ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

“அண்ண புது வருசத்தில கோயில் போகேல்லயோ?”

“போகாமலென்ன. நானும் செல்லக்காவும் கோயில் போய் இப்பதான் வந்தனாங்கள்”

“உங்களை காணேல்லயே?”

“அந்தக் கூட்டத்தில ஆளைத் தேடேலுமே?”

“இந்த முறை நல்ல கூட்டமென்ன?”

“வா வா சின்னராசு இந்தா பலகாரம். ரெண்டு பேரும் சாப்பிடுங்கோ. எப்பிடி உன்ட மனுஷி சுகமா இருக்காவோ?”

“வீட்டில எல்லோரும் சுகமாயிருக்கினம். புது வருசத்துக்கு பலகாரம் செஞ்சியளோ?”

“போன வருஷமும் ஒன்டும் செய்யேல்ல இந்த வருஷமும் அப்பிடி இருக்கேலுமே. அதுதான் கொஞ்சம் பலகாரம் செஞ்சனான். எங்கயும் போறனினோ.”

“ இங்கதான் வந்தனான் வேறெங்கயும் போகேல்ல.”

“அப்ப இருந்து சாப்பிட்டு விட்டுப் போ என்ன.”

“சரியக்கா,”

“நான் டக்கென்டு சமைச்சுப்போடுவன். ஆனா நீஎனக்கு ஒரு வேலை செய்யவேணும்.”

“என்னக்கா செய்யக் கிடக்கு.”

“உந்த சந்திக் கடைக்கு ஓடிப் போய் அரை போத்தில் தேங்காயெண்ண வாங்கிக்கொண்டு வா அரை மணித்தியாலத்தில சாப்பிடலாமென்ன. சந்தியாலதான் வந்தனான் கையில போத்தில் இருக்கேல்ல. போன மாசம் பேக்கில எண்ணெ வாங்கி வந்தனான் இடையில பொத்துக் கொண்டுது. அவ்வளவு எண்ணெயும் ரோட்டால. ஆறுமாதிரி ஓடிட்டுதப்பா.”

“நீங்க போத்தில தாங்கோ. அஞ்சி நிமிஷத்தில எண்ணையோட நிப்பனான்.”

“நல்ல வேளை சின்னராசு வந்தவன். உங்களிட்ட சொல்லியிருந்தா போவியளோ. ஏதாவது சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டு நிப்பியள். யார் வருவினம் என்டு நான் ரோட்டை பாத்துக்கொண்டு இருக்க வேணும். ஒரு தரம் ரென்டு தரம் சொல்லேலும். எடுத்ததுக்கெல்லாம் அதைச் செய்யுங்கோ இதைச் செய்யுங்கோ என்டு சொல்லிக் கொண்டிருக்க முடியுமே. எப்பத்தான் திருந்தப் போறியளே தெரியேல்ல.”

“என்னடா இது புது வருஷமும் அதுவுமா செல்லம் இப்பிடி வெடிக்கிறா. உதுவும் பேசினமென்டா வில்லங்கமாப்போடும். நல்ல வேளை சின்னராசு கடைக்குப் போட்டான். இல்லயென்டா மானம் கப்பலேறியிருக்கும்.”

"எப்பிடியண்ண ஏன்ட ஓட்டம் அஞ்சு நிமிஷத்தில எண்ணையோட வந்தனான். என்ன யோசிக்கிறியள்”

“ஒன்டுமில்ல சின்னராசு. போன வருஷம் இலங்கை சனத்துக்கு வேணாம் என்டு போட்டுது. இந்த வருஷமாவது நல்லா இருக்க வேணும்.”

“போன வருஷ கதைய விடுங்கோ. இந்த வருஷம் எல்லாம் நல்ல படியா நடக்கும். கவலைய விடுங்கோ.”

“நீ சொல்லுறதும் சரிதான். ஒரு விஷயத்தை இப்பிடி செஞ்சமென்டா இப்பித்தான் நடக்கும் என்டதை கணிக்கிற அறிவ எங்கட ஆக்களிட்ட இல்லை. உதாலதான் இத்தின பிரச்சினையும் வந்துது.”

“மெய்யான பேச்சு. எதையும் செய்றதுக்கு முன்னால யோசிக்க வேணும்.”

“ஒரு தரமில்ல சின்னராசு ரெண்டு மூன்டு தரம் யோசிக்க வேணும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்டு நடந்தமென்டா நிலைமை மோசமாப்போடும்.”

“உப்பிடித்தான நடந்துது.”

“ஏதோ தெரியாத்தனமா நடந்து போட்டவை இனி உது மாதிரி நடக்க மாட்டினம்.”

"அது எப்பிடி அச்சொட்டா சொல்லுறியள்.”

“ஆங்கிலத்தில ஒரு பழமொழி கிடக்குது. Once bitten twice shy என்டு. ஒரு தடவை கடி பட்டா கவனமா இருக்கவேணும் என்டதுதான் உதன்ட கருத்து.

“நாயைத்தான சொல்லுறியள். எனக்கு ஒரு முறை கடிச்சுப் போட்டுது. அதுக்குப் பிறகு நாய் நிக்குதென்டா நான் அந்தப் பக்கத்தில போக மாட்டன்.

“உது நாயை சொல்லுற கதையில்ல சின்னராசு. ஒரு தடவை அடி பட்டா கவனமா இரு என்டதுதான் சரியான கருத்து.”

“அது சரியாக் கிடக்கென்ன.”

“என்டபடியா இனி எல்லாம் சரியா நடக்கும் போலத்தான் கிடக்கு. ஆனா ஒரு சில விஷயங்கள் வில்லங்கமாக்தான் கிடக்கு.’

“எதைச் சொல்லறியள்?”

"இலங்கையில அதிக அளவு ஹெரொயின் போதை வஸ்து போன கிழமைதான் பிடிபட்டுக் கிடக்கு.”

“மெய்யே?”

“எங்க பிடிச்சவை.”

“தெஹிவளையில பிடிச்சிருக்கினம் 278 கிலோ என்டா பாத்துக் கொள்ளன்.’

“278 கிலோவோ சீனி மா யாவாரம் போலல்ல கிடக்கு.”

“உதின்ட பெறுமதி 336 கோடி ரூபா என்டு மதிப்பிட்டிருக்கினம்.”

“போற போக்கு நல்லாயில்லையென்ன.”

“உது சின்னராசு. எங்கட நாட்டில விற்கிறதுக்கில்ல. ஒரு இடத்தில இருந்து இங்க கடத்திக்கொண்டு வந்து வேறொரு நாட்டுக்கு கொண்டு போக வச்சிருந்தவை.”

“அப்படித்தானண்ண நானும் நினைக்கிறனான்.”

“அரட்டையடிச்சிக் கொண்டிருந்தது போதும். ரெண்டு பேரும் வாருங்கோ சாப்பிடலாம்."

“வா வா சாப்பிடப் போவம் லேட்டாப் போனமென்டா சாப்பாட்டில வெட்டு விழுந்தாலும் விழும்.”

“இப்பதான் கடைக்கு போட்டு வந்தனான். அதுக்குள்ள சமைச்சுப் போட்டியளென்ன.”

“நீ வரேக்கை சாப்பாட்டுக்கு எல்லாம் ரெடி பண்ணிப் போட்டனான். வடை சுடுறதுக்கு மட்டும் எண்ணெய் தேவைப்பட்டுது. அதாலதான் உன்ன கடைக்கு அனுப்பினனான். அதாலதான் 15 நிமிசத்தில சாப்பாட்ட முடிச்சனான். எப்பிடியிருக்கு பது வருச சாப்பாடு.”

“ஷோக்காக் கிடக்குதக்கா குழம்பு வறுவல் பொரியல் என்டு கலக்கிப்போட்டியள்."

“வருசத்தில முதல் நாள் செல்லக்காவின்ட சாப்பாட்டை சாப்பிட்டிருக்கனீ. இனி இந்த வருசம் முழுவதும் உனக்கு விருந்து சாப்பாடுதான்.”

“நல்ல வேளை செல்லத்தை உச்சாணிக் கொம்பில வச்சனீ.”

“எனக்குத் தெரியும்தான அக்காவின்ட டைப். அதுதான் அப்பிடி பேசி ஐஸ் வச்சனான்.”

“யாரோ கதவைத் தட்டின மாதிரி கிடந்துது. அதான் பொய் பாத்தனான்.”

“என்னோட சமையலின்ட அருமை உனக்குத் தெரியுது. ஆனா இவருக்கு தெரியுதே. முழு நேரமும் உன்னோட வீண் அரட்டைப் பேச்சு. நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையான விசயங்களை பேசவேணும் கண்டியோ. புது வருசத்தில எதுவும் பிரயோசனமான விஷயங்களை பாருங்களப்பா. இப்ப யாரோ கதவை தட்டினம். நுல்லா கறி போட்டு சாப்பிடங்கோ. பாத்துப்போட்டு வாறனான."

“என்னண்ண அக்கா இப்பிடி சொல்லிப் போட்டு போகுது.”

“நீ முதலில சாப்பிடு உதைப் பத்தி பிறகு பேசுவம்.”

Comments