காபந்து அரசா, தேசிய அரசா? | தினகரன் வாரமஞ்சரி

காபந்து அரசா, தேசிய அரசா?

இப்படியே போனால் நிலைமை என்ன?

இடைக்கால தடைகள் இன்னும் நீக்கப்படவில்லை. 7ஆம் திகதிக்குப் பின்னர் (07.12.2018) நிலைமை சுமுகமாகிவிடும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாக இருந்தது அதுவும் நடக்கவில்லை.

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவிப்புக்கு டிசம்பர், 7ஆம் திகதி வரை உச்சமன்று இடைக்கால தடையை விதித்திருந்தது. என்றாலும், தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்காலத் தடை தொடருமென உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் (7ம் திகதி) இரவு அறிவித்தது.

இதேபோல, மஹிந்த ராஜபக்ச எம்.பி பிரதமராக செயற்படுவதற்கும் 49 பேர் அமைச்சர்களாக செயற்படுவதற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத்தடை 12 ஆம் திகதி (12.12.2018) வரை தொடர்கிறது.

அரசாங்கமொன்று செயற்படாத நிலையில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நாட்டை இப்போது நேரடியாக நிர்வகிக்கிறார். நாட்டின் சுமுகநிலையில் எவ்வித பாதிப்பும் இல்லை; தேசிய பாதுகாப்பும் பலமாகத்தான் இருக்கிறது. என்றாலும், மக்கள் மத்தியில் ஓர் அரசியல் பதற்றம் இருக்கிறதென்பதை நாம் மறுப்பதற்கில்லை.

நீதிமன்றத் தீர்ப்புகள் எப்படியாவது வரட்டும். அது நீதித்துறையின் சுதந்திரத்தோடு சம்பந்தப்பட்டது. ஆனால், ஒக்டோபர் 26ஆம் திகதியிலிருந்து இந்த நிலைமை தொடர்ந்து கொண்டிருப்பது சங்கடமான விடயம்.

நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கசபை, நீதித்துறை ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி அதிகார முரண்பாடுதான் இந்த நெருக்கடி நிலைமைக்குக் காரணமாக இருக்கிறது. பிரச்சினையை சரியாகப் பார்த்தால் இது நன்றாகவே புரிகிறது.

அதாவது, 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஜே.ஆர். ஜயவர்த்தனவின் அரசியலமைப்புதான் சகலவற்றிற்கும் காரணமாக இருக்கிறது. இந்த அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரத்தை குறைப்பதற்காகவே அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. என்றாலும், இந்தத் திருத்தத்தில் ஏற்பட்டிருக்கும் குறைபாடுகளே இன்றைய இடியப்ப சிக்கலுக்குக் காரணமென்பது அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

அப்படி, குறைபாடுகள் இருந்தால், அதனையும் திருத்துவதற்கு தன்னை அர்ப்பணிக்கப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கிறார். மொத்தத்தில் இது ஓர் அரசியலமைப்புக் குழப்பமென்பது வெளிப்படையாகத் தெரிகிறது. “கலகம் ஏற்பட்டால் தான் நியாயம் பிறக்கும்” என்பது சாதாரண மக்கள் மத்தியில் நிலவும் பயன்பாட்டு வார்த்தை. இந்த வார்த்தையிலும் ஒரு யதார்த்தம் இல்லாமலில்லை.

நெருக்கடி நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து புத்திஜீவிகள் மட்டுமல்ல; பாமர மக்களும் இப்போது அரசியலமைப்பை தூசு தட்டத் தொடங்கியிருக்கிறார்கள். அரசியலமைப்பால்தான் குழப்பமென்றால், நாட்டுக்குப் பொருத்தமான ஓர் அரசியலமைப்பை உருவாக்கக் கூடாது என்பது சாதாரண மக்கள் மத்தியில் எழுப்பப்படும் கேள்வியாக இருக்கிறது.

அரசியலமைப்புக்கு புதிய திருத்தங்கள் கொண்டு வருவதற்கு அரசியலமைப்பு சபையொன்று அமைக்கப்பட்டு செயற்பட்டு வருகிறது. இது தொடர்பில் நாட்டைப் பிரித்து தமிழரிடம் ஒப்படைப்பதற்கான முயற்சியென்றும், தமிழருக்கு சமஷ்டி கொடுப்பதற்கான முயற்சியென்றும் சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதிகாரங்களை பரவலாக்கி நாட்டில் சுமுக நிலையை ஏற்படுத்தும் முயற்சிக்கு முட்டுக்கட்டைகள் போடுவதே இலங்கையின் வரலாறு. என்றாலும், நாட்டை நிர்வகிப்பதற்கு புதியதொரு அரசியலமைப்பின் அவசியம் இப்போது உணரப்படுகிறது.

நாட்டில் சுமுகமான ஆட்சியை ஏற்படுத்த நிறைவேற்று அதிகாரம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி. காட்டமாகக் கூறுகிறது. அதேநேரம், தனிநபரொருவரிடம் நிறைவேற்று அதிகாரம் இருக்கவே கூடாது என்றும் அடித்துக் கூறுகிறது. இதற்கு பாராளுமன்றமோ, அரசியல் கட்சிகளோ ஒரேநாளில் அல்லது குறிப்பிட்ட நாட்களில் தீர்வு கண்டுவிடமுடியாது. அதிகாரக் குறைப்பு என்பது ஜே.வி.பி. நினைப்பது போல் இலகுவான விடயமும் அல்ல.

நடைமுறையிலுள்ள அரசியலமைப்பை, முழுமனதுடன் மாற்றினாலே பிரச்சினைகளுக்கு தீர்வை எட்ட முடியும். ஐ.தே.கவை தொடர்ந்தும் ஆட்சியில் அமர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் 1978ஆம் ஆண்டின் யாப்பு. இப்படி, கட்சி நலன் சாராமல் நாடு, மக்கள், எதிர்கால சந்ததிகளின் நலன்சார்ந்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவதே அத்தியாவசியமாக இருக்கிறது.

நாடு இப்போது இருக்கும் நிலையில் அரசியலமைப்பை மாற்றிக் கொண்டிருக்கமுடியாது. என்பதே பெரும்பாலானோரின் கருத்து. தற்காலிகமாக குறுகிய காலத் தீர்வொன்றுக்கு நாம் சென்றேயாக வேண்டும். நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கசபை, நீதித்துறை ஆகிய மூன்றும் முறுகல் நிலையில் இருக்கிறதென்பதற்காக, நாட்டை சும்மா கைவிட்டு விடமுடியாது.

குழப்ப நிலையினால் பொருளாதாரம் பெரும் ஆட்டம் கண்டுள்ளது. முதலீடுகள் பாதித்துள்ளன. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிக்கல்கள் இப்போது இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டு ஜனவரிக்குப் பின்னர் பாதிப்பை ஏற்படுத்தலாம். 2019ஆம் ஆண்டுக்கான பட்ஜட் இந்த டிசம்பருக்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்னும் நிறைவேறவில்லை.

இடைக்கால வரவு – செலவுத்திட்டம் ஒன்றின் மூலம் இதற்குத் தீர்வுகாணமுடியும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எத்தனை நாட்களுக்கு நாம் இப்படியே செல்வது?

பொதுத் தேர்தலுக்குச் செல்வதுதான் ஒரே தீர்வு என்பது அரசியல் கட்சிகளின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது. சில கட்சிகள் இப்போது பரப்புரைகளையும் ஆரம்பித்துள்ளதைக் காண முடிகிறது.

தேர்தல் மூலம் மக்கள் ஆணையைப் பெறுவது தீர்வாக அமையும். இது உடன்பாட்டுக்கு உரிய விடயந்தான். ஆனால், தேர்தலொன்றுக்கு போய், புதிய அரசாங்கம் உறுதியாகப் பதவியேற்கும் வரையுள்ள காலம், நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரும் சவாலாகவே அமைந்துவிடும்.

இப்போதைய நிலையில், காலம் நீண்டு கொண்டே போனால், அதற்கு நாடு பெரும் விலைகொடுக்க வேண்டி ஏற்படும். பொருளாதாரத்தை ஈடுகொடுத்துக் கொண்டு செல்லக் கூடியநிலை நம்மிடம் இருக்குமா? என்பதைச் சிந்தித்தே சகல கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராக வேண்டும்.

ஜனநாயகத்தின் உச்சநாதம் தேர்தலாகும். தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும்; மக்கள் ஆணையைப் பெற வேண்டுமென்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், தற்போதைய நெருக்கடி நிலையைச் சீராக்கிவிட்டு தேர்தலுக்கு சென்றால் என்ன? என்பதுதான் எங்களது ஆதங்கமாக இருக்கிறது.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் இது தொடர்பில் குறுகிய நோக்கங்களைக் கைவிட்டுவிட்டு, மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது. ஒன்றுபட்ட தேசிய அரசொன்றை அமைத்து தற்காலிகமாகச் செயற்பட்டால் நெருக்கடி நிலைக்கு ஓரளவு தீர்வு காணலாமென்பது அரசியல் ஆய்வாளர்களினதும் பொருளியல் நிபுணர்களினதும் கருத்தாக இருக்கிறது.

ஆகவே, நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும், மக்கள் நலன் சார்ந்த சிந்தனையோடு அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதே காலத்துக்கு பொருத்தமானது.

என்றாலும், இடைக்கால தடை விதிக்கப்படுவதற்கு முன்னர் செயற்பட்ட காபந்து அரசாங்கத்தை தொடர்வதா? அல்லது தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதா? என்பதை தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் தான் நாம் இருக்கிறோம்.

Comments