உறவு | தினகரன் வாரமஞ்சரி

உறவு

கவிமணி நீலா பாலன்

சிலவேளை...

நினைவுகளுக்கு சிறகு முளைக்க....

மனம், புறாப்போல பறந்து திரியும்

உனது பேச்சே இசையாக

அதற்கு என்கால்கள் தாளம் போடும்

உண்மையாகவே... நான் விழுந்து விழுந்து

ரசித்ததும்... ருசித்ததும்...

உனது பேச்சைத்தான்

தேனிலா குழைத்தெழுத்து

வார்த்தைகளை நீ

வரிசைப் படுத்தினாய்!?

உனது அசைவுகளில் கூட

ஒரு இது இருந்தது

நோட்ஸ் கொப்பிகள் பாஸ்பண்ணி

ஆரம்பித்த நமது உறவும்,

அதை அங்கீகரித்த உனது ஆதரவும்,

நமது இணைப்பிற்கு ஏதுவாயிற்று

என்ன செய்ய..., உனது

இரட்டைப் பின்னல்,

‘அம்பிறலா’ வெட்டுப் பாவாடை,

இளமை உயர்வு நெளிவுகளியெல்லாம்

அசந்துபோய்.... நான்

ஆலாய்ப்பறந்த வண்டுதான்!

காற்றாய்ப் பறந்த காகம்தான்!

உன் அருமைகளில் அடிபட்டு

நான் கனவுகளைச் சுமந்ததும் உண்மைதான்!

நீ இனிக்க இனிக்கப் பேசிய

கதைப்பூக்களை அள்ளி அணைத்து

நெருங்கி...

உன் அதுகளில் – இதுகளில் அகத்தைப் பறிகொடுத்து

ஓ.... அந்நாட்கள்தான் எவ்வளவு அருமையானவை!

நான் அழகின் ஈர்ப்பின் இழுபட்டுப்போகும்

ரசனை உணர்வுள்ள கவிஞன் அன்பே!

ரசனையோடு மட்டும்நான் நின்றுவிட்டதால்...

நமது உறவும் பாதுகாக்கப்பட்டது

உண்மையிலே...

நீ தூர இருந்ததனால்

நான் கவிஞனாய்த் தப்பிவிட்டேன்

நெருப்புத்தான் நீ!

தூர இருந்தே

என்னைக் கவிஞனாய்க் காப்பாற்றினாய்!

ஓ... உன் அன்பிலும், ஆதரவிலும்

எனது கவிநெஞ்சம் கருமாரி கண்டதுண்மை

என்னை ஆயிரமாய்க் கவிபாட

அரும்பெடுத்து

அடியெடுத்துக் கொடுத்த உன்னை

நான் மறக்கவே இல்லை இன்றுவரை!

உண்மை இது,

உண்மை!

Comments