எங்கள் ஊர் ஆலமரம் | தினகரன் வாரமஞ்சரி

எங்கள் ஊர் ஆலமரம்

எங்களில் ஓர் உறவாய்

மௌனமாய் உறவாடிய

பசுமையின் விருட்சம்

இதயத்தின் பரிசம்

பழைமையின் சுபீட்சம்

ஊருக்கு ஒரு நாட்டாமையாய்

தெருவோரம் கம்பிரமாயிருந்து

மனிதர்களின் புலம்பலுக்கெல்லாம்

தலையசைத்து ஆறுதல் சொல்லியிருப்பாய்

ஐம்பத்தாறில் வெள்ளம்

எழுபத்தெட்டில் சூறாவளி

ஆடிக் காற்றுக்கும்

அசையாத நீயோ

மழை அடித்து மலை சாந்து

குப்புறக் கிடந்த உன் காட்சி

அங்கு எல்லோர் மனதையும்

நெகிழ வைத்தது

இருநூறு வருடங்கள் உனக்காம்

பிரிட்டீஸ் காரன் நட்டவனாம்

கொட்டும் மழையில் வெள்ளமாய்

பிளஸ்வெக் ஓடியது அங்கு

வயதான பாட்டன்

நீ சரிந்து கிடப்பது கண்டு சொன்னான்

சரி, பிழைக்கு அப்பால்

சரியென்று கேட்டு உன்னைப் போல்

மௌனமாய் தலையசைத்து கேட்டனர்

காற்றோடு வரும் புழுதி பிடித்து

துய சுவாசக் காற்றை தந்த நீ

கோடைக் காலம் குடையாய்

உன் நிழல் பட்டு மேனி குளிரும்

மாரிக் காலம் போர்வையாய்

அன்னையின் சேலையென

தலை துவட்டும் இலைகள்

ஊரைத் தாண்டி போகும் போது

ஏ.பி.சீ ஆலயடிக்கு வாருங்கள்

கூடுவதற்காய் ஊராருக்கு

முகவரி தந்த அடையாள விருட்சம்

நீ சரிந்த போது தான்

உன் உறவுக்கார ஆலகளை நினைத்தேன்

தம்பிலுவில் சந்தையடி, திருக்கோவில் சந்தியடி

ஊருக்கு நிழல் தந்த அருமை

வெளியூர் பயணம் முடித்து

ஊர் வரும் போதுதெல்லம்

வாசற்படி வந்து அன்னை

அணைப்பது போல் என்னை

நீ தலையசைத்து வரவேற்கும்

உன் அழகே தனி சுகம்

இனி அந்த இடம் ஏக்கத்துடனே

தென்றலும் கடக்கும்

என் இதயம் போல...

Comments