சிசேரியன் குழந்தைகளுக்கு ஜாதகமே கிடையாதா? | தினகரன் வாரமஞ்சரி

சிசேரியன் குழந்தைகளுக்கு ஜாதகமே கிடையாதா?

அதற்கான வேளைவந்து வயிறு நொந்து தானாகவே பிரசவிப்பதற்கும், உரிய காலத்திற்கு முன்னால் வலியே இல்லாமல் அல்லது வேதனை தெரியாமல் அறுவை மூலம் சிசுவை வெளியே கொணர்வதற்கும் அதிக வித்தியாசமுண்டு.

குழந்தையொன்றை அறுவைச் சிகிச்சை மூலம் (CESAREAN) பெறவேண்டியுள்ளது; அதற்கு ஒரு நல்ல நாள் நேரத்தை இந்த வாரத்தில், அல்லது இந்த மாதத்தில் குறித்துக் கொடுங்களென்று சோதிடரிடம் கேட்டால், அவரும் இது சரியானதா, இயற்கையோடு இயைந்ததா என்பதையெல்லாம் யோசிக்காமல், அப்போதைய காலகட்டத்தில் பலமான இலக்கின அடித்தளம், இராசி மற்றும் கேந்திர திரிகோணம் முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் போன்றவற்றை பஞ்சாங்கத்தின் மூலம் அவதானித்து, முடிந்தவரை அவற்றுக்குள் ஒரு நல்ல நாள் நேரத்தைக் குறித்துக் கொடுத்து விடுகிறார். அதன்படியே பெற்றோரும் அறுவைமூலம் ஓர் குழந்தையை பிறக்க வைத்துவிட்டு, எதிர்காலத்துக்கான ஒரு வீரனையோ அன்றி வீராங்கனையையோ பெற்றெடுத்து விட்டதாகக் கூறிபெருமிதம் கொள்கின்றனர்.

ஆனால் இதுவொரு சரியான பிறப்பாக அமையாது; அதற்கான வேளை வந்து, வயிறு நொந்து தானாகவே பிரசவிப்பதற்கும், உரிய காலத்துக்குமுன்னால் வலியே இல்லாமல், அல்லது வேதனை தெரியாமல் அறுவை மூலம் சிசுவை வெளியே கொணர்வதற்கும் அதிக வித்தியாசமுண்டு எனவும், இயற்கையின் நியதியை மீறி மனிதனால் செய்யப்படும் எந்த வெளிப்பாட்டுக்கும் பிறப்போடு இறப்புக்கும் கூட எந்த வித சாஸ்திர சம்பிரதாயங்களும் கிடையாதெனவும் இந்தியாவின் பிரபல சோதிட மேதையான வழுத்தூர் கோபால சர்மா, அங்குள்ள Astrological Magazine என்ற பிரபல சோதிட சஞ்சிகையில் அண்மையில் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

இது எதனை ஒத்ததாக இருக்கிறதென்றால், இயற்கையாக ஒருவர் இறப்பதற்கும், செயற்கையாக தற்கொலை செய்து கொண்டு தன்னுயிரை மாய்த்துக்கொள்வதற்குமுள்ள வேறுபாடாகவே இதனையும் பார்க்க வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார். செயற்கையாக தற்கொலை மூலம் தன்னைத்தானே மாய்த்துக் கொள்பவன், இயற்கையாக அவன் எப்போது இறக்க வேண்டுமென்ற காலநேரம் விதியால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறதோ, அன்றே அந்த உயிரின் அல்லது ஆன்மாவின் மறுபிறப்புக்கான காலம் அல்லது வாழ்க்கை ஆரம்பிப்பதாக, அதற்கான சில உதாரணங்களையும் எடுத்துக் காட்டி அவர் அக்கட்டுரையில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். எனவே செயற்கையாக நாம் தீர்மானிக்கிற ஒரு மனிதனின் பிறப்புக்கும், அதனை வைத்துச் செய்யப்படுகிற சாதகக் கணிப்புக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையென்பது அக்கட்டுரையாளரின் தீர்க்கமான கருத்தாக இருக்கிறது.

இதன் மூலம் அவர் குறிப்பிடுவது யாதெனில், விதிவந்து, அதாவது வேளை வந்து அது அது சம்பவிக்கும் வரை அதனதன் போக்கில் விட்டுவிட வேண்டுமென்பதே. இன்னொருவரின் விதியைத் தீர்மானிக்க நமக்கு எந்தவிதத்திலும் உரிமையில்லை. பிறப்பும் இறப்பும் அந்த இறைவன் கைகளில். எப்போது நிகழ்கிறதோ அப்போது கண்டு கொள்ள வேண்டியதுதான். என்பதே அவர் கூறும் முடிவாக இருக்கிறது.

ஒரு குழந்தையானது எப்போது, எந்த நாளில், எத்தனை மணி, நிமிட, வினாடிகளில் பிறக்க வேண்டுமென்றது யாருக்கும் தெரியாது. மருத்துவர்கள் குறிப்பிட்டுச் சொல்வதெல்லாம் வெறும் உத்தேசம்தான்; ஊகம்தான். அதுபோல ஒருவர் எப்போது இறக்கப்போகிறாரென்பதும் தெரியாது.

தற்கொலை செய்து கொள்பவருக்குக் கூட அவரது சாவு பற்றி அவருக்கே நிச்சயமிராது. தற்செயலாக அவர் காப்பாற்றப்பட்டு பிழைக்க வைக்கப்பட்டால், அவரால் அவரது இறப்பைக் கூட சரிவரச் செய்ய முடியாத கையாலாகாத்தனம் வெளிப்பட்டுவிடும்.

இயற்கையைக் கையகப்படுத்திவிட்டதாகக் கூறி மனிதர்கள் தம்மிஷ்டப்படியே காடுகளை அழித்தும், பூமியைக் குடைந்தும், மலைகளைத் தகர்த்தும், நீர் நிலைகளை மூடி அவற்றின் மீது கட்டடங்களை அமைத்தும், வன விலங்குகளை அழித்தும், அவற்றை இடம்பெயர வைத்தும் இயற்கையின் சமநிலையை சீர்குலைக்க முனைகிறபோது, பொறுத்தது போதுமென்று பொங்கியெழுந்து, அது நிகழ்த்தும் அனர்த்தங்களைக் கண்ணாரக் கண்டும், அவற்றில் சிக்கி அவஸ்தைப்பட்டும் நமக்குப் புத்தி வராதது நமது துரதிர்ஷ்டமே. பிறப்பு என்பது அவரவர் பூர்வஜென்ம வினைகளுக்கான சம்பாவனையாகும். அதனை ஒவ்வொரு காலகட்டங்களிலும் இன்பமாகவும் துன்பமாகவும் அனுபவித்தே தீரவேண்டுமென்பது விதியாகும். அதனை நாம் நல்ல நேரம், கிரகநிலை பார்த்து பூமியில் பிறக்க வைப்பதன் மூலம் நம்மால் மாற்றியமைத்து விட முடியாது. அது இயற்கையின் நியதியை, இறைவனின் சித்தத்தை மீறுவதற்குச் சமமானதாகும்.

பவிஷ்ய புராணம் என்றொரு இதிகாசம் சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வேதவியாசர் என்ற மாமுனிவரால் எழுதப்பட்டது. இந்தியாவில் எந்த ஆட்சி, எவ்வளவு காலம் நிகழும் என்பது பற்றி அந்நூலில் அப்போது எதிர்வு கூறப்பட்டுள்ளது. வட திசை நாடுகளிலிருந்து மொகலாயர்கள் படையெடுத்துவந்து இந்தியாவை ஆளப்போவதையும் அதன்பின்னர் ஆங்கிலேயர்கள் வியாபார நோக்கில் வந்து, படிப்படியாக முழுநாட்டையும் கைப்பற்றி, மக்களை வருத்தி வரிவசூலித்து பல்லாண்டுகள் காலம் ஆட்சி நடத்தப்போவதையும் பற்றி ஏற்கனவே அந்த நூற் சுவடிகளில் தீர்க்கதரிசனம் கூறப்பட்டுள்ளது.

“ஸ்வேத துவீபத்திலிருந்து (ஐரோப்பா), கோ(பசு) மாமிசம் உண்ணும் மிலேச்சர்கள் (ஆங்கிலேயர்கள்) வந்து, சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள உண்மைகளை மறைத்து, மக்களை வேறு பாதையில் இழுத்துச் செல்ல பாரதத்தை ஆட்சி புரிவார்கள். அவர்களுக்கு ஒரு ராணி (விகடாவதி நாம் நே) விக்டோரியா மகாராணியென்று பெயர்.

எட்டுப் பேர் கொண்ட சபையைப் போட்டு ராஜ்ய பரிபாலனம் செய்வார்கள். (பிரிட்டிஷார் எண்மர் கொண்ட (Vysroy Executive Council அமைத்து ஆட்சி செய்தது வரலாறு) இவ்விதம் முழுவதும் சுலோகங்களாகவே சொல்லப்படும் அப்புராணத்தில் ஓரிடத்தில், தற்கொலை செய்து கொள்கிறவனுக்கு உடனடியான தீர்ப்பு கிடையாதெனவும், இயற்கையிலேயே எப்போது அவன் இறக்க விதிக்கும்பட்டிருந்ததோ, அன்றே அவனது பாவ புண்ணியங்களின் பிரதிபலனாக மறுபிறப்புக்கு உட்படுத்தப்படுவானென்றும் கூறும் சுலோகமொன்றுமுண்டு.

அப்புராணத்தில் கூறப்பட்டுள்ள நடந்தேறியுள்ளதை அவதானிக்கும் போது அதனை புராணப்புளுகு என்றும் தள்ளிவிட முடியாது. மகாபாரதமென்று மகாகாவியத்தை நமக்கு அருளிச் சென்றவரும் இதே வியாசர்தான். அப்படியானால் அதில் வரும் கிருஷ்ணபரமாத்மாவின் அவதாரத்தைக் கூறும் மகா பாவகவதமும், பகவத் கீதையும் கூட பொய்யாகி விடுமல்லவா?

எனவே தற்கொலை செய்து கொள்கிறவனது சம்பாவனையே – மறுபிறப்பே அவ்வாறு சம்பவிக்கும்போது, இயற்கையாக பிரசவிப்பதற்கு முன்பே வலிந்து பூமிக்கு வெளிக்கொணரப்படும் குழந்தைக்கு சாதகம் எழுதி அதன் வாழ்வை தீர்மானிப்பது எவ்விதம் சரியாகுமென்ற கேள்வி எழுகிறது.

ஆனாலும் ஒரு விடயம்; தாயின் வயிற்றிலிருந்து சேயை அகற்றாவிடில் இருவரினதும் உயிருக்கே ஆபத்து ஏற்படலாமென்ற ஓர் இக்கட்டான நிலையல் அறுவைச் சிகிச்சை மூலம் சுசுவானது வெளிக்கொணரப்படுவது வேறு விடயம். அதற்கும், நாள் நட்சத்திரம் நேரம் பார்த்து சிசேரியன் மூலம் சிசு வெளிக்கொணரப்படுவதற்கும் வித்தியாசமுண்டு. சிசேரியன் சிசுவுக்கு சாதகம் எழுதுவது மாத்திரமே சாஸ்திர விரோதமானதாகக் கொள்ளப்படுகிறது.

எப்படித்தான் காலநிலையின் சாதகத்தன்மையை அவதானித்து பிறக்க வைத்தாலும், தலையெழுத்தப்படி எப்போது பிறக்க வேண்டுமென்பது விதியோ, அந்தத் திகதிக்குள்ள கிரக நிலைப்படிதான் வாழ்க்கை நடக்கும். எத்தகைய பலமான கிரக சஞ்சாரத்தை வைத்து பிறப்பை நிர்ணயித்தாலும், கடைசியில் இவ்விதமே நடக்கும். பிறக்க வைக்கும் சுபயோக சுபலக்கினத்திற்கும் நடைமுறை வாழ்க்கைக்குமிடையே தொடர்பிராது. எல்லாமே பொய், மாயம் என்று தோன்றும்.

ஒரு சிசுவினுடைய உண்மையான பிறப்புக்காலம் எப்போது என்று கண்டுபிடிப்பது, சோதிடத்தில் தேர்ந்த ஞானமும் அனுபவமும் உள்ளவர்களுக்கே சாத்தியமானது. அதுவும் குழந்தை பிறந்து வளர்ந்து வாழ்க்கை நடத்துகிறபோது, அதன் இயல்புகளையும் நடவடிக்கைகளையும், சோதனை சாதனைகளையும் வரிசைக் கிரமமாக அவதானித்தே அவர்களால் கண்டுபிடிக்க முடியும். ஆனாலும் சோதிடம் என்பது பிறப்பின் கிரகநிலைகளை வைத்து வாழ்வின் போக்கை தீர்மானிக்கவே அல்லாது, பிறந்து வளர்ந்து வாழ்ந்த பிறகு அவருக்கு வாழ்வே இதுதானென்று தீர்மானிப்பதற்கல்ல என்று சோதிட மேமை கோபாலசர்மா தமது கட்டுரையில் மேலும் விபரித்துள்ளார்.

Comments