நாடுகள் செய்துகொள்ளும் வர்த்தக உடன்படிக்கைகளும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் | தினகரன் வாரமஞ்சரி

நாடுகள் செய்துகொள்ளும் வர்த்தக உடன்படிக்கைகளும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும்

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை,
கொழும்புப் பல்கலைக்கழகம்.

உலக நாடுகள் இடையே நடைபெறும் சர்வதேச வர்த்தகத்தின் மீது காணப்பட்ட தடைகளை தளர்த்தி வர்த்தகத்தை தாராளமயப்படுத்தும் முயற்சிகள் 1980களில் இருந்து புது உத்வேகத்துடன் இடம்பெற்றன. இத்தாராள மயமாக்கல் நடவடிக்கை சர்வதேச நிதி நிறுவனங்களாகிய உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பவற்றின் கட்டமைப்புச் சீராக்கல் கொள்கைகளின் (Structural Adjustment) அங்கமாகவே இடம்பெற்றன.

இந் நடவடிக்கைகள் மூன்று மட்டங்களில் தொடங்கப்பட்டன. முதலாவது, சர்வதேச ரீதியில் பல்பக்க (Multilateral) வர்த்தக தாராளமயமாக்கம், உலக வர்த்தக நிறுவனத்தின் (world trade organization) அனுசரணையுடன் இடம்பெற்றது. இதில் உலக நாடுகள் அனைத்தையும் உள்ளடக்கும் வகையில் சர்வதேச வர்த்தகத்தின் மீதிருந்த தீர்வைக் கட்டுப்பாடுகள் மற்றும் தீர்வையல்லாக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் அல்லது களையும் முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டன. 1947ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட வர்த்தகம் மற்றும் தீர்வைகள் மீதான பொது உடன்படிக்கை (General Agreement on Trade and Tariff) யின் தொடர்ச்சியாகவே சர்வதேச வர்த்தக நிறுவனம் வர்த்தகத் தாராள மயமாக்கலை ஆதரித்து முன்னெடுத்துச் சென்றது. இதன் அடிப்படையில் எல்லா நாடுகளையும் மிகவிருப்பான வர்த்தக பங்காளி நாடாக கருத வேண்டும். (Most Favoured Nation Clause - MFN) எந்த ஒரு நாட்டுக்கும் சர்வதேச வர்த்தகத்தில் வேறுபாடு காட்டக் கூடாது என்னும் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் சர்வதேச வர்த்தகத்தின் மீதிருந்த தீர்வைக் கட்டுப்பாடுகளும் தீர்வையல்லாக் கட்டுப்பாடுகளும் கணிசமான அளவு குறைக்கப்பட்டன.

இரண்டாதாக, ஒரு குறிப்பிட்ட புவியற் பிரதேசத்தில் அருகருகே அமைந்துள்ள நாடுகள் தத்தமது பிராந்தியங்களின் பொருளாதார நலன்களை பேணும் பொருட்டு ஒத்துழைப்புடன் செயற்படும் நோக்கில் வர்த்தகத்தை பிராந்திய நாடுகள் மத்தியில் தாராள மயப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டன. இவை பிராந்திய ஒருங்கிணைப்பு (Regional Integration) அமைப்புகள் என அழைக்கப்பட்டன. இவ்வகையில் உருவாகிய மிகவும் முன்னேற்றகரமான பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தைக் (European Union) குறிப்பிடலாம். இதன் அங்கத்துவ நாடுகள் பெரும்பாலானவை பொதுவான பொருளாதார கொள்கைகளையும் பொதுவானதொரு நாணயத்தையும் (Euro) பயன்படுத்தும் அளவுக்கு முன்னேற்றமடைந்தன. வட அமெரிக்க தாராளவர்த்தக உடன்படிக்கை (North American Free Trade Agreement - NAFTA) மற்றும் இலங்கையை அங்கத்துவ நாடாகக் கொண்ட தெற்காசிய தாராள வர்த்தக உடன்படிக்கை (South Asian Free Trade Agreement) என்பன இத்தகைய பிராந்திய ரீதியிலான வர்த்தகத் தாராளமயப்படுத்தலுக்கான சில உதாரணங்களாகும். உலகலாவிய ரீதியில் 400க்கும் மேற்பட்ட பிராந்திய வர்த்தக உடன்படிக்கைகள் காணப்படுவதாக அறிய முடிகிறது.

இப்பிராந்திய வர்த்தகத் தாராள மயமாக்களின் கீழ் பிராந்தியத்திலுள்ள அங்கத்துவ நாடுகள் தமக்கிடையில் நிலவும் பிராந்திய வர்த்தகத்தின் மீதுள்ள கட்டுப்பாடுகளைத் நீக்கும் அதேவேளை, அங்கத்துவமற்ற நாடுகளுடனான வர்த்தகத்தின் தடைகளைப் பேணலாம். எனவே இது நாடுகளுக்கிடையில் வர்த்தகத்தில் பாகுபாடு காட்டும் ஒரு கட்டமைப்பாகும். உலக வர்த்தக நிறுவனம் மேற்கொள்ளும் தாராளமயமாக்கல் வர்த்தகத்தில் பேதம் காட்டுவதை தடைசெய்துள்ள போதிலும் பிராந்திய வர்த்தக அமைப்புக்களும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

மூன்றாவதாக, தனித்தனி நாடுகள் தமது வர்த்தகப் பங்காளி நாடுகளுடன் தனித்தனியே மேற்கொள்ளும் இருபக்க வர்த்தக உடன்படிக்கைகள் (Bilateral Trade Agreements) உள்ளன. இதன்போது குறிப்பிட்ட இருநாடுகள் தாம் பரஸ்பரம் மேற்கொள்ளும் வர்த்தகத்தில் நிலவும் தீர்வைகளையும் தீர்வையற்ற கட்டுப்பாடுகளையும் களைந்து, இருபக்க வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிக்க முயற்சி செய்யும். இந்திய, இலங்கை தாராள வர்த்தக உடன்படிக்கை, (Indo – Sri Lanka Free Trade Agreement) இலங்கை பாக்கிஸ்தான் தாராள வர்த்தக உடன்படிக்கை, (Sri Lanka Pakistan Free Trade Agreement) மற்றும் சிங்கப்பூர் இலங்கை தாராள வர்த்தக உடன்படிக்கை, இலங்கை சீனாவுடன் செய்துகொள்ளவுள்ள வர்த்தக உடன்படிக்கை ஆகியன இத்தகைய இருபக்க வர்த்தக உடன்படிக்கைகளுக்கு உதாரணங்களாகும்.

மேலே குறிப்பிட்டவாறு மூன்று மட்டங்களிலே வர்த்தகத்தை தாராளமயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்த போதிலும், கடந்த சில வருடங்களாக மேற்படி முயற்சிகள் தடங்கலுக்கு உள்ளாகி வருவதையும் அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக சர்வதேச மட்டத்தில் வர்த்தக தாராளமயமாக்கலுக்கு சர்வதேச வர்த்தக நிறுவனத்தின் முயற்சிகள் மேற்கொண்டு முன் நகர முடியாதளவுக்கு முட்டுக் கட்டைகள் தோன்றியுள்ளன. சர்வதேச வர்த்தக நிறுவனம் மேற்கொண்டு வரும் அமைச்சர் மட்ட மாநாடுகள் மக்கள் எதிர்ப்புகளை எதிர்நோக்கி வருகின்றன. குறிப்பாக புதிய எழுச்சி பெற்றுவரும் நாடுகளான. சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாபிரிக்கா உள்ளிட்டவை வர்த்தகத்தில் தமக்குரிய இடம் வழங்கப்படவேண்டுமென்றும் தாம் ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப் படவேண்டுமென்றும் தமது ஏற்றுமதிகளுக்கு சந்தை வாய்ப்புகள் திறந்துவிட வேண்டுமென்றும் கோருகின்றன. சந்தைகளை திறந்து விட்டால் செல்வந்த நாடுகளில் தொழில் வாய்ப்புகள் அற்றுப் போகுமென்ற அச்சம் காரணமாக அவை தயக்கம் காட்டுக்கின்றன.

அதேவேளை கடந்த வருடம் சீனாவுடன் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட வர்த்தகப் பிணக்கை சர்வதேச வர்த்தக நிறுவனக் கட்டமைப்புக்கு வெளியில் சென்று தீர்த்துக்கொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தமை சர்வதேச வர்த்தக நிறுவனத்தின் எதிர்கால இருப்பையே கேள்விகள்குறியதாக மாற்றியது. உலக நாடுகளில் பெரும்பாலானவற்றை அங்கத்துவ நாடுகளாகக் கொண்டுள்ள சர்வதேச வர்த்தக நிறுவனத்தைப் புறந்தள்ளி வர்த்தகப் பிணக்கை தீர்த்துக் கொள்வதாக உலகின் முதன்மைப் பொருளாதாரமாகவுள்ள அமெரிக்கா அறிவித்தமை வர்த்தகத் தாராள மயமாக்களுக்கு விழுந்த பலத்த அடியாகும்.

மறுபுறம் பிராந்திய வர்த்தக ஒத்துழைப்பு அமைப்புகளும் சமீபகாலமாக முன்செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்பட்டுள்ளன.

ஐரோப்பிய பிராந்தியத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து கிரேக்கத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மற்றும் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தமை என்பன ஒன்று சேர்ந்து பிராந்திய வர்த்தகக் கூட்டுகளின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக மாற்றியுள்ளது. ஏனைய பிராந்திய வர்த்தக அமைப்புகளும் கூட தமது நடவடிக்கைகளை முன்புபோலன்றி மந்த கதியிலேயே முன்னோக்கி நகர்த்த வேண்டியுள்ளதுடன் அவற்றின் பிரபலத்தன்மையும் குறைந்துள்ளது.

நாடுகள் இருபக்க வர்த்தக உடன்படிக்கைகளை செய்வதில் அண்மைக்காலங்களில் ஆர்வம் காட்டி வந்துள்ளபோதிலும் அவற்றிலும் முன்னேற்றங்கள் மந்த கதியிலேயே ஏற்பட்டு வருவதையும் காணமுடிகிறது.

அண்மையில் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட தாராள வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் நிபுணர்குழு அண்மையில் சமர்ப்பித்த அறிக்கை, இருபக்க வர்த்தக உடன்படிக்கைகளும் வர்த்தகப் பங்காளி நாடுகளுக்கு நியாயமான விதத்தில் வர்த்தகத்தையும் முதலீடுகளையும் மேம்படுத்துவதில் உதவுகின்றனவா என்ற ஐயப்பாட்டையும் ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமன்றி பொருளாதார ரீதியில் வெவ்வேறு அபிவிருத்தி மட்டத்தில் உள்ள நாடுகள் இவ்வாறான இருபக்க வர்த்தக உடன்படிக்கைகளைச் செய்துகொள்ளும்போது அதன் மூலம் இரு நாடுகளும் சமமாக நன்மை பெறமுடியுமா என்ற நடைமுறை ரீதியான வினா எழுகிறது. பொருளாதார ரீதியில் வலுவுள்ள நாடு அல்லது பலம் மிக்க ஒரு நாடு வலு குறைந்த ஒரு சிறிய நாட்டை சமமான வர்த்தகப் பங்காளியாக நடத்துமா என்ற யதார்த்தமான கேள்வியை கேட்காமலிருக்க முடிவதில்லை.

வர்த்தகம் மட்டுமல்ல, அவ்விரு நாடுகளிலும் உள்ள மக்களையும் சரிசமமாக நடந்த முடியுமா என்ற வினாவும் தவிர்க்க முடியாததாகிறது. உதாரணமாக நமது மிகப்பெரிய நட்பு நாடாகிய இந்தியாவிலிருந்து எவரும் இலங்கைக்கு போய்வர விரும்பினால் எவ்வித தடையுமன்றி வந்திறங்கலாம். மூன்று மாதங்களுக்கு இலங்கையில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு வருபவருக்கு போதிய பணவசதியுள்ளதா என்பது பற்றியெல்லாம் இலங்கை கவலைப் படுவதில்லை.

அதேவேளை இலங்கைப் பிரஜையொருவர் சாதாரண சுற்றுலாப் பயணியாக இந்தியா சென்றுவர வேண்டுமென்றால் 3 மாத வங்கிக் கணக்கு அறிக்கை, இலத்திரனிய புகைப்படம் கைரேகை போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். எனவே, இருபக்க வர்த்தக உடன்படிக்கைகளும் வர்த்தக விரிவாக்கத்திலோ, முதலீட்டு விரிவாக்கத்திலோ, பயணிகள் போக்குவரத்திலோ நாடுகளை சமமாக நடத்துவதில்லை இதனால் அவற்றின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிறது.

Comments