எஹலபொலவை ஆங்கிலேயரின் கைப்பாவையாக மாற்றிய டொய்லி | தினகரன் வாரமஞ்சரி

எஹலபொலவை ஆங்கிலேயரின் கைப்பாவையாக மாற்றிய டொய்லி

மன்னனை வீழ்த்தும் பிலிமத்தலாவையின் எண்ணத்தை ஈடேற்றும் முயற்சியில் எஹலபொல மறைமுகமாக ஈடுபட்டுள்ளமை குறித்து தகவலறிந்த ஆங்கிலேயர் கண்டியை கைப்பற்றும் தமது எண்ணம் ஈடேறப் போவதாக உணர்ந்தனர்.

1803ஆம் ஆண்டு நிகழ்ந்த போரின் போது மரண அடிகொடுத்து ஆங்கிலேயரை புறமுதுகு காட்டி ஓடச் செய்த ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனை முறியடிப்பது இலகுவானதல்லவென கருதிய பிரிட்டிஷ் அரசு இலங்கையின் ஆளுநராக தகுதி வாய்ந்த ஓர் அதிகாரியை நியமிக்க தீர்மானித்தது. அதன் பிரகாரம் பிரிட்டிஷ் மாமன்னரின் தெரிவாக இலங்கையின் ஆளுநராக நியமிக்கப்பட்டான் ரொபட் பிரவுன்றிக். இவன் 1812ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆளுநராக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகை தந்தான்.

எஹலபொலவினால் கண்டி அரசு காட்டிக் கொடுக்கப்பட்ட வரலாற்று துரோகத்திற்குப் பக்கபலமாக பிரவுன்றிக்கின் மூர்க்கத்தனமான யுத்த மனோபாவமும், மொழிபெயர்ப்பாளன் என்னும் போர்வைக்குள் புலனாய்வாளனாக தொழில் புரிந்து வந்த சூழ்ச்சிகள் புரிவதிலும், திட்டங்களை சாதூரியமாக வகுப்பதிலும் வல்லவனாக விளங்கிய ஜோன் டொயிலின் செயற்பாடுகளும் ஒன்றிணைந்தன.

53 வயது நிரம்பிய ரொபர்ட் பிரவுன்றிக் ஓர் ஐரிஷ் குடிமகனாகும். சிவில் நிர்வாகத்தில் எவ்வித தகுதியும், அவனுக்கு இருக்கவில்லை. எனினும் ‘யோக் சக்கரவர்த்தி’யின் போர் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான செயலாளராக பதவி வகித்த அனுபவம் அவனுக்கிருந்தது.

ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னனை தோல்வியுறச் செய்வதன்மூலம் முழு இலங்கையையும் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்குள் கொண்டுவருவது தமது குறிக்கோளாகக் கொண்டு பிரவுன்றிக்கை இங்கு அனுப்பிவைத்தது ஆங்கிலேய அரசு. அவனது எட்டுவருட கால இலங்கை வாசத்தில் இலங்கை தனது இறைமையை இழந்ததோடு வரலாறு காணாத துன்பங்களையும் தொல்லைகளையும் இந்நாட்டு மக்கள் அனுபவிக்க நேர்ந்தது.

இராஜசிங்க மன்னனையும் அவனது நாயக்கர் இன உறவுகளையும் இலங்கையிலிருந்து விரட்டும் முயற்சியில் இறங்கியிருந்த எஹலபொல போன்றோரின் செயற்பாடுகள் பிரவுன்றிக்கின் வருகையின் போது குறைந்திருக்கவில்லை. இவ்விடயங்கள் தொடர்பாக டொயிலியின் மூலம் அடிக்கடி தகவல்களை திரட்டிய வண்ணம் தனது முயற்சியில் தளராதிருந்தான் ஆளுநர்.

முழு இலங்கையையும் தமது சாம்ராஜ்யத்திற்குள் அடிமைப்படுத்தி தனது பதவிக்காலத்தை ஆங்கிலேய அரசின் பொற்காலமாக்கும் கனவை நனவாக்கிட கண்டியின் சிங்கள பிரதானிகளுடன் கள்ள தொடர்புகளை விரிவுபடுத்துமுகமாக டொயிலிதன் மூளைக்கு வேலை கொடுக்கலானான் அவன்.

அரசனுக்கு அடுத்ததாக இரண்டாம் நிலையான ஆக உயர்ந்த பதவியாகிய முதன் மந்திரி பதவியில் எஹலபொல இருந்த போதும், அவன் மீதான அரசனின் சந்தேகம் வளர்ந்த வண்ணமே இருந்தது. இதே வேளை எஹலபொல மீது தீராத பகைமை கொண்டவனாகிய மொல்லிகொடை, எஹலபொல பற்றிய வதந்திகளை அரசனின் செவிகளில் அடிக்கடி போட்டுக் கொண்டிருந்தான்.

மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் இரண்டு மனைவியர்களுக்கும் குழந்தைப் பாக்கியம் இல்லாமை காரணமாக மூன்றாம் திருமணத்திற்கு ஏற்பாடுகள் நிகழ்ந்தன. தென்னிந்தியாவின் மதுரை நகரிலிருந்து அழைத்துவரப்பட்ட நாயக்கர் இனத்தவர்களாகிய இரு சகோதரிகள் இவ்வாறு மணமகள்களாகினர். தமது உறவினர்களின் பலத்த வேண்டுகோளின் பேரில் இவ்வாறு மூன்றாம் திருமணமாக இருவரை மன்னன் மணந்ததாகவும், குழந்தைப்பாக்கியம் கருதி இவ்விவாகம் நிகழ்ந்ததாகவும் கூறப்பட்டது. அரசனைவிட வயதில் மிகவும் குறைந்தவர்களாகிய இவ்விளம் பெண்களுடனான திருமண வைபவத்திற்கு கண்டியின் அனைத்து சிங்கள தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. திருமண வைபவத்திற்கு முதலமைச்சர் எஹலபொலவும் வருகை தந்தபோதும் ஓர் அரசனுக்கு வழங்கப்பட வேண்டிய அளவுக்கு பெறுமதியற்ற அன்பளிப்பொன்றை வழங்கியதால் மன்னன் எஹலபொல மீது கிலேசம் கொள்ள நேர்ந்தது. தம்மை எஹலபொல அவமதித்தாக அங்குருந்த அனைவரின் முன்னிலையிலும் எஹலபொல மீது கண்டனத்தைத் தெரிவித்தான் இராஜசிங்கன். அத்தோடு முதன் மந்திரியாக பதவி வகித்துக் கொண்டு சபரகமுவையில் தமக்குரிய கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதில்லையெனவும் அவ்விடத்தில் தெரிவித்தான் மன்னன். இதனால் கவலையும், வெட்கமும் அடைந்தவனாக தனது மனைவி மக்களை கண்டியில் விட்டுவிட்டு இரத்தினபுரி நோக்கச் சென்றான் எஹலபொல.

முதலமைச்சர் ஒரு திறமையான நிருவாகியாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தவன். சப்ரகமுவ பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருக்கும் போது அவன் புரிந்த அபிவிருத்திப் பணிகள் இன்றளவும் மக்களால் போற்றப்படுகின்றன. விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதில் போதிய அக்கறை கொண்டவனாக அவன் ஆற்றிய மாபெரும் திட்டங்களில் பட்டுகெதற – வெரலுப்ப போன்ற விவசாய திட்டங்கள் இரத்தினபுரி மாவட்ட மக்களின் போற்றுதல் களுக்குரியதாகியுள்ளன. இப்பணிகளை நிறைவு செய்வதற்காக பிரசித்தி பெற்ற பட்டுகெதற முத்தெட்டுவேகம வளவில் எஹலபொல தங்கியிருந்ததாக வரலாற்று ஏடுகளில் இடம்பெற்றுள்ளது.

இப்பிரதேசத்தில் அங்கம்மன என்னும் தாழ்ந்த நிலப்பரப்பின் மேற்பகுதியில் 800 அடி உயரத்தில் குளமொன்றை நிர்மாணித்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப் பாசன வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாக இன்றும் இங்கு காணப்படும் ‘எஹலபொல பேல்ல’ என்னும் தடுப்புச் சுவர் அவனது பாரிய அபிவிருத்திப் பணிகளுக்குச் சான்று பகிர்கின்றது.

இரத்தினபுரி மாவட்டத்தில் பல விகாரைகளையும் அழகிய கட்டடங்களையும் நிர்மாணிப்பதில் பெரும் அக்கறை கொண்டவனாகவும், இங்கு மக்களின் பாராட்டுகளை தன்னகத்தே கொண்டவனாகவும் விளங்கும் எஹலபொல இரத்தினபுரியில் வசித்த வளவு இப்போது இரத்தினபுரி தேசிய நூதனசாலையாக பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனுக்கு தாம் வழங்கிய அன்பளிப்பு தகுந்ததல்லவென உணர்ந்த எஹலபொல, இரத்தினபுரியில் வீரமந்திரி என்னும் பொற்கொல்லனிடம், மணிமகுடமொன்றும், தங்க வாளொன்றும் செய்து தருமாறு கோரியிருந்தான். இத்தகவலறிந்த அமைச்சர் மொல்லிகொடை, அரசனாக முடிசூட்டிக் கொள்வதற்கு அவன் தயாராகி வருவதாகவும், தமிழர்களையும் விட தாமே முடிசூடும் தகுதியுடையவனென கூறிவருவதாகவும், அரசனாவதற்கு வேண்டிய ஆயத்தங்களில் தற்போது எஹலபொல ஈடுபட்டுவருவதாகவும் மணிமுடியும், தங்க வாளும் அதற்காக தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மன்னனின் காதில் போட்டு வைத்தான்.

முதன்மந்திரி மீது ஏற்கனவே சந்தேகம் கொண்டிருந்த மன்னன் இச்செய்தியினால் குழப்பமடைந்தான். மன்னனுக்கு அன்பளிப்பு செய்வதற்காகவே இரத்தினபுரியில் மணி மகுடமும், தங்கவாளும் தயாரிக்கப்பட்டதாக வரலாறு கூறினும், மன்னன் ஸ்ரீ விக்கிர இராஜசிங்கனின் கைதின் பின்னர் அரசனுக்குரிய உடைகளை அணிந்தும் தலைக்கவசத்தை சிரசில் வைத்தும் அழகு பார்த்தமையோடு ஒப்பிட்டால் இரத்தினபுரியில் தயாரிக்கப்பட்டவை அரசனுக்காகவல்ல என்பதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இராஜசிங்களின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஆங்கிலேயர்களின் உதவி அவசியம் என்பதை உணர்ந்திருந்த எஹலபொல, சூரிய அஸ்தமனமில்லாத மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிவரும் பிரிட்டிஷ் அரசு, இலங்கைக்குள் ஒரு குட்டியரசுக்கு இடமளிக்காது என்ற உண்மையை புரிந்து கொள்ளவில்லை.

‘அரசுரிமையை அடைய ஆங்கிலேய அரசு வழிவகுக்கும்’ என்ற நம்பிக்கையை எஹலபொலவிடம் ஏற்படுத்துவதில் டொய்லியும் வெற்றியடைந்திருந்தான்.

டொயிலியுடனான எஹலபொலவின் தொடர்புகளுக்கு பௌத்த பிக்குமார்களும் உதவியிருந்தனர் என்று டொயிலியின் டயறியில் இடம்பெற்றுள்ளது. முதலில் தரகர்கள் மூலமாகவும் கடிதத் தொடர்புகள் மூலமாகவும் மாத்திரமே டொயிலி – எஹலபொல தொடர்புகள் நிகழ்ந்தன. 1814ஆண்டு எஹலபொல கண்டியிலிருந்து இரத்தினபுரி சென்றதன் பின்னரே நேரடி சந்திப்புகள் நிகழ ஆரம்பித்தன.

கண்ணால் காணாத நண்பர்களாக தொடர்புகளைக் கொண்டிருந்த டொய்லியும் எஹலபொலவும் பரஸ்பரம் தமது மடல்களில் ‘உண்மை நட்பு’, ‘ஆருயிர் நண்பர்’ போன்ற வாசகங்களை பயன்படுத்தியுள்ளனர். அத்தோடு ஒரு மடலில்,

‘பறவைகளை வேட்டையாட பாவிக்கும் சிறிய ரக துப்பாக்கியொன்றை தந்துதவுக!’ என எஹலபொல டொய்லிக்கு எழுதியதாக 1813ம் ஆண்டு டொய்லியின் டயறியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சில தினங்களில் ‘என்னுடைனான உங்களின் நட்பு தொடர வேண்டும்’ என எழுதியுள்ளான்.

1814ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எஹலபொல டொய்லிக்கு எழுதிய கடிகத்தில் எஹலபொலவின் உண்மையான நோக்கம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

“உங்களுக்கு எமது நாடு பற்றிய எதிர்பார்ப்பு இருக்குமேயானால் காலம் தாழ்த்தாது நடவடிக்கை எடுக்கவும்.” இம்மடல் 1814 ஜனவரி 31ஆம் திகதி டொய்லிக்குக் கிடைக்கப்பெற்றது. இக்கடிதம் கிடைத்த பின்னர் டொய்லி ஆளுநருக்கு கடிதத்தை அனுப்பி வைத்தான். ஆளுநர் பிரவுன்றிக் பிரித்தானிய அரசுக்கு அனுப்பிய மடலில் மத்திய மலைநாட்டு கண்டி இராசதானி தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு எந்தளவு முக்கியத்துவமானதென விளக்கியதோடு, கண்டி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான திட்டங்கள் உடனே தேவைப்படுவதாக எழுதியுள்ளான். முதலமைச்சருக்கு இப்போது தேவைப்படுவது கண்டி இராசதானியை பிரிட்டிஷ் அரசுக்கு உரித்தாக்குவதேயாகும் எனவும் இம் மடலில் தெரிவித்துள்ளான்.

டொய்லி எஹலபொலவுக்கு ஒரு கடிதம் எழுதினான். அரசனின் தவறான நடவடிக்கைகள் மற்றும் கொடூரமான செயல்கள் பற்றி ஆங்கில அரசு வெறுப்படைந்துள்ளதோடு ஆங்கிலேயரின் மனிதாபிமானம் பற்றியும் அதில் விளக்கியிருந்தான்.

‘உலகில் கொடூரமான ஆட்சியாளர்களுக்கு தண்டனை வழங்குவதைவிட அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதே பிரித்தானியர்களின் பண்பு. எமது நோக்கம் குடிமக்களை அக் கொடியவர்களிடமிருந்து காப்பாற்றுவதேயாகும்” என (முதலை) கண்ணீர் விட்டுள்ளான்.

கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வா எழுதிய பிரித்தானியர்களின் ஆட்சியின் கீழ் இலங்கை என்னும் நூலில்,

மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் தான்தோன்றித்தனமானதும், மூர்க்கத்தனமானதுமான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பிரித்தானியர்களின் பங்களிப்பு அவசியமெனவும், மன்னனுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதற்கும் ஆங்கிலேயருடன் நட்புடன் பணியாற்றுவதற்கு தாம் விரும்புவதாகவும் எஹலபொல பதில் மடலில் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

இதே சமயம் அமைச்சர் மொல்லிகொடை மூலமாக இரத்தினபுரியில் மணிமுடியும், தங்கவாளும் தயாரிப்பது பற்றி அறிந்திருந்த மன்னன் உடனடியாக இரத்தினபுரியிலிருந்து கண்டிக்கு வருமாறு எஹலபொலவுக்கு தகவல் அனுப்பினான். (தொடரும்)

தகவல்  
செனவிரத்தின மகா லேக்கம்  
(மஹா நுவரயுகய 1580- - 1815)  

Comments