உதவிகள் வழங்குவதில் வழிப்படுத்தல்கள் இல்லை | தினகரன் வாரமஞ்சரி

உதவிகள் வழங்குவதில் வழிப்படுத்தல்கள் இல்லை

வாசுகி சிவகுமார்

வெள்ள அனர்த்தத்தை அடுத்து அரசாங்கத்தின் உயர் மட்டக் கவனம் கிளிநொச்சியின் மீது குவிக்கப்பட்டிருப்பதாக வெளித்தோற்றத்திற்குத் தெரியலாம். பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள் என்று எல்லோரும் கிளிநொச்சியை நோக்கிப் படையெடுத்திருக்கிறார்கள். ஆனால் வெளியே காட்டப்படும் அளவுக்கு இன்னும் மக்களுக்கான உதவிகள் கிடைக்கவில்லை என்கின்றார், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார். வாரமஞ்சரியுடனான நேர்காணலிலேயே அவர் அவ்வாறு கூறினார். கிளிநொச்சி வெள்ள அனர்த்தத்தின் தற்போதை நிலை குறித்து அவர் வாரமஞ்சரி வாசகர்களுடன் மனம் திறந்து பேசுகின்றார்...

 அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திலிருந்து கிளிநொச்சி தற்போது மீண்டு வருகின்றதா?

இல்லை. அப்படி மீள்வதற்கான திட்டமிடல்கள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. அரசாங்கத்தின் உயர் மட்டக் கவனம் ஏற்பட்டிருப்பதாக வெளித்தோற்றத்திற்குத் தெரியலாம். பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள் என்று எல்லோரும் கிளிநொச்சியை நோக்கிப் படையெடுத்திருக்கிறார்கள். இங்கே தினமும் அதிகாரிகள் அழைக்கப்பட்டுக் கலந்துரையாடல்கள் நடக்கின்றன. தினமும் புதிய புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. ஆனால், வெளியே காட்டப்படும் அளவுக்கு இன்னும் மக்களுக்கான உதவிகள் கிடைக்கவில்லை என்பதே களநிலவரமாகும். இதைப் பாதிக்கப்பட்ட மக்களே நேரில் பல இடங்களிலும் தெரிவிக்கிறார்கள். கிடைத்த உதவிகள் அல்லது நிவாரணம் போதாது , சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதை பல இடங்களிலும் அவதானிக்க முடிகிறது. இதை விட ஜனாதிபதி செயலகமும் ஆளுநரும் கூட உதவிகளைச் செய்திருக்கின்றன.

ஆனால், அரசாங்கத்தின் உதவிகளுக்கு அப்பாலும் பலருடைய உதவிகள் சுயாதீனமாகக் கிடைத்துள்ளன. யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு என வெளிமாவட்டங்களிலிருந்து பலரும் இந்த அனர்த்தத்தைப் போக்குவதற்காக தங்களால் முடிந்த உதவிகளைச் செய்திருக்கிறார்கள். சில பொது அமைப்புகளும் புலம்பெயர் உறவுகளும் உதவிகளில் பங்களித்துள்ளன. அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலளிக்கும் விசயம்.

ஆனால், ஏற்பட்ட பாதிப்புகள் மதிப்பிடப்பட்டு, அதற்கான உதவித்திட்டம் அல்லது மீளமைப்பு அல்லது புனரமைப்புத் திட்டமும் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். இது அரசின், அரச நிர்வாகத்தின் பொறுப்பு. மதிப்பீட்டுப் பணிகள் தாமதமானால், அதற்கு முன்பாக அவசர உதவிப்பணிகள் முன்னெடுக்கப்படலாம். அப்படித்தான் பொதுவாக நடப்பதுண்டு.

ஆனால், அதற்கு இதுவரையில் எவ்வளவு உதவிகள், எப்படியான உதவிகள் கிடைத்திருக்கின்றன என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அது வெளிப்படுத்தப்படவில்லை. அதைப்போல எவ்வளவு உதவிகள், எவ்வாறான உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதும் தெரிவிக்கப்படவில்லை. வெளிப்படைத்தன்மை இல்லாமல் எல்லாமே மூடு மந்திரமாக உள்ளது. தகவல் அறியும் சட்டம் மூலம்தான் இவற்றைப்பற்றி அறிய வேண்டிய நிலையில் உள்ளோம். இந்த நிலையானது ஊழலுக்கும் தவறுகளுக்குமே இடமளிக்கும். அது பிச்சைக்காரரிடம் தட்டிப்பறிப்பதற்கு ஒப்பானது.

 முறையற்ற வீதி நிர்மாணப்பணிகள், இரணைமடுவின் வான் கதவுகள் உரிய நேரத்தில் திறக்கப்படாமை எனப் பல தரப்பினாலும் வெள்ள அனர்த்தத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன? உண்மையில் வெள்ளத்தினால் கிளிநொச்சி பாரிய அழிவுக்கு முகம் கொடுக்க நேரிட்டமைக்கான காரணம் என்ன?

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கானது தனியே இரணைமடுக்குளத்தின் நீர் வெளியேற்றத்தினால் மட்டும் நிகழவில்லை. கனகாம்பிகைக்குளத்தின் வழியாக றைஆறு பெருக்கெடுத்தமை, கல்மடுக்குளத்தின் வழியாக நெத்தலியாறும் அதனையண்டிய பிரதேசங்களும் பெருக்கெடுத்தோடியமையும் வெள்ள அனர்த்தத்துக்குக் காரணமாகும். இதைவிட, கொக்காவில், முறிகண்டி வழியாக வரும் வெள்ளம் கிளிநொச்சி மேற்குப் பிரதேசத்திலுள்ள பொன்னகர், அறிவியல் நகர், மலையாளபுரம் போன்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தின.

இந்த நான்கு வழி அனர்த்தங்களையும் தனித்தனியாக மதிப்பிடுவது அவசியமாகும். அப்படி மதிப்பிடும்போது இதற்கான காரணங்களைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். அதுதான் சரியானதும் கூட என எண்ணுகிறேன். உதாரணமாக கனகாம்பிகைக்குளத்தின் வழியாக றைஆறு பெருக்கெடுக்கும்போது ஆனந்தபுரம், இரத்தினபுரம், மருதநகர், பரந்தன், சிவபுரம், குமரபுரம், காஞ்சிபுரம், உமையாள்புரம் ஆகிய கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்தத் தடவையும் இந்தப் பிரதேசங்களே பாதிக்கப்பட்டன. இவை கிளிநொச்சி நகரையும் நகரை அண்டிய பகுதியையும் பரந்தனையும் பரந்தன் நகரையும் அண்டிய பிரதேசங்களாகும். இங்கே போர்க்கால நிலைமையைப் பயன்படுத்தி ஏற்பட்ட அத்துமீறிய – திட்டமிடப்படாத குடியேற்றங்கள் மேலதிக நீர் வடிந்தோடும் வழிகளைத் தடுத்து நிற்கின்றன. இதற்கு முறையான வடிகாலமைப்புச் செய்யப்பட வேண்டும். நகர அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டிக்கும் இந்தப் பிரதேசத்தில் அதற்கான வடிகாலமைப்பைச் செய்வது உடனடித் தேவையாக உள்ளது. பிரதேச சபைக்கு இதில் கூடுதல் பொறுப்புண்டு.

கடந்த காலத்தில் (குறைந்தது பத்து ஆண்டுகளில்) ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தை மதிப்பிட்டுப் பார்த்தால் நான் கூறும் காரணம் புரியும். சாதாரண கோடை மழைக்கே கிளிநொச்சி நகர்ப்பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் நிலையிலேயே உள்ளது.

இதைப்போல இரணைமடுக்குளத்தின் மூலம் வெளியேற்றப்படும் மேலதிக நீரானது, வயலிலும் குடியிருப்புகளிலும் வீதிகளிலும் சேதங்களை ஏற்படுத்தாது, ஆனையிறவுக்குக் கடலுக்குச் சென்று சேர்வதற்கான வழிமுறை இபாட் திட்டத்தின் கீழான அபிவிருத்தி நடவடிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் வெற்றி சரியாக அமையுமானால் இத்தகைய சேதங்களைக் குறைக்க முடியும். அல்லது அனர்த்தத்தை இல்லாமல் செய்யலாம். இரணைமடுக்குளத்துக்கு நீரைக் கொண்டு வரும் கனகராயன் ஆற்றின் வழியானது ஒழுங்கமைக்கப்படாதிருந்ததும் ஒரு காரணம். இந்த ஆற்றின் வழி நெடுகச் சட்டவிரோத மணல் அகழ்வு நடப்பது இன்னொரு காரணம்.

இவ்வாறே கல்மடுக்குளத்தின் கீழான வெள்ள அனர்த்தத்துக்கும் முறையான வடிகாலமைப்பும் மேலதிக நீர் வடிந்தோடும் வழிமுறைகளும் உருவாக்கப்படுவது அவசியம்.

இல்லையென்றால் தொடர்ந்தும் நிகழும் அனர்த்தத்துக்கு இந்த மாதிரி நிவாரணம் கொடுக்கும் கதையே நீளும். மழைக்காலத்திலெல்லாம் வெள்ள அபாயம் குறித்து மக்கள் உளவியல் அச்சத்துக்குள்ளாகும் அவலமும் முடிவற்றுத் தொடரும்.

ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தைப்பற்றிய மதிப்பீட்டைச் செய்வதைப்போல வெள்ள அனர்த்தம் ஏற்பட்டமைக்கான காரணங்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம். அது உண்மையான பிரச்சினை என்ன என்று அறிவதற்கு உதவும். அதேவேளை தேவையற்ற கற்பிதங்களையும் முரண்பாடுகளையும் தவிர்க்கவும் கூடியதாக இருக்கும்.

 வான் கதவுகள் தாமதமாகத் திறக்கப்பட்டமையை விசாரிக்கவென குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றதே?

இந்தக் குழுவின் விசாரணை அறிக்கை வெளிவரும்போதுதான் அதைப்பற்றி நாம் பேச முடியும். அதுவரையிலும் என்ன நடந்தது என்பதை நாம் சுயாதீனமான முறையில் அவதானித்துக் கொண்டிருப்பதே அவசியமானது.

அதை நாம் பல்வேறு தரப்பினருடனும் இணைந்து செய்து கொண்டிருக்கிறோம்.

 எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படா வண்ணம் தொலைநோக்கில் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகைள் எவை?

முதலில் ஒரு முறையான கள ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் கடந்த ஐம்பது ஆண்டுகால மழை வீழ்ச்சி, வெள்ள அனர்த்தம், அதற்கான காரணங்கள் கணக்கெடுக்கப்படுவது அவசியம். இதன்படி வெள்ளத்தின் அளவு, அதன் வேகம் போன்றவற்றுக்கு ஏற்ப தடுப்பு அல்லது வேகக்குறைப்புத் திட்டங்களை உருவாக்குவது அவசியம். அத்துடன் கால்வாய்கள், வாய்க்கால்கள், வடிகான்கள் போன்றன செம்மையாக்கம் செய்யப்பட்டு நீரோட்டத்துக்கு வசதியாக இருக்கும் நிலையில் பேணப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இருக்கின்ற வடிகான்களும் வாய்க்கால்களும் போதாதென்றால் மேலதிகமான கால்வாய்கள் உருவாக்கப்படுவது அவசியம். அத்துடன் மேலதிக நீர் கடலுக்குச் செல்வதைத் தடுக்கவும் வெள்ள அனர்த்தத்தைக் குறைக்கவும் பொருத்தமான இடங்களில் மேலதிக புதிய குளங்களை உருவாக்க வேண்டும்.

இதை விட இனிமேல் விவசாய நிலங்களிலும் நீரோட்ட வழிகளிலும் மக்கள் குடியேறுவதைத் தடுக்கும் நடவடிக்கையில் மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம், பிரதேச சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, நீர்ப்பாசனத்திணக்களம், விவசாயத்திணைக்களம், கமநலசேவைகள் திணைக்களம் போன்றன உச்ச விழிப்போடும் பொறுப்போடும் செயற்பட வேண்டும்.

அத்துடன் சமூக மட்டத்திலான மக்கள் அமைப்புகளும் பிரதேச நலன் விரும்பிகளும் அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் பொது நோக்கு நிலையில் நின்று இந்த விடயத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

இதெல்லாம் சரியாக – முறையாகச் செயற்படாது விட்ட காரணத்தினால்தான் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.

 நிவாரணப் பணிகள் பேதமின்றி பாதிக்கப்பட்ட அனைவரையும் போய்ச் சேர்ந்துள்ளதா?

கிளிநொச்சியில் 22349 குடும்பங்களைச் சேர்ந்த 70630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 57 வீடுகள் முழுமையாகவும் 1992 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. பத்தாயிரம் கால்நடைகள் அழிந்துள்ளன. 26 ஆயிரம் ஏக்கர் விவசாயச் செய்கை (நெல், மரக்கறிச் செய்கை மற்றும் சிறுதானியம், பழச்செய்கை) பாதிக்கப்பட்டுள்ளது. 237 வீதிகளும் 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன. சிறுகைத்தொழில்களில் ஈடுபடுவோரும் தொழிலாளர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இவற்றைக் கவனத்திற் கொண்ட நிவாரணப்பணிகள் முழுமையடையவில்லை என்பதே பொதுவான அவதானிப்பாக இருக்கிறது. ஏராளமான குறைபாடுகளும் முறைப்பாடுகளும் மக்கள் மத்தியில் உள்ளன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகள் கிடைக்கும் எனவும் அழிந்த வீதிகள் மற்றும் உட்கட்டுமானங்கள் புனரமைக்கப்படும் எனவும் பிரதமரும் சபாநாயகரும் நேரில் வந்து சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்கள். அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும் இவ்வாறே சொல்லியிருக்கிறார். இதைவிட தேசிய வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவும் வீடழிவுகள் அனைத்துக்கும் நட்ட ஈடு வழங்கப்படும். இழப்புகள் நிவர்த்திக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

ஆனால், இதெல்லாம் நடைமுறையில் எவ்வளவுக்குச் சாத்தியமாகும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் வினைத்திறனுடன் செயற்பட்டிருக்க வேண்டியது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாகும். அனர்த்த முகாமைத்துவத்துக்கான ஒரு செயலணிகளை அவர்கள் வெள்ளம் ஏற்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உருவாக்கியிருக்க வேண்டும். அந்தச் செயலணியானது உதவி புரியும் தரப்புகளையும் உதவிகளையும் வழிப்படுத்தியிருக்கும். அப்படி நடந்திருந்தால் இப்படித் தனித்தனியாக ஒவ்வொரு அமைச்சும் அமைச்சர்களும் பிறரும் தனித்தனியாக உதவித்திட்டங்களைச் செய்யும் நிலையும் வந்திருக்காது. மக்களுக்கும் சிரமங்கள், போதாமைகள் என்ற நிலை ஏற்பட்டிருக்காது.

இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றால், தெற்கிலிருந்து வருவோரின் நிகழ்ச்சி நிரலில் ஒரு நிழலாக இவர்களும் கூடி நிற்பதேயாகும். இது பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெறுவதற்கான வழிமுறை அல்ல.

Comments