மக்களுக்கான மாற்றம் நிச்சயம் கிடைக்கும் | தினகரன் வாரமஞ்சரி

மக்களுக்கான மாற்றம் நிச்சயம் கிடைக்கும்

தேர்தலொன்று இல்லாமல் பிரதமர் பதவியிலிருக்கும் தேவை எனக்கில்லை

பொதுத் தேர்தலொன்று இல்லாமல் பிரதமர் பதவியில் இருக்கும் தேவை தனக்கில்லை என்பதுடன் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு ஜனாதிபதிக்கு வசதியாகவே தான் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான மாற்றம் நிச்சயமாகக் கிடைக்கும். அதனை தடுக்க எவராலும் முடியாது. கூட்டு எதிரணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,வடக்கு, கிழக்கு, மலையக கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகவும் பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக உருவாகியிருக்கிறோம் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை நேற்றுக்காலை இராஜினாமாச் செய்தார். தனது பதவி விலகல் குறித்து நேற்று விடுத்த விஷேட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, டிசம்பர் 12ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கவேண்டும் என்ற பிரேரணையைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார்கள். அன்றைய தினம் தான் மக்கள் அதனை புரிந்துகொண்டார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்க வேண்டுமென 117வாக்குகள் கிடைத்தன. இதில் த.தே.கூட்டமைப்பின் 14வாக்குகளும் கிடைத்தன. ரணிலை பிரதமராக்குவதற்கு த.தே.கூ வாக்களித்திருந்தாலும், நாங்கள் அரசுடன் இணையாமல் எதிர்க்கட்சியில் இணைந்தே இயங்குவோம் என மாவை சேனாதிராஜா கூறியிருக்கிறார். 103 உறுப்பினர்களை கொண்ட ஐ.தே.க 14 பேர்களை கொண்ட த.தே.கூ இன் பணயக் கைதிகளாக இருப்பதையே காண்கின்றோம். த.தே.கூட்டமைப்பு கூறும் விதத்தில் நாட்டை நிர்வகிக்கவில்லை என்றால், எவ்வேளையிலும் ஐ.தே.கட்சிக்கு பெரும்பான்மை இல்லாமல் போகலாம். த.தே.கூட்டமைப்பின் கைகளில் தான்

இன்று ரிமோட் கன்ரோல் இருக்கின்றது. தொடர்ந்தும் தேர்தல்களைப் பின்போடுகின்ற பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்கின்ற அரசியல் கட்சிகளின் கூட்டு ஒன்றுடன் தான் நாங்கள் இன்று மோதவேண்டியிருக்கின்றது. கடந்த அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தல்களை மூன்று வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. அதுவும் திகதி குறிப்பிடப்படாமல் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல எத்தனித்தபோது வழக்குகள் இல்லாத உள்ளூராட்சி சபை தேர்தல்களை மட்டுமாவது நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்ததாலேயே மக்களுக்கு அந்தத் தேர்தல் கிடைத்ததது. இல்லையாயின் அதுவும் கிடைத்திருக்க வழியில்லை.

இன்றோடு மாகாணசபை தேர்தல் ஒரு வருடமும் மூன்று மாதங்களும் கடந்துவிட்டது. அந்த தேர்தல்கள் நடத்தும் ஓர் அறிகுறிகூடத் தென்படவில்லை. அந்தத் தேர்தல் திகதி குறிப்பிடப்படாமல் பின்போடப்படும் விதத்தில் சட்ட ரீதியாக கட்டிப்போடப்பட்டுள்ளது.

நடைபெறவிருந்த பொதுத்தேர்தலும் இன்று மக்களுக்கு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 09ஆம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்ததன் பின்னர் தேர்தல் நடத்துவதற்கு எதிரானவர்கள் நீதிமன்றம் சென்று இடைக்கால தடை உத்தரவைப் பெற்றுக்கொண்டார்கள். இதன் பின் ஐ.தே.க சபாநாயகரின் உதவியுடன் கலைக்கப்பட்டிருந்த பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அவர்களுக்கு இருப்பதாக காண்பித்துப் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள். எனினும், டிசம்பர் 12ஆம் திகதியே என்ன நடந்தது என்பதை மக்கள் அறிந்துகொண்டார்கள்.

நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னரேயே டிசம்பர் 12ஆம் திகதி புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவருவதைப்பற்றி பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார். இந்த புதிய அரசியலமைப்பு நகல் சட்டம் தயாரிக்கப்பட்டு ஊடகங்கள் ஊடாக வெளிவந்தும் உள்ளன. உத்தேச அரசியல் அமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதும் இதில் ஒன்றாக கருதப்படுகின்றது. அப்போது 2019 டிசம்பர் மாதம் 09ம் திகதி முன்னதாக குறிக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் நடத்தவும் முடியாது. அதேபோன்று அந்த அரசியல் அமைப்பின் ஊடாக பாராளுமன்ற தேர்தல் முறைமையும் மாறுபடுகின்றது. அப்போது மாகாண சபை தேர்தல் பின்போடப்பட்டுள்ளது போன்று எல்லை நிர்ணய பிரச்சினையை காரணம் காட்டி திகதி குறிப்பிடப்படாமல் 2020ஆம் ஆண்டு நடத்தப்படுவதற்கு உத்தேசமாக உள்ள தேர்தலையும் ஒத்துவைக்கமுடியும். அதற்காகவே இவர்கள் இப்போது ஆயத்தமாகின்றார்கள். ஒக்டோபர் 26ஆம் திகதி ஜனாதிபதி எடுத்த தீர்மானம் மிகவும் வரவேற்கத்தக்கதாகும். ஆனால், 26ஆம் திகதிக்கு பின்னர் நிலை வேறுவிதமாக மாறியது. எப்படியாயினும் ஒரு தேர்தல் ஒன்றில்லாமல் முன்செல்லக்கூடிய ஒரு வேலைத்திட்டமே நடைபெற்றது.

மக்கள் எதிர்ப்பார்த்த ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக காலம் கடந்துவிட்டது. என்றாலும், இறுதியாக மக்களுக்கான மாற்றம் நிச்சயமாகக் கிடைக்கும். அதனை தடுக்க எவராலும் முடியாது. கூட்டு எதிரணியும் அரசாங்கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தரப்பினரையும் ஒன்றாக இணைத்தால் தற்போது நாட்டில் கிடைக்கும் வாக்குகளில் 54% வாக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகவும் பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக உருவாகியிருக்கின்றோம் என்றும் மஹிந்த ரஜபக்ஷ தனது அறிக்கையில் கூறியுள்ளார்

 

Comments