நன்னீர் மீனை மட்டுமே நம்பும் காலம் வெகு தொலைவிலில்லை! | தினகரன் வாரமஞ்சரி

நன்னீர் மீனை மட்டுமே நம்பும் காலம் வெகு தொலைவிலில்லை!

(இலங்கை நிர்வாக சேவை அலுவலராகிய கட்டுரையாளர் ஆசிய தொழில்நுட்ப நிறுவகத்தில் (தாய்லாந்து) இயற்கை வள முகாமைத்துவ முதுமாணிக்கற்கையை மேற்கொண்டு வருகிறார். அவரை [email protected] என்ற மின்னஞ்சலூடாக தொடர்பு கொள்ள முடியும்)

உலகளாவிய ரீதியிலே பல பில்லியன் மக்கள், அதிலும் மிகவும் வறிய வகுப்பைச் சேர்ந்தோர் தமது வாழ்வாதாரத்துக்காக, தொழிலுக்காக, உணவுக்காக, கடல், சமுத்திர சூழற்றொகுதிகளால் வழங்கப்படும் பண்டங்களையும் சேவைகளையும் நம்பியே வாழ்கின்றனர். உலக சனத்தொகையின் 10- -முதல் 12 சதவீதம் ஏறத்தாழ 4.3 பில்லியன் மக்கள் தமது 15 சதவீத புரதத்தேவையை நன்னீர், கடல் வாழ் மீன்கள் மூலம் பூர்த்தி செய்து கொள்வதாக உலக விவசாய ஸ்தாபனம் கண்டறிந்திருக்கிறது. ஏறத்தாழ 200 மில்லியன் மக்கள் புயலிலிருந்தும் கடலைகளிடமிருந்தும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள பவளப்பாறைகளை நம்பியிருக்கின்றனர். ஆயினும் சமுத்திரங்களின் ஆரோக்கியம், உற்பத்தித்திறனைப் பேணுவதற்கு அத்தியாவசியமான வாழிடங்கள் சில மிக வேகமாகக் குறைவடைந்து செல்வதை ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

ஏறத்தாழ 25 சதவீதத்துக்கும் அதிகமான கடல் வாழ் உயிரினங்கள் பவளப்பாறைகளின் உதவியுடனேயே வாழ்கின்றன. ஆனால் தற்போதைய நிலைமையோ மிகவும் கவலைக்கிடமானது. கடந்த 30 வருடங்களில் உலகின் ஆழமற்ற கடற்பரப்புகளில் காணப்படும் பவளப்பாறைகளுள் ஏறத்தாழ 50 சதவீதமானவை அழிந்து விட்டன. இதே நிலை தொடருமானால் 2050 ஆம் ஆண்டளவில் 90 சதவீதமான பவளப்பாறைகள் முற்றாக அழிந்துவிடும் சாத்தியப்பாடே காணப்படுகிறது. பவளப்பாறைகள் அழிவடைவதால் மனித இனம் எதிர் நோக்கிவரும் நெருக்கடிகள் அளப்பரியன. பவளப்பாறைகள் அழிவடைந்து செல்வதால் அதிகளவில் பாதிப்படையப்போகும் பிராந்தியங்களாக தென் கிழக்காசியா, கடலை அண்டிய கிழக்கு ஆபிரிக்கா, கரீபிய பிரதேசங்கள் இனங்காணப்பட்டுள்ளன. ஏனெனில் இப்பிராந்தியங்களில் பல சமூகங்கள் தமது உணவுக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் கடல் வளத்தை மாத்திரமே நம்பி உயிர்வாழ்கின்றன.

அயன வலயத்தில் காணப்படும் கடற்பரப்புகள் கால நிலை மாற்றத்தினால் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்குகின்றன. மிகை வெப்பமடையும் இக்கடற்பரப்புகளால் பவளப்பாறைகள் சேதமடைகின்றன. கடல் வெப்ப நிலை அதிகரிப்புடன் இணைந்ததாக பவளப்பாறைகள் சேதமடைகின்றமை முதன்முதலில் 1980 களில் செய்மதிப்புகைப்படங்களின் துணையுடன் அவுஸ்திரேலியாவிலே கண்டறியப்பட்டது. 2016 ஆம் ஆண்டளவிலே உலகளாவிய ரீதியில் வேகமாக வளரும் பல பவளப்பாறைகள் இறந்து விட்டமை கண்டறியப்பட்டது. பல கடல் வாழ் உயிரினங்களுக்கான வாழ்விடத்தை வழங்கும் இப்பவளப் பாறைகள் அழிந்து விட, அவற்றின் தேவை குறைவாக இருக்கும் உயிரினங்கள் மெல்ல மெல்ல அவ்விடத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கும். இது உயிர்ப்பல்வகைமையைப்பொறுத்தவரையில் இனங்களின் சதவீத கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும். கால நிலை மாற்றம் மட்டும் பவளப்பாறைகளுக்கு அச்சுறுத்தலாக அமையவில்லை. மிகையான மீன்பிடியும் தேர்ந்தெடுக்கும் மீன்பிடியும் அழிவை ஏற்படுத்தும் மீன்பிடி முறைமைகளும் சுற்றுச்சூழல் மாசால் கடலுக்குள் வெளியேற்றப்படும் கழிவுகளும் கூட இப்பவளப்பாறைகளின் அழிவுக்கு காரணமாய் அமைந்து விடுகின்றன.

அயன, உப அயன வலயங்களின் கடற்கைரைகளையும் கழிமுகங்களையும் பொறுத்தவரையில் இயற்கை வழங்கிய அரும்பெரும் சொத்தாக கண்டல் நிலத்தாவரங்கள் கணிக்கப்படுகின்றன. கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவது மட்டுமன்றி கொடூரமான புயலிலிருந்தும் கடலரிப்பிலிருந்தும் அவர்களைப் பாதுகாப்பதில் அவை பெரும்பங்கு வகிக்கின்றன. அயன வலயக் காடுகளுடன் ஒப்பிடுகையில் 5 மடங்கான காபனை நடு நிலையாக்க இக்கண்டல் காடுகள் துணை புரிகின்றன. அது மட்டுமன்றி மீன்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவான சூழலையும் உருவாக்கிக்கொடுத்து மீன் குஞ்சுகள் பாதுகாப்பாக வளர்ந்து மீளக் கடலுக்குச் செல்லத் துணை புரிகின்றன. அபிவிருத்தியைக் கருத்தில் கொண்டும் விறகு போன்ற சிறு தேவைகளை நோக்காக க் கொண்ட மிகை நுகர்வினாலும் நவீன நன்னீர் மீன் வளர்ப்பின் விருத்தியாலும் இந்த கண்டல் காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 தசாப்த காலங்களில் உலகளாவிய ரீதியில் 30--50 சதவீதமான கண்டல் நிலத்தாவரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

சமுத்திரங்களையே வாழிடமாகக் கொண்ட பூக்கும் தாவரங்களும் கடற்புற்களும் கடல் சார் சூழல் தொகுதியில் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றன. அவை கனிப்பொருள் மீள் சுழற்சிக்கும் உயிரினங்களின் வாழிடமாகவும் துணை புரிவது மட்டுமன்றி வர்த்தக ரீதியான மீன் பிடிக்கும் காபனை நடு நிலையாக்கவும் கூட வழிசமைத்துக்கொடுக்கின்றன. அழிவை ஏற்படுத்தும் மீன் பிடி முறைமைகளாலும் படகுகளின் காற்றாடிகளாலும், கடற்கரை சார் பொறியியல் முறைமைகளினாலும், சூறாவளி, சுனாமி, கால நிலை மாற்றம் போன்ற இயற்கை சார் காரணிகளாலும் இக்கடற்தாவரங்கள் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன. கடற்புற்கள் அழிவடையும் சதவீதம் சதுர கிலோ மீற்றருக்கு ஏறத்தாழ 110% என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வீதமானது பவளப்பாறைகள், கண்டல் காடுகள் அழிவடைந்து செல்லும் வீதத்துடன் ஒப்பிடக்கூடியதாகும்.

பல மில்லியன் சதுர கிலோ மீற்றருக்கு பரந்து விரிந்து காணப்படும் சமுத்திரங்கள்' பல நூறாயிரம் மீன் பிடி கடற்கலங்கள்' மிக நீண்டகாலமாக கண்காணிக்கவே இயலாதளவுக்குப் பரந்திருக்கிறது இந்த மீன் பிடித் தொழிற்றுறை. தொழிற்றுறை சார் மீன் பிடி நிலத்திலிருந்து மிகத்தொலைவில் நடைபெறுவதால் அதனைக் கண்காணித்தல் மிகக் கடினம். இத்தகையதோர் நிலையில் சட்ட விரோத மீன் பிடியும் மிகவும் ஆழமாக வேரூன்றிக் காணப்படுகிறது. உலகளாவிய ரீதியிலே வருடாந்தம் மேற்கொள்ளப்படும் சட்ட ரீதியான மீன் பிடியின் பெறுமதி ஏறத்தாழ 10-23 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்படுகிறது.

ஒரு நாட்டின் கடல் எல்லைக்குள் மீன் வளம் அருகி விட , இன்னொரு நாட்டின் கடலெல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதும் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைமைகளைப் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்ட பிராந்தியங்களில் மீன் பிடியை மேற்கொள்வதும் அனுமதியின்றிய மீன் பிடியும் கூட சட்ட விரோத மீன்பிடிக்குள் அடங்கும். நில எல்லைகளை மீறும் சட்ட விரோத மீன் பிடிகளைக் கண்காணிக்க பல நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆயினும் தடுத்தலென்பது பெரும் சவாலாகவே காணப்படுகிறது.

கடல் நீர் மிதமான வெப்ப நிலையுடன் காணப்படும் போதே பெரும்பாலான மீனினங்களும் தாவரங்களும் ஏனைய உயிரினங்களும் வாழ்வதற்கு சாதகமான சூழல் ஏற்படும். கடல் நீரின் வெப்ப நிலை ஒரு பாகை செல்சியசால் அதிகரித்தால் கூட பல இனங்கள் அழிந்து போய்விடும். தப்பிப்பிழைத்தவை மிதமான வெப்ப நிலையைத் தேடி ஆழ்கடலை நோக்கிச் செல்லத்தொடங்கும். மீன் பிடி கடற்கலங்களும் ஆழ்கடலை நோக்கிச் செல்ல செல்ல, மீன் பிடிக்கான செலவு அதிகரிக்கும். செலவு அதிகரிக்க அதிகரிக்க, கடல் மீன்கள் சாதாரண நுகர்வுக்கு எட்டாப்பொருட்களாகி விடும். சிறிய மீன்களை உணவாக உட் கொள்ளும் பெரிய மீன்களும் அருக அருக உணவுச்சங்கிலிகளிலும் உணவு வலைகளிலும் பெரும் இடைவெளிகள் தோன்றும். இவை இப்பூமியின் அழிவுக்கே வித்திடுமென்பதில் எதுவித ஐயமும் இல்லை.

கடலில் மூன்று மீன்கள் பிடிக்கப்பட்டால் அவற்றுள் ஒரு மீன் குப்பைத்தொட்டிக்குச் செல்வதாக ஆய்வுகள் மதிப்பட்டிருக்கின்றன. அருகி வரும் இவ்வியற்கை வளத்தை எம் பொறுப்பற்ற நுகர்வுப்பாங்கு எங்ஙனம் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியிருக்கிறது என இக்கூற்று தெளிவாக வெளிப்படுத்துகிறது.

தாய்லாந்தாகட்டும், சீஷெல்ஸ் ஆகட்டும், பெருங்கடற்பிராந்தியங்களைக் கொண்ட பல நாடுகளில் கடலுணவுகள் கிடைப்பது அரிதாகிவிட்டது. பெரும்பாலும் நன்னீர் மீன்களையே அம்மக்கள் உணவா கக் கொள்கின்றனர். சாதாரணமக்களின் கொள்வனவுத்திறனுக்கு நன்னீர் மீன்களே பொருத்தமானதாக மாறிவிட்டன. அத்தகையதொரு நாட்டில் வசிக்கத்தலைப்பட்டால் மாத்திரமே தாய் நாட்டின் கடல் வளத்தின் பெறுமதியை எம்மால் உணர முடியும்.

மாறாக இலங்கையிலோ பெரும்பாலான மக்களின் கொள்வனவு ஆற்றலுக்கு ஏற்ற விலையில் கடலுணவு கிடைத்து வருகிறது. அத்துணை கடல் வளம் கொண்ட இத்திரு நாடும் விதி விலக்கின்றி மேற்சொன்ன பிரச்சினைகளுக்கெல்லாம் முகம் கொடுத்து வருகிறது. எம் ஒவ்வொருவரது பொறுப்பற்ற நுகர்வும் ஏனைய செயற்பாடுகளும் தொடருமாயின் இன்று அன்றாட உணவில் நாம் சேர்க்கும் கடலுணவுபற்றி நாளை எம் பிள்ளைகளுக்குத் தெரியாமலே போய்விடும். அருங்காட்சியகங்களில் மட்டுமே பார்க்கும் ஆவணப்பொருட்களாக கடல் வாழ் உயிரினங்களும் மாறி விடும். சமுத்திரங்கள் சாக்கடல்களாக மாறி விடும். எமக்குத்தேவையான புரத உணவின் பெரும் பாகத்தைக் கொள்ளை கொள்ளும் இக் கடலுணவு இன்றி ஆரோக்கியமற்ற எதிர்காலச்சந்ததி உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எமக்குத் தேவையானளவு கடலுணவு கிடைப்பதால், நாம் அதன் இருப்புப் பற்றி அவ்வளவாக அலட்டிக்கொள்வதில்லை. அது கடலில் இலவசமாகவே கிடைப்பதாக எம்மில் பலர் இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் மீன் வளம் வரையறுக்கப்பட்டது.

எம்மால் மேற்கொள்ளப்படும் மிகை மீன் பிடியும் தடை செய்யப்பட்ட வலைப்பாவனையும் மீன் இனத்தை பெருக முடியாமல் செய்து விடுகின்றன. கடற் சூழல் தொகுதி என்று தனது தாங்கு திறனை இழக்கின்றதோ அன்றிலிருந்துதான் அதன் தாக்கத்தை நாம் உணரத்தலைப்படுவோம். இத்தகையதொரு சூழ்நிலையில் வந்த பின் பரிகரித்தலைப் பற்றி எண்ணுவதை விட வருமுன் காத்தலே சிறந்த தீர்வாக இருக்கும்.

அதற்கு பொருளாதார, அரசியல், சமூக, சுற்றுச்சூழல் ரீதியாக ஆயத்தங்கள் செய்யப்பட வேண்டும். ஏதாவதொரு தூறையில் நாம் தவறினாலும் விளைவுகள் விபரீதமாகவே மாறும். வெளிப்படைத்தன்மை மிகு முறைமைகள் உருவாக்கப்பட வேண்டும். சகல மட்டங்களிலும் விழிப்புணர்வு உருவாகவேண்டும். சகலரும் ஒருமித்து, ஒரே நோக்கத்துக்காகப் பயணித்தால் மாத்திரமே எம்மால் கடல் வளத்தைக் காக்க முடியும். மனித இனத்தின் நிலைப்பை உறுதி செய்ய இயலும்!

Comments