இனவாதத்தைத் தூண்டுபவர் எவரானாலும் கடும் தண்டனை வழங்கப்படுவது அவசியம் | தினகரன் வாரமஞ்சரி

இனவாதத்தைத் தூண்டுபவர் எவரானாலும் கடும் தண்டனை வழங்கப்படுவது அவசியம்

எம்.ஏ.எம். நிலாம்

இனவாதத்தை தூண்டும் விதத்தில் யார் செயற்பட்டாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டுமென வலியுறுத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளருமான கபீர் ஹாஷிம் மாவனல்லையில் இடம்பெற்ற சம்பவங்கள் பிரதேச சிங்கள, முஸ்லிம் ஒற்றுமைக்குமட்டுமல்லாது நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பங்கமாக அமைய இடமளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

மாவனல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்பு விவகாரம் அதன்பின்னரான நிலைமைகள் தொடர்பாக தினகரன் வாரமஞ்சரிக்கு தெளிவுபடுத்தும் போதே அமைச்சர் கபீர் ஹாஷிம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர்மேலும் தெளிவுபடுத்தும்போது கூறியதாவது,

மாவனல்லை எனது பிரதேசமாகும். இங்கு நீண்ட நெடுங்காலமாக சிங்களவர்களும், முஸ்லிம்களும் நெருக்கமான உறவைப்பேணி வந்துள்ளார். எனது தந்தை பாரிஸ்டர் ஹாஷிம் சிங்கள மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவராகக் காணப்பட்டார். இப்பிரதேசத்தில் சிங்கள சமூகத்தின் நன்மை தீமைகளில் முஸ்லிம்கள் பங்கேற்பார்கள் அதேபோன்று முஸ்லிம்களின் நன்மை தீமைகளில் அவர்கள் பங்கேற்று வந்துள்ளார். இப்பிரதேசத்தின் முஸ்லிம்களின் உறவு முறைகளை எண்ணிப் பார்க்கின்ற போது வரலாற்று ரீதியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நெருக்கமான உறவு முறையைக்காணக் கூடியதாக இருக்கும்.

இச்சம்பவம் தொடர்பில் நான் கேள்விப்பட்டதும் உடனடியாக கொழும்பிலிருந்து மாவனல்லைக்குச் சென்று நிலைமைகளை கேட்டறிந்து கொண்டதோடு, அமைதியை நாட்ட உடன் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டேன். பெரும்பான்மையான சிங்கள மக்களும் மகா சங்கத்தினர்களும் அமைதியை உறுதிப்படுத்த முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். அதற்காகக முஸ்லிம்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அவர்கள் கடைப்பிடித்த பொறுமை இந்த இனவாதத் தீ பரவுவதைக் கட்டுப்படுத்தியுள்ளதாகவே நான் பார்க்கின்றேன்.

இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். இவர்களால் எவ்வளவு காலத்துக்கு தலைமறைவாக இருக்கமுடியும் எனக் கேட்கின்றேன். இந்த தலைமறைவு பெரும்பான்மை மக்களின் சந்தேகத்ததை மேலும் அதிகரிக்கும் என்பதை மறந்து விடக் கூடாது. இந்த விவகாரம் இப்போது நீதிமன்றம் வரை போயுள்ளதால் அதன் சரி பிழை குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. வழக்கு முடியும் வரை பொறுமை காப்பதோடு ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும்.

அது மட்டுமல்ல இந்தச் சம்பவத்தின் பின்னணி கண்டறியப்பட வேண்டும் அத்துடன் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிகளாக பார்க்க முற்படக்கூடாது. மாவனல்லைச் சம்பவங்கள் அரசியல் நோக்கம் கொண்டதாகவோ, சமய நோக்கம் கொண்டதாகவோ காணப்பட்டாலும் கூட இதனை நாம் கடுமையாக கண்டிக்கின்றோம்.

குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர் என்பதில் எமக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. விசாரணைகளுக்கு முஸ்லிம் சமூகமும் அளவில் ஒத்துழைப்பு வழங்குவோம்.

இந்த கீழ்த்தரமான சிலையுடைப்புச் சம்பவம் காரணமாக இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம் சமூகம் குறித்தும் பௌத்த மக்களிடையே ஏற்பட்டிருக்கும் தவறான மனோபாவம் குறித்து நாம் பெரிதும் கவலையடைகின்றோம். அவர்களது அந்த மனோபாவம் இயற்கையாக ஏற்படக்கூடியது என்பதை நாம் மறந்துவிட முடியாது. இஸ்லாம் ஒருபோதும் மதநிந்தனைச் செயற்பாடுகளை அனுமதிக்கவில்லை. எந்த மதவழிபாட்டுத்தலங்கள் மீதும் தாக்குதல் நடத்துவதை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

எமதுநாடு பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும். இங்கு மதசுதந்திரம் எல்லோருக்கும் சமமானதாகும். முஸ்லிம்களாகிய நாம் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ முன்வரவேண்டும் இஸ்லாமிய போதனைகளை சரிவரப்பின்பற்ற முயற்சிக்க வேண்டும். இஸ்லாம் காட்டும் நல்வழி காட்டல்களை முதலில் நாம் படித்துணரவேண்டும். முஸ்லிம்கள் மத்தியில் வெறுப்புணர்வு ஏற்படுத்த எவரும் முனையக் கூடாது. எமக்கென தனியான பண்பாடு இருக்கின்றது. அது அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாடாகும். இன, மத மொழி பேதம் தலைவித்தாட எந்த விதத்திலும் இடமளிக்கப்படக்கூடாது.

நாமனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் இந்த நாட்டில் பின்பற்றப்படும் மத கலாசாரங்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். அதனூடாக நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய தீர்மானம் மிக்க சந்தர்ப்பத்தில் இவ்வாறான வெறுக்குத்தக்க செயற்பாடுகளில் விரல் எண்ணக்கூடிய சிலரின் முயற்சிகளே எந்த வகையிலும் நாம் சரி காணமுற்படக்கூடாது. நீண்ட காலமாக நாம் பின்பற்றிவரும் பரஸ்பரம் புரிந்துணர்வு, நட்புறவு, சகவாழ்வு அழிவுறுவதற்கு தாமே துணைபோய்விடக் கூடாது.

மாவனல்லையில் இடம்பெற்ற அருவருக்கத்தக்க செயற்பாடுகள் நாட்டில் இனங்களுக்கிடையே பரவாமல் தடுப்பதில் முழு அளவில் பங்களிப்புச் செய்த மகா சங்கத்தினர்கள், பௌத்த புத்திஜீவிகள், கல்விமான்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நான் நன்றி தெரிவிக்கின்றேன். இந்த விடயத்தில் உலமாக்கள், பள்ளிவாசல்கள் சம்மேளனம், முஸ்லிம் இயக்கங்களின் பணிகளையும் நான் பாராட்டுகின்றேன். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் நாமனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றோம்.

இனியொருபோதும் நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் இனமுரண்பாடுகள் ஏற்படாதவாறு நாம் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் இரண்டறக் கலந்து வாழும் சகல பிரதேசங்களிலும் நல்லுறவுக்கு குழுக்களை ஏற்படுத்தி உறவையும், சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்கான முனைப்புகளில் ஈடுபட முன்வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறுகின்றேன்.

அதற்கு எம்மாலான சகல ஒத்துழைப்புகளையும் பெற்றுத்தருவோம் என்பதை உறுதிப்படுத்தி தெரிவிக்கின்றேன்.

முஸ்லிம்களான நாம் உண்மை இஸ்லாமியர்களாக வாழ்வதோடு நாட்டுக்கு விசுவாசமானவர்களாகவும் இன ஒற்றுமையை கட்டியெழுப்பக் கூடியவர்களாகவும் செயற்பட முன்வரவேண்டும். நாட்டுப்பற்று மிக முக்கியமானது என்பதை நாம் ஒரு போதும் மறந்துவிடக்கூடாது.

Comments