம் இல்லை. முழுமையாக தொழிலாளர்களுக்காக சேவை செய்யக்கூடிய அமைப்பாகவே இதனை அரசாங்கம் முன்னெடுப்பதற்கு அன்று தீர்மானித்தது. அதனடிப்படையிலேயே இந்த டிரஸ்ட் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சின் மூலமாகவும் உலக வங்கி ஊடாகவும் நிதி பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.

டிரஸ்டின் உச்ச கட்ட செயலாற்றல் உங்கள் காலப்பகுதியில்தான் என்று நீங்கள் சொன்னால் அதை தற்பெருமை என எடுத்துக் கொள்ளலாமா?

இல்லை, தற்பெருமை என்று சொல்வதை விட இந்த அமைப்பின் மூலமாக கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அதிகமான வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதால் அதனை நினைத்து பெருமைப்படக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இருக்கின்றது.

கடந்த காலங்களைவிட கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகமான வேலைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே இதில் நான் தற்பெருமை படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் மக்களுக்கான சரியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன என்று அந்த பெருமையை நான் எடுத்துக்கொள்ள முடியும்.

டிரஸ்டின் பணிகள் தற்போது அதே வீச்சில் தொடர்வதாகக் கருதுகிறீர்களா?

டிரஸ் நிறுவனத்தைப் பொறுத்தளவில் இந்த அமைப்பிற்கான பணம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனவே டிசம்பர் மாதம் இறுதிவரை எந்த தடங்கலும் இல்லாமல் செயல்பட முடியும். திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது. எனவே நாங்கள் முன்னெடுத்த வேலைகளை அதே வேகத்தில் முன் கொண்டு செல்லமுடியும். அதில் தடங்கல்கள் இருக்காது. ஏனென்றால் இன்றும் கூட இந்த நிறுவனத்தின் சட்டரீதியான தலைவராக நானே பதவி வகிக்கிறேன் என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்திக் கூற விரும்புகிறேன்.

இன்றைய தேசிய அரசியல் நெருக்கடி பற்றிய உங்கள் பார்வை குறித்து பேசுவோமா?

அதாவது இந்த நல்லாட்சி அரசாங்கம் மிகவும் சுமுகமாக வேலைகளை முன்னெடுத்து வந்தபோது இதனை திடீரென கலைத்தமையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமர் கொண்டு வந்த சில திட்டங்கள் இந்நாட்டிற்கு உகந்ததல்ல என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இவை அனைத்தும் அதாவது பிரதமரால் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அங்கே அங்கீகாரம் பெற்றுக் கொண்ட பின்புதான் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

எனவே இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் அவர்கள் அந்த அமைச்சரவையிலேயே வைத்து அதற்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம் அல்லவா?

ஜனாதிபதி இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது என்று நேரடியாகவே கூறியிருக்கலாம். ஜனாதிபதியின் கருத்துக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் மீதான கோபத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதாகவே கருதுகிறேன். இன்றைய அரசியல் சூழலை எங்களுடைய நாட்டிற்கான ஒரு நல்ல செய்தியாகக் கொள்ளமுடியாது.

இந்த நெருக்கடி நாட்டை எங்கே கொண்டு செல்வதாகக் கருதுகிறீர்கள்?

இந்நிலை மேலும் தொடருமானால் நாங்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். குறிப்பாக பொருளாதார ரீதியாக நாங்கள் பின்னடைவை சந்திக்க வேண்டி வரும். ஏனென்றால் நாங்கள் இன்னும் ஏனைய நாடுகளில்

 

தங்கியிருக்க வேண்டிய நிலைமை இருக்கின்றது. நாங்கள் இன்னும் தன்னிறைவு அடையாமல் இருக்கின்றோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எனவே இந்த போக்கு தொடருமாக இருந்தால் நாங்கள் பல பின்னடைவுகளை சந்திக்க வேண்டி வரும் அது மக்களையே பெரிதும் பாதிக்கும்

தொழிலாளியின் அடிப்படைச் சம்பளம் 500 ரூபா. இதை நூறு சதவீதம் உயர்த்தி ஆயிரம் ரூபாவாகக் கேட்டால் கம்பனிகள் கொடுக்கமாட்டாது என்பது தெரிந்த சங்கதி. அப்புறம் ஏன் ஆயிரம் ரூபா தான் இலக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்? சரி, வெளியில் ஆயிரம் என்று சொன்னாலும் சங்கங்களின் உண்மையான இலக்கு என்ன? எவ்வளவு? இந்தக் கோரிக்கையில் அரசியல் 70 சதவீதம் அதிக சம்பளத்துக்கான முயற்சி 30 வீதம் என்று எடுத்துக் கொள்ளலாமா?

இந்த சம்பள பிரச்சினையைப் பற்றி சரியாக அறிந்து, தெரிந்துகொண்ட தொழிற்சங்கவாதிகள் இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் விஷயம் தெரிந்தவர்கள் இல்லை. இருப்பவன் ஒரே ஒருவன், நான் மட்டுமே. ஆரம்பகாலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பானது சம்பள நிர்ணய சபை ஊடாகவே முன்னெடுக்கப்பட்டது. சம்பள நிர்ணய சபையின் ஊடாக ஆகக்குறைந்த சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக வாழ்க்கைச் செலவு புள்ளி கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 1992 ஆம் ஆண்டு வரை இந்த நிலைமையே காணப்பட்டது. இதற்கிடையில் 1977 _ 78 ஜனாதிபதி ஜயவர்தனாவின் காலப்பகுதியில் தொழிலாளர்களுக்கு 25 வீத சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அது வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகவே வழங்கப்பட்டது. அதற்குக் காரணம் அன்றைய காலகட்டத்தில் இந்த பெருந்தோட்டங்களை அரசாங்கமே நிர்வகித்து வந்ததே.

1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக நடைபெற்ற சம்பள நிர்ணய சபை பேச்சுவார்த்தையில் நானும் கலந்து கொண்டேன். அந்நேரத்தில் டாக்டர் வீரசூரிய எங்களுக்கு அந்த விடயத்தில் மிகவும் உதவி செய்தார். அந்த நேரத்தில் நான்கு புள்ளியாக இருந்த வாழ்க்கை செலவுப் புள்ளியை 6 புள்ளியாக அதிகரிப்பதற்கு நாங்கள் முயற்சிகளை எடுத்தோம். இதற்கு தலைமை தாங்கி முன்னெடுத்துச் சென்றவர் மறைந்த அசீஸ் என்பதையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். ஏனென்றால் அவர் ஒரு மூத்த தொழிற்சங்கவாதி. விடயங்களை நன்கு தெரிந்து வைத்திருந்த ஒரு தொழிற்சங்கவாதி. வாழ்க்கைச் செலவு புள்ளி என்ற விடயம் இன்று நடைமுறையில் இருந்திருந்தால் தொழிலாளர்களின் சம்பளம் ஆயிரம் ரூபாவை நெருங்கி இருக்கும். கூட்டு ஒப்பந்தம் என்று சொல்லப்படுகின்ற இந்த நடைமுறையானது என்னைப் பொறுத்த அளவிலே வரவேற்கக்கூடிய ஒரு விடயமாகவே கருதுகின்றேன்.

இங்கே இரண்டு தரப்பும் இருந்து பேசி ஒரு முடிவுக்குவர முடியும். ஆனால் என்ன, பெருந்தோட்டக் கம்பனிகள் சொல்லுகின்ற விடயத்தை பேச்சுவார்த்தைக்கு செல்கின்றவர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அவர்கள் தங்களுடைய தரப்பு வாதங்களை முன்வைக்க வேண்டும். அதற்காக அவர்கள் ஏற்கனவே தங்களை தயார்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும். சரியான தகவல்களை கொண்டு செல்ல வேண்டும். பெருந்தோட்டக் கம்பனிகள் நடக்கின்றது என்று சொன்னால் இல்லை என்று மறுத்து பேசுவதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்க உறுப்பினர்கள் தகவல் அடிப்படையில் வாதங்களை முன்வைக்க வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே இந்த சம்பள பிரச்சினைக்கு ஒரு சரியான தீர்வையும் மக்கள் எதிர்பார்க்கின்ற தொகையை பெற்றுக்கொடுக்க முடியும்.

மக்கள் எதிர்பார்க்கின்ற தொகை என்ன என்பதை நாங்கள் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் என்று மக்களை அலைக்கழித்து அவர்களுக்கு சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை. ஏனென்றால் தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் தோட்ட நிர்வாகங்கள் அவர்களுக்கான நாளாந்த சம்பளத்தைக்கூட வழங்கமாட்டாது.

அப்படியாக இருந்தால் அதற்கான முன்னேற்பாடுகள் என்ன தொழிலாளர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை எவ்வாறு இனம் கண்டு தீர்த்துவைப்பது இவற்றையெல்லாம் நன்கு கலந்து ஆலோசித்து அதன் பின்பு நாங்கள் இந்த பணிபகிஷ்கரிப்பு போன்ற போராட்ட வடிவங்களை முன்வைக்க வேண்டும்.

அதே நேரத்தில் தொழிலாளர்கள் தங்களுக்கு இந்தத் தொகை போதும் என்ற ஒரு நிலையில் இருப்பார்கள். அது எந்தத் தொகை என்பதை நாங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அது நடைமுறைக்கு சாத்தியமான ஒரு தொகையாகவும் இருக்கவேண்டும். அப்படி சம்பளப் பிரச்சினையை முன்னெடுத்தால் மாத்திரமே இதற்கு சரியான ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். நான் இன்று ஒரு தொகையை கூறிவிட்டால் இதனை வைத்துக் கொண்டு அரசியல் லாபம்தேட முயற்சி செய்பவர்களே அதிகம்.

எனவே நான் ஒரு தொகையை குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் நடைமுறைக்கு சாத்தியமான ஒரு தொகையை நாங்கள் அடிப்படை சம்பளமாக கூறுவது சிறப்பாக இருக்கும். அந்தத் தொகையை எல்லா தொழிற்சங்கங்களும் ஒன்று சேர்ந்து தீர்மானிக்குமானால் அது தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு வெற்றியான ஒரு தீர்வாக அமையும். அதைவிடுத்து தனியே இந்த சம்பள பிரச்சினையை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முற்பட்டால் நிச்சயமாக தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெளிவாக கூற விரும்புகின்றேன். கூட்டு ஒப்பந்தம் ஒரு நல்ல முறை. அதனை சரியாக முன்னெடுக்க வேண்டும்.

மலையக மக்கள் தனிச் சமூகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கூறி வந்துள்ளீர்கள். இன்றைய நிலையில் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஏற்பட்டு வரும் மாற்றங்கள் போதுமானதாகவும் வேகமாகவும் நடைபெற்று வருகிறதா?

மலையக மக்களை ஒரு தனி சமூகமாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்து வந்தவர்களில் நானும் ஒருவன். பல சந்தர்ப்பங்களில் இதனை தெளிவாக கூறி இருக்கின்றேன். இன்று எடுக்கப்படும் முன்னெடுப்புகள் என்பது வேகம் போதாமல் இருக்கிறது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இன்னும் இதை விட வேகமாக நாங்கள் செயல்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

Comments