சுமுக வாழ்க்ைகக்கு திரும்ப முடியாமல் தத்தளிக்கும் மீளக்குடியேறிய மக்கள் | தினகரன் வாரமஞ்சரி

சுமுக வாழ்க்ைகக்கு திரும்ப முடியாமல் தத்தளிக்கும் மீளக்குடியேறிய மக்கள்

அருமையாக தேவாரம் பாடக்கூடிய பிள்ளை. அதனாலதான் கோயிலுக்கெண்டு கேக்கிறம் வந்து பாடச் சொல்லுங்க. மெய்தான் பாடல்கள் எப்போதும் தன்னிலை மறக்கச் செய்வன. எனவே அது தேவாரமோ அல்லது சினிமாப்பாடலோ அல்லது கேளிக்கைப் பாடல்களோ மனதைக்கவர்கின்றன. பாட்டும் பரதமும் எழுத்துவன்மையும் கவித்துவமும் எல்லோருக்கும் கைவந்து விடுவதில்லை அதனால்தான் இந்தக்கலைகள் வல்லாரை சமுதாயம் வியந்து பார்க்கிறது. கலைகளால் மட்டுமே ஒரு சமூகத்தை நன்னெறிப்படுத்தி விடமுடியுமா? என்றால் கிடையாது. இந்த சமயங்களின் பின்னணியில் அவ்வவ் மத போதகர்களால் செய்யப்படும் உபதேசங்களும்கூட தாம் வாழும் வாழ்க்கையை நெறிப்படுத்த வல்லனவாகும்.

இஸ்லாம் மதமும் கிறிஸ்தவ மதமும் இவ்வகையில் பாடல்களாலும், பிரசங்கங்களாலும் தமது சமயம் சார்ந்த மக்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கின்றன.

யுத்தம் தொடங்கி நடந்து கொண்டிருந்த காலத்தில் கிறிஸ்தவ சமயத்திலிருந்து மட்டும் இருபத்தேழு பிரிவுகள் வடக்கு கிழக்கில் தோன்றியும் வெளியிலிருந்து வந்தும் மக்களை ஆற்றுப்படுத்தின. அவர்கள் தமக்குள் எத்தனை பிரிவுகளை கொண்டிருந்தாலும், துயருற்ற மக்களை ஆற்றுப்படுத்தினார்கள். என்பதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலான குடிகாரர்கள் குடியை விட்டொழித்தனர். காரணமற்று மனைவியை அடித்து துன்புறுத்தியவன் பண்புள்ள கணவனாக மாறினான். இதெல்லாம் எமது கண்முன்னாலேயே நடந்தேறின. கோவில்களை பற்றி பராசக்தி படத்தில் ஒரு வசனம் வரும்.

கோவிலைத்தாக்கினேன் கோவில் கூடாது என்பதற்காக அல்ல கோவில் கொடியவரின் கூடாரமாக இருக்கக்கூடாது என்பதற்காக

கோவில்களில்தான் கலை வளர்ந்தது என்பது யாவரும் அறிந்த உண்மை. சிற்பவேலைகசள் தேர்கள் கட்டுமானங்கள், மாலைகள் மகர தோரணங்கள், சாத்துப்படிகள் நாதம் தாளம் நடனம் பாட்டு கூத்து என அனைத்தும் வளர்ந்தது கோவில்களில்தான். வேலை முடித்து வந்து இரவிலே கூத்துகளை பார்த்துமகிழும் கோவில்களில் இன்று கூத்துகளில்லை. சரி காலம் மாறிவிட்டது நாமும் மாறலாம் எனலாம்.

இன்னமும் மீளக்குடியேறிய மக்கள் தம்மை நிலைப்படுத்த முடியாமல் தத்தளிக்கிறார்கள். இவர்களில் கலைகளை மட்டுமே பயின்று அவற்றையே வாழ்வாதாரமாக் கொண்டவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். காலைமுதல் உழைப்பவனை மாலையில் மகிழ்விக்க பலநாட்கள் பயின்று அரங்கேறிய கலைஞனின் வாழ்க்கையை முதலில் சினிமா பறித்தது. பின்னர் தொலைக் காட்சிப்பெட்டி பறித்தது. இப்போது கைக்குள் போனை வைத்துக்கொண்டு, தமது நேரத்தை செலவிடப் பழகியுள்ளோம்

இப்போது எமது பாரம்பரியக் கலைகளை தமது வாழ்வாதாரமாக வைத்திருந்த அவற்றை பேணிக்காத்த அந்த கலைஞர்கள் என்ன செய்வார்கள். விடுதலைப்புலிகளின் காலத்தில் வீதி நாடகங்களும் இறுவட்டுப்பாடல்களும் நிறையவே வெளிவந்துள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீதி நாடகக்குழுவினர் இருந்தனர். அவர்கள் பகல் முழுவதும் பயிற்சியிலிருப்பர். ஒருமாத பயிற்சியின்பின் வன்னி, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு என பட்டி தொட்டியெங்கும் அவர்கள் தெருத்தெருவாக ஆடவும் பாடவுமாக போர் பற்றிய அவலங்களையும் போராட வேண்டுமென்ற அவசியத்தையும் மட்டுமல்ல, பெண்களின் உரிமைகள் பற்றியும், மாணவர்களின் கல்வி பற்றியும். சீதனக் கொடுமைபற்றியும் பல நாடகங்களை தெருத்தெருவாக அரங்கேற்றினர்.

இரவு ஒரு மணிக்குப்பிறகு வந்து தாம் வீதிகளில் புரண்டு நடித்து அழுக்காக்கிய ஆடைகளை துவைத்துப்போட்டு தாமும் குளித்துவிட்டு படுக்க நள்ளிரவு இரண்டுமணியாகிவிடும். மீண்டும் அவர்கள் அதிகாலையில் எழுந்து தயாராகி ஒன்பது மணிக்கெல்லாம் கடமைக்கு செல்ல வேண்டும். அவர்களது துயரம் போலவே அவர்களை ஆட்டுவித்த அண்ணாவிகளின் துயரமும் அதிகம். மிகவும் வறுமையான சூழலில் வாழ்ந்தவர்கள் இவர்கள். அவர்களுக்கு வாழ்வாதாரமாக மதாந்தம் உதவிப்பணமும் உலர் உணவுகளும் வழங்கப்பட்டு வந்தாலும் அது யானைப் பசிக்கு சோளப் பொரிதான். அந்தக்குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் அனைவருமே கூலி வேலைகளுக்குப் போனால்தான் இரண்டு வேளை சாப்பிடமுடியும்.

போர் நடக்காத பகுதிகளிலும் இது போன்ற கலைஞர்கள் ஏராளமானோர் இதே வகையான துயர வாழ்க்கையே வாழ்கிறார்கள். இவர்களை கௌரவிப்பதாக கூறி ஒரு கலை விழாவையோ அல்லது கலாசார விழாவோ நடத்தினால்கூட தமது கைப்பணத்தை செலவிட்டு வந்திருந்தும், ஒரு நாட் பொழுதில் ஒருவேளை உணவும் சிற்றுண்டியுமே இவர்களுக்கு கிடைக்கிறது.

எப்படியோ கலை கலாசாரம் விளையாட்டு சமயாசாரம் என்பவை ஒரு அமைச்சின் கீழ் தான் வருகின்றன. அவர்கள் இந்தக்கலைகளையும் கலைஞர்களையும் ஏன் மறந்தார்கள். வருடாந்தம் கோவில்களுக்கு பெருமளவு நிதியை ஒதுக்குகிறார்கள். அந்தப்பணத்தில் எந்தக்கலைஞனாவது வாழ வழியிருக்கிறதா? அண்மையில் கோவிலொன்றின் தேர் செய்வதற்காக நான்கு கோடி ரூபாக்கள் வசூலிக்கவுள்ளதாகவும், அதில் கணிசமான தொகை கிடைத்து வேலைகள் ஆரம்பித்து விட்டதாகவும், ஒருவர் கூறினார். அந்த கோவிலின் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்குள் உள்ள மற்றுமொரு கோவில் நிர்வாகத்தினர் தமது தேரை ஆறு கோடிக்கு செய்ய திட்டமிட்டு அவர்களும் வேலையை ஆரம்பித்துள்ளனர். ஒரு தேருக்கு செலவிடும் இந்தத் தொகையை கேள்வியுற்றபோது இன்னமும் வசிக்க வீடில்லாது, பேருந்துகளில் கச்சான் விற்றும், தேநீர்க்கடைகளில் பரிசாரகராகவும், விறகுவெட்டியும் பிழைக்கும் கலைஞர்களை ஒருகணம் நினைக்காமலிருக்க முடியவில்லை. கடவுளே நீயுமா?

Comments