தீர்வாக அமையாது | தினகரன் வாரமஞ்சரி

தீர்வாக அமையாது

வ.சக்திவேல்

 

உரலுக்கு ஒருபக்கம் அடி விழும், தவிலுக்கு இரண்டு பக்கமும் அடி விழும். தமிழ் மக்களின் வரலாற்றைப் பார்த்தால் தவிலைப் போன்றுதான் என எண்ணத் தோன்றுகின்றது. கடந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் பல சொல்லொணாத் துயரங்ளை எதிர்கொண்டு வருகின்ற இந்நிலையில் தற்போது பழைய விடயங்களை மனதில் ஒரு மூலையில் இருத்திவிட்டு மெல்ல, மெல்ல நிமிர்ந்து வருகின்றனர். இச்சந்தர்ப்பத்திலும். பழைய விடையங்களையும், இடைநடுவே ஏற்படும் கசப்பான எண்ணங்களையும் வைத்துக் கொண்டு சிலர் தவறான முடிவுளை எடுத்து தமது உயிரையே மாய்த்து வருகின்றனர் என்பதை நினைத்துப் பார்க்குபோது மனம் நெகிழ்கின்றது.

ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை இழந்துள்ள நிலையிலும், பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை இழந்துள்ள போதிலும், மனதை ஒருநிலைப்படுத்தி தமக்கு உறவுகள் உள்ளார்கள், குடும்பங்கள் உண்டு.

இழந்தது இழந்தைவையாகவே இருக்கட்டும், இருப்பதைக் கொண்டு வாழ்வை மேற்கொள்வோம் என எண்ணிக்கொண்டு மீண்டெழுந்த தமிழ் சமூகத்திலுள்ள சில ஆண்களும், பெண்களும், இடையிடேயே வாழ்வில் குறுக்கீடு செய்யும், சம்பவங்களை மனதில் இருத்திக் கொண்டு தற்கொலைகளுக்குச் செல்வதற்கு முடிவெடுப்பதென்பது மிகவும் கோழைத்தனமானது எனலாம்.

அரசாங்கமும், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், மற்றும், அமைச்சுக்கள், உள்ளிட்ட பல அரச திணைக்களங்களுடாக பல வறுமை ஒழிப்புத்திட்டங்களை முன்வைத்துள்ள போதிலும், இவ்வாறான தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் பிரதான காரணி வறுமை என்றுதான் பலரும் கருதுகின்றனர்.

எனினும் தமது வறுமையைப்போக்க உழைக்கும் ஊதியமும் போதாத நிலையில் மக்களும் கடன் படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஒரு தனி நபர் சுமார் 5 இற்கு மேற்பட்ட நிதி நிறுவனங்களில் கடன் பெற்றால் அதனை மீண்டும் திருப்பிச் செலுத்துவதில் பாரிய சவாலுக்குள் உட்படுகின்றார்கள். இச்சந்தர்ப்பத்தில் கடன் அனைத்தையும் மீளச் செலுத்த முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் சிலர் தவறான முடிவுகளை எடுக்கின்றனர் என்பதை நினைக்கும் போது மனதிற்கும் சங்கடமாகத்தான் உள்ளது. இந்த நிலைமையை தற்போதிருந்தே போக்க வேண்டும். இதற்காக மக்கள் மத்தியில் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வுகளையும் மேற்கொள்ள வேண்டும். ஒரு நிதி நிறுவனத்தில் ஒருவர் கடன் பெற்றுக் கொண்டு அந்தக் கடனை மீளச் செலுத்தி முடிக்கும் முன்னர் ஏனைய நிதி நிறுவனத்தில் குறித்த நபர் கடன் எடுக்காமலிருக்கும் வழிமுறை அல்லது பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும் என்பது புத்திஜீவிகளின் கருத்தாகும்.

இது ஒரு புறமிருக்க கணவன் மனைவிக்கிடையில் பிரச்சினை, அயல் வீட்டாரிடம் பிரச்சினை, நண்பர்களுக்கிடையில் பிரச்சினை, காதலர்களுக்கிடையில் பிரச்சினை, வீட்டிலிருந்து கொண்டு வெளிநாட்டிலுள்ள உறவினருடன் தொலைபேசியூடாக சண்டை, இவ்வாறான சிறிய, சிறிய பிரச்சினைகளுக்கு மனதைப் புதைய வைத்துக் கொண்டு அப்பிரச்சினைகளில் மூழ்கியும் சிலர் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். இவ்வாறானவர்கள் உடனடியாக ஏனையவர்களிடம், அல்லது நண்பர்களிடமாவது தமது பிரச்சினைகளை மனம் விட்டுப் பேசினால்கூட தங்களுடைய கோபம் தணிந்து ஆற்றுப்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது 20க்கும் மேற்பட்ட மரணங்கள் கடன் தொல்லையால் நிகழ்ந்துள்ளன, இவற்றை விட சிறிய சிறிய பிரச்சினைகளுக்காக வேண்டி வெட்டியும், குத்தியும், சுருக்கிட்டும் தமது இன்னுயிரை மாய்த்துள்ளனர். இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியது மிக மிக குறைவு என்றுதான் இம்மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39 ஆம் கிராமத்தில் ஒருவர் வெட்டிக் கொலை, பட்டிப்பளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனையில் ஒரு இளைஜன் குத்திக் கொலை, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் ஒருவர் அடித்துக் கொலை, காத்தான்குடியில் சிறுமி கொலை, காக்காச்சுவட்டையில் தந்தை, தாய், மகள் ஆகிய மூவரும் அடித்துக் கொலை, காத்தான்குடியில் முதியவர் சுட்டுக் கொலை.

அதுபோன்று பல்கலைக் கழக மாணவி தற்கொலை, காக்காச்சுவட்டைக் கிராமத்தில் இளம் யுவதி தற்கொலை, களுதாவளையில் முதியவர் ஒருவர் தற்கொலை, இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக அண்மைக் காலமாக கொலைகளும், தற்கொலைகளும். இடம்பெறுவதை தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால் மக்கள் மத்தியில் முறையான தகுந்த ஆலோசனைச் செயற்றிட்டங்கள், விழிப்புணர்வுச் செயற்பாடுகளையும், மேற்கொண்டே தீரவேண்டும்.

கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் தமது வியாபாரத்தை விருத்தி செய்வதோடு நின்று விடாமல் இவ்வாறான விழிப்புணர்வு செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டிது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. ஏனெனில் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல உள்ளூர், மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள் காணப்பட்டன. அவை மக்கள் மத்தில் வாழ்வாதார செயற்பாடுகைள மேற்கொண்டும், விழிப்புணர்வுகளையும் மேற்கொண்டும் வந்தன. ஆனால் தற்போது அந்த நி​ைலமை வெகுவாகக் குறைந்துள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது.

அடிப்படையில் இவ்வாறான சம்பவங்களுக்கு தனி ஒரு விடயம் மாத்திரம் காரணமாக இருக்காது. அதற்கு பல காரணங்கள் இருக்கும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உள நல வைத்திய நிபுணர் தன.கடம்பநாதன் தெரிவிக்கின்றார்.

இவ்விடயத் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில். இதனை தனிப்பட்ட விடயமாகப் பார்க்காமல் இது சமூகத்தில் இருக்கின்ற ஒரு குறைபாடாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. இதற்கு உடினடித் தீர்வென்பது கடினமாகத்தான் இருக்கும். திடீர் திடீரென இடம்பெறும் இவ்வாறான சம்பவங்களை வைத்துப் பார்த்தால் மக்களுக்கு நீண்டகாலத் தீர்வுத்திட்டங்கள்தான் தேவைப்படும். இந்நிலையில் கொலைகள், தற்கொலைகள் தொடர்பில் தற்போது அதிகளவு பேசப்படுவதனால் அவை ஒரு சாதாரண விடயமாகவும் போய்விட்டது.

மக்களிடத்தில் காணப்படும் ஏனைய விடயங்களுக்குத் தீர்வு கண்டு வரும் நிலையில் இவ்வாறான விபரீதங்கள் நாளடைவில் குறைந்து கொண்டு வரும். உதாரணமாக கணனிக்கு சொப்வெயார் அப்டேற் செய்வது போன்றுதான் எனக் கருதலாம் குறித்த கணனியில் ஒரு சொப்ட்வெயார் அப்டேட் செய்யாவிட்டாலும் உரிய கணனி வேலை செய்யாது. இதுபோன்றுதான் இச்செயற்பாட்டை நோக்கவேண்டும். எனவே இதனை குறுகிய காலத்திற்குள் செய்ய முடியாது, நீண்டகால செயற்பாடுகள்தான் தேவை.

இதற்கு படிப்படியான முறையில் முன்னெடுக்க வேண்டும். ஏற்கனவே இருந்த சமூகக் கட்டமைப்புக்களும் தற்போது குறைந்திருக்கின்றன. எனவே சமூகங்களை மெல்ல மெல்ல வலுவாக்க வேண்டும். எனவும் அவர் தெரிவித்தார்.

சமூகங்களை ஒன்றிணைத்து சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், என அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் மத்தியில் காணப்படும் பொதுவான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்படும் இடத்து மக்களிடத்திலுள்ள மெனவெழுச்சி மெல்ல, மெல்ல குறைவடைந்து கொண்டு செல்லும். எனவே சமூக கடப்பாடுடையவர்கள் அனைவரும் தங்கள், தங்கள் பகுதிகளில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுமிடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அவ்வப்போது ஏற்படுத் விபரீதங்களைக் குறைக்கலாம்.

Comments