அரசியலமைப்பை சரியாக விளங்காததே | தினகரன் வாரமஞ்சரி

அரசியலமைப்பை சரியாக விளங்காததே

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்

 

இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம், தேசிய ரீதியாக மாத்திரமல்ல, தமிழர் அரசியலிலும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். அரசியலமைப்பு குறித்த போதிய விளக்கமின்மையே அண்மைய அரசியல் சிக்கல் நிலைக்குக் காரணமென்று கூறும் அவர், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம், மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பற்றி வாரமஞ்சரி வாசகர்கர்களுக்கு விளக்குகின்றார்....

 

பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. தனக்கிருக்கும் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை ஜனாதிபதி எடுத்திருந்தார்?

புதிய பிரதமர் ஒருவரை நியமித்ததோடுதான் இந்தச் சிக்கல்கள் எல்லாம் ஆரம்பமாகின. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி புதிய பிரதமரை ஜனாதிபதி, அக்ேடாபர் 26 ஆம் திகதியன்று நியமித்தார். அதனைச் செய்வதற்கே அவருக்கு சட்டத்தில் அதிகாரம் இருந்திருக்கவில்லை. ஏனெனில் 19 ஆவது திருத்தத்துக்கு முதல் உறுப்புரை 47 (அ) வில் பிரதமரை எப்போது வேண்டுமானாலும் பதிவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருந்தது. மூன்று சந்தர்ப்பங்களில் அவர் அவ்வாறு செய்யலாம் என்று உறுப்புரை 47 இன் (அ), (ஆ) மற்றும் (இ) பிரிவுகளில் சொல்லப்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தத்தில் அது இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி பிரதமரை நீக்கலாம் என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளது. 46 (2) இல் காணப்படும் ஜனாதிபதி பிரதமரை நீக்கலாம் என்ற உறுப்புரை 19 ஆவது திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளது. எனவே 19ஆவது திருத்தத்தின் படி ஜனாதிபதிக்கு பிரதமரை நீக்கும் அதிகாரம் இருந்திருக்கவில்லை. எனவே தான் அது, சட்டவிரோதமானது, அரசியலமைப்புக்கு முரணானது என்று நாங்கள் சொன்னோம். ஆனால் அந்த நேரத்தில் அதனை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தவில்லை.இப்போது அதற்கெதிராக இரண்டு வழக்குகள் வைக்கப்பட்டுள்ளன. அப்போது நாங்கள் அதனை சவாலுக்குட்படுத்தாமைக்கான காரணம், பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென்று சொன்னாலும், பாராளுமன்றில் பெரும்பான்மையுள்ள ஒருவரே பிரதமராக இருக்க முடியும் என்பதால், பாராளுமன்ற பெரும்பான்மையை சோதித்துப் பார்க்கலாம் என்று ஐக்கிய தேசிய கட்சி எண்ணியிருக்கக்கூடும். ஆனால் ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வுகளை நிறுத்திக் கட்டளையிட்டார். பாராளுமன்ற உறுப்பினர்களை தமக்குச் சார்பாக வாங்குவதற்காகவே அந்த நடவடிக்ைககள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகளும் வெற்றியளிக்காமையால், நவம்பர் 9 ஆம் திகதியன்று ஜனாதிபதி பாரளுமன்றத்தைக் கலைத்தார். 19 ஆம் திருத்தத்துக்கு முன்னர் ஒரு வருடத்துக்குள் பாராளுமன்றத்தைக் கலைப்பதானால் பாராளுமன்ற அனுமதி தேவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஒருவருடத்தின் பின்னர் எப்போது வேண்டுமானாலும் ஜனாதிபதி கலைக்கலாம் என்றிருந்தது. ஆனால் 19 ஆம் திருத்தத்தில் 1 வருடம் என்பது 4 1/2 வருடங்கள் என மாற்றப்பட்டது. மற்றையது 2/3 பெரும்பான்மையோடு பாராளுமன்றம் கோரினால் மாத்திரமே கலைக்கலாம் என்றே 19 ஆம் திருத்தத்தில் மாற்றப்பட்டுள்ளது. 4 1/2 வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியால் பாராளுமன்றினைக் கலைக்க இயலாதென்பது தெளிவாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத ஒரு அதிகாரத்தை அவர் எடுத்துச் செயற்பட்டதால்தான் நீதிமன்றின் உதவியை நாடவேண்டியிருந்ததது. நீதிமன்று உடனடியாக செயற்பட்டு கலைப்பதற்காக ஜனாதிபதி வழங்கிய உத்தரவுக்குத் தடை போட்டது. அதனால்த்தான் பாராளுமன்றம் கூடக்கூடியதாகவிருந்தது. 13 ஆம் திகதி மாலை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.14 ஆம் திகதி, காலையில் ஜனாதிபதி பாராளுமற்றத்தைக் கூட்ட அழைப்பு விடுத்திருந்தார். 14 ஆம் திகதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பாராளுமன்றில் பெரும்பான்மை இல்லையென்பது நிரூபிக்கப்பட்டது. அது குறித்த அறிவித்தலை 15 ஆம் திகதி காலையில் சபாநாயகர் விடுத்தார். மீண்டும் 16 ஆம் திகதி மீளவும் அது நிறைவேற்றப்பட்டது.பெயர் மூல வாக்ெகடுப்புச் செய்ய விடாமல் அது குழப்பப்பட்டாலும் குரல் மூல வாக்ெகடுப்பு மூலம் அது நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

இது தொடர்பிலான வழக்கு டிசம்பர் மாதம் 4, 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்ெகாள்ளப்பட்டது. இறுதியான விவாதங்களில் அவர்கள் முன்வைத்த ஒரு வாதம் தான், 2002 ஆம் ஆண்டும் இதே மாதிரியாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை மட்டுப்படுத்தி திருத்தமொன்று கொண்டுவரப்பட்டபோது 7 பேரடங்கிய நீதியரசர் குழாம் அவ்வாறு செய்ய முடியாதெனத் தீர்ப்பளித்தது என்பது. எனவே 19 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது, 4 1/2 வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியால் பாராளுமன்றைக் கலைக்க இயலாது என்றதிருத்தம் முன்னைய தீர்ப்புக்கமையக் காணப்படாமையால், 33 (c) யில் குறிப்பிட்ட பகுதி தனியாகப் பார்க்கப்பட வேண்டும் என வாதிட்டார்கள். ஜனாதிபதி எப்போது வேண்டுமானாலும் பாராளுமன்றத்தினைக் கலைக்கும் அதிகாரத்தினை 33 (c)வழங்கியிருப்பதாக அவர்கள் வாதிட்டார்கள்.

2002 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தமானது, இந்தமாதிரியான திருத்தமல்லவென்பதே அதற்கு எதிராக முன்வைக்கப் பட்ட வாதமாகும். அப்போது ஒரு பாராளுமன்றம் 6 வருடங்களைக் கொண்டதாக இருந்தது. 6 வருடங்களிலேயே பாராளுமன்றைக் கலைக்க இயலாது. அவ்வாறு கலைப்பதாக இருந்தால், ஜனாதிபதி எந்தக் கட்சியைச் சார்ந்தவரோ அந்தக் கட்சியல்லாத மற்றைய கட்சிகளுடைய எண்ணிக்ைகயில் பெரும்பான்மையால் ஏற்றுக்ெகாள்ளப்பட்ட வேண்டும் என்பதுதான் அந்தத் திருத்தம். எனவே இந்தத் திருத்தத்துக்கும் அதற்கும் பெரிய வேறுபாடு இருக்கின்றது. மற்றையது அதனைச் செய்ய முடியாது, அவ்வாறு செய்வதானால் சர்வஜன வாக்ெகடுப்புக்குச் செல்லவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை. முழு ஆறு வருடங்களுக்கும் அதனைச் செய்ய முடியாது. மூன்று வருடங்களுக்கு வேண்டுமானால் அந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டுவரலாம் என்றே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அப்போது அது நிறைவேற்றப்படவில்லை.

இதன் மூலம் நீதிமன்றம் சொன்னதென்னவென்றால் அவ்வாறு கலைப்பதற்கான காலம் மூன்று வருடங்களா நான்கு வருடங்களா என்பது கொள்கை அடிப்படையிலான தீர்மானம் என்பதனால் அதனை நீதிமன்று செய்ய இயலாது. பாராளுமன்றம் தான் செய்ய இயலும் என்பதுதான். அதனை நாங்கள் வழக்கின்போது சுட்டிக்காட்டினோம். மற்றையது, இந்த 19 ஆவது திருத்தமும் இதே நீதிமன்றுக்கு வந்தது. சர்வஜன வாக்ெகடுப்பில்லாமல் நிறைவேற்றலாம் என நீதிமன்று சொல்லித்தான் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட பின்னர், சபாநாயகரின் கையெழுத்திடப்பட்ட பின்னர் நீதிமன்றாலேயே அதனை கேள்விக்குட்படுத்த முடியாது.

மற்றையது 33 2(c) யில் ஜனாதிபதிக்குள்ள அனைத்து அதிகாரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் பாராளுமன்ற அமர்வுகளை நிறுத்துவதற்கு, பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு எனப் பல அதிகாரங்கள் உள்ளன. நீதிபதிகளை நியமிப்பதற்கெல்லாம் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டென்றும் ஜனாதிபதியின் அதிகாரம் நிரற்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக அவ்வாறு அதிகாரங்களாக குறிப்பிடப்பட்டவற்றிலெல்லாம், அவர் தன்னிச்சையாகச் செயற்பட முடியாது. அரசியலமைப்பின் ஏனைய பகுதிகளில் ஏன் அவ்வாறு தன்னிச்சையாகச் செயற்பட இயலாது என்பதற்கான வரையறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நீதியரசர்களை அவர் நியமிக்கலாம் எனச் சொல்லப்பட்டிருந்தாலும், அரசியலமைப்புக்குழுவின் அங்கீகாரத்தின் பெயரிலேயே அந்நியமனங்களை அவர் மேற்கொள்ளலாம் என இன்னோரிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற அமர்வுகளை அவர் ஒத்திவைக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டாலும், இரண்டு மாதங்களுக்கும் மேல் ஒத்திவைக்க இயலாது என மட்டுப்படுத்தபட்டிருக்கின்றது. 70 ஆம் உறுப்புரையில் தான் எவ்வாறு அதிகாரங்கள் பயன்படுத்தப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 70 ஆம் உறுப்புரையிலேயே கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், அதே 70 ஆம் உறுப்புரையிலேயே முதல் 4 1/2 வருடங்களாக இருந்தால், பாராளுமன்றம் 2/3 பெரும்பான்மையுடன் விண்ணப்பித்தாலொழிய ஜனாதிபதி பாராளுமன்றினைக் கலைக்க இயலாது எனச் சொல்லப்படிருக்கின்றது. சட்டங்கள் எல்லாமே அவ்வாறானவைதான். ஓரிடத்தில் உரி​ைமகள் சொல்லப்பட்டிருந்தால் இன்னோரிடத்தில் அவற்றுக்கான மட்டுப்பாடுகள் இருக்கும். எதனையும் தனியாகப் பார்க்கவும் இயலாது. இதற்கு நல்லதொரு உதாரணத்தைச் சொல்லலாம். ஒர் வாயிற்காப்போனுக்கு நியமனக் கடிதம் வழங்கினால், வாசற் கதவைத் திறப்பது மற்றும் மூடுவது என்பன அவரது கடமைகளாகச் சொல்லப்பட்டிருக்கும். அவரது நியமனக் கடிதத்திலேயே காலை 6 மணிக்குத் திறந்து மாலை 6 மணிக்கு மூட வேண்டும் என வேறோரிடத்தில் சொல்லப்பட்டிருந்தால், நான் எப்போது வேண்டுமானாலும் திறந்து மூடுவேன் என்று அவர் அடம்பிடிக்க முடியாது. பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மை விண்ணப்பிக்காமல் ஜனாதிபதியால் மன்றினைக் கலைக்க முடியாதென்பதை நீதிமன்று ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்திருக்கின்றது.

தம் மீதான இடைக்காலத் தடையைநீக்குமாறு மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினரால் தாக்கல்செய்யப்பட்ட வழக்கில் உள்ள அரசியலமைப்பு ரீதியான சிக்கல் என்ன?

அதில் சிக்கல் ஒன்றுமில்லை. உறுப்புரை 48 (2) நம்பிக்ைகயில்லாத் தீர்மானமொன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட அந்தத் தருணத்திலேயே அமைச்சரவை கலைக்கப்பட்டதாகக் கருதப்படும் என்று கூறுகின்றது. நவம்பர் 14 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாங்கள் நம்பிக்ைகயில்லாத் தீர்மானத்தை பாராளுமன்றில் நிறைவேற்றினோம். அது சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுமிருக்கின்றது. என்ன அதிகாரத்தினால் இந்தப் பதவியில் இருக்கின்றீர்கள் என்ற வழக்கிைனத் தாக்கல் செய்தோம். அதற்கமைய மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியிலும் அவரது அமைச்சர்கள் அமைச்சுப் பதவியிலும் செயற்பட இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டது. எங்களது வாதத்துக்கு வைக்கப்பட்ட எதிர்வாதம் பாராளுமன்றில் நம்பிக்ைகயில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதம் சரியானதல்ல, நிலையியற் கட்டளைகளைத் தளர்த்தியிருக்க முடியாது, குரல் மூல வாக்ெகடுப்பு தவறானது, வாக்ெகடுப்பின் பின்னர் தீர்மானம் நிறைவேற்றபட்டதென்பது முதலில் எழுத்து வடிவில் இருக்கவில்லை, பாராளுமன்றப் பதிவேட்டில் திருத்தப்படாத பிரதியே பிரசுரிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் எதிர்வாதம் செய்தனர். உண்மையில் பாராளுமன்ற நிகழ்வுகளை நீதிமன்றம் கேள்விக்குட்படுத்த இயலாது. நாங்கள் நீதிமன்றம் சென்றது பாராளுமன்றத்தில் நடைபெற்றவற்றை கேள்விக்குட்படுத்துமாறு கோரவல்லை. உறுப்புரை 48 (2) க்கமைய சட்டவிரோதமானதொரு பிரதமரும் அமைச்சரவையும் இயங்குகின்றனர். அதனை தடைசெய்யுமாறே கோரினோம். அதனாலேயே உச்ச நீதிமன்றின் மூன்று நீதிபதிகளும் மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத்தடையை தளர்த்த மாட்டோம் எனத் தீர்ப்பளித்தனர். ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவில் இருந்து மேன்முறையீட்டைக் கேட்கத் தாம் தயாராக இருப்பதாக நீதியரசர்களில் இருவர் சொல்லியிருக்கின்றார்கள்.

இரண்டு தீர்ப்புகளும் வௌியாகிய நிலையில் தற்போது பதவி விலகப்போவதாக மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்துள்ளாரே?

உண்மையில் அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் அவர் பிரதமராக பதவியில் இல்லை. அத்தோடு ரணிலும் மீண்டும் பிரதமராக பதவியேற்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் 26 ஆம் திகதி நடைந்ததெல்லாம் சட்டவிரோதமானவையாகும். ஆனால் எவருக்கும் குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக அனேகமாக இன்று ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்கின்றார்.

எந்தவித அதிகாரங்களும் அற்றதாயின் ஜனாதிபதி முறைமையையே இனிமேல் தேவைப்படாதே?

19 ஆவது திருத்தச் சட்டத்தில் நாங்கள் செய்தது அதுதான். நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறையில் நிறைவேற்றதிகாரத்தை நீக்குவதுதான் பிரதானமாக ஜனாதிபதி மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி. அதனைத்ததான் நாங்கள் செய்தோம். சர்வஜன வாக்ெகடுப்பில்லாமல் குறைக்கக்கூடிய அதிகாரங்கள் எல்லாம் குறைக்கப்பட்டுள்ளன. நிறைவேற்றதிகாரத்தில் உள்ள சில பகுதிகள் சர்வஜன வாக்ெகடுப்பில்லாமல் திருத்தப்பட முடியாதது. அவை தவிர நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையில் உள்ள பெரும்பாலான அதிகாரங்கள் 19 ஆவது திருத்தத்தில் குறைக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமானது என்னவெனில் 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையில் உள்ள அதிகாரங்களை முக்கால் வாசிக்கும் மேல் குறைத்துள்ளது என்பது துரதிர்ஷ்டமாக எவருக்கும் விளங்கவில்லை. எமது நாட்டிலுள்ள அனேக மக்களுக்கும் விளங்கவில்லை. அரசியலமைப்பினை சரியாக விளங்கிக் கொண்டிருந்தால் இந்த சிக்கல்கள் எல்லாம் எழுவதற்கு வாய்ப்பிருந்திருக்காது. முன்பு ஜனாதிபதிக்ெகன இருந்த அதிகாரங்களை 19 ஆம் திருத்தம் பாரியளவில் குறைத்திருக்கின்றதென்பதை தற்போதைய நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலம் எல்லோரும் அறிந்துமிருப்பர். அதற்காக ஜனாதிபதி முறைமையை ஒழித்து விடுவதல்ல. பெயரளவில் ஒரு ஜனாதிபதிப் பதவி அவசியமானது.

பாராளுமன்றில் பெரும்பான்மைபலமுள்ளவரை மாத்திரமே ஜனாதிபதி பிரதமராக நியமிக்க இயலும். ரணில் விக்கரமசிங்கவை நியமிக்க இயலாதென ஜனாதிபதி கூறிவந்தார். அவ்வாறு அவருக்கு விருப்பமான ஒருவரைத்தான் பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அரசியலமைப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. பாராளுமன்றின் நம்பிக்ைகயைப் பெற்றவரைத்தான் அவர் நியமிக்க வேண்டும் என்றுதான் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒருவருக்கும் பாராளுமன்றில் நம்பிக்ைகயில்லாதபோது ஜனாதிபதி ஒரு தற்துணிவு அதிகாரத்தில் இவர் நம்பிக்ைகயை வெல்லக்கூடும் என யாருக்ேகனும் பதவியைக் கொடுத்தாலும் கொடுத்த சிலகாலங்களுக்குள் அவர் பாராளுமன்றில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதுதான் பாராளுமன்ற ஜனநாயகம். அக்ேடாபர் 26 ஆம் திகதியன்று நிதிச்சட்டமூலத்தையே அரசு நிறைவேற்றியிருந்தது. அப்படியாயின் அது பெரும்பான்மையை இழந்திருக்கவில்லை. அப்படியிருக்க பெரும்பான்மை ஆதரவில்லையென ஜனாதிபதி நினைத்து புதிய பிரதமரை நியமித்திருந்தாலும், புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட ஓரிரு நாட்களுக்குள் நம்பிக்ைகயை நிரூபித்திருக்க வேண்டும். பாராளுமன்றினைக் கலைத்திருக்கக் கூடாது. இந்தப் பாராளுமன்றில் மஹிந்தவுக்கு பெரும்பான்மை இருக்கின்றதா இல்லையா என்பதனை நிரூபித்த பின்னர் அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்க வேண்டும்.

இவையெல்லாம் ஜனாதிபதியின் தவறுகள். அரசியலமைப்பினை மீறிய ஜனாதிபதியின் செயல்கள். சுருக்கமாகச் சொன்னால் 19 ஆவது திருத்தம் எதைச்செய்தது என்ற விளக்கம் இல்லாமையின் விளைவுதான் இதுவென்பேன்.

புதிய அரசாங்கம் அமைவதில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு எவ்வாறானதாக அமையும்?

அதனை நாங்கள் எப்போதும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம். தற்போது பாராளுமன்றின் நம்பிக்ைக ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கின்றதென்று நாங்கள் வாக்களித்திருக்கின்றோம். வாக்களித்தபோதும் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம் நாங்கள் அரசாங்கத்தில் சேரவில்லை, நாங்கள் எதிர்க்கட்சியில்தான் இருப்போம் என்று. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஐ.தே.க அரசு கொண்டு வரும் பிரேரணைகள், சட்டங்கள், என்பன உகந்ததாகப் பட்டால் மாத்திரமே ஆதரவு கொடுப்போம்.

இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகத்தை நிலைநிறுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு தேசிய ரீதியாக அதன் மதிப்பினை உயர்த்தியிருக்கின்றது. வடக்கு கிழக்கில் கூட்டமைப்பின் அரசியலை அது பாதிக்காதா?

எனக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், எங்களுக்கான ஆதரவு தற்போது அதிகரித்தருக்கின்றதென்றே நான் அறிகின்றேன். அதற்குக் காரணம் எங்களது மக்கள் 2010 ஆம் ஆண்டும் 2015 ஆம் ஆண்டும், மஹிந்த ராஜபக்‌ஷவை அப்புறப்படுத்தவென்றே வாக்களித்தவர்கள். அது இராணுவத் தளபதியாயிருந்தாலும் அவருக்கு வாக்களித்தவர்கள். அதே வருடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு அளித்த வாக்குகளிலும் பார்க்க இராணுவத் தளபதிக்கு அளித்த வாக்குகள் இரண்டு மடங்கு அதிகளவானவை. பின்னரும் மைத்திரிபால சிறிசேன வேட்பாளரான போதும்கூட மஹிந்த ராஜபக்ஷ வென்றுவிடக்கூடாதென்பதற்காக வாக்களித்தவர்கள் எங்கள் மக்கள். கடந்த மூன்று வருடகாலமாக இந்த அரசு தொடர்பில் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்திருந்தார்கள் என்து உண்மை. அதற்கான பொறுப்பையும் எங்கள் தலைகளில்தான் மக்கள் சுமத்தினார்கள். கூட்டமைப்பு அரசைப் பாதுகாக்கின்றது. ஆனால் அதனால் எமக்கு எந்தவித நன்மையும் இல்லை என்றது. அந்தக் குற்றச்சாட்டில் நியாயமும் இருந்தது. ஆனால் திடீரென மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர்தான், நாங்கள் என்ன செய்து கொண்டிருந்தோம் என்பது எங்கள் மக்களுக்கு விளங்கியது. ஒரு பெரிய அபாயத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் முயற்சியையே நாங்கள் இந்த மூன்று வருடங்களும் பிரதானமாகச் செய்துகொண்டிருந்தோம் என்பது எங்கள் மக்களுக்கு விளங்கியிருக்கின்றது.

புதிய அரசியலமைப்பு பணிகளுக்கு என்ன நடக்கும்?

புதிய அரசியலமைப்பு மிக விரைவாக செயலுறுப்பெறும் என்ற வாக்குறுதி எங்களுக்கு ரணிலிடமிருந்தும், ஜனாதிபதியிடமிருந்தும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டிருக்கின்றது. ஒரு வருட காலத்துக்குள் அது செயலுறுப் பெறும் என்ற நம்பிக்கையிருக்கின்றது.

 

வாசுகி சிவகுமார்

 

Comments