பிரிட்டிஷ் கவுன்சில் பரீட்சார்த்திகளுக்கு | தினகரன் வாரமஞ்சரி

பிரிட்டிஷ் கவுன்சில் பரீட்சார்த்திகளுக்கு

IELTS பரீட்சைக்கு கணனியூடாக தோற்றுவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் கவுன்சில் அறிவித்துள்ளது. பரீட்சார்த்திகள் பிரிட்டிஷ் கவுன்சில் ஊடாக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட விசேட ஆங்கிலப் பரீட்சையான IELTS ற்கு பதிவு செய்து, கணனியில் இந்த IELTS பரீட்சைக்கு தோற்றமுடியும் என பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சிலில் டிசம்பர் 5 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வின்போது, இந்த விசேட பரீட்சைக்கு முகங்கொடுக்கும் அனுபவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கும், விருந்தினர்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டது. கணனிமூல பரீட்சை முறையின் மூலம் வாரமொன்றில் அதிகளவு பரீட்சை அமர்வுகள் வழங்கப்படுகின்றன. இதனூடாக பரீட்சார்த்திகளுக்கு தமது பரீட்சை தினத்தை நிர்ணயிக்கும்போது, நிலையான திகதியை கொண்டிருக்கும் கடதாசி அடிப்படையிலான முறையுடன் ஒப்பிடுகையில் அதிகளவு செளகரியத்தை பெற்றுக் கொள்ளமுடியும். மாற்று முறைப்படி பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள பரீட்சார்த்திகளுக்கு 13 தினங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. புதிய கணனி முறைப்படி பெறுபேறுகளை 5 தினங்களுக்குள் பெற்றுக் கொள்ளமுடியும்.

பிரிட்டிஷ் கவுன்சில் இலங்கைக்கான பணிப்பாளர் ஜில் கெல்டிகொட் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், நாம் IELTS பரீட்சைக்கு தோற்றும் முறை மற்றும் அனுபவத்தை தொடர்ச்சியாக மேம்படுத்துவதில் எம்மை அர்ப்பணித்துள்ளோம். கணினியில் IELTS பரீட்சைக்கு தோற்றுவது என்பது, பலவழிகளில் அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும் என்பதுடன், பரீட்சார்த்திகளுக்கு அதிகளவு நெகிழ்ச்சித்தன்மை மற்றும் செளகரியத்தையும் சேர்க்கும்என்றார்.

புதிய கணனி முறையில், பரீட்சார்த்திகளுக்கு செவிமடுத்தல், வாசித்தல் மற்றும் எழுத்து மூல தேர்வுகளுக்கு கணனியில் தோற்றலாம். பேச்சுதேர்வு வழமைபோன்று நேரடியானதாக அமைந்திருக்கும். முதல் மூன்று பிரிவுகளும் ஒரேநாளில் பூர்த்திசெய்யப்பட வேண்டும் என்பதுடன், பேச்சுதேர்வை ஏனைய தேர்வுகளுக்கு முகங்கொடுப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அல்லது முகங் கொடுத்ததற்கு ஒரு வாரத்தினுள் தோற்றலாம். எந்த முறையை தெரிவு செய்தாலும் பரீட்சை உள்ளடக்கம், புள்ளிவழங்கல், காலம் மற்றும் கடினத்தன்மை போன்றன ஒரேமாதிரியானதாக அமைந்திருக்கும்.

Comments