பெருந்தோட்டப் பாதை அமைப்பு: | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்டப் பாதை அமைப்பு:

பெருந்தோட்டப் பகுதிகளில் அபிவிருத்திக்காக பல்வேறு தரப்புகளிடமிருந்து கிடைக்கும் நிதி முறையாகவோ முழுமையாகவோ பயன்படுத்துவது கிடையாது என்ற குற்றச்சாட்டு நெடுநாட்களாகவே இருக்கிறது. குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளுக்குச் செல்லும் பாதைகளைச் சீரமைப்பதில் இடம்பெறும் குளறுபடிகள் ஏராளம். வழமையாக தோட்டப்பாதைகளை தோட்ட நிர்வாகங்களே பராமரிக்கும். இது ஆங்கிலேயர் காலத்திலிருந்து நிலவிவரும் நியதி. ஆங்கிலேயர் ஆட்சி இலங்கையைக் கைப்பற்றிய பின் (1796) முழு நாட்டையும் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் தலைப்பட்டது. 1815ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்டதோடு இது கைக்கூடியது.

இதன் பின்னர் தீவின் சகல பகுதிகளுக்குமான தொடர்பை இலகுவில் மேற்கொள்ளக்கூடிய தேவைக்காக பாதைகளை அமைக்கும் பணியில் பிரித்தானிய பேரரசு ஆர்வம் காட்டியது. அத்தோடு மத்திய மலை நாட்டில் கோப்பிப் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் நோக்கத்தில் இரும்புப் பாதைகளை அமைக்கும் எண்ணமும் அவர்களுக்கு வந்தது. இதற்காக வேண்டியே 1820களில் தென்னிந்தியாவிலிருந்து இந்திய வம்சாவளித் தமிழர்களை இங்கு அழைத்து வந்தார்கள். இந்நாட்டு சிங்கள சமூகம் விவசாயத்தை நம்பி வாழ்ந்தது. தவிர அவர்கள் கடுமையான வேலைகளில் ஈடுபட விரும்பவில்லை. அத்துடன் ஆங்கிலேய ஆட்சியின் மீது வெறுப்புக் கொண்டவர்களாக சிங்கள கிராமவாசிகள் காணப்பட்டார்கள். இதன் காரணமாகவே கடினமான உழைப்பாளிகளாகவும் குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்தப்படக்கூடியவர்களாகவும் இருக்கக்கூடிய ஒரு தொகுதி தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.

ஆங்கிலேயர் ஏறக்குறைய 3000 அடிக்கு மேலுள்ள மலைப்பிரதேசங்களில் தேயிலைப் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க காரணமாக இருந்தவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்களே ஆவர். பெருங்காடுகளாகவும் கொடிய மிருகங்கள் வசிக்கும் பிரதேசங்களாகவும் காணப்பட்ட மலைநாட்டை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றி அந்நியச் செலாவணியை அள்ளித்தரும் பொருளாதார தேட்டமாக உருவாக்கிய அவர்களே குன்று குழிகளைச் சமப்படுத்தி கற்பாறைகளைக் குடைந்தும் பிளந்தும் அபிவிருத்திக்கு அவசியமான பாதை வசதிகளைப்பக்குவமாக ஏற்படுத்தினர். இதில் 1867இல் முதன் முதலாக கொழும்பிலிருந்து கண்டிக்கு புகையிரதப் பாதை தொடங்கி வைக்கப்பட்டது.

பெருந்தோட்டக் கட்டமைப்பை தனியானதொரு நிர்வாக அலகாகவும் அதேநேரம் மக்களின் உரிமை சம்பந்தமான விடயங்களைத் தேசிய ரீதியிலான முறைமையோடு இணைத்துச் செயற்படும் இராஜதந்திரத்தைக் கையாண்டது பிரித்தானிய ஆட்சி. இது சூட்சுமமான பிரித்தாளும் போக்கு. இதே நேரம் பெருந்தோட்டப் பாதைகள் ஒழுங்காக பராமரிக்கப்பட்டன. பெருந்தோட்டங்களுக்குள்ளேயே தோட்ட அதிகாரிகளின் உத்தியோகபூர்வ வசிப்பிடங்கள், பணிமனை, தேயிலை தொழிற்சாலைகள் என்று அமைந்திருந்ததால் வாகன போக்குவரத்துக்காக சீரான பாதை தேவையாய் இருந்தது. உயரத்தில் அமைந்திருந்த லயங்களுக்குச் செல்ல ஒழுங்கான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. பொதுவாக தோட்டங்களைவிட்டு வெளியே வந்து தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய அவசியம் பெருந்தோட்ட மக்களுக்கு இருக்கவில்லை.

காலக்கிரமத்தில் தோட்டத் தொழிற்சாலை, தோட்ட அதிகாரிகளின் வசிப்பிடங்கள் வரை தார்ப்பாதை போடப்பட்டன. ஆனாலும் பெரும்பாலான தோட்டப் பாதைகள் பிரதான பாதைகள் இணைப்பு வரை மண்பாதைகளாகவே காணப்பட்டன. எனினும் கான் வசதிகளோடு அடிக்கடி பழுது பார்க்கப்பட்டும் செப்பனிடப்பட்டும் வந்ததால் பொதுவாக அவை போக்குவரத்துக்கு உகந்ததாகவே அமைந்திருந்தன. இதற்காக பெருந்தொகைப் பணம் செலவிடப்பட்டது. ஆனால் ஆங்கிலேயர் நிர்வாகத்துக்கு எதிரான முழக்கங்கள் சுதந்திரத்துக்கு பின் அதிகமானது. ஆங்கிலேய நிர்வாகம் சிறுகச்சிறுக தோட்ட அபிவிருத்தியில் தமது கவனத்தையும் குறைக்க ஆரம்பித்தது. 1970களில் தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டன. எனினும் தோட்டப் பாதை அபிவிருத்தி குறித்து பெரிதும் கவனம் செலுத்தவில்லை. 1992இல் மீண்டும் பெருந்தோட்டங்கள் தனியார் கம்பனிகளுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் ஒரு சில தோட்ட நிர்வாகங்களைத் தவிர அநேகமானவை தோட்டப் பாதைகள் பற்றி கவனம் செலுத்தவில்லை. சில தோட்ட நிர்வாகங்கள் தோட்டப் பாதைகளைச் சிறப்பாக சீரமைத்துள்ளதுடன் அதனூடாக பிரவேசிக்கும் தனியார் வாகனங்களுக்கு கட்டணமும் அறவிடுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது பெருந்தோட்டப் பாதைகளின் பொதுவான நிலை கவலைக்குரியதாகவே உள்ளது. பல தோட்டங்களில் பாதைகள் பழுதடைந்து காணப்படுகின்றன. வாகனங்கள் செல்ல போக்குவரத்து வசதிகளே இல்லை. குண்டும் குழியுமாக சிதிலமடைந்து காணப்படும் தோட்டப் பாதைகளில் தனியார் வாகனங்களைக் கூலிக்கு அமர்த்துவதற்காக பெருமளவு பணம் செலவிட வேண்டியுள்ளது. போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் இன்றும் கூட பல தோட்டங்களில் மக்கள் தலைச் சுமையோடு கால்நடையாக செல்கிறார்கள்.

2006ஆம் ஆண்டு பெருந்தோட்ட மக்கள் சமூக அபிவிருத்திக்காக தேசிய நடவடிக்கை திட்டத் தயாரிப்பிற்கான ஆய்வின்போது பெருந்தோட்டப் பிரதேசங்களில் 8000 கி.மீற்றர் தோட்டப் பாதைகளும் 2000 கி.மீற்றர் தோட்ட இணைப்புப் பாதைகளும் புனரமைக்கப்பட வேண்டியுள்ளதாக இனம் காணப்பட்டதாக தெரியவந்தது. 8000 கி.மீற்றர் பாதையில் 2000 கி.மீற்றர் பாதையே புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. தோட்டப் பாதைகளைப் புனரமைக்க தோட்ட நிர்வாகங்கள் முன்வருவது கிடையாது. அனால் அதனைச் செய்ய வேண்டிய கடப்பாடு தோட்ட நிர்வாகங்களைச் சார்ந்த போதும் அதைப்பற்றி அக்கறை எடுப்பது இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். அண்மைக் காலங்களில் மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கூடாக சில இடங்களில் தோட்டப் பாதைகளின் சீரமைப்பு இடம் பெற்றுள்ளது.

ஆனால் இங்கும் ஏகப்பட்ட குளறுபடிகள் இடம் பெறுவதாக தெரிகின்றது. ஒதுக்கப்பட்ட பணம் செலவழிக்கப்பட்டும் பூர்த்தியாகாத பாதைகள், தரக்குறைவான பாதை நிர்மாணிப்புகள், சீர் செய்யப்பட்ட சில மாதங்களுக்குள்ளேயே பழையபடி குண்டும் குழியுமாக விழிப்பிதுங்கும் பாதைகள் என்று குறைபாடுகள். தோட்டப் பாதைகள் புனரமைப்புச் செய்வதில் பல்வேறு மோசடிகள் இடம் பெறுவதாகவே மக்கள் விசனப்படுகின்றார்கள். உரிய முறையில் பராமரிப்புப் பணியும் மேற்கொள்ளப்படுவதும் இல்லை. இவ்வாறாக அமைக்கப்படும் பாதைகள் குறுகிய காலத்திலேயே மீண்டும் பழுதடைந்து போகின்றதாம்.

இதே சமயம் பிரதேச சபைகளின் முழுப் பங்களிப்புடன் தொடர அண்மையில் பிரதேச சபை சட்டமூலத்தில் திருத்தமொன்று கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் பிரதேச சபைக்கூடான வரப்பிரசாதங்கள் பெருந்தோட்டப் பிரதேசங்களைச் சென்றடைவதில் காணப்பட்ட தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் பாதைகள் அமைப்பதில் இனி தோட்ட நிர்வாகங்களைக் குறை கூறிக்கொண்டு இருக்க முடியாது.

குறிப்பாக பெருந்தோட்டப் பிரதேசங்களை இணைத்து கொண்டதான சகல அபிவிருத்திப் பணிகளிலும் தமக்கான உரிமைகளை நிலைநிறுத்தும் கடப்பாடு பெருந்தோட்ட மக்களுக்கு உண்டு. இதை அவர்கள் உணரவேண்டும். தமது பேரில் ஒதுக்கப்படும் நிதி செலவிடப்படும் முறைமை, அதன் நியாயமான பயன்பாடு குறித்ததான பகுத்தாயும் பக்குவம் வரவேண்டும். இல்லாவிட்டால் சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விடாத கதையாகவே போய்விடும் பெருந்தோட்ட அபிவிருத்திக்கான அரசு வழங்கும் நிதியின் நிலைமை.

பன். பாலா

 

Comments