தூரநோக்கு இல்லாததால் அழிந்துபோன வி.பி. கணேசனின் தமிழ்த் திரைப்படங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

தூரநோக்கு இல்லாததால் அழிந்துபோன வி.பி. கணேசனின் தமிழ்த் திரைப்படங்கள்!

  கலாபூஷணம், பேராதனை ஏ. ஏ.ஜுனைதீன்

புதிய காற்று இலங்கை தேசிய தமிழ் சினிமாவின் 09வது திரைப்படமும் கணேஸ் பிலிம்ஸாரின் முதலாவது திரைப் படமுமாகும்.

“நான் உங்கள் தோழன்” இலங்கை தேசிய தமிழ் சினிமாவின் 13வது திரைப்படமும் கணேஸ் பிலிம்ஸாரின் இரண்டாவது திரைப் படமுமாகும்.

“நாடு போற்ற வாழ்க!” இலங்கை தேசிய தமிழ் சினிமாவின் 23 வது திரைப்படமும் கணேஸ் பிலிம்ஸாரின் மூன்றாவது திரைப் படமுமாகும்.

“புதிய காற்று” திரைப்படத்தின் சுகந்தம் இலங்கை தேசிய தமிழ் சினிமாவின் எங்கும் வியாபித்து 23வது திரைப் படமாகிய “நாடு போற்ற வாழ்க'' வரை வீசியது. இன்றும் அது மணக்கிறது.

வி. பி. கணேசனின் புதிய காற்றுக்கு உள்ள வரலாறும் புகழும் வரவேற்பும் அதற்கு பின்னால் அவரால் தயாரிக்கப்பட்ட ‘நான் உங்கள் தோழன்’, ‘நாடு போற்ற வாழ்க’ திரைப்படங்களும் கிட்டியது. வி. பி. கணேசன் என்ற ஒரு காத்திரமான ஒரு கதாநாயகனையும், அலுப்பும் அலம்பலும் இல்லாத ஒரு தயாரிப்பாளனையும் எங்கள் தேசிய தமிழ் சினிமாவுக்கு அவை தந்தன.

வி. பி. கணேசன் இந்த மூன்று தமிழ்ப் படங்களோடு சுபாஷினி என்று ஒரு சிங்களத் திரைப்படத்தையும் அவர் தயாரித்து வெளியிட்டுள்ளார்.

அவரது இந்த மூன்று தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி யார் என்ன புகழ்ந்து பேசினாலும் இந்த திரைப்படங்களின் பின்னணி வரலாறு தெரிந்த எனக்கும் பாடகர் வீ. முத்தழகுக்கும் ஒரு துன்பியல் கதையே!

வி. பி. கணேசனின் மறைவுக்குப் பின்னர் இந்த மூன்று தமிழ்த் திரைப்படங்களின் பிரதிகளையும் பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருப்பதாக உணர்ந்தோம். எனவே திருமதி கணேசனிடம் சென்று விசயத்தைக் கூறி அவர்களின் வாய் மொழி அனுமதியோடு மேற்படி திரைப்படங்களின் பிரதிகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டோம்.

இதன் பிரதிபலனாக மட்டக்குளியிலுள்ள வி. பி. கணேசனின் குடோனிலிருந்து பிச்சர் நெகடிவ் 15 (15,000 அடி) ரீல்களையும் (15,000 அடி) சவுண்ட் நெகடிவ் 15 ரீல்களையும் மனோ கணேசன் கொண்டுவந்து அவருடைய பேங்சோல் வீதி காரியாலயத்தில் வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று எம்மிடம் கேட்டார்.

அதனை ஸ்டூடியோவுக்கு கொண்டு வந்து பரிசீலித்து பார்த்தபோது அது ‘நான் உங்கள் தோழன்” படத்தின் ஒரு பிரதி என்பது தெரிய வந்தது. அப்போதே அதன் இரண்டு ரீல்கள் (2000 அடி) எதற்கும் உதவாமல் உக்கிப் போய் இருந்தன.

மீண்டும் மனோ கணேசனைச் சந்தித்து நிலமையை விளக்கி இன்னும் மேலதிகமாக பிரதிகள் எங்காவது இருந்தால் அவை எல்லாவற்றிலும் இருந்து ரீ எடிட் பண்ணி நல்லதொரு பிரதி எடுக்கலாம் என்று சொன்னேன்.

அதற்கு “நான் என்ன செய்ய வேண்டும்?” என மனோ கணேசன் கேட்டார்,

தேடி எடுப்பதற்கான அனுமதிக் கடிதம் அவற்றைத் தரும்படி அவரிடம் கேட்டேன். உடனடியாக அதற்கான கடிதத்தை அவர் என்னிடம் தந்தார்.

கைவசம் உள்ள 'நான் உங்கள் தோழன்' பிரதியைத் தவிர மூன்று திரைப்படங்களின் பிரதிகளையும் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இடையில் ஒரு நாள் மொழிவாணன் வந்து நான் உங்கள் தோழன் பிரதியை பாடகர் வீ. முத்தழகுவிடம் கேட்டார். அதனை மனோகணேசனைத் தவிர வேறு யாரிடமும் கொடுப்பதற்கில்லை என வீ. முத்தழகு மறுத்து விட்டார்.

கைவசமுள்ள பிரதியை உயிர்ப்பிக்க நாம் எவ்வளவோ முயன்றோம். தயாரிப்பாளர்களது ஆர்வமின்மையால் பல வருடங்கள் வீ. முத்தழகு வீட்டில் கிடந்த ரீல்கள் முழுமையாக உக்கிப் போன நான் உங்கள் தோழன் பிரதியை வீ. முத்தழகு எடுத்துச் சென்று உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

எங்களது இலங்கை தேசிய தமிழ் சினிமாவின் பிரதிகள் அழிந்ததுக்கு முழுமையான காரணம் திரைப்படம் எடுத்து திரையிட வேண்டும் என்பது வரை தான் அந்த தயாரிப்பாளர்களுக்கு ஆர்வம் இருந்ததே தவிர, அதன் பின்னர் அதன் பிரதிகளைப் பாதுகாத்து பத்திரப்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை. இலங்கைத் தயாரிப்புகள் எங்கள் சரித்திரம் அறியாமையும் ஆர்வமின்மையுமே! என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொண்டபோது காலம் கடந்திருந்தது.

ரூபவாஹினியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஐந்து இலங்கை தேசிய தமிழ் சினிமா திரைப்படங்களை (திருட்டுத்தனமாக) வீடியோ செய்த ஒருவர் தனக்கு தந்ததாகவும் அவற்றை இருபத்தையாயிரம் ரூபாவுக்கு தம்பி ஐயா தேவதாஸ் அவர்களுக்கு தான் விற்றதாகவும் எனது சிங்கள திரைப்பட இணைத் தயாரிப்பாளர் பி. ஆரூரான் ஒரு முறை என்னிடம் சொன்னார்.

அவற்றைத் தவிர நான் தயாரித்த தமிழ், சிங்களத் திரைப்படங்களின் சகல ஆவணங்களையும் நான் பத்திரமாக, பராமரித்து பாதுகாத்து வைத்துள்ளேன். ஏனென்றால் என் இலட்சியக் கனவுகளின் சித்திரங்கள் அவை.

(தொடரும்)

 

Comments