றகர் வீரருக்கு மரணத்தை ஏற்படுத்திய மின்னுயர்த்தி | தினகரன் வாரமஞ்சரி

றகர் வீரருக்கு மரணத்தை ஏற்படுத்திய மின்னுயர்த்தி

போல் வில்சன்

"பணிப்பாளரைப் பார்க்க வேண்டும்"

"இப்படியே இந்த லிப்டில் போங்கள்"

"லிப்டிலா?"

நான் ஆச்சரியப்பட்டதைப் புரிந்துகொண்ட காவலர், "இது அதுவல்ல, மற்றையது! அடுத்து இருக்கிறதே, அதில்தான் அந்தப் பொடியன் செத்தது"

என்று எனக்கு லிப்டைக் காட்டினார்.

கொழும்பு 2, நவம் மாவத்தையில் உள்ள கிறீன்லங்கா கட்டடத்தின் உரிமையாளர் சிறில் நவரட்ண பெர்னாண்டோவைப் பார்க்க வேண்டும். கொம்பனித்தெரு பொலிஸார் வழங்கிய தகவலின்படி, கட்டட உரிமையாளரைச் சந்தித்தால்தான், டிசம்பர் 29ஆம் திகதி சனிக்கிழமை என்ன நடந்தது என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியும்.

றக்பி வீரரைப் பலிகொண்ட மின்னுயர்த்தியைப் பார்க்கும்போது சற்றே அதிர்ச்சி. கொழும்பில் இலட்சக்கணக்கான மக்கள் மின்னுயர்த்தியைப் பயன்படுத்துகிறார்கள். நானும் எத்தனை தடவை அதில் ஏறியிறங்கியிருக்கின்றேன். பொதுவாக "லிப்ற்" (மின்னுயர்த்தி) என்றால் யாருக்கும் பயமில்லை. சிலவேளை அது இடையில் நின்றுகொண்டாலும், குறிப்பிட்ட நிறுவனத்தினரைத் தொடர்புகொள்வதற்கு வசதிகள் இருக்கும். தொலைபேசி இலக்கம், அவசர அழைப்பு என்றெல்லாம் இருப்பதால், பெரிதாகப் பயப்பட வேண்டிய அவசியமில்லை. "எஸ்கலேற்றர்" எனப்படுகின்ற நகரும் படிகளில் செல்வதுதான் ஆபத்தானது. விமான நிலையங்களில் அதில் செல்வதற்குச் சங்கடப்படுவோருக்காகச் சாதாரண படிகளையும் வைத்திருக்கிறார்கள். கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்திலும் நகரும்படி இருக்கிறது. அதில் ஒருமுறை சென்றுகொண்டிருந்தபோது எனக்கு முன்னால் வந்த ஓர் ஒலிபரப்பாளர் தடுக்கி வீழ்ந்துவிட்டார். அவர் சரியான நேரத்தில் காலை வைக்கத்தவறியதால், தட்டுத் தடுமாறி வீழ்ந்தார். அதெல்லாம் சரி, இந்த லிப்டில் எப்படி அந்த இளைஞன் இறந்தார்?!

எனக்குள் இப்படிப் பல்வேறு கேள்விகள். அத்தனைக்கும் பெர்னாண்டோ பதில் சொல்வாரா?

என்னை ஏற்றிச்சென்ற லிப்ற், நாலாம் மாடியில் நின்றது. மிகவும் பயபக்தியோடு என்று சொல்வார்களே, அப்படி அந்த லிப்டிலிருந்து வெளியில் வந்தேன்.

பெர்னாண்டோவிடம் என்னை அறிமுகப்படுத்திக்ெகாண்டேன்.

"என்னப்பா, உங்கடை ஆக்கள், என்னோட கம்பனியோட பேரையே கெடுத்துப்போட்டாங்கள்"

"எங்கடை ஆக்களா?"

"ஆமாம், ஜேர்னலிஸ்ற்மார்தான். நடக்காததை எல்லாம் எழுதி, விசயத்தைக் கெடுத்துப்போட்டார்களே" என்று தமிழிலேயே பதில் அளித்தார். ஆச்சரியப்பட்டாலும் அதுபற்றிப் பின்னர் கேட்டுக்ெகாள்ளலாம்.

"என்ன நடந்தது" என்று அவரிடம் நேரடியாகவே கேட்டேன்.

"இந்தக் கட்டடத்தின் ஒன்பதாவது மாடியில் "நைற் கிளப்" இருக்கிறது. அதற்கு ஆயிரம்பேர் வருவார்கள்; போவார்கள். இதுவரை இப்படியான எந்தச் சம்பவமும் இடம்பெறவில்லை. மின்னுயர்த்தியை அடிக்கடி பராமரித்துக் ெகாள்வோம். வருடத்திற்கொரு தடவை, மாதத்திற்கொரு தடவை என்று அந்தப் பணிகளைச் செய்வோம். கடந்த மாதம் நாலாந்திகதியும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு சான்றிதழையும் பெற்றுக்ெகாண்டிருக்கின்றோம். மின்னுயர்த்தி சென்றுகொண்டிருந்தபோது மின்சாரம் தடைப்பட்டது என்றும் மீண்டும் மின்சாரம் வந்தபோது மின்னுயர்த்து கீழ்நோக்கிச் சென்றது என்பதெல்லாம் பொய். அப்படி எதுவும் நடக்கவில்லை. தரைத்தளத்திலிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இது எப்படி நடந்தது என்பதுதான் தெரியவில்லை. மிட்சுபிஸி நிறுவனத்தின் தயாரிப்பான இந்த லிப்ற்றில் இதுவரை இவ்வாறான விபத்து நேர்ந்தது கிடையாது. ஆகவே, அதுபற்றி ஆராய்ச்சி செய்வதற்கு மிட்சுபிஸி நிறுவனத்தின் உயர் மட்டக் குழுவொன்று கொழும்பு வருகிறது. அதிக பாரம் காரணமாக உடைந்து வீழ்ந்ததா என்றும் சொல்ல முடியாது. எமக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. ஜப்பானிய நிபுணர்களின் ஆய்வுக்குப்பின்னர் உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள முடியும்" என்றார் பெர்னாண்டோ.

பெரும்பாலும் கொம்பனித்தெரு பொலிஸாரும் அதனைத்தான் சொல்கிறார்கள். ஊடகவியலாளர்கள் விடயம் தெரியாமல் குழப்பிவிட்டார்கள் என்று பொறுப்பதிகாரியும் குறைபட்டுக்ெகாள்கிறார்.

சரி, அதிக பாரம் என்றால், மின்னுயர்த்தி இயங்காதே, கீச் கீச் என்று சத்தமிட்டு எச்சரிக்குமே. சிலவேளை, ஓரிருவர் இறங்கும் வரை மின்னுயர்த்தி நகராமல் இருக்கும். இது இப்படி நடந்திருக்கும். சிலசமயம், ஒரே நேரத்தில் அளவிற்கு அதிகமானோர் உள்ளே திடுதிப்பென சென்றார்களோ தெரியவில்லை.

சம்பவத்தின்போது லிப்டில் பயணித்தவர்களுள் ஒருவர் தகவல் தருகையில், "நாங்கள் எல்லாமாகப் பத்துப்பேர் இருந்தோம். எமக்குத் தெரியாத மேலும் நால்வரும் இருந்தார்கள். அனைவரும் ஒரேயடியாக உள்ளே சென்றபோது, 'ஓவர் லோட்' என்பதற்கான சமிக்ைஞ வெளிப்படுத்தப்படவில்லை. திடீரென லிப்ற் கீழே விழுந்தது. நாங்கள் கூக்குரலிட்டோம். கண்ணாடிகளை உடைத்தே எம்மை மீட்டார்கள்" என்கிறார்.

சம்பவத்தைக் கேள்வியுற்ற பொலிஸாரும், இராணுவத்தினரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து கடும் பிரயத்தனத்திற்குப் பின்னரே அனைவரையும் மீட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞனின் கை காப்பாற்றிக்ெகாள்ளும் நோக்கில் லிப்ற்றைப் பற்றிப் பிடித்திருக்க, கால்கள் மேல்நோக்கிச் சிக்கிக்ெகாள்ள, உடல் பகுதி கீழ் நோக்கி நசிந்து கிடந்துள்ளது. அங்குள்ள சிசிரிவி ​ெகமரா பதிவுகளையும் காண்பிக்கிறார் பெர்னாண்டோ. சம்பவம் நடப்பதற்கு முன்னர் பலர் லிப்டிக்கு வெளியில் நிற்கிறார்கள். பிறகு அவர்கள் உள்ளே சென்றதும் விபத்து நேர்கிறது. இருவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார்கள். ஆக, இந்த லிப்ற், தரைதளத்திலிருந்து பாரம் தாளாமல், அடித்தளத்திற்குச் சென்றுள்ளது. அப்போது அது நிலைகுலைந்து சரிந்து வீழ்ந்ததால், இளைஞன் சிக்கினாரா என்பதையும் ஊகிக்க முடியாமல் உள்ளது. எப்படியோ, இப்படியொரு விபத்து இதுவரை நேர்ந்ததே இல்லை என்று அடித்துச் சொல்கிறார் பெர்னாண்டோ.

இந்த கிறீன்லங்கா கட்டடத்திற்கு இவர் இரண்டாவது உரிமையாளர். முதலாமவர் ஒரு பெண்மணி. அவருக்கு ஏற்பட்ட பொருளாதார நிலைமையின் காரணமாகவே அவர், இந்தக் கட்டடத்தைப் பெர்னாண்டோவிற்குக் கொடுத்துள்ளார். இன்னுமோர் அதிர்ச்சி தகவலையும் பெர்னாண்டோ சொன்னார். அந்தக் கட்டடத்தின் முதலாவது உரிமையாளர் என்று சொன்னேனே, அந்தப் பெண்மணி, இந்தச் சம்பவம் நடந்த அன்று மரணமடைந்துவிட்டார் என்கிறார் பெர்னாண்டோ. அவர் இறக்கும்போதுதான் இந்த விபத்தும் நேர்ந்திருக்கிறது!

"சரி, இப்படி நன்றாகத் தமிழ் பேசுகிறீர்களே! நீங்கள் யார்?" என்று என் ஆரம்ப சந்தேகத்தைக் கேட்டேன்.

"அந்த விபரம் வேண்டாம். நான் மதுரையில் நீண்டகாலம் தங்கியிருந்திருக்கின்றேன். தமிழ் சினிமாத்துறைக்கும் என் குடும்பத்திற்கும் பந்தம் இருக்கிறது" என்று சூசகமாகச் சொன்னார். அவர் கேட்டுக்ெகாண்டதால், முழுமையான விபரத்தைத் தவிர்த்திருக்கிறேன். முக்கியமான ஒரு நடிகையை நினைத்துப் பார்த்துக்ெகாள்ளுங்கள்.

9 ஆவது மாடியில் உள்ள எமியூசியம் (Amuseum) எனும் இரவு விடுதிக்கு செல்ல முற்பட்ட வேளையிலேயே றகர் வீரரான கோகில சமந்தபெரும என்ற இளைஞர் உயிரிழந்தார். அவரின் மார்பில் ஏற்பட்ட காயங்களின் காரணமாக மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டமையால், இந்த மரணம் சம்பவத்துள்ளதென, பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்தியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே முழுமையான விசாரணையை நடத்துவதற்கு நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர.

இறந்தவர் கொழும்பு வெஸ்லி கல்லூரியின் பழைய மாணவர். றக்பி அணியின் தலைவராகச் செயற்பட்டவர். அவரது சகோதரரும் ஒரு றக்பி வீரர். ஏற்கனவே, இலங்கை ஒரு திறமையான றக்பி வீரரை இழந்திருக்கிறது.

வசீம் தாஜுதீன் என்ற அந்த வீரரின் மரணம் பற்றிய மர்மம் இன்னும் துலங்காத நிலையில், மற்றொரு வீரரை றகர் விளையாட்டுத்துறை இழந்திருக்கிறது. இவரின் உயிரைப் பலியெடுத்த மின்னுயர்த்தியை உற்பத்தி செய்தவர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சியும் நீதிமன்ற விசாரணைகளும் உண்மையை ஊரறியச்செய்யும் என்று நம்புவோம்.

இந்த விசாரணைகளின் மூலம் வெளிவரும் தகவல்கள், மின்னுயர்த்தியைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும் பொது மக்களுக்கும் எதிர்காலத்திற்கான எச்சரிக்ைகயையும் பாடத்தையும் கற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.

Comments