தலைவர்கள் களமிறங்கி போராடுவதே உண்மையான மக்கள் போராட்டம் | தினகரன் வாரமஞ்சரி

தலைவர்கள் களமிறங்கி போராடுவதே உண்மையான மக்கள் போராட்டம்

பி.கேதீஸ் - தலவாக்கலை

ஒரு அரசியல்வாதியாக நின்று வந்த பாதையை திரும்பிப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?

நான் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் இளைஞர் வேலை வாய்ப்பு அமைச்சின் கீழ் தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் மாவட்ட இளைஞர் சேவை அரசாங்க அதிகாரியாக கடமையாற்றி வந்தேன். 1983ம் ஆண்டு இனக்கலவரம் சூடுபிடித்த காலகட்டத்தில் மலையக மக்களுக்கு ஒரு மாற்றுத் தலைமை தேவைப்பட்டது.

அன்று இ.தொ.காங்கிரஸில் அங்கத்தவராக செயற்பட்ட சந்திரசேகரன் பிரிந்து வந்தார். அப்போது இடதுசாரி இயக்கங்களில் இருந்த காதர், வி.டீ. தர்மலிங்கம் போன்றோரால் 1989 ஆம் ஆண்டளவில் மலையக மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பு உருவாக்கப்பட்டு இன விடுதலைக்ககாகவும் தொழிலாளர்களுக்காகவும் பல போராட்டங்களை செய்து தங்களை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தி கொண்டு வந்தது. இக்கட்சி ஆரம்பிக்கு முன்னரே எனக்கும் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாப தலைவர் சந்திரசேகரன், அதன் பொதுச்செயலாளர் காதர், நிதிச் செயலாளர் சரத் அத்துகோரல ஆகியோரிடம் நட்பு இருந்தது. 1991 ஆம் ஆண்டு மலையக மக்கள் முன்னணியில் அங்கத்தவராக இணைந்து அரசியலில் ஈடுபட்டேன். 1993 ஆம் ஆண்டளவில் எனது மாவட்ட இளைஞர் சேவை அரசாங்க அதிகாரி பதவியை இராஜிநாமா செய்துவிட்டு மலையக மக்கள் முன்னணியில் முழுநேர அங்கத்தவராக செயற்படத் தொடங்கினேன்.

மலையக மக்கள் முன்னணியின் முதலாவது அரசியல் பீடத்தின் உறுப்பினராகவும் அதன்பின்னர் கட்சியின் உபதலைவராகவும் கட்சியின் அமைப்பு செயலாளராகவும் செயற்பட்டேன். கட்சியின் பொதுச் செயலாளரான விஜயகுமாரின் மறைவின் பின்னர் கட்சியின் செயலாளராக செயற்பட்டு வருகின்றேன். தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் நாயகமாகவும் செயற்பட்டு வருகின்றேன். மலையக மக்களின் முன்னணியின் ஊடாக மலையக மக்களுக்கு ஒரு அதிகாரத்தை வழங்க வேண்டும். மலைநாட்டு அதிகாரசபை, பெருந்தோட்ட அதிகாரசபை இவை ஓரளவு இன்று அதிகாரத்திற்கு வந்துள்ளது. நானும் அமரர் சந்திரசேகரன், காதர் ஆகியோருடன் இணைந்து இத்திட்டங்களை வகுத்தோம். எனது அரசியல் வாழ்க்கையில் நிராசைகள் இல்லை. நான் இந்த உலகத்தில் இருக்கும்வரை மலையக சமூகத்திற்கு சேவை செய்வேன். சேவை செய்ய வேண்டும். எனக்கு மாகாணசபை உறுப்பினராக வரவேண்டும், பாராளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்ற ஆசை இல்லை.

ஒரு வீரியம் கொண்ட இளைஞர் சக்தியாக எழும்பி நின்ற மலையக மக்கள் முன்னணி பின்னர் ஏன் வீழ்ச்சி கண்டது? தலைமை திசைமாறிப் போனதா? வெளிச்சக்தி ஊடுருவியதா? அல்லது பணம் பதவி, தவறான நபர்கள் உள்ளே வர அனுமதித்ததா?

மலையக மக்கள் முன்னணி அன்று வீரியம் கொண்டு எழுந்தது. அந்த மக்களின் ஒரு பகுதியினர் இன்று இளைஞர்களாகவும் நடுத்தர வயதினராகவும் வயது முதிர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். இன்றைய இளைஞர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டும். மலையக மக்கள் முன்னணியின் இரண்டாவது தலைமை இல்லை என்று கூறமுடியாது. அன்று மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர்கள் எவ்வாறு தேடல் அரசியலை படித்து பல அரசியல் உரிமைகளை பெற்றார்களோ அதேபோல இன்றைய இளைஞர்களும் தேடிப்படித்து புதிய கொள்கைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும். மற்றைய அமைப்புகள் மற்றும் கட்சிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது மலையக மக்கள் முன்னணிக்கு ஏற்பட்டது ஒரு வீழ்ச்சியல்ல. மலையக மக்கள் முன்னணியின் அரசியல் என்பது பாராளுமன்றத்திற்கு செல்வதும் கைதூக்குவதும் அல்ல. மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உருவாக்கப்பட்டதே மலையக மக்கள் முன்னணி.

மலையக மக்கள் முன்னணி மிகத்தெளிவான கொள்கைகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. மலையக மக்கள் ஒரு தேசிய இனமாக மதிக்கப்பட வேண்டும். 15 இலட்சம் மலையக தமிழர்களுக்கு இந்நாட்டில் வாழ்கின்ற ஏனைய இனங்களுக்கு மத்தியில் ஒரு அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். மலையக மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் தலைவர் சந்திரசேகரன் இக்கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சி தெளிவான கொள்கையுடன் தொலைநோக்கு பார்வையுடன் ஆரம்பிக்கப்பட்டது. மலையக மக்கள் முன்னணி தோன்றிய காலம் ஒரு அடக்கு முறை நிலவிய காலம். அன்று இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு நிகராக தோன்றிய பல கட்சிகள் இல்லாமல் செய்யப்பட்ட காலத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு சவால் விடும் கட்சியாக மலையக மக்கள் முன்னணி வளர்ந்து வந்தது. இதன் வீழ்ச்சி என்று பார்த்தோமானால் கட்சியின் சில அடக்குமுறை காரணமாக மலையக மக்கள் முன்னணியின் வளர்ச்சி ஒரு சீராக இல்லாமல் சிலசமயம் உயர்ந்த நிலையிலும் சில சமயங்களில் சில பிரச்சினைகளும் தோன்றியிருந்தன. இது ஒரு உயிரோட்டமுள்ள கட்சி எதிப்பார்க்க கூடியதுதான். கட்சியில் முரண்பாடுகள் இல்லாமல் இருக்க முடியாது, கருத்து முரண்பாடுகள் இருக்கவேண்டும். மலையக மக்கள் முன்னணியில் கருத்து முரண்பாடுகள் இருந்தன. இருந்தும் கூட மலையகத்தில் மலையக மக்கள் முன்னணி ஒரு முக்கியமான கட்சியாகவும் யாராலும் மறுக்க முடியாத சக்தியாக திகழ்கின்றது. அன்று சந்திரசேகரன் செவ்வாக்கு மிக்க ஒரு தலைவராகத் திகழ்ந்தார். கட்சியில் ஏற்பட்ட சில கருத்து முரண்பாடுகள் காரணமாக 1996 ம் ஆண்டு மு.சிவலிங்கம் மற்றும் காதர் வெளியேறினார்கள். சந்திரசேகரன் இருந்த காலகட்டத்தில் 2008 ம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலிலே ஒரு ஆசனத்தை கூட பெறாமல் தோல்வியை சந்தித்தது.

2010 ஆம் ஆண்டு தலைவர் சந்திரசேகரனின் திடீர் மரணம் ஒரு வீழ்ச்சிக்கு காரணமானது. அதே ஆண்டு பொதுச் செயலாளராக இருந்த விஜயகுமாரின் மரணம். மலையக மக்கள் முன்னணி, ஆசிரியர் முன்னணி, தொழிலாளர் முன்னணி, மகளிர் முன்னணி, இளைஞர் முன்னணி, கலாச்சார முன்னணி என பல கட்டமைப்புகளை கொண்ட மிகப் பெரிய அமைப்பாகும். 2010 ம் ஆண்டு தலைவரின் மறைவுக்கு பின்னர் கட்சியின் பொறுப்புகள் அவரின் துணைவியார் சாந்தினி சந்திரசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் சாந்தினி சந்திரசேகரன் 13,000 வாக்குகளைப் பெற்று தோல்வியை சந்தித்தார். மீண்டும் கட்சி வீழ்ச்சியை நோக்கியே பயணித்தது.

இக்கால கட்டத்தில் எங்களது கட்சிக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் தேவை ஏற்பட்டது. இக்காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட இராதாகிருஷ்ணன் எங்களோடு இணைந்து அரசியல்துறை தலைவராக தெரிவு செய்யப்பட்டதோடு தற்போது மலையக மக்கள் முன்னணியின் தலைவராக இராதாகிருஷ்ணன் செயற்பட்டு வருகின்றார்.

மலையக மக்கள் முன்னணியில் பணத்துக்காகவோ, பதவிக்காகவோ, அரசியல் இலாபத்திற்காகவோ செயற்படும் தலைவர்களை மாற்றும் பொறுப்பு இன்றைய இளைஞர்களுக்கும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் உண்டு.

இன்றைய ம.ம.மு.வை எப்படிப் பார்க்கிறீர்கள்? மலையக அரசியலில் அதன் வகிபாகம் என்ன?

மற்றைய அமைப்புகளை விட மலையக மக்கள் முன்னணிக்கு சிறந்த வகிபாகம் இருக்கின்றது. தற்போது திருத்தியமைக்கப்பட்ட பிரதேச சபைகள், அதிகாரசபைகள் இருந்தாலும்கூட முன்னணியின் தலைவர் அமரர் சந்திரசேகரன், காதர், அமரர் தர்மலிங்கம் ஆகியோரின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. அதேபோல மக்கள் நலன் சார்ந்த புதிய விடயங்களில் நான், ஜெயபாரதி, சுப்ரமணியம் ஆகியோரின் பங்களிப்பையும் மறுக்க முடியாது. எதிர்காலத்தில் மக்கள் நலன் சார்ந்த, தியாக மனப்பான்மையோடு கூடிய தலைவர்கள் உருவாக வேண்டும். சுயநலமில்லாமல் மக்கள் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுக்கும் தலைவர்கள் உருவாக வேண்டும். தமிழ் முற்போக்கு கூட்டணியினரோடு மலையக மக்கள் முன்னணி இறுதி தேர்தலில் 87 ஆயிரம் வாக்குகளை பெற்றது. இதில் 45 ஆயிரம் வாக்குகள் மலையக மக்கள் முன்னணிக்கு மக்கள் அளித்த வாக்குகள். இன்னும் மலையக முன்னணிக்கு மலையக மக்கள் தங்களது நம்பிக்கைளையும் உறுதியையும் வைத்துள்ளனர்.

கட்சியில் ஏற்பட்ட சில கருத்து முரண்பாடுகள் காரணமாக 1996 ஆம் ஆண்டு மு.சிவலிங்கம், காதர் வெளியேறினார்கள். சந்திரசேகரன் இருந்த காலகட்டத்தில் 2008 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலிலே ஒரு ஆசனத்தை கூட பெறாமல் தோல்வியை சந்தித்தது. இக்கட்சி இயற்கையான வீழ்ச்சியை நோக்கி சென்ற காலம் 2010 ஆம் ஆண்டு தலைவர் சந்திரசேகரனின் திடீர் மரணம் உடனடி பாதிப்பை ஏற்படுத்தியது. அதே ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த விஜயகுமாரின் மரணம் போன்றவற்றால் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்தது. பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளிலும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களாலும் கட்சியின் முக்கியஸ்தர்களாலும் கட்சி மீள் உயிர் பெற்று வந்தது. நான் கட்சியிலிருந்து விலகி சென்று விமர்சனங்களை செய்யலாம். அது பெரிதல்ல. மக்களுடைய பிரச்சினைகளை இனங்கண்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு போராட வேண்டும். போராட்டம் என்று வந்தால் மற்றவரை தூண்டிவிட்டு விட்டு வேடிக்கை பார்ப்பது அல்ல. மக்களோடு மக்களாக களத்திலே இறங்கி போராடி வெற்றி காண்பதே போராட்டம். அவ்வாறான திறன் மிக்கவன் நான். மலையகத்தில் மக்கள் நலன் சார்ந்த கூட்டணியாக மலையக மக்கள் முன்னணி உருவாக வேண்டும்.

இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கூட்டு ஒப்பந்தம். சொற்ப சம்பள உயர்வு. நிபந்தனைகள் காரணமாக அறிவிக்கப்படும் உச்ச சம்பளத்தைப் பெற முடியாத நிலை. இப்படி அல்லல்படுவதை விட வெளிவாரி பயிர்ச்செய்கை பரவாயில்லை என்று தோன்றுகிறதே! தொழிலாளரின் இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் ஒரு மாற்றம் வர வேண்டாமா?

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நாள் சம்பளத்தை தீர்மானிக்கும் அதிகார சபையாக சம்பள நிர்ணய சபை இருந்தது. காலப்போக்கில் இது மாற்றப்பட்டு கூட்டு ஒப்பந்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. கூட்டு ஒப்பந்தமுறை இன்று அதிக நாடுகளில் இருக்கின்றது. தொழிலாளர்களுக்கும் முதலாளிமாருக்கும் இடையே ஏற்ப்படுத்தப்படுகின்ற ஒப்பந்தமே கூட்டு ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்திற்கு அரசாங்கத்திற்கும் பொறுப்பு உள்ளது. பெருந்தோட்ட பொருளாதாரம் மாறும் நிலை இன்று தோன்றியுள்ளது. கம்பனிகள் முறை கொண்ட பெருந்தோட்ட முகாமைத்துவத்தை எதிர்காலத்தில் கம்பனியினர் ஊடாக செய்ய இயலாமல் போகலாம். கம்பனிகள் தோட்ட முகாமையாளர்களுக்கு கூடுதலான சலுகைகளை வழங்குகின்றது. உதாரணமாக ஒரு தோட்ட முகாமையாளருக்கு இருப்ப வேண்டிய கல்வி அறிவு அவர்களிடம் இல்லை. அவர்கள் தங்களை விளையாட்டுத்துறையில் அடையாளப்படுத்திக்கொண்டு தோட்ட நிர்வாகங்களை நிர்வகிக்க வந்துள்ளார்கள். இவர்கள் ஒரு வைத்திய நிபுணர், பொறியியலாளர் வாங்கும் சம்ளத்தைவிட பல மடங்கு சம்பளம் வாங்குகின்றார்கள். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையில் தெற்கு பகுதிகளில் சிறு தேயிலைத் தோட்டங்கள் காணப்படுகின்றன. இதனூடாக அவர்கள் இலாபம் அடைகின்றனர். எனவே மலையகத்திலும் தேயிலை காணிகளை ஒரு நபருக்கு அரை ஏக்கர் வீதம் சொந்தமாக வழங்க வேண்டும். மலையக மண்ணில் சிறப்பாக வளரக்கூடிய பயிர் தேயிலை. ஒரு வருடத்தில் அதிக இலாபம் ஈட்டக்கூடிய பயிரும் தேயிலையே. எனவே புதிய முகாமைத்துவ முறையில் சிறு தோட்டங்களை உருவாக்க முடியும். இதனால் தொழிற்சங்க பிரச்சினைகள் ஏற்படலாம். இதனை நிவர்த்தி செய்ய விவசாய அமைப்புகளை உருவாக்கலாம். தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தல், தீர்வுகளை பெற்றுக்கொடுத்தல்,நேரடியாக தொழிலாளர்களை கட்சி அங்கத்தவர்களாக உருவாக்குதல் போன்றன சிறந்தவையாகும்.

ம.ம.மு கட்சிப் பிரமுகரான இராதாகிருஷ்ணனுக்கு இராஜாங்க அல்லது பிரதியமைச்சர் பதவி வழங்கப்படவில்லையே!

மலையக மக்களுக்கு சேவை செய்வதற்கு தலைவர் இராதாகிருஸ்ணன் மலையக மக்கள் முன்னணிக்கு ஒரு கெபினட் அமைச்சையும் ஒரு பிரதி அமைச்சையும் ஐக்கிய தேசிய கட்சியிடம் கேட்டிருந்தார். அதற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படுகின்றன. வழமையாக ஒரு மாவட்டத்திற்கு இரண்டு கெபினட் அமைச்சுகள் வழங்கப்பட்டன. அதே நேரம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் ஐக்கிய தேசிய கட்சியின் பின்புலம் உள்ளவர்கள் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டனர். இன்னும் 13 பேருக்கு கெபினட், பிரதி அமைச்சு. இராஜாங்க அமைச்சுகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சமயத்தில் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு இராஜாங்க அமைச்சு ஒன்று வழங்கப்படும் சாத்தியம் உள்ளது. பிரதியமைச்சு வழங்கப்படுவது தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நான் அதுவரை தீர்க்கமான கருத்தை வெளியிட முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments