இதுதான் வாழ்க்கை | தினகரன் வாரமஞ்சரி

இதுதான் வாழ்க்கை

நீண்டு வளைந்து செல்லும் அந்த செம்மண் வீதியில் கொஞ்ச தூரம் சென்றால் அந்த வீடுவரும். வீட்டுக்குப் பக்கத்திலேதான் நேசரி வகுப்பு நடக்கிறது. 30க்கு மேற்பட்ட பிள்ளைகள் அங்கே ஆரம்பக் கல்வியைக் கற்று வருகிறார்கள். வீட்டுக்காரி றகுமானி பிள்ளைகளுக்கும், டீச்சருக்கும் மிகவும் உதவியாக இருந்தாள். நடுத்தர வயதைத் தாண்டிவிட்ட அவள் இயற்கையிலேயே “சோசியல் மைண்ட்” உடையவளாக இருந்ததால் அடுத்தவருக்கு உதவி ஒத்தாசைகள் செய்வதை தனது கடமை எனக் கருதி அதனைச் செய்து வந்தாள். அவளது கணவனும் இவற்றுக்கெல்லாம் ஆதரவாக செயற்பட்டு வந்ததால் “சமூக சேவகி” என்ற பெயர் அவளுக்குத் தானாகவே ஒட்டிக்கொண்டது.

அன்று வெள்ளிக்கிழமை அவ்வீட்டின் முன் ஒரே பரபரப்பு, ஊரே ஒன்று கூடிவிட்டது. அப்போது மிக வேகமாக முச்சக்கர வண்டி ஒன்று வந்து வீட்டுக்கு முன் நிறுத்தப்படுவதற்கும் றகுமானியை அவளது மூத்த மகன் இரண்டு கைகளாலும் அப்படியே தூக்கிக் கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது. முச்சக்கர வண்டி வைத்தியசாலையை நோக்கி புறப்படும போது அவளது கணவரும் பதறி அடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

காலையிலே வயலுக்குப் போனவர் மனைவிக்கு சுகயீனம் என்று கேள்விப்பட்டதும் பதறிப் போய் மோட்டார் பைக்கை எடுத்துக் கொண்டு தலை தெறிக்க ஓடி வந்தும், அவளைக் கண்டுகொள்ள முடியவில்லை உடனே வைத்தியசாலை நோக்கி மீண்டும் வேகமாக புறப்படத் தொடங்கினார்.

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு முன்னால் ஒரு பெருங்கூட்டமே கூடி இருந்தது. அந்த ஊர் மக்களின் பெரும்பாலானோர் அங்கே வந்திருந்தனர். சமூக சேவகி றகுமானியின் திடீர் சுகயீனம் அவர்களையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. ஊருக்கு நல்லது செய்யும் இவளுக்கு இப்படியான ஒரு நிலைமையா வர வேண்டும் என்று நினைத்த அவர்களின் முகங்களில் சோகம் படர்ந்து காணப்பட்டது.

அப்போது அங்கே வந்த சுபைரும் மிகுந்த கவலையோடும், துக்கத்தோடும் காணப்பட்டார். தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருந்ததால் உட்செல்வதற்கு அவர்களில் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பதறிப்போன சுபைர் அங்குமிங்கும் குறுக்கும் நெருக்குமாக நடந்துகொண்டிருந்தான். அவனது உள்ளம் அழுது புலம்பிக் கொண்டிருந்தது. ஊர் மக்கள் அவளின் நலனுக்காக துஆ செய்தனர்.

நீண்ட நேரத்திற்குப் பின்பு இவ்விருவராக உள்ளே சென்று நோயாளியைப் பார்க்க அனுமதி கிடைத்ததும் முதலாவதாக சுபைர் தனது மகனோடு உள் நுழைந்தான். அங்கே எந்த விதமான சலனமும் இன்றி மிக அமைதியாக உறக்க நிலையில் இருந்து றகுமானியைப் பார்த்ததும் அவனுக்குள் துயர அலைகள் முட்டி மோதிக் கொண்டு வந்தது. அப்படியே அவளை கவலை தோய்ந்த முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவன் காதருகே குனிந்து மெதுவாக அழைத்துப் பார்த்தான் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் கண் விழித்துப் பார்த்த அவள் கணவனை கஷ்டப்பட்டு அடையாளம் கண்டுகொண்டதும் மிகச் சிறிய ஒரு புன்னகையை உதிர்த்தவளாய் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள். அவளுக்கு நினைவு தப்பிக் கொண்டிருந்தது.

மூன்று நாட்களின் பின்னர் காலை 6.00 மணியளவில் றகுமானி வார்ட்டுக்கு மாற்றப்பட்டாள். இப்போது நோயின் தாக்கம் ஓரளவு குறைந்திருந்தாலும் எழும்பி நடமாடுவதோ, சரளமாக பேசுவதோ கஷ்டமாக இருந்ததுடன் உணவு உட்கொள்ளவும் முடியாத நிலையில் இருந்தாள். தொடர்ந்து சில நாட்களாக இதுவுமே சாப்பிடாததால் அடி அறுந்த தண்டு போல் வாடிச் சோம்பிக் கிடந்தாள் றகுமானி. அப்போது அந்த வாட்டுக்குள் கஞ்சுக் கோப்பையுடன் நுழைந்த சுபைர் மனைவியின் நிலைமையைக் கண்டு மனம் வாடி சோர்ந்து போனதில் அவனது இரு விழி ஓரங்களிலும் வழியத் தொடங்கிய கண்ணீர்த்துளிகளை யாருக்கும் தெரியாமல் மெதுவாகத் துடைத்துக் கொண்டான்.

படிப்படியாக றகுமானி தேரத் தொடங்கியதில் சுபைருக்குக் கொஞ்சம் சந்தோஷம் ஏற்பட்டாலும் எழும்பி நடமாடுவதில் அவளுக்கு இன்னும் சிக்கல இருப்பதால் கவலை அவனில் மேலிட்டு நின்றது. தனக்காகக் கஷ்டப்பட்டு துயரங்களை சுமந்து கொண்டு திரிகின்ற கணவனைப் பார்க்க றகுமானிக்கு பரிதாபமாக இருந்தாலும் அது வெளியில் காட்டிக்கொள்ள அவளால் முடியவில்லை.

அன்று மாலை சுபைர் வழமைபோல் வார்ட்டுக்கு வந்தான். றகுமானி எழுந்து கட்டிலோடு சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். அவளது முகத்தில் கொஞ்சம் மகிழ்ச்சி தெரிந்ததில் மகிழ்ந்து போன அவன் அருகில் சென்று அவளின் தலையை அன்போடு தடவி விட்டான். அந்த சுகம் றகுமானிக்குள் பேரானந்தமாய் ஊடுருவிச் சென்றது.

“என்ன றகுமானி இப்ப நல்லமா?”

“ஓரளவு”

“சீக்கிரம் வீடு போகலாம்ல”

“அதைச் சொல்ல ஏழா எனக்காக துஆ செய்யுங்க”

“சரி செஞ்சு கொண்டுதான் இருக்கிறேன்”

“ஆமா அன்டைக்கு ஏன் அப்படி கோவிச்சிங்க”

“அது றகுமானி ஏதோ ஒரு ஆத்திரத்தில ஏதோதோ பேசிட்டேன். அதெல்லாம் மனதில வெச்சிக்காதே! அதுக்காக என்னை மன்னித்திடு”

சுபைரின் நா தழுதழுத்தது.

அழுகை வந்துவிடும் போல் இருந்தது அவனுக்கு

அவனது நிலைமையைப் புரிந்து கொண்ட றகுமானி

“அதெல்லாம் விடுங்க உங்களோடு வாழ்ந்த இந்த 30 வருட வாழ்க்கையிலே அன்றுதான் அப்படி கடுகடுப்பா நீங்க நடந்திருக்கீங்க. அன்றுதான் எனக்கு நோயும் வந்தது. அது தாங்கும் சக்தி இல்லாததால் தானோ என்னமோ”

“அப்படி இல்ல றகுமானி அது ஏதோ நடந்தது நடந்துவிட்டது. அதுக்காக ஒனக்கு நோய் வரல, வரவேண்டும் என்று இருந்தது வந்து விட்டது”

சரி, அது போகட்டும் அத விடுங்க சாப்பிட்டிங்களா? என்ன சாப்பாடு?”

‘நீ வார்ட்டுக்கு வந்த நாளையிலே இருந்து நான் ஒழுங்கா சாப்பிடவே இல்லே எப்போதும் ஒன்ன நெனச்சி நெனச்சி வருத்தப்பட்டு என்னையே நான் அழுச்சிக்கிட்டு இருச்சேன். எம்மனசிலே இருந்து ஒன் நெனைவே என்னாலே வெளியே எடுக்க முடியல.”

“இப்போ எனக்கு நல்லம்தானே போய் சாப்பிட்டு சந்தோஷமா இருங்க அப்பதான் எனக்கும் சந்தோஷம் வரும். ஒங்கள பார்க்க பார்க்க எனக்கு ரொம்ப கவலையா இருச்சி ஏதோ ஒரு பயமும் என்ட நெஞ்சிலே புடிச்சிரிச்சி அது என்னெண்டு தெரியாது. நான் ஏதாவது ஒங்களுக்கு பொல செஞ்சிரிந்தா அத மன்னிச்சிக் கொள்ளுங்க”

என்று கூறிய றகுமானி கணவரை தனது அருகில் அன்டே அழைத்து அவனது நெற்றியில் முத்தமிட்டாள். இதனை கொஞ்சமும் எதிர்பார்த்திராது சுபைர் அதிர்ந்து போனான். என்ன செய்வது என்று அவனுக்கு எதுவும் புரியவில்லை. மகிழ்ச்சியும், கவலையும் அவனுக்குள் மாறி மாறி வந்து கொண்டிருந்தது.

“சரி சந்தோஷமா போய்ட்டு வாங்க” என்று றகுமானி சொல்லவும் செக்ருட்டிமார் வாட்டுக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

“பாக்கிற நேரம் முடிஞ்சிட்டு வந்த ஆக்கள் எல்லாம் வெளியே போங்க”

இந்த சத்தத்தால் சுய உணர்வு பெற்ற சுபைர் றகுமானியின் இரண்டு கைகளையும் அன்போடு பற்றி ஆதரவோடு தடவியவனாய் அவ்விடம் விட்டு அகன்றான்.

அடுத்த நாள் காலையில் அந்த மூன்றாம் நம்பர் வாட் பெரிய பரபரப்பாக இருந்தது. உள்ளே நுழைந்த சுபைருக்கு தூக்கி வாரிப் போட்டது. என்ன நடக்கிறது என்பதை அவனால் ஊகிக்க முடியாமல் இருந்தது. ஒரு கனம் தன்னிலை மறந்து போனான்.

“சேர் ஒங்கட பொஞ்சாதியே மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு மாற்றப் போறோம் அவக்கு ரொம்ப கஷ்டமா இருச்சி இதில் ஒரு கையெழுத்துப் போடுங்க” என்று அங்கிருந்த நேஸ் ஒருவர் சுபைரிடம் கூறி ட்ரான்ஸர் போர்வை அவனிடம் நீட்டியதும் நடுநடுங்கிப் போன அவன் றகுமானியைப் பார்த்தான். அங்கே றகுமானி எந்தவித சலனமும் இன்றி மிக அமைதியாக இருந்தாள். அவனை தன்னிடம் வரும்படி செய்கை மூலம் அழைத்தாள்.

“நீங்க கையெழுத்துப் போட வேணாம்”

“ஏன்?”

“எனக்கு அங்கே நடக்கிறதுதான் இங்கே நடக்கும்”

“என்ன சொல்ற நீ”

“உண்மையைத்தான் சொல்றேன்”

“உண்மண்டா”

“மனதை தைரியப்படுத்துங்க, கவலைப்படாதீங்க வரவெல்லாம் செலவாகத்தான் வேண்டும் அதான் எனக்கும் வரப்போகுது.”

“என்ன றகுமானி சொல்றா”

“ஆமாங்க நீங்க எனக்கிட்ட வாங்க ஒங்கட கையால தாங்கி அணச்சி பிடியுங்க நான் ஒங்கட மடியிலதான் என்ட உயிர விடனும். அதைவிட பெரிய பாக்கியம் எனக்கு வேறு எதுவும் இல்ல உங்களோட நான் வாழ்ந்த அந்த வாழ்க்கைய நான் சந்தோஷமா கருதுறேன்” என்று சொன்னவள்

“எனக்கு ஏற்கனவே இருந்து வந்த இந்த நெஞ்சு வருத்தத்த இவரிட்ட சொல்லாம மறச்சி வந்தது எவ்வளவு பெரிய மடத்தனமாப் போச்சி. இப்படியொரு நிலை எனக்கு வரும் என்று நான் நெனச்சலயே எனக்கு ஒன்னுனா இவர் தாங்கிக் கொள்ள மாட்டாரே. இனி இவர் என்ன செய்வார், நல்லவர உண்மையானவர நான் தவிக்க விட்டுப் போறேனே என அவள் தனக்குள் நினைத்து வருத்தப்பட்டாள்”

“என்னங்க என்ன நெனச்சி அழுவாதிங்க நான் எப்பவும் ஒங்க அருகிலேயே இருப்பேன்” என்று கூறிய றகுமானியின் வாயிலிருந்து அதற்கு மேல் வார்த்தைகள் வெளிவரவில்லை. சுபைரை இறுகப் பற்றியிருந்த அவளது கரங்கள் இரண்டும் செயலிழந்து அப்படியே கீழே விழுந்தது.

தன் நிலை இழந்து போன சுபைர்

“றகுமானி...!!” என்று அலறத் தொடங்க அந்த வார்ட்டே ஒரு கனம் ஸ்தமித்துப் போனது.

சிறிது நேரத்தில் சுய நினைவுக்கு வந்த அங்கிருந்த அனைவரும் ஆகவேண்டிய காரியங்களைப் பார்க்கத் தொடங்கினார்.

அவசரமாக வந்து றகுமானியைப் பரிசோதித்த டொக்டர் அவள் காலமாகிவிட்டதை உறுதிப்படுத்தினார்.

அழுது கொண்டிருந்த சுபைர் நிலைமை தலைக்குமேல் போய்விட்டதை உணர்ந்து அவளது கை, கால், வாய் இவைகளைச் சரிசெய்து விட்டு போர்வை எடுத்து முழுமையாக அவளைப் போத்திவிட்டான். துக்கம் அவனது மனசை மூடிவிட்டது.

“மிஸ்டர் சுபைர் நீங்க கவலைப்பட்டு எதுவும் ஆகப்போறதில்லை மோச்செறிக்குப் போடாம ஜனாஸாவ வீட்டுக்குக் கொண்டு போக வழிசெஞ்சு தாறேன் ஆக வேண்டியத கவனியுங்க”

டொக்டர் கூறிய வார்த்தைகள் அம்பாக அவனது இதயத்தைத் துளைக்க றகுமானி... என்று கத்திக் கொண்டு ஜனாஜாவில் விழுந்தவனை அவனது மகனின் கரங்கள் தாங்கிக் கொண்டது.

“சமூக நலனுக்காகவே பாடுபட்டதோடு என்னை முழுமையாக ஆட்கொண்டிருந்த எனது மனைவியை நான் கடிந்து கொண்டதால்தானாலா இந்த நிலைமை ஏற்பட்டது எனக்கொன்றும் விளங்குதில்லையே” என்ற எண்ணமும் சோகமும் அவனுள் பரவத் தொடங்கியது.

Comments