தமிழ்க் கூட்டமைப்பு பலம் பெற்றிருக்கிறது | தினகரன் வாரமஞ்சரி

தமிழ்க் கூட்டமைப்பு பலம் பெற்றிருக்கிறது

நேர்காணல் :வ.சக்திவேல்

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக வேண்டி தமிழ் மக்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் பலர் கடந்த காலத்தில் பல வடிவங்களில் தமது போராட்டங்களை நடாத்தி பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு பல தசாப்தங்களைக் கடந்துள்ள போதிலும், இன்றுவரை தமிழ் மக்கள் எதிர்பார்த்த அரசியல் தீர்வு என்பது “சாண் ஏற முழம் சறுக்குவது போன்றுதான்” அமைந்துள்ளது.

அந்த வகையில் தமிழ் மக்கள் மத்தியில் தற்போது காணப்படுகின்ற பல அரசியல் கட்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பிரதான இடம் வகிக்கின்றது. இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி.

கேள்வி: கிழக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் முடிவுற்று தற்போது சுமார் ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், இதுவரையில் மீண்டும் அதற்குரிய தேர்தல் நடாத்தப்படவில்லை இதனை உங்கள் பார்வையில் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில் : கிழக்கு மாகாண சபை கடைசியாக 2017 செப்டம்பர் 30 ஆம் திகதியுடன் கலைக்கப்பட்டு தற்போது ஒருவருடமும் 3 மாதங்களும் ஆகின்றன. ஆளுனரின் ஆட்சியில்தான் கிழக்கில் தற்போது ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளுனர் ஒரு அரசியல் கட்சியின் பிரதிநிதி போன்றுதான் செயற்படுகின்றாரே தவிர. அவர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், கிழக்கில் ஓர் அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் கிழக்கிலுள்ள வளங்களை பிரித்து மக்களுக்கு வழங்கும் ஓர் ஆளுனராக எனது பார்வைக்கு அவர் தெரியவில்லை. அவர் சார்ந்த அரசியல் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அக்கட்சியின் பிரதிநிதியாகத்தான் கிழக்கு ஆளுனரின் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

கிழக்கு மாகாண மக்கள் தங்களை யார் ஆளவேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையை அரசாங்கம் இதுவரைகாலமும், மறுத்துக் கொண்டு வருகின்றது. அந்த மறுப்பு இனிமேலும் தொடரக்கூடாது. மிகவிரைவாக கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் நடாத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் கிழக்கின் ஆட்சி அதிகாரத்தைக் கையளிக்க வேண்டும்.

கேள்வி : கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமலிருப்பதற்கான தடையாக எதனைப் பார்க்கின்றீர்கள்?

பதில்: பணவிரையம், உள்ளிட்ட பல விடயங்களைக் கருத்தில் கொண்டு இலங்கையிலுள்ள அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தலை ஒரே தடவையில் நடாத்துவதற்கு அரசு சிந்தித்திருக்கலாம். ஆனால் கிழக்கு மாகாண சபை கலைந்து 2 வருடங்களுக்குப் பின்னர் கலையும் மாகாணசபையும் இருக்கின்றது. அதனால் இரண்டு வருடங்களாக அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத மாகாணமாக கிழக்கு மாகாணம் இருக்க முடியாது. மாகாணசபைகளின் முதலமைச்சர்களின் உடன்பாட்டோடு கலைத்திருந்தால் இத்தேர்தல்களை ஏற்கனவே நடாத்தியிருக்கலாம். குறைந்தது வடமாகாணசபை கலைந்ததுமே கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தலை அரசு நடாத்தியிருக்க வேண்டும்.

தேசிய அரசாங்கத்தில் கடந்த 3 வருடங்களாக அங்கம் வகித்த ஐக்கிய தேசியக் கட்சியும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் இணைந்த கூட்டுச் செயற்பாடானது ஒரு உன்னதமானதாக காணப்படவில்லை. ஒற்றுமையாக அவர்கள் அரசாங்கத்தை கொண்டு சென்றிருந்தால் கலைக்கப்பட்ட மாகாணசபைகளுக்கான தேர்தலை நடாத்தியிருக்கலாம். தேசிய அரசாங்கத்திலிருந்த சிக்கல்களும்தான் மாகாணசபைகளுக்கான தேர்தல் பிற்போடுவதற்குக் காரணமாக இருந்திருக்கும்.

கேள்வி: நீங்கள் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தற்போதும் தொடர்கின்றனவா அல்லது அவை எவ்வாறு செல்கின்றன?

பதில் : 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற பின்னர் அவ்வாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கிழக்கு மாகாணசபையில் பங்காளியாக மாறிய பின்னர் முடிந்தளவு, அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றோம். எம்மால் முன்னெடுக்கப்பட்ட கட்டடங்கள், பூரணப்படுத்தப்பட்டிருந்தும், அவை இயங்கு நிலைக்கு வராமலிருக்கின்றன. அதற்கும் கிழக்கு மாகாண சபையில் அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாமையே ஆகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் திக்கோடை, மாவடிமுன்மாரி, கிரான், கூளாவடி போன்ற இடங்களில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப வைத்திய சிகிச்சைக்குரிய கட்டடங்கள் இன்னும் திறக்கப்படாமலிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

கேள்வி: கடந்த 3 வருடங்களாக இடம்பெற்ற தேசிய அரசாங்கம் அண்மையில் நிலைகுலைந்தமையை தாங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் : தேசிய அரசாங்கம் என்ற ஒன்று உருவாகிய காலமிருந்தே இந்தப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவதானிக்கும் பட்சத்தில் அவ்வரசாங்கம் நல்லாட்சி அரசாங்கமாக இல்லாமல் ஒரு போட்டி அரசாங்கமாகவே இருந்து வந்துள்ளது இதன் காரணமாகத்தான் திடீரென அரசியல் குழப்பம் ஏற்பட்டிருந்தது எனலாம்.

கேள்வி : தற்போது புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஆட்சிக்காலமும் சுமார் ஒன்றரை வருடங்கள்தான் நிலைக்கும். இக்காலப்பகுதிக்குள் இப்புதிய அரசு மக்களுக்கு எவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

பதில் : இப்புதிய அரசாங்கம் இருக்கின்ற ஒன்றரை வருடத்திற்குள்ளே மக்களுக்கு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி உறுதி பூண்டுள்ளது.

ஒரு தேர்தல் தொகுதிக்கு 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கடந்த சனிக்கிழமையிலிருந்தே ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி கூறியிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் ஆயுட் காலம் முடியும் வரை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்யுமாக இருந்தால் நாடு ஓரளவு முன்னேற்றமடையுமென்பதில் நம்பிக்கை இருக்கின்றது. ஏனெனில் அடுத்த தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது வெளிப்படையானது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்கள் மூவருக்கும் பட்டிருப்புத் தொகுதி மக்கள் ஏதோ ஒரு வகையில் வாக்களித்திருக்கின்றார்கள். இருந்த போதிலும், பட்டிருப்புத் தொகுதியில் பிறந்து வளர்ந்த ஒருவர் தற்போது இத்தொகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினரராக இல்லை என்ற குறைபாடு இருக்கின்றது.

பட்டிருப்புத் தொகுதியில் மூன்று உள்ளூராட்சி மன்றங்கள் இருக்கின்றன. தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டை அத்தொகுதியில் அமையப் பெற்றுள்ள மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கும், பகிர்ந்தளித்து அந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சிபாரிசுக்கமைய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கேள்வி : தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னைய காலத்தைவிட தற்போது பலமடைந்திருக்கின்றதா?

பதில் : தேசிய அரசாங்கத்தில் இடையில் ஏற்பட்ட குழப்பத்தின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலம் பெற்றிருக்கின்றது என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். தமிழ் மக்கள் பேரவை வடக்கில் தமிழ் மக்கள் கூட்டணியாக உருபெற்றதன் பின்னர் வடக்கில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கை ஓங்கித்தான் நின்றது. அது கிழக்கில் இல்லை. ஆனால் தற்போது தேசிய ரீதியில் ஏற்பட்ட குழப்பகரமான அரசியல் சூழலுக்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலம் பெற்றிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் மாத்திரமல்லாமல் இலங்கை நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக போராடிய ஒரு சக்தியாக உள்ளது. அது மாத்திரமின்றி பெரும்பான்மை மக்களின் பார்வையிலும் தமிழ்த் தேசியக கூட்டமைப்பு ஒரு நேர்மையான, தங்கள் மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்ற ஒரு கட்சி என அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதன்மைப் பிரதிநிதிகள் என்றும் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுக்கு ஒத்துழைப்போம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அரசியல்வாதிகள்கூட தற்போது வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கின்றார்கள்.

கேள்வி : மட்டக்களப்பு மாவட்டத்தல் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமே உள்ளது. இவற்றுக்கு மத்திய அரசிலிருந்து நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெறுகின்றனவா? உள்ளூராட்சி மன்றங்களால் முன்னெடுக்கும் செயற்றிட்டங்கள் இன்னும் போதாது என மக்கள் குறை கூறுகின்றார்களே?

பதில் : நீண்ட காலத்திற்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்குரிய புதிய நிருவாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டு தற்போதுதான் எட்டு மாதங்கள் கடந்துள்ளன. இதுவரைகாலமும் மத்திய அரசாங்கத்திடமிருந்து எந்த வித நிதியும் நேரடியாகக் கிடைக்கவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, மற்றும் கோரளைப்பற்று ஆகிய 4 உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் பின்தங்கிய மன்றங்களாகக் காணப்படுகின்றன. இந்த 4 உள்ளூராட்சி மன்றங்களிலும் அவர்களது சபையை நடாத்தக் கூடிய அளவு வருமானம் இல்லை. இருந்த போதிலும், கிடைக்கின்ற வருமானத்தைக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த உள்ளூராட்சி மன்றங்களை நடாத்திக் கொண்டு வருகின்றது.

தற்போதிருக்கின்ற அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்பதை கொடுக்கக் கூடிய நிலையில் இருக்கின்றது. எனவே எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிய நாங்கள் இந்த அரசாங்கத்துடன் பேசி பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதுமாத்திரமன்றி வடக்குக் கிழக்கில் நடைபெறுகின்ற அபிவிருத்திகளெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக மாத்திரம்தான் நடைபெற வேண்டும் என்ற உடன்பாட்டுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் வந்திருக்கலாம். அதற்கு உடன்பாடுகூட எட்டப்பட்டிருக்கலாம்.

கேள்வி : மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களில் தொடர்ச்சியாக காட்டுயானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டுள்ளனவா?

பதில் : படுவாங்கரைப் பிரதேசத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம் அண்மைக்காலமாக தீவிரமைந்துள்ளது. இரவிலே தாக்குதல்களை நடத்திவிட்டு, பகலிலே ஒளிந்திருக்கும். தளவாய் பகுதியில் அமைந்துள்ள காட்டில்தான் அந்த யானைகள் தஞ்சமடைந்திருக்கின்றன.

மிகவும் விசாலமான இந்த தளவாய் காட்டில் நிற்கும் யானைகளை துரத்துவதென்பது கடினமாகும். மிகவிரைவில் அந்த காட்டுக்குள் உள்நுளைவதற்கு உரிய பாதைகளை அமைப்பதற்கும், மேலும் சிறிய பற்றைக் காடுகளையும், துப்பரவு செய்வதற்குமான நடவடிக்கையை நான் எடுப்பேன். 2019 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே இந்த வேலைத்திட்டத்தை மேற்கொள்வேன் என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கின்றேன்.

Comments