தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்ட திரிபீடகம் | தினகரன் வாரமஞ்சரி

தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்ட திரிபீடகம்

ரவி ரத்னவேல்

போதி மாதவன் அருளிய பெளத்த போதனையின் ஒழுக்கம், அபிதர்மம், சூத்திரம் ஆகியன அடங்கிய பாளி மொழியிலான திரிபீடக நூலினை இலங்கை பெளத்த மக்களின் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் தேசிய விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று 05 ஆம் திகதி வரலாற்றுப் புகழ்மிக்க மாத்தளை அளுவிகாரையில் இடம்பெற்றது.

பெளத்த தர்மத்தின் அஸ்திவாரமாகக் கருதப்படுவது புத்த பகவானின் போதனைகள் அடங்கிய திரிபீடகம் எனும் புனித நூலாகும். பெளத்தர்களால் பெரிதும் மதிக்கப்படும் இந்நூலை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாத்து வைப்பதே இப் பிரகடனத்தின் நோக்கமாகும்.

முத்தி நிலை எய்திய புத்தபிரான் மானிட வாழ்க்கையினை நல்வழிப்படுத்தும் வகையில் அருளிய தர்ம போதனைகள், உலக வாழ் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் என எண்ணிய அசோக சக்கரவர்த்தி எட்டு திசைகளுக்கும் பெளத்த தர்மத்தை பரிசாக அனுப்பி வைக்கத் தீர்மானித்தார்.

அதற்கமையவே, இலங்கை தீவில் பெளத்த மதத்தை பரப்ப உகந்த தூதராக மகிந்த மகா தேரரை தேர்ந்தெடுத்த அசோக சக்கரவர்த்தி அவரை இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.

தமது குழுவினரோடு இலங்கையின் வடக்கு கரையை வந்தடைந்த மகிந்த மகா தேரர் உள்ளிட்ட குழுவினர் அங்கிருந்து நடைபயணத்தில் அநுராதபுரம் மாவட்டத்தின் மிகிந்தலை எனும் பிரதேசத்தை வந்தடைந்தனர்.

அங்கே அமைந்திருந்த மலைக்குன்றில் ஏறி அக்கம் பக்கம் பார்த்த மகிந்த மகா தேரர் வேட்டைக்காக ஒரு மானைக் குறி வைத்துத் துரத்தும் தேவநம்பிய தீசன் எனும் அரசனைக் கண்டார்.

மறுகணமே ‘திஸ்ஸ’ என அவ்வரசனை அழைத்த மகிந்த மகா தேரர், புத்த பகவானின் போதனைகளை அவ்வரசனுக்குப் போதித்தார். அதனைக் கேட்டு மனநிறைவும் தெளிவும் கொண்ட அரசன் பெளத்த தர்மத்தை ஏற்றான். நாட்டு மக்களும் அரசனின் வழி சென்று பெளத்தர்களானார்கள் என்று வரலாறு கூறுகின்றது.

அன்றிலிருந்தே ஒரு பெளத்த நாடாக இருந்துவரும் இலங்கையின் ஜம்புகோளப்பட்டினம் வழியாக வெள்ளரசு மரக்கிளையுடன் சங்கமித்தை பிக்குணி வருகைதந்ததைத் தொடர்ந்து இலங்கையில் பெளத்த கலாசாரம் வேரூன்றியதுடன், இதனால் பெளத்த தர்மத்தின் வளர்ச்சிக்காக பல அரிய பணிகளை ஆற்றும் வாய்ப்பும் இந்த நாட்டிற்கு கிடைத்திருக்கின்றது.

அவற்றில் முதன்மை இடம் வகிக்கும் பணியாக பல நூற்றாண்டுகளாகவும் பல தலைமுறைகளாகவும் வாய்மொழி வழியே பெளத்த தேரர்களால் பாதுகாக்கப்பட்டு, போதிக்கப்பட்டு வந்த புத்த பகவானின் போதனைகளை நூல் வடிவமாக மாற்றியமைத்தமை இருந்து வருகின்றது.

இலங்கை பெளத்த சம்பிரதாயத்தின் ஆதார நூலாக பாளி மொழியிலான இந்த திரிபீடக நூலே கருதப்படுகின்றது.

தமது வாழ்நாளில் 45 வருடங்கள் தர்ம போதனையில் ஈடுபட்டுவந்த புத்த பகவான் அருளிய போதனைகளை 500 தேரர்கள் ஒன்றுகூடி மனப்பாடமாக அதனை போதித்து வந்தனர். அப்போதனைகளே பிற்காலத்தில் ஒரு நூ லாக மாற்றப்பட்டது.

புத்த பகவான் அருளிய போதனைகளை வாய்மொழியில் கொண்டு செல்லும் பொறுப்பு ‘பானக்க’ எனும் தேரர்களிடமே கையளிக்கப்பட்டிருந்தது.

அக்காலத்தில் எழுத்துருவம் பெற்றிராத புத்த பகவானின் இப் போதனைகளை வாய்மொழி மூலமாக பாதுகாத்து வந்த பின்னணியில் இலங்கையில் ஏற்பட்ட 12 வருடங்கள் நீடித்த ‘பெமிநிதியா சாய’ எனும் மகா பஞ்சம் பெருமளவு உயிர்களைக் காவு கொண்டதால் பெளத்த தர்மத்தை தொடர்ந்தும் வாய்மொழி வழியாக பாதுகாப்பதென்பது பெரும் சவாலுக்கு உள்ளானது.

ஆயினும் ‘அரிட்ட’ தேரரில் ஆரம்பித்த சிங்கள பெளத்த தேரர் பரம்பரையினர், அப்பஞ்ச காலத்தில் ஏற்பட்ட பெரும் தடைகளுக்கு மத்தியிலும் இலைகளையும் காய்களையும் உண்டவாறு தத்தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டு பெளத்த தர்மத்தை தொடர்ந்தும் பாதுகாத்து வந்தார்கள்.

பசி, பட்டினி காரணமாக உடலில் திரானியற்ற நிலையிலும் கூட தரையில் விழுந்து கிடந்தவாறு தர்மத்தை மனப்பாடம் செய்ததன் மூலமே அவ் இக்கட்டான சூழலிலும் பெளத்த தர்மம் தேரர்களால் பாதுகாக்கப்பட்டது. அவ்வாறு மேற்கொண்ட முயற்சியின் பலனாகவே ஐந்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக புத்த பகவானின் போதனைகள் வாய்மொழி வழியாக பாதுகாக்கப்பட்டு வந்தன.

அவ்வாறு வாய்மொழி மூலமாக இலங்கை தேரர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த பெளத்த போதனைகள் வட்டகாமினி அபய எனும் வலகம்பா மன்னன் இலங்கையை ஆண்ட கி.பி.முதலாம் நூற்றாண்டில் திரிபீடகம் எனும் நூலாக உருவாக்கப்பட்டதென மகா வம்சம் கூறுகின்றது.

அவ்வாறு நூலாக்கப்பட்ட திரிபீடகமே இன்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெளத்த தர்மத்தின் அடிப்படை ஆதார நூலாக இருந்து வருகின்றது.

அன்று அவ்வாறு பெளத்த தர்மத்தை பேணிப் பாதுகாப்பதற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டதனாலேயே இன்று ஐக்கிய நாடுகள் சபை இலங்கையை தேரவாத பெளத்த தர்மத்தின் கேந்திர ஸ்தானமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்தப் பின்னணியில் இலங்கையின் பெளத்த தர்மத்தின் வளர்ச்சிக்காக இதயசுத்தியுடன் பாரிய பல பணிகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மூத்த பெளத்த தேரர்களினாலும் அறிஞர்களினாலும் திரிபீடக நூலினை பெளத்தர்களின் மரபுரிமையாக பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று அப்பணியினை காத்திரமாக நிறைவேற்றி இருக்கின்றமையானது பாராட்டத்தக்க விடயமாகும்.

Comments